திங்கள், 16 ஏப்ரல், 2018

படிக்க வேண்டிய புத்தகத்திற்கான பரிந்துரை!
பரிந்துரை-2; நாள்: 16.04.2018!
புத்தகம்: கோபல்ல கிராமம்
ஆசிரியர்: கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன்!
------------------------------------------------------------------------------------------
1) இலக்கியக் கோட்பாடுகள் நிறையவே உள்ளன.
எனினும் அவற்றுள் பிரதானமாக இரண்டு பொது
நீரோட்டப் போக்குகள் உள்ளன.

2) ஒன்று: கலை கலைக்காகவே (Art for art's sake)  
மற்றொன்று: கலை மக்களுக்காகவே (Art for people's sake).

3) கி ராஜநாராயணனின் இந்த நாவல்
கலை மக்களுக்காகவே என்ற வகையைச் சார்ந்தது.

4) இலக்கியத்தில் சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்ற
ஒரு இலக்கியக் கோட்பாட்டை மாக்சிம் கார்க்கி
உருவாக்கினார். இந்த நாவல் அந்தக் கோட்பாட்டிற்கு
உதாரணமான ஒரு இலக்கியப் படைப்பு! 

5) இது ஒரு நாவல்தான். அதாவது புனைவுதான்.
என்றாலும் வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக்
கொண்ட ஒரு புனைவு.

6) 1970 களின் இறுதியில் வெளியான நாவல் இது.
அந்த ஆண்டின் இலக்கியச் சிந்தனை பரிசை
வென்ற நாவல் இது.

7) வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பின்னரும்
இன்னமும் வெளிச்சத்தில் இருக்கிற நாவல் இது.

8) வரலாற்றுப் பொருள்முதல்வாத வகுப்புகளுக்கு
வரும் தோழர்களிடம் இந்த நாவலைப் படிக்குமாறு
வற்புறுத்துவதை நான் ஒரு  வழக்கமாகவே
வைத்திருக்கிறேன்.

9) மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை
கதை வடிவில் புரிந்து கொள்ள இந்நூல் துணை செய்யும்.

10) வாசிப்பு இன்பம் (textual pleasure) மிகுந்த நாவல் இது.
நெல்லை மாவட்டத்தில் கோவில்பட்டி உள்ளிட்ட
கரிசல் பகுதியில் வாழும் ரெட்டியார் நாயக்கமார்
சமூக மக்களின் இயல்பான பேச்சு வழக்கை
(தெலுங்குச் சொற்கள் கலந்த தமிழ்) மண்வாசனையுடன்
தருகிறார் கி ராஜநாராயணன்.
-----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அன்புத்தம்பி ஏ பகலவன் அவர்களின்
வேண்டுகோளுக்கு இணங்க இப்பரிந்துரைகள்
செய்யப்படுகின்றன.
**************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக