வெள்ளி, 6 ஏப்ரல், 2018

(3) தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும்
குழந்தையாக இருப்பது எப்படி?
மார்க்சிய பார்வையில் அத்வைதம் நூலின்
மீதான விமர்சனத்திற்குப் பதில்!
-----------------------------------------------------------------------
1) மனித குலத்திற்கு சோஷலிசம் என்னும் தத்துவத்தைக்
கொடையாக அளித்தவர் காரல் மார்க்ஸ். மார்க்சின்
சோஷலிசத்தின் பெயர் விஞ்ஞான சோஷலிசம் ஆகும்.
இது கனவோ கற்பனையோ அல்ல. மார்க்சின்
சோஷலிசத்தை ரஷ்யாவில் உண்மையாக்கிக்
காட்டினார் லெனின்.

2) மார்க்ஸ் படைத்தளித்த சோஷலிஸத் தத்துவம்
மார்க்சின் எதிரிகளாலும் பயன்படுத்தப் பட்டது.
இது வரலாறு. உலக வரலாற்றில் இதற்கு அநேக
உதாரணங்களைக் காட்ட முடியும்.

3) உலகத்தையே அழிக்க நினைத்த ஹிட்லர் ஒரு
தத்துவத்தைச் சொன்னான். அதன் பெயரும்
சோஷலிசம்தான். ஆம், தேசிய சோஷலிசம்
(National Socialism) என்ற தத்துவத்தைச் சொன்னான்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அவன் ஆரம்பித்த
கட்சிதான் நாஜி கட்சி. நாஜி என்றால் நேஷனல்
சோஷலிசம் என்று பொருள்.

4) இத்தாலியின் கொடிய சர்வாதிகாரி முசோலினி.
இவன் இத்தாலிய சோசலிஸ்டு கட்சியில் பெரும்
பொறுப்பு வகித்தவன். காரல் மார்க்ஸை மாபெரும்
சோஷலிச சிற்பி என்று வர்ணித்தவன்தான் இந்த
முசோலினி. மேலும் முசோலினி கருத்துமுதல்வாதத்தை
நிராகரித்தவன். கடவுளை ஏற்காத நாத்திகனும் ஆவான்.

5) மார்க்ஸ் உலகிற்கு அளித்த சோஷலிஸத்
தத்துவத்தை மார்க்சியத்தின் எதிரிகள் ஹிட்லரும் முசோலினியும் பயன்படுத்திக் கொண்டனர்
என்பதை இந்த உதாரணங்கள் புரிய வைக்கும்.

6) இந்திய அரசு என்பது என்ன? அதன் வர்க்கத்
தன்மை என்ன? இந்திய அரசு முதலாளித்துவ
(அல்லது தரகு முதலாளித்துவ) அரசு. நிலப்
பிரபுத்துவத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள அரசு.
(தங்கள் கட்சித் திட்டத்துக்கு ஏற்ப ஒவ்வொரு
கட்சியும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றன).

7) ஆக, இந்திய அரசு ஒரு முதலாளித்துவ அரசு.
ஆனால் 1955ல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்
அன்றைய பிரதமர் நேரு, தமது அரசின் கொள்கை
ஜனநாயக சோஷலிசம் என்கிறார். முதலாளித்துவ
அரசின் கொள்கை சோஷலிசமாம்!!!

8) காரல் மார்க்சின் சோஷலிசத்தில் ஜனநாயகம்
இல்லை; நமது சோஷலிசத்தில் ஜனநாயகம் உண்டு.
எனவே இது ஜனநாயக சோஷலிசம் என்றார் நேரு.

9) ஆக, காரல் மார்க்சின் சோஷலிசத்தை லெனினும்
மாவோவும் பயன்படுத்த உரிமை உள்ளவர்கள்.
ஏனெனில் அவர்கள் மார்க்சியர்கள். ஆனால்
மார்க்சியர் அல்லாத ஹிட்லர், முசோலினி, நேரு
போன்றோரும் பயன்படுத்தினர். இது வரலாறு.

10) அடுத்து, பொருள்முதல்வாதம் என்ற தத்துவத்தைப்
பார்ப்போம். இது மார்க்சியர்களுக்கு மட்டும் சொந்தமான
தத்துவம் என்று கருத இயலுமா?

11) அயன் ராண்டு என்று ஒரு தத்துவஞானி. இவர்
கம்யூனிச .எதிர்ப்பாளர்; முதலாளித்துவ ஆதரவாளர்.
ஆனால் இவர் பயன்படுத்திய தத்துவம்
பொருள்முதல்வாதம். இவரின் பொருள்
முதல்வாதத்திற்கு புறவயவாதம் (objectivism) என்று பெயர்.

12) முதலாளித்துவம் என்றாலே கருத்துமுதல்வாதம்
என்று சொல்லி  விட முடியாது. முதலாளித்துவம்
பொருள்முதல்வாதத்தையும் பயன்படுத்தும்.

13) இவை போல இன்னும் நிறைய உதாரணங்களைச்
சொல்லிக் கொண்டே போகலாம்.

14) இந்தியாவில் 1950,60களில் பிரஜா சோஷலிஸ்ட்,
சம்யுக்த சோஷலிஸ்ட் என்று இரண்டு கட்சிகள்
இருந்தன. இவை முதலாளித்துவக் கட்சிகள்.
ஆனால் தங்களின் தத்துவம் சோஷலிசம் என்று
சொல்லிக் கொண்டன.

15) நேரு செய்யாததை இந்திரா செய்தார். இந்திய
அரசு ஒரு சோஷலிச அரசு என்று அரசமைப்புச்
சட்டத்தில் எழுதி வைத்தார். (பார்க்க: 42ஆவது
அரசமைப்புச் சட்டத் திருத்தம்). இந்திய அரசு
சோஷலிச அரசா? சோவியத் ஒன்றியத்தில் லெனின்
ஏற்படுத்திய அரசும் சோஷலிச அரசு! பாசிச அரக்கி
இந்திராவின் அரசும் சோஷலிச அரசு!!!

16) தத்துவம் என்பது எல்லாவற்றுக்கும் இடமளிக்கும்
தன்மை கொண்டது. தத்துவம் என்பது ஒரு
ஒற்றையான. ஒற்றைப்படைத் தன்மை கொண்ட
விஷயம் அல்ல. தத்துவம் என்பது பல கிளைகளைக்
கொண்ட ஒரு பெரிய மரம் போன்றது. ஒவ்வொரு
கிளையிலும் வெவ்வேறு பறவைகள் கூடு கட்டும்.
இதை மரம் தடுக்க முடியாது.

17) ஆக, தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும்
குழந்தை என்பதன் பொருள் இதுதான். இது
தத்துவத்தின் குறை அல்ல.

18) அத்வைதம் நூலில் நான் எழுதியதை சிலர்
புரிந்து கொள்ளவில்லை. உலக வரலாறு
படித்தால் இது எளிதில் புரியும்.
********************************************************           
 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக