செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஸ்டெர்லைட்:
--------------------
இந்தியாவில் காப்பர் (தாமிரம்) உற்பத்தியில் நான்கு நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
1. ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.
2. ஹிண்டால்கோ காப்பர் லிமிடெட்
3. ஸ்டெர்லைட் லிமிடெட்
4. ஜகாதியா காப்பர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்:
----------------------------------------------------
இது ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஹிந்துஸ்தான் காப்பர் உற்பத்தி ராஜஸ்தான், ஜார்க்கன்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் தாமிர உற்பத்தி செய்து வருகிறது.
ஹிண்டால்கோ காப்பர் லிமிடெட்:
------------------------------------------------------
பிர்லா நிறுவனத்தின் ஒரு அங்கமே ஹிண்டால்கோ. இது ஒரு தனியார் காப்பர், அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதன் காப்பர் உற்பத்தி குஜராத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய காப்பர் உருக்கும் ஆலைகளில் ஒரே இடத்தில் அதிக அளவிற்கு Copper smelter செய்யும் மிகப்பெரிய ஆலை இது.
ஸ்டெர்லைட் காப்பர் லிமிடெட்:
------------------------------------------------
வேதாந்தா குரூப் நடத்தும் தனியார் தொழிற்சாலை தான் ஸ்டெர்லைட். ஸ்டெர்லைட் தமிழ் நாட்டின் தென்கோடியான தூத்துக்குடியில் இயங்கி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஸ்டெர்லைட் நிறுவனம் நிறுவ 500 ஏக்கர் நிலங்கள் MIDC யால் ஒதுக்கப்பட்டு அனைத்து அனுமதியையும் பெற்று கட்டுமானப்பணிகள் 1992 ல் தொடங்கி இருந்தது. 1993, ஜூலையில் மாவட்ட கலெக்டர் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலை என்பதால் மேற்கொண்டு பணிகளைத் தொடரக் கூடாது என்று கடிதம் அனுப்பினார். கூடுதலாக ரத்தினகிரி கிராம கமிட்டியும் இங்கு ஆலை அமைக்கும் பணியை மேற்கொண்டு தொடரக்கூடாது என்று போராட்டங்களைச் செய்ய அங்கு தொழிற்சாலை அமைக்க இயலாமல் போன நேரத்தில் தமிழ்நாடு வரவேற்றுதான் ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைக்கப்பெற்றுள்ளது.
01-08-1994 – TNPCB ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைக்க NOC வழங்கிய நாள்.
16-01-1995 – MOE & F, India அனுமதியை வழங்கியது.
17-05-1995 - தமிழக அரசு அனுமதி வழங்கிய நாள்.
22-05-1995 – TNPCB ஆலை அமைக்க அனுமதியை வழங்கியது.
01-01-1997 – ஸ்டெர்லைட் உற்பத்தியைத் தொடங்கிய நாள்.
தமிழ் நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதின் பின்னணியில் பெரிய சதிவலை சூழப்பட்டுள்ளது. எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் போகிற போக்கில் சுற்றுச் சூழல், வேளாண்மை இரண்டையும் காரணம் காட்டி அனைத்து திட்டங்களையும் முடக்கும் போக்கும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் போராட்டங்களும் பிரிவினைவாதிகளாலும் அந்நியக் கைக்கூலிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பெண் #BANSTERLITE என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் நிறுவனம் மகாராஷ்டிராவில் இயங்கிய போது அங்குள்ள மாம்பழங்கள் கருகின. அதை ஏற்றுமதி செய்ய இயலாத அளவிற்கு ஆனவுடன் ரத்தினகிரியில் போராட்டம் நடந்ததாக பேசுகிறார். மேலும் அங்கிருந்து குஜராத் , கோவா போனார்கள். அங்கும் விரட்டி விட்டதால் தமிழகம் வந்தது என்று பேசினார். அந்த ஒரு நிமிடத்திலேயே வீடியோவை நிறுத்தி விட்டேன். அத்தனையும் புளுகு.
மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணிகளே முடிவடையவில்லை. கலெக்டர் அதற்கு முன்பாக stay order கொடுத்ததையடுத்து அங்கு மேற்கொண்டு பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதில் உண்மை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தை இன்னும் ஸ்டெர்லைட் காலி செய்யவில்லை. அதற்கான கேஸ் இப்போதும் மும்பை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. காப்பர் ஆலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவில்லை, எனவே காலி செய்ய வேண்டும் என்று MIDC அனுப்பிய கடிதத்திற்கு காலி செய்ய இயலாது என்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது சார்பில் தாங்கள் 80 கோடி கட்டுமானப்பணிகளுக்கு செலவழித்து விட்ட பிறகு கலெக்டர் நிறுத்தச் சொன்னதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 22 ஆண்டுகளாக நீர் மற்றும் மின்சார வரி கட்டி வருவதாகவும் நீதி மன்றத்தில் சொல்லியுள்ளது. ஒரு ஆலை தனது இயக்கத்தை தொடங்கும் முன்பு வந்த பிரச்சினைக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. நிலம் இப்போதும் ஸ்டெர்லைட் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்து 22 வருடமாகப் போகிறது. இதை மூடச் சொல்லி உச்சநீதி மன்றத்தை அணுகி மாநில அரசால் வெற்றி பெற இயலாது என்பதே யதார்த்தம். உச்ச நீதி மன்றமும் ஆலையை அவ்வளவு சீக்கிரம் மூடுங்கள் என்று சொல்லாது.
எதுவுமே தெரியாமல் மாம்பழம் அழுகியது என்று ஒரு புளுகுச் செய்தி. அடுத்து குஜராத் வேண்டாமென்றதாம். இதை ஏன் சொல்கிறார் என்றால் மோடியின் மாநிலம் விரட்டியடிக்கப்பட்ட ஒரு ப்ரொஜெக்ட் தமிழர்களின் தலையில் கட்டப்பட்டது என்ற எண்ணம் வர வேண்டுமாம், பாவம் Dahej குஜராத்தின் கடற்கரை மாவட்டமொன்றில் இந்தியாவின் ஒரே இடத்தில் அதிக அளவில் Copper smelter நடக்கிறது. பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது. குஜராத்தில் காப்பர் ஆலை இல்லையென்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அடித்து விடுகிறார் அந்தப் பெண்.
ஸ்டெர்லைட் பற்றி பேசும் போது மகாராஷ்டிரா ஏன் வேண்டாமென்றது... அவர்கள் அம்மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அவர்களுக்கு Taloja Copper Project மும்பையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் 60,000 MTA காப்பர் ராடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹிந்துஸ்தானின் காப்பர் நிறுவனம் அங்குள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை வேண்டாமென்ற மகாராஷ்டிரா எப்படி TCP க்கு ஒத்துக்கொண்டது என்று கேட்டால் இங்கு பதில் வராது.
அடுத்ததாக ஏதோ மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டில் நாசகார வேலைகளை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கொண்டு வந்தது போலவும், வருவது போலவும் பொய்ப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, சுற்றுச் சூழல் அமைப்பு அனுமதி, இடங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஸ்டெர்லைட் அல்ல ஒரு சிறு தொழிற்சாலையைக் கூட இங்கு திறக்க இயலாது. மத்திய அரசால் கூட !!!! திமுகவும், அதிமுகவும் அத்தனை தொழிற்சாலைகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் மாநில நலனைக் கருத்திற் கொண்டு அனுமதித்து விட்டு எதிர்க்கட்சி ஆனவுடன் போலியாக நாடகமாடுகின்றன என்பதே உண்மை.
திமுகவும், அதிமுகவும் அனுமதித்து தொடங்கப்பட்ட ஆலைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அரசியல் திராணியுடன், நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு ஓட்டுக்காக அல்லாமல் ஏன் இந்தத் தொழிற்சாலையோ அல்லது வளர்ச்சித் திட்டமோ தங்களால் கையொப்பமிடப்பட்டது, அதனால் என்ன லாபம் என்று மக்களிடம் விளக்கும் பொறுப்பு உள்ளவை இக்கட்சிகள். ஆனால் கூட்டத்தோடு கோயிந்தா போட்டு நாங்களும் திட்டத்தை எதிர்க்கிறோம் என்று சொல்வது அரசியல் ஆண்மையற்ற செயல். இதை பாஜக, காங்கிரஸ் செய்தாலும் அப்படியே தான் நாம் சொல்ல வேண்டும்.
மீடியாக்களால், உள்ளூர் மக்களின் போராட்டங்கள் பெரிய அளவில் காட்டப்பட உடனடியாக அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்காக ஒப்பாரி வைக்கின்றன. நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பால் ஏற்படப் போகும் இழப்பு, மாநில அரசிற்கான வருவாய், தேச நலன் பற்றி பேசாமல் பூசி மெழுகிப் பேசுவது தான் ஒரு சமுதாயத்திற்கு ஆகப்பெரிய கேட்டைத் தரும். நியூட்ரினோ திட்டம் பற்றி தமிழகத்தில் ஆதரித்துப் பேசிய ஒரு மாநில கட்சியாவது உண்டா? சில வளர்ச்சித் திட்டங்களால் சிலருக்கு இழப்பு என்றாலும் அத்திட்டம் வந்தால் மாநிலத்திற்கு எத்தகைய நலன் என்று பேசும் அரசியல் திராணி இன்று ஒரு அரசியல் கட்சியிடமும் இல்லை. குறைந்த பட்சம் சாதக பாதகங்களைச் சொல்லி தமது தரப்பை முன்வைக்கும் நேர்மைகூட ஒரு கட்சிக்கும் கிடையாது. ஊடகங்கள் மக்களுக்கு மிகப்பெரிய தீங்கை ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என்று ஓலமிடுவதை அரசும் மௌனியாகப் பார்ப்பதே ஆகப்பெரிய கொடுமை.
ஸ்டெர்லைட் புனிதமான ஆலை. அதிலிருந்து கழிவுகளோ, சுற்றுப்புறச் சூழலையோ பாதிக்காது என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவை முறையாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஒவ்வொரு முறையும் ஸ்டெர்லைட் நிறுவனம் கட்டுப்பாட்டை மீறினால் கூட அனுமதித்து விடுவது அல்லது தேவையில்லாமால் வீண் பழியைப் போட்டு பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடமும், உச்ச நீதி மன்றத்திடமும் நிருபிக்க இயலாமல் பின் வாங்குவது மட்டுமே நடந்துள்ளது.
கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையால் நோய்வாய்ப்பட்டவர்கள் இத்தனை பேர் என்று எந்த ஆதாரமும் உறுதியாக நிருபிக்கப்பட இயலவில்லை. இவர்கள் முன்வைக்கும் நோய்களால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நகரங்கள் என்று எளிதாக அடையாளம் காண இயலும்.
ஸ்டெர்லைட் ஆலையில் 12 Million Tonne சல்புரிக் ஆசிட் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் நூற்றுக்கும் அதிகமான சல்புரிக் ஆசிட் தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஸ்டெர்லைட்டில் எந்த முறையில் தயாரிக்கப்படுகிறதோ, அதே முறையில் தான் மற்ற இடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
சல்புரிக் ஆசிட் தொழிற்சாலைகள் கோரமண்டல் இண்டர்நேசனல், எண்ணூரிலும், கிரீன் பெர்டிலைசர்ஸ் துத்துக்குடியிலும், தனாபாக் கடலூரிலும் உள்ளன. இங்கு எங்கும் இதுவரையிலும் கழிவுகள் வரவில்லையா? அல்லது அந்தளவுக்கு தூய்மையாகக் கையாளப்படுகின்றனவா? அங்கெல்லாம் இன்னமும் போராட்டங்கள் வரவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
2009 லும் போராட்டங்கள் நடைபெற்றதையொட்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிறது. சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்கிறது. மேலும் ஆலையை இயக்க எந்தத்தடையுமில்லை என்றது. காரணம், TNPCB, MOE&F India, அனுமதியுடனே ஸ்டெர்லைட் ஆலை குறிப்பிட்ட கிலோமீட்டர் எல்லைக்குள் அமைக்கப்பெற்றுள்ளது. 250ீ மீட்டருக்கு பசுமை பேண வேண்டும் என்று சொல்லிய கட்டுப்பாட்டு வாரியமே இடப்பற்றாக்குறையால் 25 மீட்டரில் பேணினால் போதுமென அனுமதி அளித்து விட்டு குற்றச்சாட்டுகள் வைப்பதை ஏற்க இயலாது என்றும் ஆலையை மூடுவதால் பொது நலன் பாதிக்கப்படும் என்றுதான் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
TNPCB & CPCBகொடுத்த 30 கட்டுப்பாடுகளில் 29 ஐ நிறைவேற்றி இருந்தாலும் காற்று சம்பந்தமான ஒரு கட்டுப்பாட்டை நிறைவேற்றாததாலும் அரசிடம் ஆலையை இயக்க நீண்ட காலத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்காததாலும் 100 கோடி அபராதம் விதித்தது. மேலும் இந்த அபராதம் இந்த நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்தும், 1997-2012 வரை காலக்கட்டத்திற்கான அபராதம் என்ற காரணம் சொல்லி 100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஐந்து தவணையாக தமிழக அரசிற்கு செலுத்த வேண்டுமென்றும், ஆனால் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இனிமேல் இதைக் காரணம் காட்டி எந்த வழக்கும் கடந்த காலத்தில் நடந்தது எனச் சொல்லி சிவில் வழக்குகள் போட இயலாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அதே ஆண்டு மீண்டும் தமிழக அரசு ஆலையை மூடச் சொல்கிறது. ஸ்டெர்லைட்டால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு என்ற தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த புகாரை ஸ்டெர்லைட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கையில் எடுத்துச் செல்கிறது. அவர்கள் முற்றிலுமாக ஆராய்ந்து ஸ்டெர்லைட் ஆப்பரேசன் மூலமாக கழிவுகள் என்பது தவறு , அது அர்த்தமற்ற குற்றச்சாட்டு என்று தனது ஆய்வில் தெரிவிக்கிறது.
ஸ்டெர்லைட் தனது ஆலையை விரிவுப்படுத்த அத்தனை அனுமதியையும் வாங்கியுள்ளது என்று தெரிவிக்கிறது. அப்படி வாங்கி இருந்தால் யார் மீது பழியைப் போடுவது? ஏனெனில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ, சுற்றுச்சூழல் வாரியமோ, அரசோ அனுமதிக்காமல் எப்படி ஆலையை விரிவுப்படுத்த இயலும் என்பதே கேள்வி.
அடிப்படையில் இதுவே நாம் கேட்க வேண்டியது.
“உண்மையில் சுற்றுச் சூழலில் அக்கறை இருந்தால் ஏன் தமிழக அரசு அனுமதித்தது? மக்கள் நலனில் அக்கறையில்லாமல் போலியாக நடிப்பது ஏன்? ஒருவேளை ஸ்டெர்லைட் மூடப்பட்டால் அங்குள்ள பணியாளர்களுக்கு அரசுப் பணி கிடைக்கும் என்ற உத்தரவாதம் உண்டா? ஆலை மூடப்பட்டால் நிறுவனத்திற்கு என்ன இழப்பீடு வழங்கப்படும் ? மற்ற சாயப்பட்டறைகள், சிமெண்ட் ஆலைகள், சல்புரிக் ஆலைகள், பழுப்பு நிலக்கரி உற்பத்தி நிலையங்கள், கெமிக்கல் ஆலைகள் இவையெல்லாம் உண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்றனவா என்ற கேள்வியை நம் மனச்சாட்சி படி கேட்டு விட்டு ஸ்டெர்லைட் மூடப்படுவது சரியென்ற முடிவுக்கு வாருங்கள். அப்படியான ஆலைகளை எதிர்த்து எந்த அரசியல்கட்சியும் தானாக போராட்டங்களை ஏன் முன்னெடுப்பதில்லை என்றும் சிந்தியுங்கள். இல்லையேல் மீண்டும் இது ஒரு தூண்டப்பட்ட போராட்டமாகவே முடியும். ஆலை நிரந்தரமாக மூடப்படாது என்பதே யதார்த்தம்! சில கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுகள் வருமே ஒழிய ஆலை நிரந்தரமாக மூடப்படாது என்பதே யதார்த்தம்.
******************************************************************************8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக