ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

மதமும் சமயமும் – 6 என்ற தனது பதிவில் ஐயா குமரிமைந்தன்(Kumarimainthan) எழுதிய சைவம் குறித்த சில கருத்துக்களுக்கான எதிர்வினை
"சமணர்கள் வாணிகத்தை முழுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். பல நூற்றாண்டுகளாகப் பொறுத்துக் கொதித்துக்கொண்டிருந்த வாணிகர்களின் குரலாக எழுந்த வாணிகக் குலப் பெண்மணி காரைக்காலம்மையார் சிவனியத்தை ஓங்கி ஒலித்தார்.
இதற்கு முன்னோட்டமாகத்தான் நமக்குக் கிடைத்த தமிழிலக்கியங்களில் முதன்முதலாக “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற சமன்மைக் குரலை ஒலித்த திருமூலர் எனப்படும் மேதையின் பங்களிப்பைப் பார்க்க வேண்டும். அவர் இடையர் என்று கூறப்படுகிறது.
வாணிகம் என்ற நோக்கமின்றிதான் பிறந்த மண்ணின் விடுதலைக்குத் தடையாக இங்குள்ள சாதி, சமயப் பிரிவினைகள் இருக்கின்றன என்ற தவிப்பின் விளைவாக அவரது செயற்பாடுகளைக் காணலாம்." #
எதிர்வினை:இந்தக் கருத்தில் வேறுபடுவதற்கு எதுவும் இல்லை.அத்துடன் சமண,பௌத்தர்களான வணிகக் குடிகளுக்கும் எழுச்சிபெற்று வந்த நிலவுடைமை குடிகளுக்குமான முரண்பாட்டின் உச்சமாக பக்தி இயக்கத்தை நோக்கும் பார்வை இருப்பதையும் மறந்துவிடக்கூடாது.
*****
"இந்தச் சூழலில்தான் குதித்தெழுந்தார் தமிழகத்தின் ஒப்பற்ற தேசிய விடுதலை அரிமாவான திருஞானசம்பந்தர். அம்மணர்களை எந்தத் தயக்கமோ தடுமாற்றமோ இன்றி தேசிய எதிரிகளாகக் காட்டினார். காலங்கருதிக் காத்திருந்த வாணிகர்கள் அவர் பின்னால் திரண்டனர். அடுத்து சராசரித் தமிழக மக்களும் திரண்டனர். மன்னன் முன் நீர் நெருப்புப் போட்டிகளில் மந்திர தந்திரங்களால் அம்மணர்களை வென்று 8000 அம்மணர்களைக் கழுவிலேற்றினார்." #
எதிர்வினை:தமிழ்த்தேசியத்தின் தந்தை என்று இளங்கோவை எப்படிக் கருதமுடியுமோ அதேபோன்று தமிழ்த்தேசியத்தின் களப்போராளியாக கருதத்தக்க சாதனையாளர் சம்பந்தர்.போகூழாக அவர் பிராமணராகப் பிறந்ததால் தீராவிட தீயசக்திகள் அவரை மிகமோசமான கொலைகாரராகச் சித்தரித்துள்ளன.
8000 சமணர் கொலை செய்யப்பட்டனர் என்பது திரிவு படுத்தப்பட்ட கருத்து.வாதில் தோற்றவர் கழுவேறவேண்டும் என்று சமணர்களே விதித்திருந்த நிபந்தனைக்கு அமைவாகவே வாதில் தோற்ற சமணர்கள் கழுவேறினார்கள் என்றே பெரிய புராணம் கூறுகிறது.
****
"ஆனால் காட்டிக்கொடுக்கும் கூட்டமும் சாதி வெறியர்களும் அவருக்கு ஒரு வாணிகப் பெண்ணுடன் நடக்கவிருந்த சாதி மறுப்புத் திருமணப் பந்தலுக்குத் தீவைத்து அவரைக் கொன்றனர். தமிழகத் தேசிய இயக்கத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது.அவரது இடத்தை சிவனிய வெள்ளாளர்கள் பிடித்தனர்." #
எதிர்வினை:தமிழகத்தின் குடிகளுக்கு இடையே இறுக்கமான அகமணமுறை 7 ஆம் நூற்றாண்டில் இருந்ததாக கருதியே குமரிமைந்தன் ஐயா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.ஆனால் அன்று குடியின் உள்ளே அகமணம் விருப்பமாக கருதப்பட்டதே தவிர இறுக்கமாக வேறு குடிகளில் திருமணமே செய்யக்கூடாது என்ற நிலை இருக்கவில்லை. அதற்கு ஐயா குறிப்பிடும் எடுத்துக்காட்டிலேயே தெளிவு உள்ளது.
வணிகர் மகளாக பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்துகொடுக்க அவரின் தந்தை முடிவெடுக்கிறார்.அந்தப் பெண் பாம்பு தீண்டி 'உயிரிழந்து' திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்படுகிறாள்.செல்வந்தரின் மகளாகவும் அழகியாகவும் இருந்த அந்தப் பெண்ணை சம்பந்தர் தான் உயிர்ப்பித்ததால் தனக்கு மகள் போன்றவர் என்று கூறி திருமணம் செய்யவில்லை.இதில் வணிகரோ, சம்பந்தரோ திருமணத்துக்கு சாதி தடையாக இருப்பதாகக் கருதவே இல்லை.
சம்பந்தர் திருமணத்தின்போது ஏற்பட்ட தீ, மத நம்பிக்கைக்கு அப்பால் பார்க்கும்போது சமணர்களின் சதியாகவே இருக்கவேண்டும்.ஏற்கனவே மதுரையில் சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு சமணர்கள் தீ வைத்துக் கொளுத்த முயன்றனர் என்பதை மறந்துவிடமுடியாது.
குழந்தைப் பருவத்திலிருந்து தமிழ்க் குடிகளை ஒரே நோக்குடன் திரட்டக் களப்பணியாற்றி இறுதியில் தன் இலக்குக்காகவே உயிரையும் கொடுத்தவராகச் சம்பந்தர் கருதப்பட்டதால்தான் சைவம் அவரை முதற்குரவராகக் கொண்டாடுகின்றது.
*****
"சம்பந்தர் பின்னால் மக்கள் அணிதிரள்வதைப் பார்த்துத் திகைத்த தருமசேனர் என்ற சமணப் பெயர் கொண்ட வெள்ளாளர் தன் பெயரை நாவுக்கரசர் என மாற்றிச் சிவனியத்தில் புகுந்தார்.அவரைத் தொடர்ந்து சிவனிய இயக்கம் சம்பந்தரின் சாதி ஒழிப்பு இலக்கிலிருந்து முற்றிலும் விலகி சமணத்திலிருந்து மதம் மாறிய வெள்ளாளர்களின் இயக்கமாக மாறியது." #
எதிர்வினை:சம்பந்தருக்கு நிகராக அதைவிட அதிகமாக சைவத்துக்காகப் பாடுபட்ட பெருமை அப்பருக்கு இருக்கிறது.சைவத்தை முன்னெடுத்ததால் பல்லவ மன்னனின் நேரடியான ஒடுக்குமுறைக்கு ஆளானவர் அவர்.அவற்றை வெற்றிகொண்டு பல்லவனை சைவத்துக்கு மாற்றிய பெருமை உடையவர்.சமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலை மீட்கும்வரை உண்ணாவிரதம் இருந்து சோழனை வரவழைத்து மீட்டவர்.சமூகத்துக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடி.
கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர் என்றும் சாதியை சழக்கு என்றும் சாடியவர்.சமூகச் சீர்திருத்தத்தின் முன்னோடி.(இணைப்பில் முழுத் தேவாரத்தையும் காணலாம்.)
தமிழர்களின் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்றே அவரைக் கூறலாம்.அப்படியிருக்கையில் குமரிமைந்தன் ஐயா, அவரைச் சதிகாரராகச் சித்தரித்திருத்து எழுதியிருப்பது துரதிஷ்டவசமானது.
சைவம் வெள்ளாளர்களின் இயக்கமாக மாறியது என்பது மேலோட்டமானது.தமிழ் அரசர்கள் காலம்வரை அரசர்களே சைவத்தை வளர்த்தெடுத்தார்கள்.
13 ஆம் நூற்றாண்டின் பின்னர் தமிழ் அரசுகள் வீழ்ந்த பின்னர் ஏனைய குடிகளைவிட உபரியான செல்வத்தைக் கொண்டிருந்த வேளாண் குடிகளுக்கு மடங்களின் ஊடாக சைவத்தைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அந்த மடங்களிலிருந்தே பிற்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஏட்டுச் சுவடிகள் அச்சேறுவதற்கு கிடைத்தன என்பது அவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டப்போதுமானது.
வேளாண் குடிகளின் பங்களிப்பை உபரியாக விவசாயத்தால் பெற்ற செல்வத்துடன் இணைத்தே பார்க்கவேண்டும்.
7 ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தருக்கு காலத்திலேயே இது யதார்த்தமாக இருந்ததை அவர் ஊக்கமுடைய வேளாளர் அதனால் பெறும் ஆக்கத்தை கொடையாக கொடுக்கும் வள்ளல் தன்மை மிக்கவர்கள் என்று புகழ்ந்து பாடுவதிலிருந்து அறியலாம்.(இணைப்பில் முழுத் தேவாரத்தையும் காணலாம்.)
எனவே தமிழ் அரசர்களின் வீழ்ச்சியின் பின்னர் வேளாண் குடிகள் தம்மிடம் இருந்த உபரியான செல்வத்தால் சைவத்தைப் பாதுகாக்க முடிந்தது என்று கூறுவதே சரி.சைவத்தை அபகரித்துவிட்டார்கள் போன்ற சித்தரிப்புகள் பொருத்தமற்றவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக