தையா? சித்திரையா? - சிந்தனைக்கான கேள்விகள்.
முதலில் தமிழ்நாட்டின் தைப்புத்தாண்டு அறிவிப்பு எப்படி உருவானது என்று பார்க்கவேண்டும். 2007ல் ஈழநாட்டின் கட்டமைப்பிற்கு வடிவம் கொடுத்துக்கொண்டிருந்த குரிசில் பிரபாகரன் அவர்கள், ஈழநாட்டின் புத்தாண்டு தைமாதம் என்று அறிவித்தார். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் சித்திரையே புத்தாண்டு என்பதால், சிங்களரில் இருந்து மாறுபட வேண்டிய அடையாள அவசியம் அவருக்கு இருந்தது. அதனால் தைப்புத்தாண்டை அறிவித்தார்.
இது நமது தமிழினத்தலைவருக்கு ஏதோ செய்தது. அதனால், அடுத்த வருடம் 2008ல் பொங்கலுக்கு அப்புறம் தனது ஊதுகுழல்களை ஓங்கி ஒலிக்கச்செய்து, மறைமலையடிகளார், பாவாணர் ஆகியோரை சாட்சியாக வைத்து தைதான் புத்தாண்டு என்று சட்டம் போட்டார். இதுதான் அதன் வரலாறு.
நமக்குள் எழும் கேள்விகள் பல. ஈழநாடு வடிவம் பெற்றிருக்குமாயின், நாம் என்ன செய்திருப்போம்? கலிவருடமும், சித்திரையும்தான் நமது தொன்மம் ஆயினும்,
1) ஈழத்திலும் த.நாவிலும் தை மாதமே புத்தாண்டாய் நிலைத்திருக்குமா?
2) ஈழத்தில் ஒரு புத்தாண்டும், த.நாவில் ஒரு புத்தாண்டுமாக இருந்திருக்குமா?
3) தி.மு.க செய்வதை அ.தி.மு.க எதிர்க்கும் என்ற வரலாற்றின்படி, ஆட்சி மாறும்போதெல்லாம் அவரவர்களுக்கு ஒரு புத்தாண்டு என்ற சட்டம் போட்டுக்கொண்டுதானே இருப்பார்கள்?
4) இரண்டு கட்சிகளிடையே எந்தப்புத்தாண்டு மக்களிடம் நிலைத்துவிட முடியும்?
5) இரண்டு கட்சியினரும் ஆளுக்கொரு இலக்கியத்தை எடுத்துக்கொண்டு கட்சி கட்டினால், பொதுமக்களான நாம் என்னதான் செய்யமுடியும்?
1) ஈழத்திலும் த.நாவிலும் தை மாதமே புத்தாண்டாய் நிலைத்திருக்குமா?
2) ஈழத்தில் ஒரு புத்தாண்டும், த.நாவில் ஒரு புத்தாண்டுமாக இருந்திருக்குமா?
3) தி.மு.க செய்வதை அ.தி.மு.க எதிர்க்கும் என்ற வரலாற்றின்படி, ஆட்சி மாறும்போதெல்லாம் அவரவர்களுக்கு ஒரு புத்தாண்டு என்ற சட்டம் போட்டுக்கொண்டுதானே இருப்பார்கள்?
4) இரண்டு கட்சிகளிடையே எந்தப்புத்தாண்டு மக்களிடம் நிலைத்துவிட முடியும்?
5) இரண்டு கட்சியினரும் ஆளுக்கொரு இலக்கியத்தை எடுத்துக்கொண்டு கட்சி கட்டினால், பொதுமக்களான நாம் என்னதான் செய்யமுடியும்?
இக்கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. அதனால்தான் நாம் அலைக்கழிகிறோம். மேலும் சில கேள்விகளை பார்ப்போம்.
6) ஒரு ஆண்டு, புத்தாண்டு என்றால் அதற்கு ஐந்திரமும் நாட்காட்டியும் வேண்டும். (ஐந்திரம் = பஞ்சாங்கம்). ஐந்திரம் என்றால் Very detailed calendar என்று பொருள். நாட்காட்டி என்றால் Basic Calendar (home daily calendar) என்று பொருள்.
தை மாதத்தை தலையாய் கொண்டு ஐந்திர நூலினை வெளியிட்டார்களா? கிடையாது.
சன-14தான் தை-1 என்று சொல்லிவிட்டால் போதுமா?
கதிரவன் உதிக்கும் நேரம் என்ன, முழுநிலவு தோன்றும் நாளும் நேரமும் என்ன என்றால் நாம் எதைக்கொண்டு அறியமுடியும்?
இங்குதான் திராவிட கட்சிகளின் திருந்தாமை அப்பட்டமாக வெளிப்படும்.
7) சன-14 = தை-1 என்று சொல்லி, ஆங்கில நாட்காட்டிக்கு தமிழ் வரிப்பை (Mapping) கொடுத்தால் உடனே அது தமிழ்ப்புத்தாண்டு என்ற தகுதியை தருமா? இது கிரிகேரியனை Copy Paste செய்த தகிடுதத்தம்.
கிரிகேரியன்/மேனாட்டு வழக்கப்படி, நாளின் தொடக்கம் நள்ளிரவு 12.00.
தை ஆயினும், சித்திரை ஆயினும் தமிழரின் நாள் என்பது கதிரவன் உதயத்திலிருந்து அடுத்த நாள் கதிரவன் உதிப்பு வரையான 24 மணி நேரம்தான். குருட்டாம் போக்கில், தை என்று அறிவித்து கிரிகேரியனுக்கு இணைப்பு கொடுத்துவிட்டு தை தை என்று குதித்தது வெட்டிச்சண்டைக்கு வழிவகுத்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை.
"செய்வன திருந்தச்செய்" என்பது முதுமொழி. திராவிடக்கட்சிகள் எதையுமே திருந்தச்செய்ததில்லை. இதுவும் அப்படித்தான்.
8) பேரா.க.நெ சொன்னபடி, வானியல் என்பது வான் இயற்பியல், கணியம் என்று இரண்டாக பிரியும். இரண்டுக்கும் உள்ள அடிப்படைகளில் முக்கியமானவை 9 கோள்கள், 12 இராசிகள், 27 உடுக்கள், 108 பாதங்கள். ஐந்திரம் என்பது இந்தக்கோள்களின் நிலைகளை நாள்வாரியாக, மணிவாரியாக கணித்து எழுதுவதே. இதை வைத்து விண்கோளும் விடலாம். சோதிடமும் சொல்லலாம். அல்லவா?
இப்போ, வியாழன் என்ற கோள் எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வது அறிவியல் தேவை. அது அங்கே இருந்தால் ஒரு மனிதனுக்கு என்ன பலன் என்பது சோதியத்தேவை. சோதியம் என்பது மூடநம்பிக்கை என்பது திராவிடப்பற்றாளர்களின் கருத்தாயினும், அறிவியலுக்காகவாவது ஒரு மனிதன்/அறிவன், வியாழன் கோள் எங்கே நிற்கிறது என்று அறிய வேண்டுமா வேண்டாவா?
இதை தையை புத்தாண்டாக அறிவித்தவர்கள் ஏன் இந்த கணிதத்தை தவறவிட்டார்கள்?
9) சரி - தமிழறிஞர்கள் அன்றே சொல்லிவிட்டார்கள் என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறதல்லவா? தமிழறிஞர்கள் எல்லோருமே வானியலிலும் அறிஞர்களா? எங்காவது, புத்தாண்டு தொடர்பாக வானியல் அறிஞரும் தமிழ் அறிஞரும் அமர்ந்து ஆய்வு செய்து தமிழ்-ஐந்திரத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் வெளியிட்டார்களா?
இவை எதையும் செய்யாமல் வாய் வலிக்க தை தை என்று கூவிக்கொண்டிருப்பதில் என்ன பொருளிருக்கிறது?
மீண்டும், கிரிகேரியன் வரிப்பு என்பது மட்டும் தமிழாண்டு ஆகாது.
"மாதமும் தின வாரமும் திதி யோகமும் பல நாள்களும், படர் மாதிரம் திரி கோள்களும்" என்று பஞ்சாமிர்த வண்ணம் சொல்கின்ற நாள்-கணிதக்கூறுகளை உள்ளடக்கிய ஐந்திரக்கணிப்பு இல்லாமல் ஆண்டு முறை ஒன்றூ உருவாகவே முடியாது.
"மாதமும் தின வாரமும் திதி யோகமும் பல நாள்களும், படர் மாதிரம் திரி கோள்களும்" என்று பஞ்சாமிர்த வண்ணம் சொல்கின்ற நாள்-கணிதக்கூறுகளை உள்ளடக்கிய ஐந்திரக்கணிப்பு இல்லாமல் ஆண்டு முறை ஒன்றூ உருவாகவே முடியாது.
கிரிகேரியன் ஆண்டு என்பது என்ன? அது ஒரு மேனாட்டினரின் ஐந்திரக்கணிப்பு.
அப்படி என்றால் தை மாதத்தை தலைப்பாகக்கொண்ட தமிழ்ப்புத்தாண்டின் ஐந்திரக்கணிப்பு எங்கே? அரசு ஆணையில் அந்த ஐந்திரக்கணிப்பு உளதா? ஐந்திரக்கணிப்பினை எந்தப்பல்கலைக்கழக அறிவர்கள் வெளியிட்டார்கள்?
இக்கேள்விகளுக்கு பதில் சொல்வாரா சுபவீயும் பிறரும்?
தற்போது மறைமலையடிகளாரும் பாவாணரும் சொன்னார்கள் என்பதைப்பற்றி பேசுவோம்.
மறைமலையடிகளும் பாவாணரும் எனது இரண்டு கண்கள். எனக்கு மட்டுமல்ல, தமிழ் ஆராய்ச்சி மரபை துவக்கி வைத்தவர்களே இவர்கள்தான். தமிழாராய்ச்சி என்பதன் துவக்கமே இவர்கள்தான்.
அவர்களுக்கு அன்று கிட்டிய தரவுகளை வைத்து அவர்கள் ஆய்வுகளை வெளியிட்டனர். திருவள்ளுவர் பொ.மு 31ல் பிறந்தார் என்பது மறைமலையடிகளாரின் காலக்கணிப்பு. பாவாணர் உள்ளிட்ட சில அறிஞர்களின் சிலப்பதிகார காலக்கணிப்பு பொ.பி 140-150. தொல்காப்பியத்தின் காலமாக பொ.மு 300 என்பது அந்நாளைய கணிப்பு.
இன்று, மறைமலையடிகளின் வழிவந்த ஆராய்ச்சியாளர்களும் பாவாணர் வழிவந்த ஆராய்ச்சியாளர்களும், பெரியார் வழி வந்த க.நெ போன்ற ஆராய்ச்சியாளர்களும், தொல்காப்பியத்தின் காலத்தை பொ.பி 700 என்றும், சிலம்பின் காலத்தை பொ.மு. 75 என்றும், திருவள்ளுவரின் காலத்தை சுமார் பொ.மு 130 என்றும் கணிக்கின்றனர்.
இதுவன்றி, சங்ககாலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே இருந்தது. அவையெல்லாம் இன்று க.நெ, குணா, தமிழண்னல், இராம.கி உள்ளிட்ட பல ஆய்வாளர்களால் உடைபட்டு வெளியாகின்றன.
ஆராய்ச்சி என்பதன் தன்மை இதுதான். மறைமலையடிகளாரும், பாவாணரும், தமிழ் இலக்கியங்கள் எல்லாம் வடமொழியின் தழுவல்; சிலம்பு, குறள் போன்ற இலக்கியங்கள் எல்லாம் பொ.பி 500க்குப்பின் வந்தவை என்று ஆர்ப்பரிக்கப்பட்டபோது அவற்றையெல்லாம் முறியடித்து இலக்கியங்களின் காலத்தை சரியான காலத்திற்கு அருகில் கொண்டு சென்றவர்கள். அவர்கள் வழிவந்தவர்கள் இன்றைக்கு ஆராய்ச்சியின் வளர்ச்சியால், மேலும் துல்லியத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.
இதுதான் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் தன்மையுமாகும். இதுவே மறைமலையாருக்கும் பாவாணருக்கும் செய்கின்ற வணக்கமுமாகும்.
10) அப்படி ஆராய்ச்சி வளர்ந்ததால், திருவள்ளுவர் பிறந்த காலம் என்று மறைமலையடிகளே சொன்ன பொ.மு 31 என்பது மாறி, கிட்டத்தட்ட பொ.மு 130க்கு போகிறது. அப்படியிருக்கையில், ஐந்திரமற்ற திருவள்ளுவராண்டின் தொடக்கமே தவறாகிப் போகிறதல்லவா? இதை எப்படி தமிழரின் ஆண்டு என ஏற்றுக்கொள்ள முடியும்.
அப்படி பொத்தாம் பொதுவாக கட்டாயத்தில் ஏற்றுக்கொண்டு, அதற்காக ஏன் வம்படித்துக்கொண்டு இருக்கவேண்டும்?
எனது ஆண்டு என்றால், அதில் ஆராய்ச்சி உண்மையும், துல்லியமும் அதைப்பேணுகின்ற முறையும் இருந்தால்தான் அது எனக்குப்பெருமை. அதுவே தமிழுக்குப்பெருமை.
எங்கள் தமிழ் உயர்வு. ஆனால் நாங்கள் எதைவேண்டுமானாலும் சட்டமாக்கிக்கொள்வோம் என்றால் நமது ஆண்டை யார் மதிப்பார்கள். தி.மு.க கொண்டு வந்த தைப்புத்தாண்டு கலகலத்து போனதற்குக்காரணம், அது தவறான தொடக்கத்தை கொண்டதும், ஐந்திர முறைகளை தவிர்த்ததும்தான்.
11) இவ்வளவு பேசும் சுபவீ உள்ளிட்ட தைப்புத்தாண்டு நம்பிக்கையாளர்களில் எத்தனை பேர் மறைமலையடிகளார் பேணிய தனித்தமிழை கையாளுகின்றனர்? மறைமலையடிகளும் பாவாணரும் தூயதமிழை மீட்டு தூயதமிழை வளர்த்தவர்கள்.
ஆனால், தை என்பதே புத்தாண்டு என்று சொல்பவர்களில் மிகப்பெரும்பாலோர் கிரந்தம் கலந்த ஊத்தைத்தமிழில்தான் எழுதுவார்கள். அதற்கெல்லாம் நினைவில் வராத மறைமலையும் பாவாணரும் இவர்களின் ஆண்டுக்கணக்கில் மட்டும் வருகிறார்கள் என்றால் இவர்களின் கணக்கு வேறு அல்லவா?
12) வெறும் ஆரியம், சமற்கிருதம் என்று சித்திரையை ஒதுக்குவது அறிவார்ந்த செயலா? நமது வழக்கம் ஒன்றை குறுகிய கால ஆராய்ச்சியில் ஆரியத்துக்கு தாரை வார்ப்பது சரியா?
13) ஆரியத்துக்கு தாரை வார்த்து, தொன்மத்தை அரைகுறையாக அறுத்துப்போட்டு, கிரிகேரியனுக்கு Mapping போட்டுவிட்டு என் தமிழ்க்கடமை முடிந்தது என்று சொல்வது சரியா?
நீளம் கருதி, இறுதியாக சிலவற்றை சொல்லி நிறுத்துகிறேன்.
அ) 60 ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருதமே அல்ல, அவை பிராகிரதச்சொற்கள் என்று அயோத்திதாசரை மேற்கோள் காட்டி, க.நெ கூறுகிறார்.
சுபவீயும் அவரின் தோழர்களும், அயோத்திதாசரையும் க.நெயையும் மறுத்து, இல்லை இல்லை அவை சமற்கிருதப்பெயர்கள்தான் என்று நிறுவுவார்களா?
ஆ) 60 ஆண்டுமுறை என்பது வியாழவட்டம் என்றும், 12 ஆண்டுகளில் வியாழன் சூரியனை சுற்றிவரும் காலம் என்றும், அதுபோல ஐந்து முறை நிருணயம் செய்யப்பட்டு 60 ஆண்டுகாலம் உருவானது என்கிறார் க.நெ.
குணாவோ, 5 ஆண்டு என்பது ஓர் தமிழ் ஊழி என்றும், 12 ஊழிகளே 60 ஆண்டுகளைக்கொண்ட வியாழமான ஆண்டு முறை என்றும் கூறுவார்.
இதையெல்லாம் சுபவீ படித்தாரா என்று தெரியவில்லை.
அறிஞர் குணாவை தமிழ்த்தேசியவாதி என்று ஒதுக்க முற்படுவர் திராவிடப்பற்றாளர்களான சுபவீயும் பிறரும். ஆனால், அப்பழுக்கற்ற திராவிடப்பற்றாளரும், பெரியாரியரும் ஆன அறிஞர் க.நெ சொல்வதை ஏன் சுப.வீ படித்துப்பார்த்து தெளியக்கூடாது?
இ) "சித்திரை சித்திரைத்திங்கள் சேர்ந்தென" என்று கூறும் சிலம்பில் வரும் சித்திரை விழாவை குறிப்பாக வைத்து அதுவே தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம் என்று காட்டத்தலைப்படுவார் குணா. அதை ஏன் புறந்தள்ள வேண்டும்? மேலாய்வு செய்யலாமே?
ஈ) மேலும், ஆவணி மாதத்தை தலைப்பாக கொண்ட ஆண்டுமுறை இருந்தது என்றும், கார்த்திகை மாதத்தை தலைப்பாக கொண்ட ஆண்டுமுறை இருந்ததென்றும் சொல்லும் குணாவின் ஆய்வைப்பற்றி யாராவது மேலாய்வு செய்திருக்கிறார்களா? என்பது சிந்திக்கத்தக்கது. ஆடி 18 என்பதே ஒரு நிதியாண்டின் தொடக்கம்தானே?
முடிவு: சீரிய ஆராய்ச்சியாளரகளை புறந்தள்ளிவிட்டு, குருட்டாம் போக்கில் எதையாவது ஒன்றை சொல்லி, தி.மு.கவும், அ.தி.மு.கவும் குழாயடிச்சண்டை போட்டு நம்மை சீரழித்துவருகின்றனர்.
தி.மு.க, தை என்பதையும் நிறுவவில்லை. திருவள்ளுவராண்டு என்பதும் தொடக்கத்திலேயே தவறு. ஐந்திரக்கணிப்பும் கிடையாது. ஆகவே தை என்பதை ஏற்க மறுத்தது தமிழ்க்குமுகம்.
அதேபோல, அ.தி.மு.க சித்திரை என்று சொல்வது எனக்கு உகப்பே ஆயினும், அவர்களைப்பொறுத்தவரை அது அம்மா சொன்ன மாபெரும் வேதவாக்கு அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களின் மண்டையில் வேறு எதுவும் கிடையாது.'
இந்த இரண்டு கிறுக்குகளின் ஆளுமையில் இருக்கும் நாம், தையிலும் சித்திரையிலும் படும் அல்லல் கொஞ்சநஞ்சமல்ல.
சித்திரையை ஏற்றவர்கள் அ.தி.மு.கவும் அல்ல. தையை ஏற்றவர்கள் அறிவர்களும் அல்ல.
சித்திரையை ஏற்றவர்கள் அ.தி.மு.கவும் அல்ல. தையை ஏற்றவர்கள் அறிவர்களும் அல்ல.
இரண்டு கட்சிகளின் அடிதடியில் வெகுண்டு, ஏற்கனவே இருக்கும் முறையை பின்பற்றுபவர்கள்தான் அனைவரும்.
எது புத்தாண்டு என்பதை இரண்டு கட்சிகளும் இருக்கும்வரை சரியாக நிறுவமாட்டார்கள். பஞ்சாங்கத்தை தூக்கிக்கொண்டு பொ.மு 2000ல் கைபர் போலன் வழியே வந்தார்கள் என்று சல்லியடிப்பதை பொருட்படுத்தாது காத்திருப்போம். தமிழ் வல்லாரும், வானியல் வல்லாரும் சேர்ந்து சரியாக நிறுவி தமிழர்க்கு அடையாளமான புத்தாண்டு நாளை சொல்வார்கள். அது சித்திரைக்கே வழிவிடூம் என்பது எம்மைப்போன்றோரின் உறுதி. காலம் ஆகட்டும். அவசரமில்லை. அதில் ஆசிவக அறிவர் என்று சொல்லப்படுகிற சித்த மரபின் கணியர்கள்/வள்ளுவர்களின் உழைப்பு வெளியாகும்.
தமிழர்கள் நித்திரையில் இல்லை என்பது மட்டும் உறுதி. மீண்டும் பின்னர்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நாக.இளங்கோவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக