ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அறிவியல் நூல்களும் எழுத்தாளர்களும்!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
==================================
பொதுவாக அறிவியல் நூல்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1. அறிவியல் மூல நூல்கள்: (நியூட்டனின் பிரின்சிபியா,
டார்வினின் உயிரினங்களின்  தோற்றம் போன்றவை).
இவற்றை சராசரி மனிதன் படித்துப் புரிந்து கொள்வது
சற்றுக் கடினம்.

2. அறிவியல் விளக்க நூல்கள் (popular science books):
அறிவியலைப் பாமர மக்களும் புரிந்து கொள்ளுமாறு
எழுதப் படுபவை.
(காரல் செகனின் காஸ்மாஸ் போன்ற நூல்கள்).

3. அறிவியல் புனைவுகள்: அறிவியலும் புனைவும்
கலந்தவை (ஹெச் ஜி வெல்ஸின் இன்விசிபிள் மேன்,
ஆர்தர் கிளார்க்கின் ஸ்பேஸ் ஒடிசி போன்றவை).

இந்திய வரலாற்றில் பண்டைக் காலத்திலேயே
அறிவியல் செய்திகள் அடங்கிய நூல்கள் எழுதப்பட்டிருந்தன. எனினும் இக்கால நூல்கள் பலவும் கிடைக்கப் பெறவில்லை. பொ.ச.மு 8ஆம் நூற்றாண்டில் பௌதாயனர் எழுதிய
காலத்தால் முற்பட்ட சுல்ப சூத்ரா
(Sulba Sutra by Baudhayana c.8th century BCE) முழுக்க முழுக்க
ஓர் அறிவியல் மூல நூலாகும். பிற்காலத்தில் ஆரிய பட்டர்
உள்ளிட்ட பல அறிஞர்கள் நூல்களை எழுதியுள்ளனர்.
இவை யாவும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை ஆகும்.
ஆக அறிவியல் நூல்கள் என்றாலே அவை அண்மைக்
காலத்தவை என்று கருத இயலாது. இந்தியாவில் அறிவியல் நூல்களுக்கு மிகவும் பழமையான வரலாறு உள்ளது.

என்றாலும் மக்களுக்கான அறிவியல் விளக்க நூல்களும்
(popular science books) அறிவியல் புனைவுகளும் (science fiction)
அண்மைக் காலத்திய வரவுகளே.

அறிவியலின் உரையாசிரியர்கள்!
------------------------------------------------------------
சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரும்,
திருக்குறளுக்கு பரிமேலழகரும், நாலாயிரம் திவ்வியப்
பிரபந்தத்திற்கு பெரிய வாச்சான் பிள்ளையும்  உரை
எழுதியுள்ளனர். இவர்கள் உரையாசிரியர்கள் என்று
அழைக்கப் பட்டனர். இதைப்போலவே, அறிவியல் விளக்க
நூல்கள் எழுதுவோரும் உரையாசிரியர்களே.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய "காலம் ஒரு சுருக்கமான
வரலாறு" (A brief history of time)  என்ற நூல் மிகச் சிறந்த
ஒரு அறிவியல் விளக்க நூலே. இது போன்ற மிகச் சிறந்த
அறிவியல் விளக்க நூல்களை எழுதிய காரல் செகன்,
பிரியன் கிரீன் (Brian Greene) ஆகியோரும்
உரையாசிரியர்களே. அறிவியலுக்கு உரை எழுதும்
இவர்கள் இல்லாமல் அறிவியலைப் பாமர மக்கள்
புரிந்து கொள்ள இயலாது என்பதே உண்மை. இதனால்தான்
சமகால அறிவியல் வரலாற்றில் அறிவியல் விளக்க நூல்கள் சிறப்புக்குரிய இடத்தைப் பிடித்துள்ளன.

அறிவியல் எழுத்தின் வரலாற்றில் மிகத் தாமதமான
வரவு அறிவியல் புனைவு ஆகும். அறிவியலைக்
கற்பனையுடன் கலந்து சுவைபடக் கொடுப்பவை
புனைவுகள். அறிவியல் விளக்க நூல்களுக்கும்
(popular science books) அறிவியல் புனைவுகளுக்கும்
(science fiction) உள்ள வேறுபாடு நீலகண்ட சாஸ்திரிக்கும்    சாண்டில்யனுக்கும் உள்ள வேறுபாடாகும்.

கல்லிடைக்குறிச்சி நீலகண்ட சாஸ்திரி
சோழர்கள் (The Cholas) என்ற நூலை எழுதியவர்.
இது சோழர்களின் வரலாறு ஆகும்.
சாண்டில்யன் யவனராணி எழுதியவர். இது ஒரு வரலாற்றுப்
புனைவு. கரிகால் சோழனின் காலத்தில் நடந்த கதை.

அறிவியல் புனைவுகள்!
------------------------------------------
உலகின் முதல் அறிவியல் புனைவு
ஜோஹன்னஸ் கெப்ளர் (1571-1630) என்ற ஜெர்மானிய
விண்ணியல் அறிஞர் எழுதிய சோம்னியம் (Somnium)
என்ற நூலே என்கிறார் காரல் செகன். சோம்னியம்
என்ற லத்தீன் சொல்லுக்கு கனவு என்று பொருள்.
கெப்ளரின் மறைவுக்குப் பின் 1634இல் இந்நூல்
பதிப்பிக்கப் பெற்றது. நிலவுக்குப் பயணம் செய்து
அங்குள்ள ஒரு தீவில் தங்குவதாக கதாநாயகன்
கனவு காண்பதே கதை.

120 ஆண்டுகளுக்கு முன்பு 1897இல் ஹெச் ஜி வெல்ஸ்
(1866-1946)  கண்ணுக்குத் தெரியாதவன் (The Invisibile Man)
என்ற நாவலை எழுதினார். இது ஒரு அறிவியல் புனைவு.
என்றாலும் புனைவு (science fiction) என்ற சொல்லே அப்போது
உலக  இலக்கிய அரங்கில் உருவாகி இருக்கவில்லை. மாறாக
அறிவியல் வசீகரம் (science romance) என்றுதான் அறிவியல்
புனைவுகள் அழைக்கப் பட்டன.

ஹெச் ஜி வெல்சின் கதாநாயகன் கிரிஃபின் (Griffin)
தன் உடலின் ஒளிவிலகல் எண்ணை (refractive index)
காற்றின் ஒளிவிலகல் எண்ணுக்குச் சமமாக வைத்துக்
கொள்வதன் மூலம், யார் கண்ணுக்கும் தெரியாமல்
வாழ்கிறான் என்பது கதை.பிறரின் கண்ணுக்குத்
தெரியாதவன் என்றாலும் அவனின் விழித்திரை
மூலம் பார்க்க முடியும்  (The invisible man has visible retinas) என்ற அனுமானத்தின் மீதுதான் புனைவு கட்டமைக்கப்
பட்டுள்ளது.

ஹெச் ஜி வெல்ஸின் எக்காலத்திலும் புகழ்பெற்ற புனைவு
1895இல் வெளிவந்த கால எந்திரம் (The Time Machine)
என்னும் நாவல் ஆகும். காலத்தினூடே முன்னும் பின்னும்
பயணம் செய்ய வல்ல ஓர் எந்திரத்தில் ஏறி, நாவலில்
வரும் காலப்பயணி இறந்த காலத்திற்குச் செல்கிறார்.
நாவல் எழுதப்பட்ட 1895இல் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட பொ ச 802, 701 ஆகிய காலத்திற்குச் செல்கிறார்.
அங்கு வினோதமான மனித இனத்தைச் சந்திக்கிறார்
என்பதாக கதை போகும்.

விந்தை உலகில் ஆலிஸ்!
---------------------------------------------------------------------------------
சமகாலத்தில் உலக அளவில் செல்வாக்குப் பெற்ற
அறிவியல் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில்
சிலர் இவர்கள்.
1ஆர்தர் கிளார்க்  2.காரல் செகன் 3.ஸ்டீபன் ஹாக்கிங்
4.ஜார்ஜ் காமோவ் 5.ரிச்சர்ட் ஃபெயின்மேன்
6. பிரிஜித் காப்ரா 7. பிரியன் கிரீன்  8.ரிச்சர்ட் டாக்கின்ஸ்
9.வி எஸ் ராமச்சந்திரன்  இந்தப் பட்டியல் முழுமையானதல்ல,
முற்றிலும் தற்போக்காக (random) கூறப்படுவது.

லூயி கரோல் என்னும் பிரிட்டிஷ் கணித அறிஞர் 1865ல்
விந்தை உலகில் ஆலிஸ் (Alice in wonderland by Lewis Carroll)
என்னும் புதினத்தை .எழுதினார். கதையின் நாயகி
ஆலிஸ் என்னும் சிறுமி விந்தையான உயிரினங்கள்
வாழும் ஒரு உலகிற்குச் சென்று அங்குள்ள உயிரினங்களிடம்
பழகுவதாக இக்கதை புனையப் பட்டுள்ளது.

இது முழுவதும் கற்பனைக்கதைதான் என்றாலும், இதை
எழுதிய லூயி கரோல் ஒரு கணித அறிஞர் என்பதால்,
புதினத்தில் ஆங்காங்கே கணிதம், தர்க்கம் குறித்து
பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். உலகம்
முழுவதும் அறிமுகமாகி பெரும் செல்வாக்குப் பெற்ற
புதினம் இது. அறிவியல் புனைவு என்னும் கறாரான
வரையறைக்கு  இப்புதினம் உட்படாது என்றாலும்
ஒரு  வகையில் சமகால அறிவியல் புனைவுகளுக்கு
இப்புதினம் ஒரு முன்னோடி என்று கொள்ளலாம்.

ஆர்தர் கிளார்க்கின் புனைவுகள்!
-------------------------------------------------------------
ஆர்தர் கிளார்க் (Arthur Charles Clarke 1917-2008) இங்கிலாந்தைச்
சேர்ந்த அறிவியல் எழுத்தாளர். தம் வாழ்நாளின்
பெரும் பகுதிக்காலம் இலங்கையில் வாழ்ந்து தம்
90ஆவது வயதில் மறைந்தார். இவர் அறிவியல் விளக்க
நூல்களும் புனைவுகளுமாக நிறையவே எழுதியுள்ளார்.
இவரின் புனைவுகள்   பெரும்பாலும்
விண்வெளிப் பயணம் குறித்தவையே ஆகும்.

இவர் தமது நூல்களில் எழுதியவை பின்னாளில்
உண்மை ஆயின. எனவே இவர் விண்வெளி யுகத்தின்
தீர்க்கதரிசி என அழைக்கப் பட்டார். செயற்கைக்கோள்
மூலம்  உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்பு
சாத்தியம் என்று 1950களிலேயே ஆர்தர் கிளார்க்
கணித்திருந்தார். இது உண்மையாகி விட்டது என்பது
அனைவரும் அறிந்ததே. மேலும் உலகில் உள்ள
ஒவ்வொருவரும் தகவல் அனுப்பவும் பெறவும்
வல்ல கையடக்கமான ஒரு கருவியை வைத்திருப்பார்கள்
என்று கணித்திருந்தார். அதன்படியே இன்று அனைவரும்
ஒரு செல்பேசி வைத்திருக்கிறோம்.

1968இல் ஆர்தர் கிளார்க் எழுதிய  ஸ்பேஸ் ஒடிசி
(2001: A Space Odyssey) என்னும் நூல் உலகப்புகழ் பெற்ற
அறிவியல் புனைவாகும். இதே தலைப்பில் வரிசையாக
மொத்தம் நான்கு நூல்களை .எழுதியுள்ளார்.
(2010: Odyssey two, 2061: Odyssey three, 3001: The Final Odyssey)

ஒடிசி என்ற சொல்லுக்கு நீடித்த சாகச விண்வெளிப்
பயணம் என்று பொருள். கிரேக்கத் தொல்கதைகளில்
வரும் ஒடிசஸ் என்ற வீரனின் சாகசப் பயணத்தைக்
குறிக்கும் சொல்லே ஒடிசி என்பது.

காரல் செகன் முதல் ரிச்சர்ட் டாக்கின்ஸ் வரை!
------------------------------------------------------------------------------------
காரல் செகன்: அமெரிக்க விண் இயற்பியலாளரும்
அறிவியல் எழுத்தாளருமான காரல் செகன் (1934-1996)
தமது அறிவியல் விளக்க நூல்களால் (popular science books)
உலகப்புகழ் பெற்றவர். 1980இல் இவர் எழுதிய
ஒழுங்குறு பிரபஞ்சம் (The Cosmos) என்ற நூல் இன்றளவும்
உலகெங்கும் படிக்கப்பட்டு வருகிறது. 1985இல் இவர்
எழுதிய "தொடர்பு" (Contact) என்ற அறிவியல் புனைவு
உலகெங்கும் செல்வாக்குப் பெற்றது. உயிரின் பரிணாம
வளர்ச்சி குறித்த 1977இல் எழுதப்பட்ட இவரின்
"ஏடன் தோட்டத்தின் கொள்ளிவாய்ப் பிசாசுகள்"
(The Dragons of Eden: Speculations on the evolution of human intelligence)
என்ற நூல் இவரின் உயிரியல் புலமையையும்
வெளிப்படுத்தியது.

ஸ்டீபன் ஹாக்கிங்: அண்மையில் மறைந்த பிரிட்டிஷ்
விண் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (1952-2018)
உலகில் அதிகம் விற்பனையான அறிவியல் விளக்க
நூல்களை எழுதியவர். 1988இல் இவர்  எழுதிய
"காலம் ஒரு சுருக்கமான வரலாறு" (A brief history of time)
என்ற நூல் உலகத்தைக் குலுக்கியது. லியனார்ட்
மிலாடினோவ் என்பவருடன் இணைந்து 2010இல் இவர்
எழுதிய "மாபெரும் வடிவமைப்பு" (The Grand Design) என்ற
நூல் பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கியது.
இவரின் நூல்கள் அனைத்துமே அறிவியல் கல்விப்
பின்னணி இல்லாத பரந்துபட்ட வாசகர்களை
மனதில் கொண்டு எழுதப்பட்டவை. எனினும் குறைந்தது
12ஆம் வகுப்பு வரையிலான இயற்பியல் பாடங்களில்
பரிச்சயம் இருப்பதன் மூலமே இந்நூல்களை
விளங்கிக் கொள்ள முடியும்.

சமகால உலகில் காட்சி ஊடகங்களின் செல்வாக்கு
உச்சத்தில் இருப்பதால் ஆர்தர் கிளார்க், காரல் செகன்,
ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் புகழ்பெற்ற நூல்கள்
திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித்
தொடர்களாகவும் மறுஆக்கம் பெற்றுள்ளன. இதன்
மூலம் இன்னும் அதிகமான வாசகர்களிடம்
இந்நூல்களின் கருத்துக்கள் சென்றடைந்து உள்ளன.

ஜார்ஜ் காமோவ்: ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
வாழ்ந்த ஜார்ஜ் காமோவ் (1904-1968) ஒரு கோட்பாட்டு
இயற்பியலாளர். பெருவெடிப்புக் கொள்கையைப்
பெரிதும் ஆதரித்தவர்.  முன்பத்திகளில் இதுவரை
பார்த்த அறிவியல் அறிஞர்களில் இவரே மூத்தவர்.
1947இல் வெளியான இவரது "ஒன்று இரண்டு மூன்று....
வரம்பிலி" (One two three....infinity: Facts and speculations of science)
என்ற நூல் பல்வேறு கணித, அறிவியல் அடிப்படைகளை
பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும்
நூலாகும். நூல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆனபிறகும்
இவரின் இந்நூல் தொடர்ந்து பிரசுரமாகி வருகிறது.

ரிச்சர்ட் ஃபெயின்மேன்: அமெரிக்க குவான்டம்
இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெயின்மேன் (1918-1988)
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்.அடிப்படை
இயற்பியல் குறித்த, கல்லூரி மாணவர்களுக்கான
1961-64 காலத்திய இவரின் தொடர் சொற்பொழிவுகள்
(Feynman lectures) நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை
இன்றளவும் இயற்பியல் மாணவர்களால் விரும்பிப்
படிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கணக்கற்ற
அறிவியல் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

ஃபிரிஜித் காப்ரா: ஆஸ்திரிய இயற்பியலாளர் ஃபிரிஜித்
காப்ரா (பிறப்பு: 1939) தமது "இயற்பியலின் பாதை"
(The Tao of physics) என்ற 1975ஆம் ஆண்டில் எழுதப்பட்ட
நூல் மூலம் உலகப்புகழ் பெற்றார். கீழ்த்திசை
நாடுகளான இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளின்
தத்துவங்களின் மீது (oriental philosophy) ஈர்ப்புக் கொண்டவர்
இவர். "திருப்புமுனை" (The turning point) என்பது இவர் 1982இல்
எழுதிய பிரபலமான அறிவியல் விளக்க நூலாகும்.

பிரியன் கிரீன்: கொலம்பியா பல்கலைப்
பேராசிரியரான பிரியன் கிரீன் (Brian Greene, பிறப்பு 1963)
ஓர் இழைக்கொள்கையாளர் (string theorist). 1999இல்
எழுதிய "கம்பீரமான பிரபஞ்சம்" (The Elegant Universe),
2011இல் எழுதிய "மறைந்திருக்கும் யதார்த்தம்"
(The Hidden Reality) உள்ளிட்ட பல்வேறு நூல்கள் மூலம்
இழைக்கொள்கையை இவர் விளக்கி இருக்கிறார்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ்: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைப்
பேராசிரியராகப் பணிபுரிந்த ரிச்சர்ட் டாக்கின்ஸ்
(பிறப்பு: 1941) ஓர் பரிணாம உயிரியலாளர்
(evolutionary biologist) ஆவார். 1976இல் இவர் எழுதிய
"சுயநல ஜீன்" (The Selfish Gene) என்ற புத்தகம் உலகம்
முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் புத்தகம் வெளிவந்த பிறகே ஜீன்கள் குறித்த
அறிவை உலகம் பெற்றது.  நாத்திகரும் மத
எதிர்ப்பாளருமான இவர் 2006இல் எழுதிய
"கடவுள் என்னும் பிரமை" (The God Delusion) என்னும் நூல்
பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பல நூல்களை
இவர் எழுதியுள்ளார்.

தமிழரான வி எஸ் ராமச்சந்திரன்:
-----------------------------------------------------------
விளையனூர் சுப்பிரமணியன் ராமச்சந்திரன் (பிறப்பு: 1951)
கலிபோர்னியா பல்கலையில் நரம்பியல் பேராசிரியராகப்
பணியாற்றி வருகிறார். தமிழரான இவர் சென்னை
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் (MBBS)
பயின்று, பின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் தத்துவ அறிஞர்
(Ph.D) பட்டம் பெற்றவர். நரம்பியல் மற்றும் உளவியல்
துறைகளில் உலகின் தலைசிறந்த நிபுணர்களில்
ஓருவராக இவர் திகழ்கிறார்.

இவர் சிறந்த அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1998இல்
இவர்  எழுதிய "மூளையின் மர்மங்கள்" (Phantoms in the brain)
என்ற நூல் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.
நரம்பியல், உளவியல் மற்றும் மூளையின் செயல்பாடுகள்
குறித்து இவர் எழுதிய நூல்கள் உயிரியல் துறையில்
பெரும் செல்வாக்குப் பெற்றவை ஆகும்.

இதுகாறும் ஆங்கிலத்தில் எழுதும் அறிவியல்
எழுத்தாளர்கள் குறித்துப் பார்த்தோம். பெங்களூரில்
வாழ்ந்து மறைந்த இந்தியப் பெண் கணித மேதையான
சகுந்தலா தேவியின் (1929-2013) கணிதப் புதிர்கள்
பற்றிய நூல்களையும் (Puzzles to puzzle you) இந்த வகையில்
சேர்த்துக் கொள்ளலாம்..

இந்தியாவில் தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில்
அறிவியலை எழுதும் எழுத்தாளர்களும் உண்டு.
தமிழில் அறிவியல் என்றவுடனே பெ நா அப்புசாமி,
சுஜாதா ஆகிய மறைந்த எழுத்தாளர்களின் பெயர்கள்
சட்டென்று நினைவுக்கு வரும். அது குறித்து தனியாக
எழுத வேண்டும்.

அறிவியலின் வளர்ச்சிப் போக்கில் "அறிவியலின் தத்துவம்"
(Philosophy of Science) என்ற ஒரு துறை எழுந்தது. காரல் பாப்பர்
(Karl Popper 1902-1994) என்ற ஆஸ்திரிய-பிரிட்டிஷ் தத்துவ அறிஞர்
அறிவியலின் தத்துவம் குறித்து சில கோட்பாடுகளை
முன்மொழிந்தார். இவர் எழுதிய பல நூல்களில்,
1934இல் எழுதிய "அறிவியல் கண்டுபிடிப்புகளின் தர்க்கம்"
(The Logic of Scientific Discovery) என்ற நூல் உலகப் புகழ்
பெற்றது. போதிய அளவு அறிவியல் கற்ற முதிர்ந்த
வாசகர்கள் காரல் பாப்பரின் அறிவியலின் தத்துவம்
பற்றிய நூல்களையும் கற்க வேண்டும்.

அறிவியல் வாசகர்களும் ஆர்வலர்களும் இக்கட்டுரையில்
குறிப்பிட்டுள்ள அறிவியல் நூல்களையும், குறிப்பிடாமல்
விடப்பட்ட நூல்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களோடு நின்று விடாது, புகழ்பெற்ற
எழுத்தாளர்களின் அறிவியல் விளக்க நூல்களையும்
படிக்கும்போதுதான் அறிவியல் குறித்த முழுமையான
பார்வையைப் பெற முடியும்.
****************************************************************
jules vern and his books

Sam Harris and his books to be aadded.

          










   








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக