வெள்ளி, 20 செப்டம்பர், 2024

 சுதா சேஷய்யன் நியமனம்: வரவேற்போம்!
 ---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
டாக்டர் சுதா சேஷய்யன் MBBS,MS அவர்கள் 
செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் 
துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் தலைவராக முதல்வர் 
மு க ஸ்டாலின் இருந்து வருகிறார்.

மு க ஸ்டாலின் தலைவராக இருப்பது நிறுவனத்திற்கு 
கெளரவம்: அவ்வளவே! ஆய்வுப் பணிகளுக்கு 
அவரால் பயன் இல்லை. இந்நிலையில் 
துணைத் தலைவராக சுதா சேஷையன் 
அவர்களின் நியமனம் ஆய்வுப் பணிகளுக்குத் 
தலைமை வழங்கும்.

எம்ஜியார் மருத்துவப் பல்கலைக் கழகத்தின்
துணை வேந்தராகத் திறம்படப் பணியாற்றி 
நற்பெயர் ஈட்டியவர் சுதா சேஷையன்.

சுதா சேஷையன் ஆன்மிகப் பேச்சாளர்தானே,
தமிழறிஞரா என்று கேட்டுத் 
தம் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளனர் சிலர்.   

கிருபானந்த வாரியார் ஆன்மிகப் பேச்சாளராகத்தானே 
இருந்தார்; அவர் தமிழறிஞர் அல்லர் என்று 
கூற இயலுமா?

பன்னிரு திருமுறை நாலாயிரம் திவ்வியப்  பிரபந்தம்   
கம்ப ராமாயணம் வில்லி பாரதம் திருவிளையாடல் 
புராணம் என்று சமய இலக்கியங்களில் ஆழ்ந்த 
வாசிப்பு உடையவர் சுதா சேஷையன்.

தமிழ் மட்டுமே (Tamil only) கற்ற படிப்பாளிகளை  
தமிழறிஞர்களாகக் கருதுவதும், தமிழ்ப் புலமை 
மிக்க கணிதம் இயற்பியல் மருத்துவம் போன்ற 
பிற துறை வல்லுநர்களை தமிழறிஞர்களாக
ஏற்க மறுப்பதும் கன்சர்வேட்டிவ் மனப்பான்மை 
ஆகும். இத்தகைய பத்தாம் பசலிகள்தாம்  
சுதா சேஷையன் தமிழறிஞரா என்று கேட்கிறார்கள். 

பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் 
படைத்த சங்கப் புலவர் குழாம் தமிழ் ஒன்லி   
படிப்பாளிகளை மட்டும் கொண்டதல்ல..
கணியன் பூங்குன்றன், மருத்துவன் தாமோதரன்,
மதுரைக் கணக்காயனார் மகன் என்று பல்துறை 
அறிஞர்களைக் கொண்டது.

கடந்த காலங்களில் தமிழ் மற்றும் தமிழ் 
சார்ந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட  
நியமனங்ககள்  அறிவியலில் இருந்து துண்டித்துக் 
கொண்டவையாகவே இருந்தன.  இந்த நிலைமை 
லேசாக மாறத்  தொடங்கி இருப்பதன்  அடையாளமே 
சுதா  சேஷையனின் நியமனம்.

அறிவியலின் பிரதிநிதியாக செம்மொழித் தமிழ் ஆய்வு 
நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் 
சுதா சேஷையன்  அவர்களின் நியமனத்தை 
நியூட்டன் அறிவியல் மன்றம் வரவேற்கிறது.  

 
  
 
       
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக