சனி, 15 ஜூன், 2019

கூடங்குளம் அணுக்கழிவுப் பிரச்சினை
சுப. உதயகுமாரன்
அணுக்கழிவு மிகவும் அழுக்கானதும், ஆபத்தானதும், பெரும் செலவினம் கொண்டதுமாகும். இது பொதுமக்களின், சுற்றுச்சூழலின், வருங்காலத்தின் மீது பெரும் தாக்கங்களை எழச் செய்வதால், இந்தப் பிரச்சினையை அரச இரகசியமாக வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அணுவைப் பிளந்து எரிசக்தி எடுக்கும் அறிவும், திறனும் பெற்றுவிட்ட நாம், அதனால் எழும் கழிவுகளை, அவற்றின் அழிவுகளைக் கையாளத் தெரியாமல் திகைத்து நிற்கிறோம். கதிரியக்க பூதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நாம், அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். கதிர்வீச்சுக் கழிவுகளை அழித்தொழிக்க முடியாது; அவை தங்கள் வாழ்நாள் முழுவதையும் நிறைவு செய்து, நிலத்தை, நீரை, காற்றை, கடலை என அனைத்தையும் அழித்து முடிக்கும்வரை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அணு உலையிலிருந்து உயர்தரக் கழிவு (high-level waste), நடுத்தரக் கழிவு (intermediate-level waste), கடைத்தரக் கழிவு (low-level waste) என்று மூன்று வகைக் கழிவுகள் உருவாகின்றன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பீப்பாய்கள் (200,000 கன அடி) கடைத்தர மற்றும் நடுத்தரக் கழிவுகளும், 50,000 பீப்பாய்கள் (10,000 கன அடி) உயர்தரக் கழிவுகளும் உருவாக்கப்படுகின்றன. அணுஉலைகளிலிருந்து வெளிவரும் எரிக்கப்பட்ட எரிகோல்கள் இவற்றில் அடங்காது.
அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனிய எரிகோல்கள் தொடங்கி பணியாளர்களின் கையுறைகள்-காலணிகள் வரை எல்லாமே கதிர்வீச்சை வெளியிடுவதால் அல்லது கதிர்வீச்சுக்குள்ளாகி இருப்பதால், அவற்றை பிற திடக்கழிவுகள்போல கண்ட இடங்களில் வீசியெறிய முடியாது. அணுஉலைகளில் எரிக்கப்பட்ட எரிகோல்கள் போன்ற உயர்தரக் கழிவுகள் மிக அதிக கதிர்வீச்சுத்தன்மை கொண்டவையாக, மிகவும் ஆபத்தானவையாக இருப்பதால், அவற்றை மிக கவனமாகக் கையாண்டு, மிகவும் கண்ணும்கருத்துமாக போற்றிப் பாதுகாத்தாக வேண்டும்.
இந்தியாவில் அணுஉலைகளிலிருந்து வெளிவரும் திரவக்கழிவுகளைப் பெரும்பாலும் கடலுக்குள்ளேயே விட்டுவிடுகிறார்கள். திடக்கழிவுகளைப் பாதுகாக்க ‘தரைமட்டக் கழிவு மையம்’ (Near Surface Disposal Facilities - NSDF) நிறுவியிருக்கிறார்கள். டிராம்பே, தாராப்பூர், கல்பாக்கம், கோட்டா, நரோரா, கக்ரப்பார், கைகா எனும் ஏழு இடங்களில் காங்கிரீட் அல்லது கற்களால் கட்டப்பட்ட அகழிகளுக்குள் இம்மாதிரி அணுக்கழிவு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை எவ்வளவு அணுக்கழிவுகள் உருவாகியிருக்கின்றன என்பது குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், இந்தியாவில் அணுஉலை எரிபொருள் மூடப்பட்ட படிநிலைகளைக் (closed fuel cycle) கொண்டிருப்பதால், மிகக் குறைந்த அளவுக் கழிவுகளே உருவாகின்றன என்கிற மழுப்பலான பதிலையே எப்போதும் சொல்லி வருகிறார்கள். இப்போதிருக்கிற இடைநிலை அணுக்கழிவுக் கிட்டங்கிகளிலேயே 30-40 ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம் என்பதால், அணுக்கழிவு இந்தியாவுக்கு ஓர் உடனடிப் பிரச்சினை அல்ல என்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.
அணுக்கழிவுகளின் அடுத்தடுத்த நிலைகள்
ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணுஉலையில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 30,000 கிலோ எடையுள்ள எரிக்கப்பட்ட எரிகோல்கள் வெளிவரும். கூடங்குளத்தில் ஓர் அணுஉலையில் 163 எரிகோல்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 55 எரிகோல்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய எரிகோல்கள் புகுத்தப்படும். ஒவ்வொரு எரிகோலும் 311 அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றுள் யூரேனியம் டைஆக்சைட் உருண்டைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த எரிகோல்கள் நான்கு மீட்டர் உயரமும் 125 கிலோ எடையும் கொண்டிருக்கும்.
எரிந்து முடிந்துவிட்ட எரிகோல்களைப் பாதுகாக்க ‘எரிகோல் சேமிப்புத் தேக்கம்’ (Spent Fuel Pool) ஒன்று அணுஉலைக் கட்டிடத்துக்குள்ளேயே அமைக்கப்படுகிறது. அதில் ஏழு இயங்கு வருடங்களில் (operation years) எரிக்கப்பட்ட எரிகோல்களை மட்டுமே சேமித்து வைக்கமுடியும். இந்திய அணுமின் கழகம் 2017 டிசம்பர் மாதம் அணுசக்தி ஒழுங்கமைப்பு ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூடங்குளம் எரிகோல் சேமிப்புத் தேக்கத்தில் 565 செல்கள் உள்ளன, அவற்றுள் 64 செல்கள் குறைபாடுகள் கொண்ட எரிகோல்களை பாதுகாப்பதற்கு ஒதுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. கூடங்குளம் முதல் அலகில் 100 எரிக்கப்பட்ட எரிகோல்களும், இரண்டாம் அலகில் 54 எரிக்கப்பட்ட எரிகோல்களும் பாதுகாக்கப்படுகின்றன என்று ஆர். எஸ். சுந்தர் 2018 மே மாதம் தெரிவித்தார்.
நாளடைவில் ’எரிகோல் சேமிப்புத் தேக்கத்தில்’ இருக்கும் அந்தக் கழிவுகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியாக வேண்டும். அந்த எரிகோல் கழிவுகளை பாதுகாத்து வைப்பதற்கு ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor -- AFR) எனும் அமைப்பு அணுஉலை வளாகத்துக்குள்ளேயேக் கட்டப்படுகிறது. கூடங்குளத்தைப் பொறுத்தவரை, எரிகோல் சேமிப்புத் தேக்கங்கள் விரைவில் நிரம்பி 2023 ஆகஸ்ட் மாதம் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்புக்கு மாற்றப்பட வேண்டிவரும். கடந்த 2018 யூலை மாதமே தயாராகவேண்டிய இந்த அமைப்பு இன்னும் கட்டப்படவேயில்லை.
அணுஉலை உயர்தரக் கழிவுகள் தங்களின் கதிர்வீச்சுத் தன்மையில் பாதியை இழப்பதற்கே 24,000 ஆண்டுகள் ஆகும். ஏறத்தாழ 48,000 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயர்தர அணுக்கழிவுகளை ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository – DGR) ஒன்றில் மட்டுமே பத்திரமாகப் பாதுகாக்க முடியும். இது உறுதியான தரைதள அமைப்புக் கொண்ட இடத்தில் சுமார் 500–600 மீட்டர் ஆழத்தில் நிறுவப்படுகிறது. இந்த ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்று இதுவரை இந்தியாவில் உருவாக்கப்படவேயில்லை. இதற்கான தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் எழுத்துபூர்வமாகவே ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 1980-களின் துவக்கத்தில் 1,000 மீ ஆழம்கொண்ட பயன்பாட்டில் இல்லாத தங்கச் சுரங்கங்களில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கோலார் கோளாறு
2011-2014 காலகட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான இடிந்தகரைப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, கூடங்குளம் அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் புதைப்போம் என்று 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தது.
அப்போதைய பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும், காங்கிரசுக் கட்சியின் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியும் கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்கேயும் புதைக்க விடமாட்டோம் என்று போர்க்கொடித் தூக்கினார்கள். மேற்குறிப்பிட்டக் கட்சிகளும், கர்நாடக மாநில அதிமுகவும் இணைந்து நடத்திய மூன்று நாள் போராட்டத்தினால், அந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த திரு. நாராயணசாமி கோலாருக்கு மாற்றாக கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.
கூடங்குளம் அணுஉலைத் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பதினைந்து நிபந்தனைகளோடு அணுஉலை செயல்படுவதற்கு அனுமதி அளித்தது. அவற்றுள் முக்கியமான ஒரு நிபந்தனை அணுக்கழிவுகளை பாதுகாக்கும் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தியாகவேண்டும் என்பது.
அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு 2018 மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மீது வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணுஉலையில் ஏப்ரல் 30, 2022 தேதிக்குள் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்புக் கட்டப்படவேண்டும் என்று 02/07/2018 அன்று ஆணையிட்டது.
கூடங்குளம் ‘அணுஉலைக்கு அகலே’
‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவதற்கான ஆயத்த வேலைகளை மத்திய அரசும், அணுசக்தித் துறையும், தமிழக அரசும் தற்போது துவங்குகின்றன. இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் யூலை 10 அன்று இராதாபுரத்தில் வைத்து நடக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். ரூ. 538 கோடி செலவாகும் இதனைக் கட்டிமுடிக்க 29 மாதங்கள் ஆகும் என்றும், இந்த அமைப்பை 75 ஆண்டுகள் பயன்படுத்தமுடியும் என்றும், 4,328 எரிகோல்களை இங்கே சேமித்து வைக்கலாம் என்றும் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆனாலும் இதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இதுவரை மக்கள் பார்வைக்குத் தரப்படவில்லை.
துருப்பிடிக்காத இரும்புத் தகடுகள் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கும் தொட்டியில், நீருக்கடியில் நிலையான இடைவெளி கொண்ட செங்குத்து நோக்கு நிலையில் எரிபொருள் அடுக்குகளில் எரிக்கப்பட்ட எரிகோல்கள் சேமிக்கப்படும். நீர் நிரப்பப்பட்ட அந்தத் தொட்டியின் கீழ் வேறொரு வெளிப்புறத் தொட்டி அமைந்திருக்கும். இவை தவிர ஒரு பொங்குத் தொட்டியும் (surge tank) இருக்கும்.
‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பில், கசிவுகளைக் கண்டறிய, அணுக்கழிவுகளைக் குளிர்விக்க, சுத்திகரிக்க, காற்றோட்டம் ஏற்படுத்த என பல்வேறு பணிகளுக்காக கட்டுப்பாட்டு அறை இருக்கும். கதிர்வீச்சு அளவீடுகள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும். காற்று வெளியேற்றும் அறை, விநியோக அறை, கதிரியக்கக் கண்காணிப்பு அறை, பராமரிப்பு அறை என ஏராளமான அமைப்புக்கள் நிறுவப்படும். சர்வதேச அணுசக்தி முகமையைச் சார்ந்த அதிகாரிகள் அவ்வப்போது வந்து அவதானிக்கும்பொருட்டு அவர்களுக்கான அலுவலக அறை ஒன்றும் இருக்கும். ஊழியர்கள் உடை மாற்றும் அறை, புதிய துணிகளுக்கான அறை போன்றவையும் அங்கே இருக்கும். நிலநடுக்கங்களால் பாதிக்கப்படாத வகையில் இது கட்டப்படும்.
கூடங்குளம் அணுஉலைகளிலிருந்து எரிக்கப்பட்ட எரிகோல்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து வாகனங்கள், ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பில் அவற்றை இறக்கிய பின்னர் தூய்மையாக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, நீரால் கழுவி கதிரியக்க மாசு நீக்கப்பட்டப் பிறேக, அங்கிருந்து வெளியே கொண்டு வரப்படும். இதன் மூலமும், பிற நடவடிக்கைகள் மூலமும், ஓர் ஆண்டிற்கு 480 கனமீட்டர் அளவு திரவக் கழிவுகள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பின் எதிர்காலத் தேவை, கொள்ளளவு போன்றவற்றை துல்லியமாக கணிக்க முடியாது. இதற்காகும் செலவும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவற்றின் மேலாண்மை நியமங்களும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப மாறும் தன்மையன.
கூடங்குளத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்குமே வேண்டாம்
கூடங்குளம் அணுஉலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும், 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் ஆறு முதல் எட்டு அணுஉலைகள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை (reprocessing plant), உப்பகற்றி ஆலைகள் (desalination plants), நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிகவும் ஆபத்தானது.
1-2 அணுஉலைகளுக்கும் 3-4 அணுஉலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதேபோல, 3-4 அணுஉலைகளுக்கும் 5-6 அணுஉலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியானச் சூழலில், ஆறு அணுஉலை அலகுகளுக்குமான மூன்று ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்புக்களை இதே வளாகத்தில் கட்டுவது உள்ளூர் மக்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் பெரும் கேடுகளை, ஆபத்துக்களை உருவாக்கும்.
ஏற்கனவே கூடங்குளத்தில் முதலிரண்டு அணுஉலைகளும் திருப்திகரமாக இயங்காமல், அவை ஓடும் நாட்களைவிட மூடிக்கிடக்கும் நாட்களே அதிகமாக இருக்கின்றன. “உலகத்தரம் வாய்ந்த அணுஉலை” என்று அரசுத்தரப்பால் புகழப்பட்ட கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு இதுவரை 49 முறை பழுதுபட்டு மூடப்பட்டிருக்கிறது. இரண்டாவது அலகும் அடிக்கடி மூடப்படுகிறது. இவற்றின் தரம், பயன்பாடு, பாதுகாப்புக் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இவை குறித்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வாரும் யாரும் இல்லை.
ஓர் அணுஉலையில் எழும் ஆபத்துக்களைப் போலவே ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பிலிருந்தும் பெரும் அபாயங்கள் எழும். இதிலிருந்து கசியும் தண்ணீரும், வெளியேறும் காற்றும் கதிரியக்கம் கொண்டவை. எனவேதான் கதிர்வீச்சைக் கண்காணிக்க, பராமரிக்க சிறப்பு அறைகள் அமைக்கப்படுகின்றன. ‘பட்ட இடத்திலேப் படும், கெட்டக் குடியே கெடும்’ என்பதுபோல, ஆறு மிகப்பெரிய அணுஉலைகளை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வெளிவரும் அணுஉலைக் கழிவுகளையும் தமிழ் மக்கள் தலைகளில் கட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் ஐந்து தென் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால் இங்கே உருவாகும் அணுக்கழிவுகளை எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ள முன்வராமலிருப்பது என்ன நியாயம்? நாற்பது முதல் அறுபது ஆண்டுகள் இயங்கும் அணுமின் நிலையங்களையே குஜராத், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஹரியானா போன்ற பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், 48,000 ஆயிரம் ஆண்டுகள் அணுக்கழிவுகளைப் புதைத்து வைக்கும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்றை ஏற்றுக்கொள்ள எந்த மாநிலமும் முன்வராது.
இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்று கட்டப்படாத நிலையில், இந்தியாவின் அனைத்து அணுஉலைகளிலிருந்தும் வெளிவரும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திற்கு கொண்டுவந்து கொட்டிவிடுவார்கள் என்று தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள். தமிழகம் அழிவுத்திட்டங்களின் புகலிடமா, இந்தியாவின் குப்பைத்தொட்டியா என்று அவர்கள் கேட்கும் கேள்வி நியாயமானதுதானே? இதற்கு பதில் சொல்லும் விதமாக, தாராப்பூரிலும், ராவத்பாட்டாவிலும் இரண்டு ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்புக்கள் இருக்கின்றன என்று கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் ஒரு புதுக்கதையை சொல்லத் துவங்கியிருக்கிறது.
பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?
[1] 1997 அக்டோபர் மாதம் கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்குத் திருப்பி எடுத்துச் செல்ல ரஷ்யர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றும் அது குறித்த தெளிவான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவிருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 1998 யூன் 21 அன்று ரஷ்ய அணுசக்தித் துறை அமைச்சர் யுவ்ஜெனி ஆடமோவ் (Yevgeny Adamov) மற்றும் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் ஆர். சிதம்பரம் ஆகியோர் துணை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அந்த நிகழ்வில் பேசிய இந்திய அணுமின் கழகத் தலைவர் YSR பிரசாத் "தாராப்பூர் (அணுஉலை) அணுக்கழிவுகளை நாம் எப்படி எங்கேயும் திருப்பி அனுப்புவதில்லையோ, அதுபோல கூடங்குளம் கழிவுகளும் ரஷ்யாவுக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டாது. அவற்றை மறுசுழற்சி செய்து நமது அணுஉலைகளில் பயன்படுத்தலாம்" என்று அறிவித்தார். ரஷ்ய அணுக்கழிவு நிலைப்பாடு ஏன், எப்படி, யாரால் மாறியது எனும் விபரங்கள் வெளியிடப்படவில்லை. விவாதிக்கப்படவுமில்லை. அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்து, கூடங்குளம் கழிவுகளை ரஷ்யாவுக்கேத் திருப்பி அனுப்புவோம்.
[2] இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கேக் கட்டப்போகிறோம் என்பதை முறையாக அறிவித்து, அதை ஏற்பாடு செய்துவிட்டு, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவோம்.
[3] இந்த இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை, கூடங்குளம் அணுஉலை விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைப்போம்.
[4] கூடங்குளத்தில் முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் ஊழல்கள், பித்தலாட்டங்கள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்துவோம்.
[5] ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் அணுஉலைகள் விற்று கொள்ளை லாபம் பெறுவதற்கு உதவாமல், இந்திய மக்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் நலமாய் வாழ வழிவகைகள் செய்வோம்.
சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக