திங்கள், 3 ஜூன், 2019

மூளையில் மின் அதிர்ச்சி ஏற்படுத்தும்
மொழி பற்றிய உண்மைகள்!
உலகமயச் சூழலில் மொழி பற்றிய புரிதல்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
மொழி பற்றிய மரபார்ந்த புரிதலே தமிழர்கள் அனைவருக்கும்
இருக்கிறது. இது பத்தாம் பசலித் தனமான புரிதல் ஆகும்.
தமிழ் வாழ்க, இந்தி ஒழிக போன்ற முழக்கங்கள்
இந்த மரபார்ந்த பார்வையின் வெளிப்பாடுகளே.

உலகையே கைப்பற்றிக் கொண்டுள்ளது உலகமயம்.
உலகமயச் சூழலில் மொழி பற்றிய பார்வை
மாற்றம் அடைகிறது. உலகமயத்திற்கு முன்,
அரசின் ஆதரவு இருந்தாலன்றி ஒரு மொழி
வளர இயலாது. இந்நிலையில் கணிசமான மாற்றத்தை
உலகமயம் ஏற்படுத்தி உள்ளது.

நூற்றுக்கணக்கான மொழிகளில் விக்கிப்பீடியாவில்
கட்டுரைகள் வெளியிடப் படுகின்றன. முகநூல்
போன்ற சமூக வலைத்தளங்கள் அவரவர் மொழியில்
செயல்படுகின்றன. இவ்வாறு இணையதளம் என்பது
அரசு கடந்து பல்வேறு மொழிகளுக்கு உதவி புரிகிறது.
இணையதளத்தை எந்தவொரு நாட்டின் அரசும்
நடத்துவதில்லை. ஆக அரசின் ஆதரவு இன்றியே
பல்வேறு மொழிகள் வளர்ச்சி அடைய உலகமயம்
துணை புரிகிறது.

எனவே உலகமயச் சூழலில் இந்தி எதிர்ப்பு
என்பதோ இந்தி ஆதரவு என்பதோ பொருளுடையது அல்ல.
எனக்கு கத்தரிக்காய் பிடிக்கும்; என் மனைவிக்குப்
பிடிக்காது என்பதற்கு மேல் அதில் பொருளில்லை.

இந்தியும் சரி, தமிழும் சரி, சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் இல்லை. பொருள் உற்பத்தியில் இல்லாத
எந்த மொழிக்கும் எதிர்காலம் இல்லை. உற்பத்தியில்
இல்லாத இந்தியை அலுவல் மொழி என்ற பெயரில்,
நிர்வாகத்துக்குரிய மொழியாக ஆக்குவதற்கு
இந்திய அரசு முனைந்து வருகிறது. ஓரளவுக்கு மேல்
அரசின் இந்த முயற்சி பயன் தராது.

சமகால  உற்பத்தி உலகமயம் ஆகிக் கொண்டு
வருகிறது. உள்ளூர் உற்பத்தி, உள்நாட்டு உற்பத்தி
ஆகியவை பெரிதும் உலகமயச் சார்பு அடைந்து விட்டன.
எனவே இந்தி தமிழ் போன்ற மொழிகள் உற்பத்தித்
தளத்தில் இல்லாமலே போய்விட்டன.

உற்பத்தியில் இல்லாத ஒரு மொழி எங்ஙனம்
பயிற்று மொழி ஆக இயலும்? எங்ஙனம் நீதிமன்ற
மொழி ஆக இயலும்?  எங்ஙனம் ஆட்சிமொழி
ஆக இயலும்? பல்கலைக் கழக உயர்கல்வி வரை
உற்பத்தியில் இல்லாத தமிழைப் பயிற்று மொழி
ஆக்குவது எங்ஙனம் இயலும்?
   
உலகமயச் சூழலில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு,
ஸ்பானியம் (spanish) ஆகிய மொழிகளே உற்பத்தியில்
மிகுதியும் உள்ளன. தமிழ், இந்தி, சமஸ்கிருதம், வங்காளி
ஆகிய மொழிகள் எவையும் உற்பத்தியில் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் உற்பத்தியில்
ஆங்கிலம் மட்டுமே தனித்துக் கோலோச்சுகிறது.
எனவே ஆங்கிலம் பயிற்றுமொழியாகத் தொடர்கிறது.

நவீன அறிவியலில் குவான்டம் தியரி என்று ஒன்று
உண்டு. இதில் சொல்லப்படும் ஒரு பூனைக்கதை
மிகவும் புகழ் பெற்றது. ஷ்ராடிங்கர் என்ற விஞ்ஞானி
இந்தப் பூனைக் கதையைச் சொன்னார். ஷ்ராடிங்கரின்
பூனை (Schrodinger's cat) என்று இதற்குப் பெயர்.

BSc இயற்பியல் பயிலும் மாணவர்கள் இந்தப்
பூனையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
Schrodinger's cat என்று ஆங்கிலத்தில் இணையத்தில்
தேடினால் இப்பொருள் பற்றி குறைந்தது ஆயிரம்
கட்டுரைகள் ஒரு நொடிக்குள் நமக்குக் கிடைக்கும்.

ஆனால் தமிழில் இப்பொருள்பற்றி எத்தனை கட்டுரைகள்
எழுதப்பட்டு உள்ளன? ஒன்றிரண்டு இருக்கக் கூடும்.
இந்நிலையில் தமிழ் எங்ஙனம் பயிற்றுமொழி ஆக இயலும்?

இயற்பியலில் தமிழ் பயிற்றுமொழியாக இருக்க
வேண்டுமெனில், இயற்பியல் கட்டுரைகள்
குறைந்தது ஒரு லட்சமாவது தமிழில் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு லட்சம் கட்டுரைகள் தமிழில் இருக்கின்றனவா?
இல்லை என்பது கண்கூடு. பின் தமிழ் பயிற்றுமொழி
என்று கூச்சலிடுவதால் என்ன பயன்?

இந்தியும் இதே நிலையில்தான் இருக்கிறது. இந்தி
மட்டுமல்ல தெலுங்கு, வங்காளி போன்ற ஏனைய
இந்திய மொழிகள் அனைத்தும் இதே நிலையில்தான்
உள்ளன. அதிகபட்சம் 12ஆம் வகுப்பு வரையிலான
அறிவியலை தத்தம் மொழிகளில் தடுமாறித்
தடுமாறி இந்திய மொழிகளால் சொல்ல இயலும்.
அவ்வளவுதான். வளர்ச்சி என்பது அதற்கு மேல் இல்லை.
இதில் இந்தி, தமிழ் என்று பெரிய வேறுபாடு
எதுவும் இல்லை.

உற்பத்தியில் இல்லாத இந்த மொழிகளின் எதிர்காலம்
என்ன? எதிர்காலம் இல்லை என்பதே உண்மை.
காலப்போக்கில் இம்மொழிகள் யாவும் பண்பாட்டுத்
தளத்தில் மட்டுமே எஞ்சி நிற்கும். இதன் பொருள் என்ன?
மனைவி கணவனையும் கணவன் மனைவியையும்
இருவரும் சேர்ந்து குழந்தைகளையும் கொஞ்சுவதற்கு
மட்டுமே தமிழ் பயன்படும்; இந்தி பயன்படும்.

திராவிடத் தற்குறிகளும் தமிழ் தேசியப் போலிகளும்
இதை என்றாவது உணர்வார்களா?
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஷ்ராடிங்கரின் பூனை பற்றித் தமிழில்
அறிய விரும்புவோர்  இக்கட்டுரை ஆசிரியர்
எழுதிய "ஷ்ராடிங்கரின் பூனை" என்ற கட்டுரையை
அறிவியல் ஒளி இதழில் படிக்கலாம்.
****************************************************

எவர் ஒருவரின் அறிவாற்றல் கூடுவதற்கும்
ஒரு முன்நிபந்தனை உண்டு. அது அவர் தன்
தாய்மொழியில் மனதில் நினைத்த எதையும்
பிழையின்றி வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்க
வேண்டும் என்பதே.

முற்காலத்தில் சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக
இருந்தது. உற்பத்தி மொழியாக அது உருவாக்கப்
பட்டது. எனவே அது பரந்துபட்ட மக்களின்
பேச்சு மொழியாக இல்லை.
 


நாம் என்ன செய்யலாம்? பண்பாட்டு மொழியாக மட்டும்
தமிழ் சுருங்கும் நாளை நாம் தள்ளிப் போடலாம்.
அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆகுமென்றால்,
நமது முயற்சியால் அதை 150 ஆண்டுகள் ஆக்கலாம். 

இருமொழிக் கொள்கையா மும்மொழிக்
கொள்கையா என்பது முக்கியம் அல்ல.
உற்பத்தி மொழிக்கொள்கை
(Theory of  the language of production) என்ன என்பதே கேள்வி.

arapu

உற்பத்தியில் அரபு மொழி இல்லை.
நவீன மொழி அல்ல அரபு. வீண் பெருமைக்காக
அரபு பயிற்று மொழி என்று காட்ட முயற்சி
செய்யலாம். அவ்வளவுதான்!

முட்டாள்தனம்!
------------------------
உலகமயச் சூழலில் இந்திய மொழிகள் அனைத்தும்
முக்கியத்துவம் இழந்து வருகின்றன. உற்பத்தி
மொழியாக இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமே
இருந்து வருகிறது. தமிழோ இந்தியோ உற்பத்தி மொழி
ஆகும் வாய்ப்பு இல்லை.

எனவே இந்தி எதிர்ப்பும் சரி, இந்தி ஆதரவும் சரி,
இரண்டும் முட்டாள்தனமே!

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பரிந்துரை!
---------------------------------------------------------------------
இரண்டு மொழிகள் போதும். மூன்றாவது மொழி
தேவைப்பட்டால், தேவைப்படும்போது பிற்காலத்தில்
கற்றுக் கொள்ளுங்கள். மூன்றாவது மொழிக்குப் பதில்
Physics Maths படியுங்கள்.

தற்போது 10ஆம் வகுப்பு வரை கணிதமும் அறிவியலும்
கட்டாயப் பாடமாக உள்ளது. இதை 12ஆம் வகுப்பு 
வரை Maths, Physics இரண்டையும் கட்டாயப் பாடம்
ஆக்க வேண்டும்.

11ஆம் வகுப்பில் நுழைந்ததுமே எனக்கு கணக்கு வராது
என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு History, Literature
பாடங்களை எடுக்கும் போக்கு ஒழிக்கப்பட வேண்டும்.
**************************************************
   






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக