தமிழ்த்தொண்டன் நெல்லை கண்ணன் செத்ததுண்டோ?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
தமிழுக்குத் தொண்டு செய்தோர் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் நெல்லை கண்ணன் செத்ததுண்டோ?
இன்றைய பகல் பொழுது (18.08.2022) திடீரென நீலம்
பாரித்துக் கொண்டது. அண்ணாச்சி போய்ச்
சேந்துட்டாக என்று ஊரில் இருந்து தாக்கல் வந்தது
நம்ம அண்ணாச்சிதான், நெல்லை கண்ணன்தான்
என்றார் தாக்கல் சொன்னவர்.
அழுகை வந்தது. உட்கார்ந்து பத்து நிமிஷம் அழுதேன்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
என்ற வள்ளுவனின் இலக்கணத்துக்கு ஏற்ப வாழ்ந்து
காட்டி விட்டு மறைந்தார் அண்ணாச்சி.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே ஸயனம்
இஹ ஸம்சாரே பகு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
நிறைவாழ்வு வாழ்ந்து 78 வயது நிரம்பிய
நிலையில்தான் அண்ணாச்சி விடைபெறுகிறார்.
இது ஒரு வகையில் கல்யாண சாவுதான்! என்றாலும்
விடை கொடுப்பது எளிதாக இல்லை.
தாக்கல் சொன்ன என் மைத்துனரிடம் சாக்காலம்
எப்படி என்று கேட்டேன். "அத்தான், நெல்லையப்பர்
அருளாலே அண்ணாச்சிக்கு கொடுத்து வச்ச
சாக்காலம்லா" என்ற மைத்துனர் தொடர்ந்து
"கெடந்து அழுந்தலைலா" என்று மனநிறைவை
வெளிப்படுத்தினார்.
1970களில் நான் நெல்லையில் கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்தபோது அண்ணாச்சியுடன் முதன்
முதலாகப் பழக்கம் ஏற்பட்டது. எங்கள் ஊர்
வழக்கப்படி அவரை அண்ணாச்சி என்று
கூப்பிடத் தொடங்கினேன். அவர் "என்னடே"
என்பார். எப்போது பேசினாலும் தமிழும்
அரசியலுமாகவே பேசுவார். அவரின் அரசியல்
எனக்கு உவப்பானதல்ல. எனினும் தொடக்க
காலத்தில் அது உறுத்தலாக இல்லை.
பின்னாளில் நான் வேலை கிடைத்து சென்னைக்குச்
சென்று, நக்சல்பாரி இயக்கத்திலும் என்னை
ஆழ்த்திக் கொண்ட பின்னால் அண்ணாச்சியுடனான
தொடர்பு மெல்ல மெல்லப் பிடி தளர்ந்தது. எனினும்
நீடித்தது. அப்போதெல்லாம் அண்ணாச்சியுடனான
எனது உறவை Blow hot blow cold வகையிலான
உயர்வு என்றே கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில், சாதி வெறி பிடித்த அத்தனை பயல்களும்
சாதி ஒழிப்பு என்று போலியாக ஊரை ஏமாற்றிக் கொண்டு
நடைமுறையில் வெறித்தனமாக சாதியைப் பேணிக்
கொண்டு இருப்பதை அனுதினமும் பார்த்து
நொந்தவர் நெல்லை கண்ணன். மனிதனாக அல்லாமல்
சாதிக்காரனாகவே அல்லும் பகலும் அனவரதமும்
வாழும் கோடானுகோடித் தமிழர்களை அவர்களின்
சாதியுடன் சேர்த்து அடையாளம் கண்டு குறிப்பிட்டவர்
நெல்லை கண்ணன்.
சாதியைத் துறந்தவன் என்று தமிழ்நாட்டில் ஒரு
பயலும் கிடையாது. எனவே மனிதர்களின் சாதி
அடையாளத்தைச் சுட்டிக் காட்டியதால் நெல்லை
கண்ணன் தவறெதுவும் இழைத்து விடவில்லை.
மாறாக போலிகளையும் ஆஷாடபூதிகளையும்
அவர் அம்பலப் படுத்தி உள்ளார்.
இழையறாத இலக்கியப் பணி செய்த நெல்லை
கண்ணனுக்கு மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகமோ அல்லது மதுரைப் பல்கலைக்
கழகமோ இலக்கியத்தில் ஒரு கெளரவ டாக்டர்
பட்டம் வழங்கி இருக்கலாம். அதை எந்தப்
பல்கலையும் செய்யவில்லை. கருணாநிதிக்கு டாக்டர்
பட்டம், மேனனுக்கு டாக்டர் பட்டம் விஜயகாந்துக்கு
டாக்டர் பட்டம் என்று டாக்டர் பட்டத்தை இழிவு
படுத்தும் பல்கலைக் கழகங்கள் நெல்லை
கண்ணனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி தங்களைப்
பெருமைப் படுத்திக் கொண்டிருக்கலாம்.
பத்மஸ்ரீ போன்ற ஏதாவது ஒரு சிறிய பட்டத்தை
காங்கிரஸ் கயவாளிப் பயல்கள் நெல்லை கண்ணனுக்கு
வழங்கி அவரை கெளரவப் படுத்தி இருக்கலாம்.
செய்தானா காங்கிரஸ் கபோதி?
பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்றார்
லெனின். லெனினின் இந்த வரையறை நெல்லை
கண்ணன் விஷயத்தில் உண்மையாகி உள்ளது.
மூன்று வாய்ப்புகள் கிடைத்தும் நெல்லை கண்ணனால்
சட்டமன்றத்துக்குள் நுழைய முடியவில்லை.
ஒரு பன்றித் தொழுவத்துக்குள் பன்றிகளே நுழைய
முடியும் என்பது நெல்லை கண்ணனின் ஹாட்டிரிக்
தோல்வி மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.
சாகும் வரை தமிழைப் பரப்பினார் நெல்லை கண்ணன்.
தமிழ் இலக்கியங்களைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தி
அவற்றின் பெருமையை எடுத்து இயம்பினார்.
நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர்.
தமிழால் வயிறு வளர்க்கவில்லை. அதற்கான தேவை
அவருக்கு இருக்கவில்லை. நிலபுலன்களை வீடுகளும்
அவருக்கு உண்டு.
தமது திறமையால் உழைப்பால் ஆற்றலால் தமிழுக்கு
ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தவர் நெல்லை
கண்ணன். இறுதி வரை தமிழனாகவும், நெல்லை
மண்ணின் மைந்தனாகவும், தாமிரபரணியின்
புதல்வனாகவும் வாழ்ந்து மறைந்தார் நெல்லை
கண்ணன்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்ற வள்ளுவரின் அளவுகோலைக் கொண்டு
அளந்தால் நெல்லை கண்ணனிடம் குணமே அதிகம்.
குற்றம் உண்டு: என்றாலும் குறைவு.
இன்று நெல்லை கண்ணன் நம்மிடையே இல்லை.
நெருநல் உளனொருவன் இன்றில்லை. எனினும்
பொதிகை மலையில் வீசும் தென்றல் காற்றிலும்
தாமிர பரணியின் நீர்த்தடங்களிலும் நெல்லை
மண்ணெங்கும் நிறைந்த பசுமை நிறைந்த
வயல்களிலும் நெல்லை கண்ணனின் குரல்
ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஆங்கவர் மாய அவருடல் பூந்துகள்
அமர்ந்ததும் இந்நாடே
இதை வந்தனை கூறி மனதினில் இருத்தி
வாயுற வாழ்த்தேனோ!
இதை வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!
-------------------------------------------------------------------------
ஆம், அவரை வடக்கிருக்கச் சொன்னது
உண்மையே. அன்று எழுதியது நியாயமே.
குணம் குற்றம் இரண்டும் கொண்டவர்
நெல்லை கண்ணன். அவரின் குற்றம்
வெளிப்பட்டபோது அதைக் கண்டிக்கும்
நோக்கில் அவரை வடக்கிருந்து உயிர்
துறக்கச் சொன்னேன்.
குட்டி முதலாளித்துவப் பண்பு மேலோங்கி,
புகழ்மீது அதிக நாட்டம் கொண்டு,
தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து
நின்றபோது நெல்லை கண்ணனைக்
கண்டிக்க நேரிட்டது.
இன்று எழுதியது final tally. இது அவரின்
மறைவுக்குப் பின் எழுதும் பாலன்ஸ் ஷீட்.
இதில் குணம் குற்றம் இரண்டையும்
கணக்கில் எடுத்து, எது அதிகம் என்று பார்த்து.
அதிகமானதை மட்டும் எடுத்துக் கொண்டு
அவரை மதிப்பிடும் பதிவு. இரண்டுக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்க.
நெல்லை கண்ணனுக்கோ அல்லது வேறு
யாருக்குமோ blind supportஐ நான்
வழங்கவில்லை. எனது ஆதரவு என்பது
எப்போதும் critical outlookஉடன் கூடியது.
இதை உணர்க.
-----------------------------------------------------------------
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக