வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?
எவை எல்லாம் ஹைட்ரோ கார்பன்கள்?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
ஹைட்ரஜன் என்பது ஒரு தனிமம். மிக மிக எளிய
ஒரு தனிமம். முதல் தனிமம்; அதாவது தனிமங்களின்
அட்டவணையில் (Periodic Table) முதல் இடம் பெற்ற
தனிமம்.

கார்பன் என்பதும் ஒரு தனிமம். தனிம அட்டவணையில்
ஆறாவதான தனிமம் இது.

ஹைட்ரோ கார்பன் என்பது ஒரு கூட்டுப்பொருள்.
(கவனிக்கவும்: தனிமம் அல்ல). ஹைட்ரஜன், கார்பன்
ஆகிய இரண்டு தனிமங்களை மட்டும் கொண்ட ஒரு
கூட்டுப் பொருளே ஹைட்ரோ கார்பன்.
(தனிமம்= element; கூட்டுப்பொருள் = compound)

எரிசாராயம் பற்றி நாம் அறிந்து இருக்கக் கூடும்.
இதன் வேதியியல் பெயர் எதில் ஆல்கஹால் (C2H5OH)
ஆகும் (Ethyl Alcohol). எத்தனால் என்றும் இதைக்
கூறுவதுண்டு. இதில் கார்பன், ஹைட்ரஜன்
ஆகியவற்றுடன் ஆக்சிஜனும் சேர்ந்துள்ளது.
இதை, அதாவது எதில் ஆல்கஹாலை  ஹைட்ரோ
கார்பன் என்று கூறலாமா? 

கூறக்கூடாது. ஹைட்ரோ கார்பன் என்றால்,
கார்பன், ஹைட்ரஜன் ஆகிய இரண்டு தனிமங்கள்
மட்டுமே இடம் பெற்று இருக்க வேண்டும்.

அப்படியானால், கார்பன் ஹைட்ரஜன் ஆகியவற்றுடன்
ஆக்சிஜனும் சேர்ந்த கூட்டுப்பொருளான எதில்
ஆல்கஹாலை எப்படி அழைப்பது? அங்கக வேதியியல்
(organic chemistry) இதற்கு விடையளிக்கிறது.
எதில் ஆல்கஹால் போன்றவை ஹைட்ரோ கார்பனின்
பெறுமதிகள் (derivatives) என்கிறது வேதியியல்.

எவையெல்லாம் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்?
----------------------------------------------------------------------------------------
கார்பனும் ஹைட்ரஜனும் எவ்வாறு சேர்கின்றன
என்பதை பொறுத்து வெவ்வேறு வகையான ஹைட்ரோ
கார்பன்கள் உண்டாகின்றன. மேலும் ஒவ்வொரு
ஹைட்ரோ கார்பனிலும் உள்ள கார்பன் அல்லது
ஹைட்ரஜனின் அணுக்களின் எண்ணிக்கையைப்
பொறுத்தும் விதம் விதமான ஹைட்ரோ கார்பன்கள்
உண்டாகின்றன.

1) மீத்தேன் என்பது மிகவும் பொதுவான ஒரு ஹைட்ரோ
கார்பன். இதில் ஒரே ஒரு கார்பன் அணு மட்டுமே உள்ளது.
(methane= CH4)
2) அடுத்து ஈத்தேன் (C2H6). இதன் பார்முலாவைப்
பாருங்கள். இதில் இரண்டு கார்பன் அணுக்கள் இருப்பது
தெரியும்.
3) அடுத்து, புரோப்பேன் (C3H6). இதில் மூன்று கார்பன்
அணுக்கள் உள்ளன.
4) இவ்வாறு கார்பன் அல்லது ஹைட்ரஜனின்
அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து
வெவ்வேறு ஹைட்ரோ கார்பன்கள் உண்டாகும்.

பென்சீன் (benzene) பற்றி நம்மில் பலரும் கேள்விப் பட்டு
இருக்கக் கூடும். (benzene =C6H6) இதுவும் ஒரு ஹைட்ரோ
கார்பனே. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த
கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் 6 கார்பன்
அணுக்களும் 6 ஹைட்ரஜன் அணுக்களும் சேர்ந்து
உண்டாக்கிய கூட்டுப்பொருள் தான் பென்சீன்.
இது ஒரு முக்கியமான பெட்ரோ ரசாயனம் ஆகும்.

இன்னும் பல்வேறு உதாரணங்களைத் தர வேண்டும்.
ஆனால் எழுதி மாளாது. அதுவும் தமிழில்
எழுதுவதற்குள் கை ஒடிந்து போகும்.

ஹைட்ரோ கார்பன்கள் பற்றி மேலும் தெரிந்து
கொள்ள, 11,12 வகுப்புகளின் வேதியியல்
புத்தகங்களைப் படிக்கவும். இக்கட்டுரை ஹைட்ரோ
கார்பன்கள் குறித்து ஒரு எளிய அறிமுகத்தை
மட்டுமே தரும். இதைப் படித்து விட்டு, இதில்
உள்ளது வரை தெரிந்து கொண்டாலே போதும் என்ற
என்று எண்ண வேண்டாம். வேதியியல் பாடப்
புத்தகங்களைப் படியுங்கள்.

ORGANIC CHEMISTRYயை பயில்வது எளிது. முறையாகப்
படித்தால் (systematic) எளிதில் புரியும். அங்கொன்றும்
இங்கொன்றுமாகப் படிக்க நினைத்தால் எதுவும்
புரியாது. தொடக்கத்தில் இருந்து முறையாகப்
படித்துப் புரிந்து கொண்டால் மட்டுமே organic
chemistryயை மண்டையில் ஏற்ற முடியும்; மதிப்பெண்ணும்
பெற முடியும்.
***********************************************************************
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கோட்பாட்டைக்
கடைப்பிடிக்கும் காம்பவுண்டு எது? கட்டுரையைப்
படித்துப் பார்த்து விடை தருக.

ஹைட்ரஜன் கார்பன் இவற்றின் புணர்ச்சி விதிகளை
தமிழறிஞர்கள் விளக்குவார்களா?

நோபல் பரிசு பெற்ற சி வி ராமனுக்கும் பென்சீனுக்கும்
(benzene) உள்ள பாசப்பிணைப்பை விளக்கி ஒரு பக்க
அளவுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைக.


பின்குறிப்பு: இக்கட்டுரையைப் படித்து முடித்த பின்,
பின்னூட்டங்களில் (comments) உள்ள கேள்விகளுக்கு
விடையளிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

மேற்கூறிய மூன்று கேள்விகளுக்கும்
விடையளிக்குமாறும் விடையளிக்க முயலுமாறும்
வற்புறுத்துகிறோம்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக