செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்ததா?
டாக்டர் அம்பேத்கார் கூறுவது என்ன?
ஆரியர் வருகை குறித்த  விவாதம்;
கட்டுரையின் பகுதி-3
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
உலகில் உள்ள மனிதர்களை மூன்று விதமான
இனங்களாக (races) நவீன அறிவியல் பிரிக்கிறது.
இது உடலமைப்பியல் (anatomy) ரீதியான பிரிவினை.
அம்மூன்றும் வருமாறு:-

அ) வெள்ளையர்கள் (Caucasion)
ஆ) மங்கோலியர்கள் (Mongoloid)
இ) கறுப்பர்கள் (Negroid)

இப்பிரிவினை பண்பாட்டு ரீதியானதோ சமூகவியல்
ரீதியானதோ  அல்ல. உடலமைப்பியல் ரீதியான
பிரிவினை என்பதை கவனிக்கவும். இங்கு
இன்னொன்றையும் மனதில் பதிக்க வேண்டும்.
உயிரியல் ரீதியாக (biologically) உலகில் வாழும்
ஒட்டு மொத்த மனிதகுலம் முழுவதுமே
ஹோமோசேப்பியன் என்ற வகையை (species)
சேர்ந்தது.உலகில் எங்கும் மனித குலத்தில்
வேறு வகை (species) கிடையாது.     

இந்தியர்களை மேற்கூறிய மூன்று பிரிவுக்குள்ளும்
அடக்க இயலவில்லை. நாம் ஹோமோசேப்பியன்கள்
தான் என்றாலும் நாம் வெள்ளையர்களும்
அல்ல; கறுப்பர்களும் அல்ல; மங்கோலியர்களும்
அல்ல. எனவேதான் இந்தியாவில் ஆரிய இனம்,
திராவிட இனம் என்ற இனக்கொள்கையும்,
வட இந்தியர், தென்னிந்தியர் என்ற பாகுபாடும்
செல்வாக்குப் பெற்றன. மொழிவாரி மாநிலங்கள்
1956இல் உருவான பிறகு, மொழி அடிப்படையிலான
தேசிய இனக்கொள்கை (தமிழன், தெலுங்கன்,
வங்காளி போன்றவை) இங்கு உருப்பெற்றுள்ளது.

ஆரியப் படையெடுப்பு இந்தியாவில் நிகழவே இல்லை
என்று அடித்துக் கூறுகிறார் டாக்டர் அம்பேத்கார்.

"ஆரியர்கள் படையெடுத்து வந்து மற்ற இனங்களை
அடக்கி ஒடுக்கினார்கள் என்று கூறினால்தான்
அவர்களது மேம்பாட்டு நிலையை நிரூபிக்க
முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட மேலைய
எழுத்தாளர்கள் , ஆரியர்கள்  இந்தியாவின் மீது
படையெடுத்தார்கள் என்றும், தாசர்களையும்
தஸ்யூக்களையும் வெற்றி கொண்டார்கள் என்றும்
கதை கட்டி விட ஆரம்பித்தார்கள்"
(அம்பேத்காரின் எழுத்தும் பேச்சும்; தொகுதி-13
பக்கம்-120)

ஆரிய இனம் என்று எந்தக் குறிப்பும்  வேதங்களில்
இல்லை என்றும் ஆரியப்  படையெடுப்புக்கு
வேதங்களில் எந்தச் சான்றும் இல்லை என்றும்
ஆரியர்களுக்கும் சூத்திரர்களுக்குமான வேறுபாடு
இனரீதியான வேறுபாடு என்பதற்கு எந்தச்
சான்றும் இல்லை என்றும் மேனி நிறத்தில்
ஆரியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் வேறுபாடு
இல்லை என்றும் அம்பேத்கார் மேலும் கூறுகிறார்.
(பார்க்க: தொகுதி-13. பக்கம்-130)

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சர் வில்லியம்
ஜோன்ஸ் (Sir William Jones) என்ற ஆங்கிலேய
மொழித் தோற்றவியல் அறிஞர் (philologist)
சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் குறித்து
ஆராய்ந்தவர். இவர் இந்தியாவில் வாழ்ந்தவர்.
கல்கத்தாவில் நீதிபதியாக இருந்து  இங்கேயே
மறைந்தவர். இவர் ஆரியப் படையெடுப்பு
நிகழ்ந்ததாக ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்.
அநேகமாக இதுதான் ஆரிய படையெடுப்பு
பற்றி முதன் முதலில் முன்வைக்கப்பட்ட கருத்து.

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய
மொழித்தோற்றவியல் அறிஞர் (philologist)
மாக்ஸ் முல்லர் என்பவரும் ஆரியப் படையெடுப்பு
பற்றி மீண்டும் குறிப்பிட்டவர். இவர் சமஸ்கிருதம்
கற்று  பெரும்புலமை பெற்றிருந்தார்.

வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் ஆகியோரும்
இன்னும் பிறரும் கூறும் ஆரியப் படையெடுப்பை
மூர்க்கமாக மறுத்தவர் டாக்டர் அம்பேத்கார்.
ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகளே என்பது
அம்பேத்காரின் ஆய்வு முடிவு.

ஆக இவ்வாறு ஆரியப் படையெடுப்பை ஏற்றும்
மறுத்தும் வேறுபட்ட கருத்துகள் நாட்டில் நிலவி
வந்தன; இன்றும் நிலவி வருகின்றன. இந்நிலையில்
2009இல் அமெரிக்காவில் ஹார்வர்டு மருத்துவப்
பள்ளியைச் சேர்ந்த மரபியல் பேராசிரியர்
டாக்டர் டேவிட் ரீச் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டார்.
தொடர்ந்து டாக்டர் பிரியா மூர்ஜனியுடன் இணைந்து
முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாக  2013இல்
ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

இந்திய மக்களில் இரு வேறுபட்ட ஜீன்கள்
இருப்பதாகவும், வட இந்திய மூதாதை
(ANI-Ancestral North Indian), தென்னிந்திய மூதாதை
(ASI-Ancestral South Indian) என்பவையே அப்பிரிவுகள்
என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
இது பற்றி  கட்டுரையில் காண்போம்.
-----------------------------------------------------------------------------
இன்னும் வரும்
******************************************************* 
  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக