ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ப்ரோடோகால் மீனிங் ------------
Protocols Vs. Applications - டோக்கன் 02
=================================
இணையம் என்கிற வலைப்பின்னல் ராணுவத்திற்காகவும், அமெரிக்க பல்கலைக் கழகங்கள் இடையே பரிவர்த்தனைகளுக்காகவும் உருவான காலக் கட்டத்தில் ஏகப்பட்ட ஃப்ரோட்டோகால்கள் (Protocol) உருவாயின. எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ப்ரோட்டோகால் என்பதை ’மொழி’-யாக வைத்துக் கொள்ளலாம். நான் தமிழில் எழுதினால், அதே தமிழ் எழுத்துருக்களை உங்களால் படித்து நான் சொல்லும் செய்தியை புரிந்துக் கொள்ள முடியுமெனில், இங்கே தமிழ் என்பது ஒரு ப்ரோட்டோகால். அது போல, இரண்டு கணினிகளுக்கு இடையே ஒரு செய்தியோ, டேட்டாவோ, செய்கைகளோ புரிந்துக் கொள்ளப் பட வேண்டுமெனில் அதற்கு ப்ரோட்டோகால்கள் அவசியம்.
அதனால் தான் இன்றளவும் புழங்கக்கூடிய இணையம் என்பது HTTP (Hypertext Transfer Protocol) என்பதின் மீது இயங்குகிறது. எந்த ப்ரொவுசரில் இருந்தும் எந்த தளத்தினைப் பார்க்கவும் இந்த HTTP தான் அடிப்படை. ஒரு வேளை இந்த HTTP இல்லாமல் இருந்து வலைப்பின்னலை உருவாக்க வேண்டும் என்கிற சூழல் இருப்பின், ஆளாளுக்கு வெவ்வேறு விதமாக வலைப்பக்கங்களை உருவாக்கி இருக்க முடியும். ஒவ்வொன்றையும் பயன்படுத்த வெவ்வேறு ப்ரோட்டோகால்கள் தேவைப் பட்டு இருக்கும். அடிப்படையில் இணையமாக நாம் எந்த முன்யோசனையும் இல்லாமல் எடுத்துக் கொள்வது நடந்திருக்க வாய்ப்பில்லை.
அவுட்லுக்கில் இருந்து அனுப்பும் ஒரு மின்னஞ்சல், ஜிமெயிலுக்கும், அதன் ஒரு பிரதி யாஹு மின்னஞ்சலுக்கும், இன்னொன்று வடிவுடையம்மன்.காமுக்கும் போக, தனித்தனியான ப்ரோட்டோகால் வேண்டுமென்று சொன்னால் மின்னஞ்சல் என்கிற பயன்பாடே வந்திருக்காது. மின்னஞ்சல் முழுமையாக இயங்க SMTP (Simple Mail Transfer Protocol) என்கிற ப்ரோட்டோகால் 1982ல் வெளியானது. நம்முடைய அனைத்து மின்னஞ்சல்களும் இந்த ப்ரோட்டோகாலை அடிப்படையாக வைத்து தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
அதாவது, ஒரு ப்ரோட்டோகால் ஏராளமான சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது.
ஆக, ப்ரோட்டோகால்கள் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் இன்றியமையாத அடிப்படை. ப்ரோட்டோகால்கள் முக்கியம். ஆனால் ப்ரோட்டோகால்களை விட அதி முக்கியம், அதன் மீது உருவாக்கப் படும் செயலிகள். வலைத்தளங்களே உருவாகாமல் இருந்திருந்தால், HTTPயால் என்ன பயன்? மின்னஞ்சலே வராமல் போய் இருந்தால் SMTP எதற்கு? ஆக, இந்த ப்ரோட்டோகால்களின் மீது உருவாக்கப்பட்ட கணக்கிலடங்கா அப்ளிகேஷன்கள் தான் நாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தினை பயனுள்ளதாகவும், உலகம் முழுக்க விரவி இருப்பதாகவும் மாற்றி இருக்கிறது.
ஆனால் இந்த அப்ளிகேஷன்களை யார் தந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நவீன உலகின் பெரிய கேள்வி. இன்றைக்கு தேடல் என்பது கிட்டத்திட்ட கூகுளின் வசத்தில் இருக்கிறது. இதை நீங்கள் படிக்கும் பேஸ்புக்கில் தான் உங்களுடைய, என்னுடைய சமூக வலை இணைப்பு மொத்தமாக பின்னப்பட்டு இருக்கிறது. ஒரு ஊபரோ, ஓலாவோ, காரீமில், க்ராப்பில் மொத்த வாடகை டாக்சிகள் என நம்முடைய பயணங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. அமெசானில் இருந்தாலேயொழிய பல பொருட்கள், இருக்கிறதா என்பது கூட பல பேருக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் நம்முடைய சுயத்தினை இந்த அப்ளிகேஷன்களிலும், அதை நிர்வகிக்கும் பெருநிறுவனங்களிடமும் இழந்து விட்டோம்.
உ.தா உங்களுடைய ஜிமெயில் கணக்கும், அதன் பாஸ்வேர்டும் பேஸ்புக்கில் இல்லை. பேஸ்புக்கிற்கு என்று நீங்கள் ஒரு கணக்கினை உருவாக்குதல் அவசியம். அதே தான் நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பல்வேறு அப்ளிகேஷன்களுக்கும். ஆக உங்களுடைய வாழ்க்கை என்பது 30-40 கணக்குகள், பாஸ்வேர்டுகள், அதை நிர்வகிக்கும் பெருநிறுவனங்கள், அவர்களின் சட்டதிட்டங்கள், அவர்கள் உள்நுழைக்கும் விளம்பரங்கள், அவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என மாறிக் கொண்டிருக்கிறது. We are slowly but steadily becoming a receptive cog in these Big Tech Firms' giant wheel.
சிம்பிளாய் சொல்ல வேண்டுமெனில், அஸ்திவாரமான ப்ரோட்டோகால் மறக்கடிக்கப் பட்டு, மேலே எழும்பி இருக்கின்ற கட்டடமான அப்ளிகேஷன்களில் வாழ்க்கை ஒடுகிறது. ஆனால் வாழ்க்கையை நிலைநிறுத்த அஸ்திவாரங்கள் பலமாய் இருப்பது மிக அவசியம். அந்த ‘வீடு திரும்பல்’ தான் க்ரிப்டோவின் அடிப்படை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக