வியாழன், 22 பிப்ரவரி, 2018

மையமா மய்யமா எது சரி?
-----------------------------------------------
மையம் என்பதே சரியானது. மய்யம் என்பது
கடுமையான பிழை. இந்தப் பிழையின் தோற்றுவாய்
பெரியாரிடம் உள்ளது. அவர் தமிழின் 12 உயிர்
எழுத்துக்களை 10 ஆகக் குறைக்க வேண்டும் என்றார்.
ஐ, ஒள ஆகிய இரண்டு உயிர்களை நீக்க வேண்டும்
என்றார். நீக்க இயலாது என்று அனுபவத்தில்
உணர்ந்தார். என்றாலும் தம்மைத் திருத்திக்
கொள்ளவில்லை.
**
தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட
பல்வேறு தமிழறிஞர்கள் பெரியாரின் சீர்திருத்தம்
என்ற பெயரிலான இந்தக் கோமாளித்தனத்தைக்
கடுமையாக எதிர்த்தார்கள்.
**
பெரியார் கூறியபடி எழுதினால், கை மை என்பனவற்றை
கய், மய் என்று எழுத வேண்டும்.
தலை சிலை விலை என்பனவற்றை தலய், சிலய், விலய்
என்றே எழுத வேண்டும். இப்படி எழுத இயலாது.
இதையும் பின்னர் உணர்ந்தார் பெரியார். ஆனாலும்
தமது அபத்தத்தைக் கைவிட மறுத்தார்.
**
இலக்கணமே தெரியாத சிலர், மய்யம் என்பது
இலக்கணப் போலி என்று கூறி, சப்பைக்கட்டு
கட்ட முயல்கின்றனர். மையல் என்பதை பண்டைய
இலக்கியம் சில நேரங்களில், செய்யுளில், மயல்
என்று வழங்கும். இது இலக்கணப் போலி ஆகும்.
ஆனால் மையம் என்பதை மய்யம் என்று எழுதுவது
இலக்கணப் போலியன்று. போலியாயின் மயம்
என்றல்லவா எழுத வேண்டும். மய்யம் என்பது எங்ஙனம்
போலியாகும்?
**
குட்டி முதலாளித்துவம் பிறரிடம் இருந்து தன்னை
வேறுபடுத்திக் காட்ட விரும்பும். எதையும்
வித்தியாசமாகச் செய்ய விரும்பும். அதன் மூலம்
பிரமிப்பை ஏற்படுத்த முயலும். குட்டி முதலாளித்துவ
கமலஹாசன் பெரியாரின் மய்யம் என்ற சொல்லைப்
பார்த்தார். அது அவரைக் கவர்ந்தது. எனவே தாம்
நடத்திய சிற்றிதழுக்கு மய்யம் என்று பெயரிட்டார்.
இத்தகைய பயன்பாடு தவறு என்று பலரும்
உணர்ந்து திருந்தி விட்டனர். ஆனால் கமல் இன்னும்
உணரவில்லை. உணர்ந்தால்  நாணுவார். 
----------------------------------------------------------------------------------             

குழூஉக்குறி என்பது மொழியின் பொதுச்சொல் ஆகாது.
--------------------------------------------------------------------------------------------------
பிணம் (அல்லது சவம்) என்ற பொருளைத் தரும்
ஒரு சொல்லன்று மய்யம் என்பது. மய்யம் என்பது
இப்பொருளைத் தருமானால். தமிழ் இலக்கணப்படி,
அது குழூஉக்குறி ஆகும். ஒரு குறிப்பிட்ட  குழுவினர்
ஒரு குறிப்பிட்ட பொருளில் தங்களுக்குள் மட்டும்
பயன்படுத்தும் சொல் குழூஉக்குறி ஆகும்.

,எடுத்துக்காட்டாக. பொற்கொல்லர் தங்கத்தை
"பறி"என்று சொல்லுவர். இது குழூஉக்குறி ஆகும்.
அது போலவே, இசுலாமியர் மய்யம் என்பதை
பிணம் என்ற பொருளில் வழங்குவார்கள் என்றால்,
அது குழூஉக்குறி ஆகுமே அன்றி தமிழின்
பொதுச்சொல் ஆகாது; வட்டார வழக்கும் ஆகாது.

தற்காலத்தில் கல்லூரி மாணவிகள், குடைச்சல்
கொடுக்கும் சக மாணவனை குர்குரே என்று
குறிப்பிடுவர். ஈண்டு குர்குரே என்பது குழூஉக்குறி
ஆகும். ஒருபோதும் குர்குரே என்பது தமிழ்ச்சொல் 
ஆகாது. அதுபோலவே பிணம் என்ற பொருளில்
வழங்கப்படும் மய்யம் என்பதுவும். 
       
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக