சனி, 17 பிப்ரவரி, 2018

Aryan Dravidian issue
----------------------------
ருவாண்டா இனப்படுகொலை நினைவகம் இனப்படுகொலைக்கு வித்தூன்றியவர்கள் என்று கிறிஸ்தவ மதப்பரப்பு குழுக்களையும்,காலனித்துவ பெல்ஜியம் ஆட்சியாளர்களையும் வெளிப்படையாகவே சாடியுள்ளதை அங்குள்ள குறிப்புகளில் அவதானிக்கமுடிந்தது.
டுட்ஸி,ஹூட்டுகளிடம் காணப்பட்ட சில உடற்தோற்ற வேறுபாடுகளை வைத்து யூதப் புராணக் கற்பனைக் கதைகளுடன் தொடர்புபடுத்தி டுட்ஸிகள் ஹாமின் வழிவந்தவர்கள்,உயர்ந்தவர்கள் என்றுகூறி கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் இனவாத வெறுப்பை விதைத்தார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்கள்.
ஹூட்டு,டுட்ஸி என்பது இரு இனங்களா?
இல்லை.அவர்கள் ஒரே மொழியைப் பேசுபவர்கள்.பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள்.
இரண்டு சாதிகளா?
அதுவும் கிடையாது.ருவாண்டாவிலிருந்த பதினெட்டுக் குடிகளில் வசதிபடைத்தவர்கள் டுட்ஸிகள் என்றும் ஏனையோர் ஹூட்டுகள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
பொருளாதார வசதி பெறும் ஹூட்டுகள் டுட்ஸிகளாவது இயல்பாக இருந்தது.
ஹூட்டு,டுட்ஸி என்ற பிரிவு பரம்பரையும் பொருளாதாரமும் கலந்த நெகிழ்வான அடையாளப்படுத்தலாகவே இருந்தது என்று விசா பெறுவதற்கு சென்றபோது ருவாண்டா தூதரக அதிகாரி
குறிப்பிட்டதை ருவாண்டாவிலும் பலர் மீளக்குறிப்பிட்டனர்.
அவற்றைக் காலனித்துவ பெல்ஜியம் ஆட்சியாளர்கள் நிரந்தரப் பிரிவுகளாக மாற்றுவதற்கு டுட்ஸி,ஹூட்டு,துவா என்று பிரிவுகள் குறிக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கினர்.குறைந்தது பத்து மாடுகள் இருப்பவர்கள் டுட்ஸிகள் என்று காலனித்துவ ஆட்சியாளர்கள் வரையறுத்தனர்.
மிக நெகிழ்வான பிரிவுகளாகவும் பொருளாதார அடிப்படையில் அங்கும் இங்கும் நகரக்கூடியதாகவும் இருந்த பிரிவுகள் அடையாள அட்டை வழங்கலுடன் முற்றுமுழுதாக பிறப்பின் அடிப்படையிலானதாக மாற்றப்பட்டன.
ஒரே மொழிபேசும் தேசிய இனமாக வளர்ச்சியடைந்திருக்கவேண்டியவர்கள் மிக விரைவில் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் எதிரிகளானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக