திங்கள், 28 டிசம்பர், 2020

திருவாதிரை நட்சத்திரம் இறந்து விட்டதா?

சூரிய ஒளி பூமியை வந்து சேர 8 நிமிடம் ஆவது ஏன்?

-----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

ஐன்ஸ்டைன் இரண்டு சார்பியல் கோட்பாடுகளைச் 

சொன்னார். 1) சிறப்புச் சார்பியல் 2) பொதுச் சார்பியல்.

(Special relativity and General relativity).


1905ல் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை முன்மொழிந்தார் 

ஐன்ஸ்டைன். இந்தப் பிரபஞ்சத்தில் அதிகபட்ச வேகம் 

எவ்வளவு என்ற கேள்வியை எழுப்பிய ஐன்ஸ்டைன் 

ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம் என்கிறார்.

ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ ஆகும்.

இந்த வேகத்தை விட அதிகமான வேகம் மொத்தப் 

பிரபஞ்சத்திலும் இல்லை என்றார் ஐன்ஸ்டைன்.


சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் என்ன?

கொஞ்ச நஞ்சமல்ல; 15 கோடி கிலோமீட்டர்.சூரியனில் 

இருந்து வெளிச்சம் புறப்பட்டு பூமியை வந்தடைய 

எவ்வளவு நேரம் ஆகும்? கணக்குப் போட்டுப் பார்த்து 

விடலாம்.

தூரம் = 15 கோடி கிமீ 

வேகம் = 3 லட்சம் கிமீ/வினாடி 

காலம் = தூரத்தை வேகத்தால் வகுத்தால் கிடைக்கும்.

= 500 வினாடிகள் 

= 8 நிமிடம் 20 வினாடி 

எப்போதுமே புத்தம் புதிய சூரியனை நாம் பார்க்க 

இயலாது. இந்த நொடியில் நாம் பார்க்கும் சூரியன் 

8 நிமிடத்திற்கு முந்திய சூரியன்தான்.

பல்வேறு நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி 

பூமியையே வந்தடைய, தூரத்தைப் பொறுத்து,

மாதம், ஆண்டு, ஒளியாண்டு என ஆகும்.


ஒளியாண்டு என்பது தூரத்தின் யூனிட் ஆகும்.

ஒரு ஆண்டில் ஒளியானது எவ்வளவு தூரம் செல்கிறதோ 

அந்த தூரமே ஒரு ஒளியாண்டு ஆகும்.


ஒரு ஒளியாண்டு = 9.46 x 10^15 மீட்டர்.

அதாவது (தோராயமாக)  9.46^12 கிமீ 

அதாவது 9.46 டிரில்லியன் கிமீ.


திருவாதிரை நட்சத்திரம் நமது பூமியில் இருந்து 

எவ்வளவு தூரத்தில் உள்ளது? 724 ஒளியாண்டு தூரத்தில் 

திருவாதிரை உள்ளது. அதாவது 724 x 9.46 டிரில்லியன் கிமீ.

தோராயமாக, 7240 டிரில்லியன் கிமீ.

நியாயமாக இந்த தூரத்தை குவாட்ரில்லியன் என்னும் 

யூனிட் மூலம் சொல்ல வேண்டும். அது மக்களுக்குப்

புரியாது. எனவே 7240 டிரில்லியன் கிமீ என்று 

சொல்கிறோம்.


இந்த தூரத்தை எல்லாம் புரிந்து கொண்டால் அது 

பெரிய விஷயம்தான்.


திருவாதிரை நட்சத்திரம் இறந்து விட்டது என்று கடந்த 

ஆண்டு முழுவதும் உலகெங்கும் ஒரே பேச்சு. இது குறித்து 

குங்குமம் வார இதழில் என்னுடைய நேர்காணல் 

வெளியாகி இருந்தது. வாசகர்கள் அதைத் தேடிப் 

படிக்கலாம்.


சரி, திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் என்ன 

பெயர்? வாசகர்கள் பதில் கூற வேண்டும்.


சனி கிரகம்!

-----------------

இன்னொரு சிறிய கணக்கு!

மனக்கணக்க்காகவே விடை கூறலாம்.

சூரியனில் இருந்து சனி கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது?

9.5 AU தூரத்தில் சனி கிரகம் உள்ளது.

அதாவது 1.4 பில்லியன் கிமீ தூரம். சனிக்கும் சூரியனுக்கும் 

இடையிலான தூரம் இது.


சூரியனில் இருந்து புறப்பட்டு வரும் ஒளி, சனி கிரகத்தை 

அடைய எவ்வளவு நேரம் ஆகும்? விடை சொல்லுங்கள்.

தோராயமாக 80 நிமிடம் ஆகும். அதாவது 1 மணி 20 நிமிடம் 

ஆகும்.


  

***************************************************** 

சூரியனில் இருந்து ஒளி பூமியை வந்தடைய 

8 நிமிடம். சனி கிரகத்தை வந்தடைய 80 நிமிடம்.

பூமிக்கு 8 நிமிடம்;; சனிக்கு 80 நிமிடம்.

நினைவில் பதித்துக் கொள்ளுங்கள்.


மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும் 

பிறப்பு இறப்பு உண்டு. இதை உணர வேண்டும்.

அறிவியல் ஒளி நவம்பர் 2020 இதழில் கருந்துளைகள் 

பற்றிய கட்டுரையில் நட்சத்திரங்களின் பிறப்பு 

இறப்பு பற்றி எழுதி உள்ளேன். அதைப்  படித்துத்

தெளிவு பெறுக.

 


திருவாதிரை நட்சத்திரம் இறந்து விட்டதாக வானியல் 

அறிஞர்கள் கருதவில்லை. ஆனால் அது தன்னுடைய அந்திம 

காலத்தில் இருக்கிறது என்பது உண்மை. அப்படியே 

திருவாதிரை நட்சத்திரம் இறந்து போனாலும், அது 

உடனே நமக்குத் தெரிய வராது. அதை நாம் தெரிந்து 

கொள்ளவே சில பல நூறு ஆண்டுகள் ஆகக்கூடும்.

காரணம் அதீதமான தூரம். குங்குமம் ஏட்டில் 

வந்த என்னுடைய நேர்காணலைத் தேடி எடுத்துப்  

படிக்கலாம். 


திருவாதிரை நட்சத்திரமானது 724 ஒளியாண்டு 

தூரத்தில் இருக்கிறது. எனவே அங்கிருந்து ஒளி 

நமக்கு வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று 

கணக்குப் போட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு வாசகரும் 

இந்தக் கணக்கைச் சொந்தமாகப் போட்டுப் பார்க்க 

வேண்டும். அப்போதுதான் விஷயம் தெளிவாகப் 

புரியும்.


     


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக