வெள்ளி, 18 டிசம்பர், 2020

மாக்ஸ்வெல்லின் பிசாசுதான் நோலனின் டெனட்! 

---------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம். 

-----------------------------------------------------------  

அது ஒரு வெற்றுத் துப்பாக்கி. குண்டு எதுவும் இல்லாதது. அதைக் கொண்டு கதாநாயகன் சுவரை நோக்கிச் சுடுகிறான்.

என்ன நடக்கிறது? ஏற்கனவே சுவரில் புதைந்து கிடந்த குண்டுகளில் ஒன்று 

சுவரில் இருந்து கிளம்பி, காற்றில் விரைந்து, துப்பாக்கியின் குழலுக்குள் 

புகுந்து விடுகிறது. இது சாத்தியமா? கிறிஸ்டோபர் நோலன் 

படங்களில் இது சாத்தியமே! அண்மையில் 2020 டிசம்பரில் 

இந்தியாவில் வெளியான நோலனின் டெனட் (TENET) திரைப்படத்தில் 

பிரமிப்பூட்டும் இக்காட்சி இடம் பெற்றுள்ளது.   


அதிகரிக்கும் ஒழுங்கீனம்!

------------------------------------------ 

டெனட் படத்தைப் புரிந்து கொள்ள வெப்ப இயக்கவியலைப்   

 (thermodynamics) படித்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை 

ஆகிறது. வெப்ப இயக்கவியலில் மூன்று விதிகள் உண்டு. 

அதில் இரண்டாவது விதி "ஒழுங்கு குலைவு" (entropy) பற்றியது. 

டெனட்  திரைப்படத்தின் மையக் கருத்து ஒழுங்கு குலைவு (entropy) ஆகும்.

படத்தின் இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன் இருக்கலாம்.

ஆனால் உண்மையில் படத்தை இயக்குவது ஒழுங்கு குலைவே.  


ஆயின் ஒழுங்கு குலைவு (entropy) என்றால் என்ன? எந்த ஒரு அமைப்பிலும் கொஞ்சம் ஒழுங்கற்ற தன்மை (disorder or randomness) இருக்கக் கூடும்.  இந்த ஒழுங்கற்ற தன்மையே ஒழுங்கு குலைவு எனப்படுகிறது. 

அதாவது Entropy என்றால் ஒழுங்கீனம் என்று புரிந்து கொள்ளலாம்.

திட, திரவ, வாயுப் பொருட்களை எடுத்துக் கொள்வோம். இம்மூன்றில் 

திடப்பொருள் அதிக ஒழுங்கை உடையது. அதாவது ஒழுங்கீனம் 

குறைவு. வாயுப்பொருள் குறைவான ஒழுங்கை உடையது. இதில் 

ஒழுங்கீனம் அதிகம்.


ஒரே அளவிலான மூன்று பாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்.

ஒன்றில் 100 அணுக்கள் உள்ளன. அவை தமக்குள் நெருக்கமாக

ஒட்டிக்கொண்டு ஒரு திடப்பொருளாக அமைகின்றன. இன்னொரு 

பாத்திரத்தில் 30 அணுக்கள் உள்ளன. அவை ஒரு திரவப் பொருளாக

அமைகின்றன. மூன்றாவது பாத்திரத்தில் 10 அணுக்கள் மட்டுமே 

உள்ளன. இந்த அணுக்கள் ஒரு வாயுப் பொருளாக அமைகின்றன.

வாயுப்பொருளின் 10 அணுக்களுக்கு இடையிலான உறவு தாறுமாறாக 

இருக்கும். எனவே இதில் ஒழுங்குகுலைவு (entropy) மிக அதிகம்.

அதே நேரத்தில் 100 அணுக்களைக் கொண்ட திடப்பொருளில் 

அணுக்களுக்கு இடையிலான உறவு ஒரு திட்டவட்டமான 

ஒழுங்கைக் கொண்டிருக்கும். இதில் ஒழுங்குகுலைவு (entropy)

மிகவும் குறைவு.  


கடைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் அரிசி மூட்டைகள்  

குறைவான ஒழுங்கு குலைவைக் கொண்டிருப்பதையும்,

விளையாட்டுப் பொருளான ஹைட்ரஜன் பலூன் அதிகமான 

ஒழுங்கு குலைவைக் கொண்டிருப்பதையும் அன்றாட 

வாழ்க்கையில் இருந்தே அறியலாம்.   

    

"பிறவற்றில் இருந்து விலகித் தனித்து நிற்கும் ஒரு அமைப்பில் 

ஒழுங்கு குலைவானது காலத்தைப் பொறுத்து தொடர்ந்து 

அதிகரித்துக் கொண்டே இருக்கும்" (In an isolated system the total entropy 

will be on the increase over time). இதுதான் பிரசித்தி பெற்ற 

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது என்ட்ரபி 

ஒருபோதும் குறைவதில்லை; அது எப்போதும் அதிகரித்துக் 

கொண்டே இருக்கும். அல்லது சில நிலைமைகளில் மாறாத 

மதிப்புடன் (constant value) இருக்கும்.. 


உங்களிடம் ஒரு கண்ணாடிக் குவளை இருக்கிறது. அது தரையில் 

விழுந்தால் என்ன ஆகும்?  சுக்கல் சுக்கலாக நொறுங்கி விடும். 

இப்போது அந்தக் குவளையின் என்ட்ரபி அதிகரித்து விட்டது என்று 

வெப்ப இயக்கவியல் சொல்கிறது. உடைவதற்கு முன்னால் முழுசாக இருக்கும்போது குவளையின் என்ட்ரபி குறைவு. உடைந்தபின் 

என்ட்ரபி அதிகம். அதாவது உடைந்து போன பிறகு,  ஒழுங்கீனம் 

அதிகரித்து விடுகிறது. 


ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவனாகி முதுமை அடைகிறது. 

முதுமை அடைந்த நிலையில் உடலின் பல செல்கள் இறந்து விடுகின்றன.

உறுப்புகள் தேய்மானம் அடைந்து செயல்திறனை இழக்கின்றன.

இவையெல்லாம் ஒழுங்குகுலைவு அதிகரித்து விட்டது (entropy increased) 

என்பதன் அடையாளம் ஆகும். நமது பிரபஞ்சம் பற்றி வெப்ப இயக்கவியல் என்ன கூறுகிறது? மொத்தப் பிரபஞ்சத்திலும் ஒழுங்கீனமானது 

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லுகிறது. 


கறந்த பால் மடியேறுமா?

-----------------------------------------

ஒழுங்கு குலைவை (entropy) மாற்ற முடியுமா? மேலும் மேலும் 

அதிகரிக்காமல்  தடுத்து நிறுத்த முடியுமா? ஒருபோதும் முடியாது. 

ஒழுங்கு குலைவு என்பது ஒரு அடிப்படையான இயற்பியல் விதி. 

இதை மாற்ற இயலாது. 


ஆனால் ஒழுங்கு குலைவை (entropy) மாற்ற முடியும் என்கிறார் 

கிறிஸ்டோபர் நோலன். கறந்த பால் மடி புகாது என்பது தமிழின் பழமொழி. ஆனால் கறந்த பாலை மீண்டும் பசுவின் மடிக்குள் செலுத்த முடியும் 

என்கிறார் நோலன்.

ஒழுங்கு குலைவை முற்றிலும் தலைகீழாக மாற்ற முடியும் (a total reversal of entropy) என்றும், அதன் மூலம் காலத்தில் பின்னோக்கிய பயணம் சாத்தியம் என்றும் கூறுகிறார் நோலன். முன்பத்தியில் கூறிய, சுவரில் புதைந்து கிடந்த துப்பாக்கிக் குண்டானது entropy reversal மற்றும் time reversalக்கு ஆட்பட்டதால்,

அது காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து புறப்பட்ட இடத்தையே    

மீண்டும் அடைந்தது என்று விளக்குகிறார் நோலன்.  


அப்படியானால் ஒழுங்கு குலைவை (entropy) தலைகீழாக மாற்றுவது 

எப்படி? அப்படி மாற்றக்கூடிய சக்தி படைத்தவர் யார்?

நிகழ்காலத் தொழில்நுட்பத்தில் அது சாத்தியமில்லை என்பதால்  

நிகழ்கால மனிதர்களாலும் அது சாத்தியமில்லை. எனினும் 

எதிர்காலத்தில் அது சாத்தியம். எதிர்கால மனிதர்கள் 

ஒழுங்கு குலைவை எளிதில் மாற்றி அமைத்து விடுவார்கள்

(entropy will be reversed) என்கிறார் நோலன். 


ஒழுங்கு குலையாமை (Negentropy)!

----------------------------------------------------

ஒழுங்கு குலைவு என்ற நிகழ்வுக்கு எதிர்மறையாக 

ஒழுங்கு குலையாமை என்ற நிகழ்வும் இவ்வுலகில் இருக்கிறது.

ஆங்கிலத்தில் entropyக்கு எதிர்ப்பதமாக Negative entropy என்ற 

சொல் இருக்கிறது. Negative entropy என்ற கருத்தையும் அதற்கான  

சொல்லையும் உருவாக்கியவர் எர்வின் ஷ்ராடிங்கர் 

(Erwin Schrodinger 1887-1961). இயற்பியலில் நோபல் பரிசு (1933)

பெற்ற இவர் எழுதிய "What is life?" என்ற நூலில் Negative entropy

என்ற கருத்தை அறிமுகம் செய்கிறார். பின்னாளில்   

இச்சொல் மருவி Negentropy என்றாகி விட்டது.


ஒழுங்கு குலையாமை என்பது இயற்பியலின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோட்பாடு. Entropy என்பது ஒரு அமைப்பில் நிலவும் ஒழுங்கின்மையைக் 

குறிக்கும் என்றால் Negative entropy என்பது ஒரு அமைப்பில் நிலவும் 

ஒழுங்கைக் குறிக்கும். (Negentropy is the degree of  ORDER). 2009ல் 

ஒழுங்கு குலையாமை (Negentropy) என்பது மறுவரையறை செய்யப்பட்டு

 Joule per kilogram per Kelvin என்ற SI unit வழங்கப்பட்டது. 

  

கால அம்பின் முன்னோக்கிய திசை!

---------------------------------------------------------- 

எதிர்கால மனிதர்களை கடந்த காலத்துக்குள் அழைத்து வரும் பொருட்டு  

அவர்களின் ஒழுங்கு குலைவை (entropy) தலைகீழாக மாற்றி அமைக்கிறார் நோலன். ஆட்கள், பொருட்கள் என்று அனைவரின் ஒழுங்கு குலைவையும்    

தலைகீழாக மாற்ற முடியும். ஒழுங்கு குலைவை மாற்றுவதன்

மூலம், காலத்தில் பின்னோக்கிச் செல்ல முடியும். (Reversal  in entropy leads 

to reversal of time). காலத்தில் பின்னோக்கிச் செல்வது என்பது மாபெரும் 

அதிசயம் ஆகும். ஏனெனில் வெப்ப இயக்கவியலைப் பொறுத்து,

கால அம்பு  (Time arrow) எப்போதும் முன்னோக்கி மட்டுமே செல்லும்.

அதாவது இறந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கியே 

கால அம்பு செல்லும். இதைத் தலைகீழாக மாற்றி எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்குள் செல்லுமாறு கால அம்பின் திசையை 

மாற்றி விடுகிறார் நோலன்.


டர்ன்ஸ்டைல் என்னும் வாசல்!

----------------------------------------------

கிறிஸ்டோபர் நோலனின் இன்டெர் ஸ்டெல்லார் படத்தில் 

டெசரக்ட் (Tesseract) என்னும் நான்கு பரிமாணம் கொண்ட ஒரு கருவியைப் பார்த்தோம். காலத்தையும் ஒரு பரிமாணமாகக் கொண்டது இந்த டெசரக்ட். 

டெனட் படத்திலும் டர்ன்ஸ்டைல் (turnstile) என்றொரு கருவி 

காட்டப் படுகிறது. ஒழுங்கு குலைவையும் அதன் மூலம் காலத்தின் திசையையும்  மாற்றுவதற்குப் பயன்படும் கருவி இது. இது ஒரு கேட் (gate)  போன்றது. இதில் நுழைந்து வெளிவருவதன் மூலம் காலத்தின் திசையை மாற்றிக் கொள்ள இயலும். இந்தக் கருவியை நிகழ்கால மனிதர்களால் செய்ய இயலவில்லை.. ஆனால் எதிர்காலத்தில் உள்ளவர்கள் செய்துள்ளனர்.


காலத்தின் திசை மாற்றம்!

-------------------------------------------

காலப்பயணம் என்பது  மனிதனின் தொன்மையான கற்பனை. 

இங்கிலாந்து அறிஞர் ஹெச் ஜி வெல்ஸ் (H G Wells 1866-1946) அறிவியல் புனைவுகளின் (science fiction) தந்தை என்று போற்றப் பட்டார். இவர் 

எழுதிய 1895ல் பிரசுரமான டைம் மெஷின் (The Time Machine) என்னும் 

அறிவியல் புனைவு காலப்பயணம் பற்றியது. 

நாவலின் கதாநாயகன்  காலத்தில் மிகவும் பின்னோக்கிச் சென்று,  

எட்டாம் நூற்றாண்டை கணப்பொழுதில் அடைந்து விடுகிறான்.


வெல்சின் காலப்பயணத்தில் ஒழுங்குகுலைவு (entropy) பற்றிய பேச்சே இல்லை. ஆனால் டெனட் படத்தில் ஒழுங்கு குலைவு (entropy) பிரதான பாத்திரம் வகிக்கிறது. அதை மாற்றி அமைப்பதன் மூலமே காலத்தில் பின்னோக்கிச் செல்ல முடிகிறது. அதாவது எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்குச் செல்ல முடிகிறது. 

பிற படங்களில் காலப்பயணிக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. அவர் நினைத்த மாத்திரத்தில் இறந்த காலத்துக்கோ  எதிர்காலத்துக்கோ ஒரு நொடிக்குள் செல்ல முடியும். ஹெச் ஜி வெல்சின் காலப்பயணி எட்டாம் நூற்றாண்டுக்கே  சென்றார். ஆனால் கிறிஸ்டோபர் நோலனின் காலப்பயணிகளால், நினைத்த மாத்திரத்தில் (instantaneously)

நினைத்த இடத்திற்குச்  செல்ல இயலாது. 


ஜனவரி 10ஆம் தேதி மதியம் 12 மணிக்கு டர்ன்ஸ்டைலில் நுழைகிறார் நோலனின் பயணி ஒருவர். முந்திய நாள் (ஜனவரி 9) 

மதியம் 12 மணி என்ற இலக்கை அடைய அவர் விரும்புகிறார். 

இதற்கு அவர் 24 மணி நேர அளவுக்கு காலத்தின்  

பின்னோக்கிய திசையில் (reverted direction of time) பயணம் 

செய்ய வேண்டும். தேவையான அளவு நேரத்துக்கு (24 மணி நேரம்) 

காலத்தில் வாழாமல் இலக்கை அடைய இயலாது. மற்றப் படங்களில் இறந்த காலத்தை அடைந்த எந்த ஒரு காலப்பயணியும்  ஆக்சிஜன் முகமூடி அணிந்து சுவாசித்ததாக வரலாறு இல்லை. ஆனால் டெனட் படத்தின் காலப்பயணிகள் ஆக்சிஜன் முகமூடி அணிந்தே சுவாசிக்க வேண்டும். இவையெல்லாம்  

காலப்பயணத்தை நரகம் ஆக்குகின்றன.


அதிக பட்ஜெட்டில் டெனட் படம்!

-----------------------------------------------------

இன்செப்ஷன், இன்டெர் ஸ்டெல்லார் ஆகிய புரியாத படங்களின் 

வரிசையில் டெனட்டும் (TENET) வந்து நிற்கிறது. உலகின் பல்வேறு 

நாடுகளில், இந்தியாவில் மும்பை  உட்பட, இப்படத்தின் படப்பிடிப்பு 

நடந்தது. கிறிஸ்டோபர் நோலன் எழுதி இயக்கிய இப்படத்தின்  

தயாரிப்பு மற்றும் விநியோகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 

மேற்கொண்டுள்ளது..  


இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இப்படத்தில் நடித்துள்ளார். 

1973ல் வெளியான பாபி படத்தில், ரிஷி கபூருடன் டிம்பிள் கபாடியா கதாநாயகியாக நடித்தது .நமக்கு நினைவிருக்கும். தற்போது தமது 

63ஆம் வயதில், நோலனின் படத்தில், சர்வதேச ஆயுத வியாபாரியாக நடித்துள்ளார் டிம்பிள் கபாடியா. 


படத்தின் கதாநாயகனாக ஜான் டேவிட் வாஷிங்டன்

நடித்துள்ளார். 150 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் பட்ஜெட் 

205 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கிறிஸ்டோபர் நோலனின் 

படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட 

படம் ஆகும்.  


தமது இன்டெர் ஸ்டெல்லார் படத்தின் அறிவியல் ஆலோசகராக 

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் கிப் தோர்னேவை (KipThorne)

அமர்த்தி இருந்தார் நோலன். தற்போது டெனட் படத்திற்கும் 

 அவரிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறுகிறார். எனினும் 

இன்டெர் ஸ்டெல்லார் போன்று கறாரான ஒரு அறிவியல் 

புனைவாக  டெனட் இல்லை.  


தலைப்பின் பொருத்தம்!

--------------------------------------

டெனட் (TENET) என்ற சொல்லுக்கு கொள்கை, கோட்பாடு என்று 

பொருள். இடமிருந்து வலமாக வாசித்தாலும் அல்லது 

வலமிருந்து இடமாக வாசித்தாலும் இச்சொல் மாற்றம் அடையாமல் 

TENET என்றே வழங்கப்பெறும். இத்தகைய சொற்களை  ஆங்கில 

இலக்கணம் வரிசைமாறாச்சொல் (palindrome) என்கிறது. தமிழில் 

"களைகளைக" என்ற சொல்லும் ஆங்கிலத்தில் madam என்ற சொல்லும் வரிசைமாறாச் சொற்களுக்கு உதாரணங்கள் ஆகும். 


படத்தில் கதை மாந்தரும் பொருட்களும்  காலத்தில் முன்னோக்கியும்   பின்னோக்கியும் செல்கின்றனர். மேலும் படத்தின் இறுதிக் காட்சியில்  

நிகழும் 10 நிமிடத் தாக்குதல், கடந்த காலத்தில் 10 நிமிடம் என்றும் நிகழ்காலத்தில் 10 நிமிடம் என்றும் ஒருசேர நடக்கிறது. இவற்றையெல்லாம் குறியீட்டு உத்தியாக (symbolic) உணர்த்திட  

TENET என்ற வரிசைமாறாச் சொல்லைப் பயன்படுத்துகிறார் நோலன்.   

அமெரிக்க சிஐஏ உருவாக்கிய  ஒரு ரகசிய உளவு அமைப்பே டெனட் ஆகும். படத்தின் கதாநாயகன் டெனட் அமைப்பின் உறுப்பினர். 


தாத்தாவுக்கும் பேரனுக்கும் போர்!

-------------------------------------------------------

மூன்றாம் உலகப் போர் நிகழாமல் தடுப்பதே கதாநாயகனின் 

பணி என்று படம் கூறுகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் 

 புளூட்டோனியத்தின் ஐசோடோப் 241 பற்றி படத்தில் 

பேசப் படுகிறது. அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்புக்கான மன்ஹாட்டன் திட்டம் (Manhattan project 1942-1946) பற்றியும் 

அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படும்  இயற்பியலாளர் ஓப்பன்ஹீமர் (Robert Oppenheimer 1904-1967) பற்றியும் இப்படம் குறிப்பிடுகிறது. 

படம் கூறுகிற மூன்றாம் உலகப்போர் entropy reversal மூலம் நடக்கும். இது 

அணுஆயுதப் போரை விட அதிகமான பேரழிவை ஏற்படுத்தும் 

மொத்த உலகின் ஒழுங்கு குலைவையும் தலைகீழாக மாற்றி விடுவதன் மூலம் இன்றைய மனிதர்களை கணப்பொழுதில் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிய இயலும்  (total extinction is possible). 


மூன்றாம் உலகப்போர் என்பது பூமியின் தற்போதைய  நாடுகளுக்கு இடையில் நடக்க இருக்கும்  போர் அல்ல. நிகழ்காலத்தில் வாழும்  நமக்கும் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கும் இடையிலான போரே மூன்றாம் உலகப்போர் என்கிறார் நோலன்.

நம்முடைய எதிர்கால சந்ததி என்பது நம்முடைய பேரன் 

பேத்திகள்தானே! அவர்கள் ஏன் நம்முடன் போர் செய்ய  

வேண்டும்? காரணம் இதுதான்! பூமியில் உள்ள ஆறுகள் 

அனைத்தும் வறண்டு விட்டன. கடல்கள் வற்றி விட்டன. 

இந்த பூமியை வாழத் தகுதியற்றதாக்கி, அழித்து விட்ட 

நம் மீது நமது எதிர்கால சந்ததி ஆத்திரம் கொள்கிறது. 

நம்மோடு போர் புரிந்து நம்மைக் கொன்று விடத் துடிக்கிறது. 

நம்மைக் கொல்வதன் மூலம், நாம் ஏற்படுத்திய சீர்கேடுகளில் 

இருந்து பூமியை மீட்டுவிட முடியும் என்றும் இழந்து விட்ட 

வளங்களை மீண்டும் பெற்று விட முடியும் என்றும் நம்புகிறது. 


அல்காரிதம் என்னும் அழிவுத் திட்டம்! 

------------------------------------------------------------

ஒழுங்குகுலைவை தலைகீழாக  மாற்றுவதன் மூலம், காலத்தினூடே பின்னோக்கிய பயணத்தை எதிர்கால சந்ததியினர் சாத்தியம் ஆக்கி உள்ளனர். அவர்கள் நம்முடைய  காலத்துக்கு வந்து, நம்மை அழிக்க   

விரும்புகின்றனர். இதற்காக ஒரு பேரழிவுத் திட்டத்தையும் அதை 

நிறைவேற்றும் செயல்முறையையும் எதிர்காலத் தரப்பைச் 

சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி உருவாக்கி உள்ளார். இது அல்காரிதம் 

(algorithm) என்று குறிப்பிடப் படுகிறது. பொதுவாக அல்காரிதம் 

என்ற சொல், பென் டிரைவ் போன்றவற்றில் சேமிக்கப்படும் மென்பொருள் கட்டளைத் தொகுப்பைக் குறிக்கும். ஆனால் படத்தில் உலோகத்தால் 

ஆனதும் அளவில் பெரியதுமான ஒரு ஆயுதமாகவே அதை நோலன் 

சித்தரித்து உள்ளார். 


தான் உருவாக்கிய அல்காரிதம் பூமியை முற்றிலுமாக அழித்து விடும் 

அபாயத்தை உணர்ந்த அந்தப் பெண் விஞ்ஞானி, அதை  ஒன்பது துண்டுகளாகப் பிரித்து. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்திற்கு  அனுப்பி விட்டார். எதிர்காலத்தைச் சேர்ந்தவரான அவர், தமது அல்காரிதம் தம் காலத்தவர்கள் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, அந்த ஒன்பது துண்டுகளின் காலத்திசையையும் மாற்றி,  அவற்றைக் கடந்த காலத்துக்கு அனுப்பி விட்டார்.

டெனட் படத்தில் அட்டகாசமான ஒரு வில்லன் இருக்கிறார். 

அவர் ஒரு ரஷ்யர். நிகழ்காலத்தவர். எனினும் அவர் நிகழ்கால 

மக்களுக்கு எதிராகவும்  எதிர்காலத் தரப்புக்கு ஆதரவாகவும் 

வேலை செய்கிறார். அவர் பெயர் அந்திரேய் சேட்டர் (Andrei Sator) . 

சிதறிக் கிடந்த  அல்காரிதத்தின்  ஒன்பது துண்டுகளையும் அவர் சேகரித்துத் 

தம்மிடம்  வைத்துள்ளார். புற்று நோயாளியான அவர் இறந்து 

போகும்போது, இந்த உலகமும் அவருடன் சேர்ந்து அழிந்து 

விடுமாறு ஒரு பயங்கரத்தை அவர் ஏற்பாடு செய்துள்ளார். அதாவது 

அவரின் இதயத் துடிப்பு நின்று போன அந்த  நொடியிலேயே 

அவரிடமுள்ள அல்காரிதம் செயல்பாட்டுக்கு வந்து இந்த உலகத்தை 

அழித்து விடும். 


பைபிளின் புதிய ஏற்பாடு கூறுகிற, நன்மைக்கும் தீமைக்கும் நடக்கிற "ஆர்மகெடான்" (Armageddon) என்னும் இறுதி யுத்தம் போன்றது 

இந்த மூன்றாம் உலகப்போர். இதில் இறுதியில் வில்லன் சேட்டர் அழிகிறான். ஆனால் அவனுடன் கூடவே உலகம் அழியவில்லை. அது பூத்துக் குலுங்குகிறது. 

இயற்கையை அழிப்பதையும்  சூழலை மாசு படுத்துவதையும் எதிர்த்து 

உரத்த கண்டனக் குரலை எழுப்புகிறது  இத் திரைப்படம்.  


இக்கட்டுரை டெனட் படத்தின் திரை விமர்சனம் அல்ல. மாறாக 

படத்திற்கான அறிவியல் விளக்கம் மட்டுமே. உணவின் ருசி அதைச் சாப்பிடும்போதுதான்  தெரியும் (The proof of the pudding is in the eating) 

என்பார்கள். அதைப்போல, படத்தைப் பார்ப்பதன் மூலமே 

அதன் சிறப்பை உணர முடியும். அதிலும் நோலனின் படங்களை 

ஒரு முறைக்கு இருமுறை பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

டெனட் படமும் அதற்கு விலக்கல்ல.

 

பாட்டனார் முரண்பாடு!

---------------------------------------

எதிர்காலத்தினர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து, 

கடந்த காலத்திற்குள் நுழைந்து, அங்கு வாழும் நம்மைக் 

கொல்லப் போகிறார்கள் என்றதுமே, அதன் சாத்தியப்பாடு 

கேள்விக்கு உள்ளாகிறது. இக்கேள்வி ஐன்ஸ்டைனின் 

சார்பியல் கொள்கை  வெளியானபோதே பிறந்து விட்டது.

இறந்த காலத்துக்குள் சென்று அங்கு இளைஞனாக வாழும் தாத்தாவை

பேரன் கொன்று விட்டால், தாத்தா இறந்து போவார். பின் 

பேரன் எப்படிப் பிறப்பான்? பிறக்காத பேரன் எப்படி கடந்த 

காலத்துக்குச் சென்று தாத்தாவைக் கொல்லுவான்? இந்தக் 

கேள்விதான் பாட்டனார் முரண்பாடு (Grandfather paradox) எனப்படுகிறது. 

டெனட் படம் பாட்டனார் முரண்பாடு பற்றிப் பேசுகிறது. ஆனாலும் 

பேரன்களுக்கு ஆதரவாகவே கதை நகர்கிறது.  

 

 பாட்டனார் முரண்பாடு கால வரிசையை (temporal sequence) சேதாரம் செய்கிறது.

காரண காரியப் பொருத்தத்தை (cause and effect relationship) பின்பற்றவில்லை.

ஒருபோதும் பேரனால் கடந்த காலத்துக்குச் சென்று தன் தாத்தாவைக் 

கொல்ல முடியாது. இதுதான் உண்மை.    


ஆனால் பேரன் தாத்தாவைக் கொலை செய்வது ஒரு பிரபஞ்சத்தில் 

என்றும், தாத்தா வாழ்ந்து கொண்டிருப்பது வேறொரு 

பிரபஞ்சத்தில் என்றும் சப்பைக் கட்டு கட்டப் படுகிறது. 

இதை ஏற்பதற்கில்லை. பிரபஞ்சம் என்பது ஒன்றுதான். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்களின் இருப்பு என்ற கற்பனையில் அடைக்கலம் 

புகுவது பயனற்றது. 


பிரம்மாண்டமான காட்சிகள்!

------------------------------------------------

படத்தின் தொடக்கக் காட்சி ஆறு நிமிடம் ஓடுகிறது.

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள ஒரு அரங்கத்தில் இசைக்கச்சேரி. 

அரங்கத்தில் புகுந்த பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் கதாநாயகனைச்   சுட முனைகிறான் எதிரி. ஆனால் கதாநாயகன் காப்பாற்றப் படுகிறான்.

இந்த இடத்தில் காலத்தின் திசை மாற்றப்பட்ட (inverted bullet) துப்பாக்கிக் குண்டு படத்தில் காட்டப் படுகிறது. பார்வையாளர்களால் 

எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்ள முடியாத இக்காட்சி பின்னர் 

விளங்கும்போது மெய் சிலிர்க்கிறது.  


ஆஸ்லோ  விமான நிலையத்தில் உள்ள ஒரு காவல் மிகுந்த 

அறையின் பேழையில் (vault), படத்தின் வில்லன் ஆந்திரேய் சட்டோர் 

பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு ஓவியத்தை கதாநாயகன் 

கவர வேண்டி உள்ளது. அதற்காக அங்கு ஒரு பெரிய தீ விபத்தை 

ஏற்படுத்த வேண்டும். இக்காட்சியை தத்ரூபமாகவும் பிரமாண்டமாகவும் 

அமைக்கும் பொருட்டு, உண்மையிலேயே ஒரு போயிங் 747

விமானத்தை மோதச்செய்து தீ விபத்தை ஏற்படுத்தினார் நோலன்.


ஆக்சிஜன் ஏன்?

--------------------------

படத்தில் கதாநாயகனும் வேறு சிலரும் ஆக்சிஜன் முகமூடியை 

(oxygen mask) அணிந்து கொண்டிருப்பதை சில காட்சிகளில்

பார்க்கிறோம். இது ஏன்? காலத்தின் திசை மாற்றத்துக்கு 

ஆட்பட்டவர்கள் (those who suffer from time reversal) உயிரியல் ரீதியாக  

சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக, அவர்களின் 

உடலில் நெருப்பு பட்டால், அந்த இடம் வெந்து போகாது. மாறாக  குளிரில் உறைந்து விடும். அவர்களின் நுரையீரல் இயல்பாக வேலை செய்யாது. எனவே ஆக்சிஜன் முகமூடிகள் மூலமாக செயற்கை சுவாசம் அளிக்கப் படுகிறது.

படத்தில் தீப்பிடித்து எரிந்த காரில் மயங்கிக் கிடந்த கதாநாயகனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. எப்படி? காலத்தின் திசைமாற்றத்துக்கு அவன் ஆட்பட்டு இருந்ததால்,  காரின் வெப்பம் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன்  உடம்பில் தீக்காயங்களும் ஏற்படவில்லை. மாறாக ஹைப்போதெர்மியா என்னும் வெப்பக் குறைவு நோய் ஏற்பட்டது. இதனால் கதாநாயகன் உயிர் பிழைத்தான். அதிகமான வெப்பம் குளிருக்கு இட்டுச் 

செல்லும் அதிசயம் நிகழ்ந்தது.  காலத்தின் திசைமாற்றத்துக்கு (time reversal) ஆட்பட்டவர்களை சுடுகாட்டில் வைத்து எரித்தாலும் அவர்கள் 

சாம்பலாக மாட்டார்கள். எரியும் நெருப்பு அவர்களுக்கு பனி பெய்வது  போலிருக்கும்.


நிறக் குறியீடுகள்!

-------------------------------

படத்தின் உச்சக் காட்சி (climax) நுட்பங்கள் நிறைந்தது. இக்காட்சியில்   

நிகழ இருக்கும் 10 நிமிடத் தாக்குதலானது ராணுவம் மேற்கொள்ளும் இருமுனைத் தாக்குதல் (pincer attack) போன்றது. காலத்தில் முன்னோக்கிய  

10 நிமிடம் என்றும் காலத்தில் பின்னோக்கிய 10 நிமிடம் என்றும் இருமுனைகளில் இருந்தும் இத்தாக்குதல் (temporal pincer movement) 

ஒருசேர நிகழ்கிறது. 


பார்வையாளர்கள் காட்சியை விளங்கிக் கொள்ளும் பொருட்டு 

நிறக்குறியீடுகளை (colour code) அறிமுகம் செய்கிறார் நோலன். 

சிவப்பு  நிறம் காலத்தில் முன்னோக்கிச் செல்பவர்களையும் 

(forward in time) ,  நீல நிறம் காலத்தில் பின்னோக்கிச் செல்பவர்களையும் (backward in time) குறிக்கும். மேலும் காலத்தின் திசைமாற்றத்துக்கு ஆட்பட்டவர்கள் அனைவரும் ஆக்சிஜன் முகமூடி அணிந்திருப்பார்கள். இவ்விரு அடையாளங்களையும் கொண்டு காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும்  செல்வோரை இனங்காணலாம். 

 

துகளும் எதிர்த்துகளும்!

---------------------------------------

படத்தில் போகிற போக்கில், எலக்ட்ரானின் எதிர்த் துகளான

பாசிட்ரான் (positron the anti particle of electron) பற்றியும் பேசப்படுகிறது.

1897ல்  ஜே ஜே தாம்சன் எலக்ட்ரானையும், 1932ல் காரல் ஆண்டர்சன் பாசிட்ரானையும் கண்டுபிடித்தனர். துகளும் எதிர்த் துகளும்  

மோதினால், பொருளின் அழிவு (annihilation of matter) ஏற்பட்டு, அவை இரண்டுமே அழிந்துவிடும். பல்வேறு துகள் மோதல் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்ட  இக் கருத்தைப் பெரிதும் தோராயமாக படத்தில் கையாள்கிறார் நோலன். 

படத்தில், டர்ன்ஸ்டைல் வழியாக நுழைந்து காலத்தின் திசைமாற்றத்துக்கு 

ஆட்பட்டு  நிற்கும் கதாநாயகனும், மாற்றத்துக்கு ஆட்படாத  அவரின்         

ஒரிஜினலும் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்றும், தொட்டால் 

அழிந்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கப் படுகிறார்கள். அவர்கள் 

இருவரையும் பொருளாகவும் எதிர்ப்பொருளாகவும் பார்க்கும் 

தவறான பார்வையின் விளைவு இது. அறிவியல் ரீதியாக இது சரியல்ல. ஏனெனில் காலத்தின் திசைமாற்றத்துக்கு ஆட்பட்ட ஒருவர் 

எதிர்ப்பொருளாக (anti matter) ஆகி விடுவதில்லை. யாரும் அல்லது எதுவும் 

எதிர்ப்பொருளாக மாறுவது சுலபமல்ல.


இயற்பியலின் சமச்சீர்மை!

-----------------------------------------

இயற்பியல் விதிகள் சமச்சீர்மை (symmetry) உடையவை. சமச்சீர்மை 

என்றால் என்ன? ஒரு முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன.

கண்களைப் பொறுத்து சமச்சீர்மை இருக்கிறது.  ஒருவருக்கு ஒரு 

கண் மட்டும் இருந்தால் அது சமச்சீர்மையற்ற நிலை (asymmetry) ஆகும்.


பொதுவாக இயற்பியல் விதிகள் மூன்று விதமான சமச்சீர்மை 

கொண்டிருக்கும். இது CPT சமச்சீர்மை எனப்படும். 

C = Charge (மின்னூட்டம்) 

P = Parity (இட வல அச்சு மாறாமை)

T = Time (காலம்).


ஆனால் ஒழுங்கு குலைவு பற்றிய விதி (Law of entropy) மட்டும் சமச்சீர்மை 

உடையதாக இல்லை என்கிறார் நோலன்.அது உண்மையே.


மாக்ஸ்வெல்லின் பிசாசு!

---------------------------------------

குவாண்டம் கொள்கை கூறும்  ஷ்ராடிங்கரின் பூனை ஒரு சிந்தனைப் 

பரிசோதனை (thought experiment) ஆகும். அது போலவே மாக்ஸ்வெல்லின் பிசாசும் (Maxwell's demon)  ஒரு சிந்தனைப் பரிசோதனை  ஆகும். இதை 

150 ஆண்டுகளுக்கு முன்பு மாக்ஸ்வெல் (James Clerk Maxwell 1831-1879)  

1871ல் முன்மொழிந்தார். வெப்ப இயக்கவியலின் இரண்டாவது 

விதியை (law on entropy) அனுமான அடிப்படையில் (hypothetically)

எப்படி மீறுவது என்று மாக்ஸ்வெல்லின் பிசாசு சொல்லித் தருகிறது.


இயற்கையான நிகழ்வான ஒழுங்குகுலைவை (entropy) அதிரடியாக 

மாற்றுகிற தைரியத்தை  கிறிஸ்டோபர் நோலன் யாரிடம் இருந்து 

பெற்றார்? மாக்ஸ்வெல்லிடம் இருந்துதான். வெப்ப இயக்க இயலின் 

இரண்டாம் விதியை மீறுவதற்கு அன்றே வழிகாட்டியவர் அவர்தான். அதிகரித்துக் கொண்டே சென்ற ஒழுங்கு குலைவை (entropy) 

(தமது சிந்தனைப் பரிசோதனையில்) குறைத்துக் காட்டியவர் அவர்தான். ஆக மாக்ஸ்வெல்லின் பிசாசுதான் நோலனின் டெனட்டாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே 

நோலனை குற்றவாளி ஆக்க முடியாது. 

******************************************************

    

 


      


    


 

    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக