கணவனை விட வயதில் இளைய மனைவிக்கு
கணவனை விட வயது கூடியது எப்படி?
ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை சொல்வது என்ன?
Relativity theory, Time Dilation என்றால் என்ன?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
கணவன் மனைவி இருவரும் இனிய இல்லறம்
நடத்தி வந்தனர். கணவனின் வயது 30. மனைவியின்
வயது 20.
ஒருநாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலருடன்
கணவன் ஒரு விண்கலத்தில் ஏறி விண்வெளிப்
பயணம் மேற்கொண்டான். விண்கலமானது
ஒளியின் வேகம் என்னவோ அதில் 95 சதவீதம்
வேகத்தில் பறந்தது.
ஒளியின் வேகம் = நொடிக்கு 3 லட்சம் கிமீ
துல்லியமாகச் சொன்னால் 299,792,458 meter per second.
(முதல் வரியில் கிலோமீட்டரில் சொல்லி இருக்கிறேன்.
இரண்டாவது வரியில் மீட்டரில் சொல்லி இருக்கிறேன்.
Physicsல் units மிகவும் முக்கியம்; இதில் கவனம் தேவை)
இந்த வேகத்தில் 95 சதவீதம் வேகம் என்றால், எவ்வளவு?
95 x 299,792,458 divided by 100 meter per second.
அதாவது 284,802,835 meter per second.
அதாவது 284,803 kilo meter per second என்று புரிந்து கொள்க.
விண்வெளியில் ஐந்தாண்டுகள் சுற்றியபின் விண்கலம்
பூமிக்குத் திரும்பியது. ஐந்தாண்டு நிறைவில் கணவனின்
வயது 35 ஆகி இருந்தது. 30 வயதில் விண்வெளிக்குச்
சென்றவன் பூமி திரும்பியபோது 35 வயது ஆகி இருந்தது.
அதே நேரத்தில் அவன் மனைவிக்கு 36 வயது ஆகி இருந்தது.
அவளுடைய 20ஆவது வயதில் விண்வெளி சென்ற கணவன்
பூமி திரும்பியபோது, அவளுக்கு 36 வயது ஆகி இருந்தது.
அதாவது விண்வெளியில் ஒளியின் வேகத்தில் 95 சதவீத
வேகத்தில் பயணம் செய்தபோது ஆன 5 ஆண்டுகள்
பூமியின் கணக்கில் 16 ஆண்டுகலுக்குச் சமமாக
இருந்தது.
கணவனைப் பொறுத்த மட்டில் அவன் 5 ஆண்டுகள்
மட்டுமே விண்வெளியில் இருந்தான். அவனின் வயது
35 ஆகியது (30 + 5 = 35). ஆனால் பூமியின் இருந்த மனைவிக்கு
இந்த 5 ஆண்டுகள் என்பது 16 ஆண்டுகளுக்குச் சமமாக
இருந்தது. எனவே அவளின் வயது 36 (20+16 = 36) ஆனது.
இப்படி இருக்க முடியுமா?
அ) ஆளைப் பொறுத்து காலம் மாறுமா?
கணவனுக்கு 5 ஆண்டு என்பது மனைவிக்கு 16 ஆண்டா?
ஆ) இடத்தைப் பொறுத்து காலம் மாறுமா?
விண்வெளியில் ஆன காலம்தானே பூமியிலும் ஆகி இருக்க
வேண்டும்? விண்வெளியில் 5 என்பது பூமியில் எப்படி 16 ஆனது?
இ) வேகத்தைப் பொறுத்து காலம் மாறுமா? வெவ்வேறு
வேகத்தில் பயணம் செய்தால் வெவ்வேறு அளவில்
காலம் மாறுமா?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஆம்! ஆம்!! ஆம்!!!
ஆம் என்று அடித்துக் கூறுபவர் ஐன்ஸ்டைன்.
அவருடைய சார்பியல் கொள்கை என்னும் ரிலேட்டிவிட்டி
தியரிப்படி இது சாத்தியம். இது time dilation என்று
அறியப் படுகிறது. டைம் டைலேஷன் என்றால் என்ன
பொருள்? கால நீட்சி என்று பொருள். காலம் நீள்கிறது
என்று பொருள். அதாவது குறைவான வேகத்தில்
இருப்பவர்களுக்கு காலம் நீள்கிறது என்று பொருள்.
ஐன்ஸ்டைன் கூறியது சரி என்று கணக்கற்ற
பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டு
இருக்கிறது. காலம் என்பது எல்லா இடத்திலும்
எல்லாச் சூழலிலும் மாறாமல் நிலையாக இருக்கக்கூடிய
விஷயம் அல்ல என்பதுதான் ரிலேட்டிவிட்டி தியரி.
அதாவது Time is relative என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு சிறிய கணக்கு. வாசகர்கள் (அதாவது
மாணவர்கள், இளைஞர்கள் மட்டும்) இந்தக் கணக்கைச்
செய்ய வேண்டும். மேலே சொன்ன உதாரணத்தில்,
ஒளியின் வேகத்தில் 98 சதவீத வேகத்தில் கணவன்
விண்வெளியில் பயணம் செய்திருந்தால், 5 ஆண்டுகளின்
பின் பூமி திரும்பியதும் மனைவியின் வயது என்னவாக
இருந்திருக்கும்?
முந்திய கணக்கின் விவரங்கள் எல்லாம் அப்படியேதான்
இருக்கின்றன. விண்கலத்தின் வேகத்தை மட்டுமே
மாற்றி உள்ளேன். இப்போது கணக்கைச் செய்ய வேண்டும்.
கணக்கைச் செய்து பார்க்காமல் நான் சொன்ன விஷயம்
எதுவும் மூளையில் பதியாது.
"அறிவினில் உறைதல் கண்டீர்" என்பார் பாரதிதாசன்.
அது போல, டைம் டைலேஷன் உங்களின் அறிவினில்
உறைய வேண்டுமென்றால், இந்தக் கணக்கைச் செய்தே
தீர வேண்டும்.
ரிலேட்டிவிட்டி தியரியையும் டைம் டைலேஷனையும்
இவ்வளவு எளிமையாகவும் இவ்வளவு சுவாரஸ்யமாகவும்
எல்லோருக்கும் புரியும்படி விளக்கிச் சொல்ல என்னை
விட்டால் நாதி கிடையாது. எனவே இதை நன்கு
பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் மண்டையைப்
போட்டு விட்டால், இதைச் சொல்ல நாதி கிடையாது.
இதைப் படிக்காமல் நீங்கள் உதாசீனம் செய்தால்
நஷ்டம் எனக்கல்ல.
******************************************************
கணவனை விட 1 வயது கூடி விட்டது. இது மனைவிக்கு
அதிர்ச்சியாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக