தரையில் இறங்கும் விமானங்கள்!
-----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------
அன்று இலக்கியச் சிந்தனைக் கூட்டம். பெரும்
உற்சாகத்துடன் நாங்கள் விடுதி அறையில்
இருந்து கிளம்பினோம். இது வருடாந்திரப்
பரிசளிப்புக் கூட்டம்.
இலக்கியச் சிந்தனை என்னும் அமைப்பை தங்கள்
செலவில் ப சிதம்பரம் மற்றும் அவரின் உடன்பிறந்தோர்
நடத்தி வருகின்றனர். இலக்கியச் சிந்தனையின்
அங்கீகாரம் பெரும் கெளரவத்துக்கு உரியது
அப்போது ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்த
இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் நூலுக்கு
சிறந்த நாவலுக்கான விருது கிடைக்கும் என்று நாங்கள்
பெரிதும் எதிர்பாரத்து இருந்தோம். படித்து முடித்து விட்டு
வேலை தேடுகிற அல்லது வேலை பார்க்கிற பல்லாயிரக்
கணக்கான இளைஞர்கள் நடுவில் அந்த நாவல் சக்தி
மிக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இந்துமதியின் நாவலுக்குப் பரிசு கிடைக்கவில்லை.
இது எங்களுக்கெல்லாம் ஏமாற்றமாக இருந்தது.
கி ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் என்ற
நாவல் தேர்ந்தெடுக்கப் பட்டது. நாங்கள் அதை ஏற்கனவே படித்திருந்தோம். அதுவும் சிறந்த நாவலே.
இந்துமதியின் நாவல் பல்லாயிரக் கணக்கான
இளைஞர்களை ஈர்த்ததன் காரணம் தங்களையே
அந்நாவலின் பாத்திரங்களாக வாசகர்கள் உணர்ந்ததே
ஆகும். அந்த அளவுக்கு characterization யதார்த்தமாக
இருந்தது.
நாவலின் கதாநாயகன் ஒரு நடுத்தர வர்க்க ஏழைக்
குடும்பத்தைச் சேர்ந்தவன்.நல்ல மதிப்பெண்களுடன்
SSLC தேறிய நிலையில் கல்லூரியில் சேர்ந்து PUC
படிக்க வேண்டும் என்று காத்திருப்பவன். ஆனால்
குடும்ப வறுமை காரணமாக அவனைக் கல்லூரிப்
படிப்பு படிக்க வைக்க அவனது தந்தையால் இயலவில்லை.
வேலைக்கு அனுப்புகிறார்.
PUC படிக்க விரும்பியது ஒரு இளைஞன் நியாயமாக
அடைய விரும்பிய உயரம். ஆனால் இந்தக் கொடிய
சமூகம் அந்த உயரத்தை அடைய அவனை
அனுமதிக்கவில்லை. இதைப்போல் நாவலின் இறுதியில்
யார் எவரும் தாம் அடைய விரும்பிய உயரங்களை அடைய
இயலாமல் அத்தனை விமானங்களும் தரையில்
இறங்கி விடும். தரையில் இறங்கும் விமானங்கள்
என்றால், விரும்பிய உயரத்தை அடைய இயலாமல்
உயரம் இழத்தல் (altitude loss) என்று பொருள்.
அன்று உயரம் இழந்த ஒவ்வொரு சாராரும் தங்கள்
வழியைப் பார்த்துக் கொண்டனர். ஒரு சிலர் இந்தக்
கொடிய சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று
விரும்பினர். அப்போது நாடு முழுவதும் நக்சல்பாரி
பேரெழுச்சி முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது.
மாணவர்களும் இளைஞர்களும் புரட்சியில்
பங்கெடுக்குமாறு சாரு மஜூம்தார் அறைகூவல்
விடுத்தார். எழுபதின் பத்தாண்டுகளை விடுதலையின்
பத்தாண்டுகளாக மாற்றுவோம் என்ற முழக்கத்தை
(The decade of 70s will be the decade of liberation) அப்போது
சாரு மஜூம்தார் முன்வைத்தார்.
இந்த மொழிபெயர்ப்பு சரியில்லையே என்கிறார் தோழர்
தியாகு. அன்று புரட்சிப்பணி சரியாக நடக்கவில்லையே
என்று கவலைப்பட்ட தோழர் தியாகு இன்று
மொழிபெயர்ப்பு சரியில்லையே என்று கவலைப்
படுகிறார். கணிசமாக உயரம் இழந்தவர் அவர்.
எனினும் இந்த உயர இழப்புக்குத் தான் காரணம் அல்ல என்று
அவர் நிரூபித்து விடுவாரேயானால், அவர் குறித்து
எதிர்மறையாகக் கூற என்னிடம் எதுவும் இருக்காது.
சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று நக்சல்பாரி
இயக்கத்தில் சேர முடிவு செய்தோம். கட்சியில் சேர்வ்து
அவ்வளவு எளிதல்ல. கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்
மட்டுமே கட்சியில் சேர இயலும். திட்டத்தை ஏற்றுக்
கொண்டோம்.இறுதியில் ஒரு சுபயோக சுபதினத்தில்
தொழில்முறைப் புரட்சியாளர் (Professional Revolutionary)
முன்னிலையில் நாங்கள் இருவரும், நானும் தோழர்
கே பாலகிருஷ்ணனும் நக்சல்பாரிப் பேரியக்கத்தில்
பெருமிதத்துடன் எங்களை இணைத்துக் கொண்டோம்.
எங்களைக் கொண்டு கட்சி யூனிட் அமைக்கப் பட்டது.
இது லாபம்,
இது நஷ்டம்
என்று தொழில்முறைப் புரட்சியாளரால்
எங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லப் பட்டது.
அதன் பிறகும் லாபத்தைப் புறந்தள்ளி விட்டு
நஷ்டத்தை விரும்பி ஏற்றோம் நாங்கள். எங்களுக்கு முன்பே
கட்சியில் சேர்ந்திருந்த தோழர் ஸ்ரீரெங்கன் எங்களை
வரவேற்றார். (எனக்கும் தோழர் பாலகிருஷ்ணனுக்கும்
கால்குலஸ் கற்பித்த எங்கள் கல்லூரியின் கணித
ஆசிரியர் தோழர் ஸ்ரீரெங்கன்)
முற்றிலும் தெளிந்த முடிவான போர் இதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த் தியாகம் செய்ய நில்லுமே!
(தொழிலாளர் ஊர்வலத்தில் பியதோர் மாசின் பாட்டு, தாய் நாவல்)
************************************************************** ------
.
. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக