வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

நளினியின் விடுதலை தள்ளிக் கொண்டே போவது ஏன்?
----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------------------------------------------
பன்னிரண்டு மணி நேர பரோலில் வந்த நளினியை நேரில் 
சந்தித்துப் பேசிய ஒரே தலைவர் எங்கள் சீமான்தான் என்று 
மார்தட்டுகிறது நாம் தமிழர் வட்டாரம். சீமான்-நளினி 
சந்திப்பின் புகைப்படம்  உலக நாடுகள் எங்கும் புலம் 
பெயர்ந்த தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிவேகமாகப் 
பரவி வருகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணி 
நேரத்திலேயே மில்லியன் கணக்கில் 
இப்புகைப்படம் உலகெங்கும் பரவி விட்டதாக சீமானின் 
ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எந்தத் தலைவரையும் சந்திக்க மறுத்த நளினி எங்கள் தலைவர் 
சீமானை மட்டும் சந்தித்ததன் சூட்சுமம் வரவிருக்கும் தேர்தலில் 
வெளிப்படும் என்றனர் நாம் தமிழர் வட்டாரத்தினர்.

திராவிடத்தை அழித்தால்தான் தமிழ் தேசியம் வாழ முடியும்.
எனவே திராவிடத்தின் தந்தையான பெரியாரின் நேரடி 
வாரிசான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து நாம் தமிழர் 
கட்சியின் வேட்பாளராக நளினி போட்டியிடுவார் என்றனர் 
சீமானுக்கு நெருக்கமானவர்கள். இது குறித்துப் பேசவே 
சீமான் நளினியைச் சந்தித்தார் என்றும் நளினியின் சம்மதத்தை
சீமான் பெற்று விட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  

நளினி விரைவில் விடுதலையாகி விடுவார். விடுதலையானதும் 
சிறை வாசலில் வைத்து நாம் தமிழர் கட்சி மாபெரும் வரவேற்புக் 
கொடுக்கும். அந்தக் கூட்டத்திலேயே நளினியை நாம் தமிழர்
வேட்பாளராக சீமான் அறிவிப்பார் என்றனர் சீமானின் 
தோழர்கள்  மிகுந்த நம்பிக்கையுடன். 

நளினியின் விடுதலையில் மெய்யான அக்கறை உடைய 
அனைவருக்கும் சீமானின் இந்த ஆரவாரம் கவலையைத் 
தருகிறது. உண்மையில் இத்தகைய ஆரவாரங்கள் நளினி 
உள்ளிட்ட எழுவரின் விடுதலையை தடுத்து நிறுத்தி விடும் 
என்பதுதான் யதார்த்தம். காட்டுத் தீயாகப் பரவும் நளினி-சீமான் 
சந்திப்பும், நளினி அரசியலில் குதிக்கிறார் என்ற செய்தியும் 
தமிழர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

ராஜீவுடன் சேர்ந்து இறந்துபோன பாதிக்கப்பட்ட காவலர்களின் 
குடும்பத்தினரோ, டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி போன்றோரோ 
இத்தகைய விடுதலையை எதிர்த்து வழக்குத் தொடுக்க 
இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

நளினி தம் வாழ்க்கையில் செய்த இரண்டாவது பாரிய தவறு 
வெறும் பன்னிரண்டு மணி நேர பரோலில் வந்த  அவர்
சீமானைச் சந்தித்ததாகும். சீமான் நெடுமாறன் போன்றோரால் 
ஒருநாளும் நளினியின் விடுதலையைப் பெற்றுத் தர  இயலாது.
உண்மையில் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையை 
அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

சீமானைப் பொறுத்த மட்டில் நளினி ஒரு பொன்முட்டையிடும் 
வாத்து. அவர் விடுதலையாவது என்பது பொன்முட்டையிடும் 
வாத்தை அறுப்பதற்குச் சமமாகும். தொடர்ந்து நளினி
சிறையில் இருப்பதன் மூலமே சீமான் போன்றோரால் 
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் அவரின் விடுதலைக்குப் 
போராடுவதாகக் கூறி, நிதி வசூலித்துப் பிழைக்க முடியும்.

நளினி இந்த உண்மையை உணர வேண்டும். எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதன் மூலமும் சீமானின் நச்சுத் திட்டங்களுக்கு ஒரு 
கருவியாகப் பயன்படுவதன் மூலமும் நளினி  தம்முடைய 
விடுதலையை நிரந்தரமாக ரத்துச் செய்து விடுகிறார்.

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் 
இருப்பதுதான் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள 
விளக்கம் நளினி போன்றோரின் விடுதலைக்குப் பெரிய 
முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த நேரத்தில், நளினி சீமானின் 
கைப்பாவையாகி விட்டார் என்ற செய்தி அவரின் விடுதலைக்கான
கதவுகளை நிரந்தரமாக அடைத்து விடும் அபாயம் இருப்பதை 
நளினி உணர வேண்டும்.

சீமான் நெடுமாறன் மே 17 திருமுருகன் போறோரிடம் இருந்து 
முற்றிலுமாகவும் நிரந்தரமாகவும் துண்டித்துக் கொள்வதன் 
மூலமாக மட்டுமே நளினி பேரறிவாளன் போன்றோர் 
தங்களின் விடுதலைக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள 
இயலும். பேரறிவாளனை கல்வி அமைச்சராக்குவேன் என்ற 
சீமானின் பொறுப்பற்ற பேச்சுகள் அவர் விடுதலையாகி 
விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்து வருபவை ஆகும்.

வெற்றுக் கூச்சல்கள் ஒருநாளும் விடுதலையைப் பெற்றுத் 
தராது. நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக 
மாற்றியது யார் என்ற வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் முதல்வராக இருந்த 1996-2001 காலக் கட்டத்தில் 
2000ஆம் ஆண்டில் கலைஞரின் அமைச்சரவை நளினியின் 
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் 
என்று பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பியது. அன்றைய ஆளுநர் 
பாத்திமா பீவி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 
ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்.

ஆளுநரின் முற்று அதிகாரத்தின்கீழ் (souverign power) மேற்கொள்ளப்பட்ட 
இந்த நடவடிக்கைதான் நளினியின் தூக்கை ரத்து செய்தது. கடும் 
எதிர்ப்புக்கு இடையில் கலைஞர் நளினியின் தூக்கை ரத்து செய்தார்.
"அந்தக் குழந்தை ஆனாதை ஆகி விடும்; அதைத் தவிர்க்கவே 
நளினியின் தூக்கை ரத்து செய்தேன்" என்று எதிர்ப்பாளர்களுக்கு 
பதில் கூறினார் கலைஞர்.

ராஜீவ் கொலையாளியான ரத்தக்கறை படிந்த நளினியின் 
தூக்கை  ரத்து செய்த கலைஞரின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் 
என்று ஆத்திரப்பட்டார் ஜெயலலிதா. அன்று நெடுமாறன் ஜெயலலிதாவைக் கண்டிக்க முன்வரவில்லை. கலைஞர் 
நளினியின் தூக்கை  ரத்து செய்து விட்டதால் தம்முடைய 
பிழைப்பில் மண் விழுந்து விட்டதே என்று கோபமடைந்த 
நெடுமாறன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றாரே தவிர 
கலைஞரின் மனிதாபிமான நடவடிக்கையை ஆதரிக்க 
முன்வரவில்லை. இது தமிழர்கள் அனைவரும் நன்கு அறிந்து 
இன்று மறந்து போன ஒரு வரலாறு.     

நளினியின் விடுதலையில் மெய்யான அக்கறை கொண்ட 
அனைத்துத் தமிழர்கள் சார்பாக நளினிக்குக் கூறிக் கொள்கிறோம்;
அருள்கூர்ந்து சீமானின் கைப்பாவை என்று உங்களுக்கு 
சீமான் ஏற்படுத்தி இருக்கும் பிம்பத்தை உடைத்தெறியாமல்
உங்களின் விடுதலை நிகழாது.

---------------------------------------------------------------------------------------------------------       

   
     
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக