திங்கள், 22 பிப்ரவரி, 2016

பிறந்த குழந்தையானது பேசத் தொடங்கும்போது, தன்
தாயிடம் இருந்து கற்றுக் கொள்ளும் முதல் மொழியே
தாய்மொழியாகும். எனவேதான் தாய்மொழிக்கென்று
மனித மூளையில் ஒரு தனி இடம் உள்ளது. இது உயிரியல்
உண்மையாகும்.  


கணிதம், அறிவியல், வரலாறு ஆகியவற்றைக் கற்றுக்
கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் எந்தப் பள்ளிக்கும் செல்லாமலே ஒருவன்
மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் மொழியை
அவனுக்கு சமூகம் கற்றுக் கொடுக்கிறது. பள்ளி செல்லும்
முன்பே குழந்தைகள் தம் தாய்மொழியை எங்கிருந்து
எவரிடம் இருந்து கற்றனர்? சமூகத்திடம் இருந்து.  


தமிழ்ச் சமூகத்தில் சாதி மறுப்பு, மத மறுப்பு கொண்ட
திருமணங்கள் பரவலானவை. ஒப்பீட்டளவில் (comparatively)
மொழி மறுப்புத் திருமணங்கள் குறைவே. ஆனாலும் ஐரோப்பிய
சமூகத்தில் மொழி மறுப்புத் திருமணங்கள் அதிகம். பிரெஞ்சு
இளைஞன் ஸ்பானியப் பெண்ணைத் திருமணம் புரிவதும்,
ஆங்கில இளைஞன் சீனப் பெண்ணைத் திருமணம் செய்வதும்
இவை போன்ற நிகழ்வுகளும் அங்கு அதிகம். எனவே வெவ்வேறு
தாய்மொழியைக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின்
தாய்மொழியை எப்படி வரையறுப்பது என்ற வினா எழுகிறது.
**
இதற்கான விடை என்ன என்பதை அந்தப் பெற்றோர் முடிவு
செய்கிறார்கள். பிறந்த பிறகு குழந்தைக்கு பேசக் கற்றுக்
கொடுக்கும்போது, பெற்றோர் தேர்ந்தெடுக்கும் மொழியை
தாய் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கிறாள். அதுவே அக்குழந்தையின்
தாய்மொழி ஆகிறது.
**
பஞ்சாபிப் பெண் மறைந்த கல்பனா சாவ்லா அமெரிக்கா சென்றார்.
விண்வெளி வீராங்கனையாக உயர்ந்தார். தமக்குப் பயிற்சியளித்த
அமெரிக்கரான ஹாரிசன் என்பவரைக் காதலித்து மணந்தார்.
இத்தம்பதியருக்கு குழந்தை பிறந்திருக்குமேயானால், தாயான
கல்பனா குழந்தைக்கு எந்த மொழியில் பேசக் கற்றுக்
கொடுத்து இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
**
எனவே, தாய்மொழி என்பது தன்  குழந்தைக்குத் தாய்
முதன் முதலில் கற்றுக் கொடுக்கும் மொழியும் ஆகும்.
கல்பனா சாவ்லாவின் குழந்தையின் தாய்மொழி இதன்படி
ஆங்கிலமே ஆகும்.  




எந்த DNA Testஉம் தேவையே இல்லை. குறுகிய அரசியல்
ஆதாயத்துக்காக மக்களைக் குழப்பும் கோமாளி அரசியல்வாதிகள்
செய்யும் குளறுபடி இது.    

1) சாதியை வைத்து தமிழனா மாற்றானா என்று தீர்மானிக்க
முடியாது. உ.பி.யில் உள்ள முலாயம்சிங் யாதவ் மற்றும்
நம்மூர் மகா வித்துவான் அய்யம்பெருமாள் கோனார் ஆகிய
இருவரும் ஒரே சாதி. ஆனால் முலாயம் இந்திக்காரர். கோனார்
தமிழர். எனவே சாதியை வைத்துத் தீர்மானிக்க முடியாது.
2) பல மொழிகள் தெரிந்து இருந்தாலும் தாய்மொழி என்ற ஒன்று
உண்டு. அதுதான் தீர்மானிக்கிறது.



எந்த ஒரு பொதுவான கோட்பாட்டுக்கும் விதி விலக்குகள்
உண்டு. விதிவிலக்குகளில் இருந்து பொதுமையை நோக்கிச்
செல்ல முடியாது. பொதுமையில் இருந்து தான் முடிவுகளை,
விதிகளை உருவாக்க வேண்டும். நிற்க.
**
நான் தமிழன். நான் ஒரு தெலுங்குப் பெண்ணைத் திருமணம்
செய்து கொண்டுள்ளேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. இப்போது எங்கள்
பிள்ளைகளின் தாய்மொழியைத் தீர்மானிக்கும் பொறுப்பு
எங்களுக்கு வந்து விடுகிறது. நானும் என் மனைவியும்
கலந்து பேசி, எந்த மொழியில் எங்கள் குழந்தைக்கு முதலில்
பேசக் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்கிறோம்.
**
நாங்கள் எடுத்த முடிவின் படி, எங்கள் குழந்தைகளுக்கு
தமிழை முதலில் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்கிறோம்.
இப்போது எங்கள் குழந்தையின் தாய்மொழி தமிழ் ஆகி விடுகிறது.
ஆக, முடிவு செய்யும் உரிமை பெற்றோரின் தனியுரிமை ஆகும்.  



ஒரு குழந்தையை வளர்ப்பதில் பெற்றோருக்கு ஆட்சேபிக்க
முடியாத உரிமை (unobjectionable right) இருக்கிறது. வெவ்வேறு
மொழி பேசும் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளைப்
பொறுத்த மட்டில், அக்குழந்தைகளின் தாய்மொழி என்ன என்பதைத்
தீர்மானிக்கும் உரிமை அப்பெற்றோருக்கு மட்டுமே உண்டு. 
அதில் சமூகம் குறுக்கிட இயலாது. அவ்வாறு சமூகம்
குறுக்கிடுமேயானால், அது பாசிசக் கூறுகளை உடைய
சமூகமாகவே கருதப்படும்.

இந்தப் பதிவு முற்ற முழுக்க அறிவியல் அடிப்படையில்
எழுதப் பட்டுள்ளது. இது அரசியல் பதிவு அல்ல.


பண்டைய தமிழ்ச் சமூகம் அப்படித்தான் இருந்தது. அதாவது,
அண்ணன் ஒரு மதத்திலும் தம்பி வேறொரு மதத்திலும்
இருந்தது தமிழ்ச் சமூகத்தின் மெய்ம்மை. இது இன்று நினைத்துப்
பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
**
உங்களது hypothetical உதாரணத்தில், அந்தப் பெற்றோர், அப்படித்
தீர்மானித்தால் தீர்மானித்து விட்டுப் போகட்டும். அதில் சமூகம்
தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அத்தகைய
உதாரணங்கள் மிக மிக அபூர்வமான  விதிவிலக்குகள் அவை
அனுமதிக்கப் படும். அதே நேரத்தில் அது பொதுமையானதாக
ஆகி விடாது. . 


மொழி என்பது ஒலி சார்ந்தது. பேசும் அவசியத்தை மானுடம்
உணர்ந்த பின்னரே, மொழியை உருவாக்கியது. எனவே மொழி
என்பது ஒலிகளும் ஓசைகளும் அவை உணர்த்தும் பொருட்களும்
(meaning) என்பதானது. காலப் போக்கில் மொழிக்கு எழுத்துருவம்
ஏற்பட்டது. எழுத்தே இல்லாமல் மக்கள் மொழிகளைப் பேசி
வந்தார்கள் என்பது வரலாறு.
**
எனவே, தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, குழந்தையானது
தாயின் மொழியைப் புரிந்து கொள்கிறது என்பதன் பொருள்
என்னவென்றால், மொழியைப் புரிந்து கொள்ளும் மூளையமைப்பு
தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தோன்றி வளர்கிறது என்பதே.
**
குழந்தை பிறந்த பின், பல்வேறு ஓசைகளைக் கேட்கிறது.
தாயின் கொஞ்சல், முத்தம் போன்ற ஓசைகளையும் கேட்கிறது.
கர்ப்பத்தில் இருக்கும்போது கேட்பதை விட, அதிகமான
ஓசையை பிறந்த பின்னரே ஒரு குழந்தை கேட்கிறது.
வளர்ச்சியின் இயக்கப்போக்கில் (in the process of growth), தாய்
பேசும் ஓசைகளை அவற்றின் பொருளை உணர்ந்து கொள்கிறது.
**
இங்கு குழந்தையின் தாய்மொழி என்பது தாய் பேசும்
மொழியாகவும் இருக்கலாம் (அதாவது, தாயின் தாய்மொழி).
அல்லது தாய் கற்றுக் கொடுக்கும் மொழியாகவும் இருக்கலாம்.
எனவே, குழந்தைக்கு முதன் முதலில் தாய் எந்த மொழியைக்
கற்றுக் கொடுக்கிறாளோ, அதுவே குழந்தையின் தாய்மொழி ஆகும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக