வியாழன், 18 பிப்ரவரி, 2016

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது ஏன்?
-----------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM) அகில இந்திய மாநாடு 
நடந்து முடிந்தபோது. புதிய நிர்வாகிகள் 
தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். புதிய பொதுச் செயலாளராக  
சீத்தாராம் எச்சூரி தேர்ந்து எடுக்கப் பட்டார்.
சற்றேறக் குறைய 90 பேர் மத்தியக் கமிட்டி 
உறுப்பினர்களாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு 
இருக்கிறார்கள். மத்தியக் கமிட்டி என்பதுதான் 
மார்க்சிஸ்ட் கட்சியில் மிக உயர்ந்த அதிகாரம் உள்ள 
அமைப்பு. 
இந்த 90 பேரில் எவரேனும் தலித்துகள் இருக்கிறார்களா 
என்ற செய்தியாளரின் கேள்விக்கு இல்லை என்றுதான் 
பதிலளிக்க முடிந்தது பிரகாஷ் காரத் அவர்களால்.

மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் 
இன்று வரை, கட்சியின் அதிகார பீடமாகிய மத்தியக் 
கமிட்டியில் ஒரு தலித்துக்கு  கூட இடம் அளித்ததில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அகில இந்திய 
மாநாடு பாண்டிச்சேரியில் இனிதே நடந்து 
முடிவுற்றது. மாநாட்டில் திரு சுதாகர் ரெட்டி மீண்டும் 
பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

மார்க்சிசம் சாதிக்கு எதிரானது என்று மக்கள் நினைக்கிறார்கள். 
ஆனால் CPI கட்சி அப்படி நினைக்கவில்லை போலும்! 
கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தம் பெயரில் 
உள்ள "ரெட்டி" என்ற சாதிப்பெயரைத் துறக்கவில்லையே!

தமிழ்நாட்டில் எல்லோரும் சாதியைத் தங்கள் பெயரோடு  
சேர்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது அக்காலத்தில் 
இயல்பானதாக இருந்தது. 1925இல் சுயமரியாதை 
இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். செங்கல்பட்டு 
மாநாட்டில் தம் பெயரோடு ஒட்டிக் கொண்டு இருந்த 
நாயக்கர் பட்டத்தைத் துறந்தார்.

மறைந்த தோழர் சுந்தரையா மார்க்சிஸ்ட் கட்சியின் 
பொதுச் செயலாளராக இருந்தவர். தெலுங்கானா 
விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை வழி 
நடத்தியவர். இவரது ஒரிஜினல் பெயர் "சுந்தர ராம ரெட்டி".
ரெட்டி என்ற சாதிப் பட்டத்தைத் துறந்து, சுந்தரய்யா 
என்று பெயரை மாற்றிக் கொண்டவர்.

தந்தை பெரியார், சுந்தரய்யா போல, பெருவாரியான 
தலைவர்கள் தங்கள் பெயரோடு ஒட்டி இருந்த சாதியை 
நீக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்களில்
இன்னொரு உதாரணம் தோழர் ஏ.எஸ்.கே. தமது 
ஐயங்கார் பட்டத்தைத் துறந்தவர்.

CPI பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியார்  
தமது சாதிப் பட்டத்தைத் துறக்கவில்லையே!  ஏன்?
ஒருவேளை சாதி புரட்சிகரமானது  என்கிறாரோ 
ரெட்டியார்வாள்!

    
பிராமணன் சூத்திரன் என்று சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி,
பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி,
பெண்களை விலங்கு நிலைக்குத் தள்ளி, இந்திய சமூகத்தை 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி வரும் அரசியல் 
மனுதர்ம அரசியல். இந்த அரசியலுக்குத் தத்துவார்த்த 
நியாயத்தை வழங்குபவை நால் வகை வேதங்கள், ரிக் யஜுர் 
சாம அதர்வண வேதங்கள். 

இந்த வேதங்களைப் போற்றிப் புகழ்ந்து, நூல்கள் எழுதிய 
பெரும் அறிஞர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள்.
ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.  தத்துவஞானியான குருஜி கோல்வால்கர்.
இன்னொருவர் மார்க்சியத் தத்துவ அறிஞரான ஈ.எம்.எஸ். 
நம்பூதிரிபாட். இருவரும் மாபெரும் அறிஞர்கள் என்பதில் 
ஐயமில்லை. ஆனால் இந்த இரு அறிஞர்களும் கோடானு 
கோடி உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தும் மனுதர்மம் 
என்னும்  கொடிய அடக்குமுறைச் சமூக அமைப்பை உருவாக்கிய 
வேதங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர்கள்.


மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது  பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார். 

கோல்வால்கரே நாணும் அளவுக்கு வேதங்களைப் புகழ்ந்து 
தள்ளி இருப்பார் ஈ.எம்.எஸ். இதை அவர் 
மார்க்சிய முகாமில் இருந்து கொண்டு செய்வதால்,
புரட்சிகர இயக்கங்களுக்கு அதிகமான சேதாரத்தை 
விளைவிக்கிறார். 

இவ்வாறு அடிப்படை உழைக்கும் மக்களைப் புறக்கணித்த 
காரணத்தால், இடதுசாரிக் கட்சிகள் கழுதை தேய்ந்து 
கட்டெறும்பாகி விட்டன. 543 பேர் கொண்ட நாடாளுமன்ற 
மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒரே ஒரு 
இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியோ 
ஒற்றை இலக்கத்தில் 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

கேரளத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்ற இரண்டு 
எம்.பி.க்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டு 
9 மக்களவை உறுப்பினர்கள்என்று கணக்குக் காட்டி 
வருகிறது. ஆக இடதுசாரிகளுக்கு எங்கு பார்த்தாலும் 
இருட்டாகவே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக