சனி, 25 நவம்பர், 2017

(2) உபரி மதிப்புக் கோட்பாடு தோற்று விட்டதா?
மார்க்சியம் கூறும் பதில்! எளிமையான விளக்கம்!
----------------------------------------------------------------------------------
1) எங்கள் ஊரில் ஒரு தொழிற்சாலை வருகிறது.
அலுமினியப் பாத்திரங்கள் தயாரிக்கும் ஆலை
அது. ஆலைக்காக 50 ஏக்கர் நிலத்தை வாங்கிப்
போட்டுள்ளார் முதலாளி. ஆலைக்கான
கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டன.எந்திரங்களும்
கருவிகளும் வந்து இறங்கி விட்டன.

2) ஆலையில் வேலை செய்ய 100 பேர் தேவை. அந்த
நூறு பேரையும் முதலாளி தேர்ந்தெடுத்து விட்டார்.
ஒரு நல்ல நாளில் ஆலை இயங்கத் தொடங்கி விட்டது.

3) ஓராண்டு முடிவில் ஆலையில் உற்பத்தியான
அத்தனை கலன்களும் (vessels) சந்தையில் விற்றுத்
தீர்ந்து விட்டன. முதலாளிக்கு நல்ல லாபம் கிடைத்தது.
அந்த லாபத்தில் முதலாளி பக்கத்து ஊரில் இருந்த
ஒரு ஃபாக்டரியை விலைக்கு வாங்கி விட்டார். அதை
அவர் மகன் பார்த்துக் கொள்கிறான்.

4) முதலாளிக்கு எப்படி பணம் சேர்ந்தது? இன்னொரு
மில்லை வாங்கும் அளவுக்கு அவருக்கு எப்படி
செல்வம் சேர்ந்தது? அலுமினிய ஆலை காரணமாக
செல்வம் சேர்ந்தது என்றால், அந்தச் செல்வம் ஏன்
ஆலையில் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு
கிடைக்கவில்லை?

5) முதலாளி முதல் போட்டார். நிலம், கட்டிடம், எந்திரம்
கருவிகள் எல்லாம் வாங்கினார். எனவே லாபத்தை
அவர் எடுத்துக் கொண்டார். இதுதான் சொல்லப்
படுகிற பதில்.

6) காரல் மார்க்ஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நிலமும் கட்டிடமும் எந்திரங்களும் லாபத்தை
உருவாக்கவில்லை. லாபத்தை உருவாக்கியது
100 தொழிலாளர்களின் உழைப்பே என்றார் மார்க்ஸ்.  

7) நிலமும் எந்திரங்களும் நிச்சயமாக மூலதனம்தான்.
இதை "நிலையான மூலதனம்" (constant capital) என்றார்  
மார்க்ஸ். இது லாபத்தை உருவாக்கவில்லை. நிலையான
மூலதனத்தால் லாபத்தை உருவாக்க இயலாது
என்கிறார் மார்க்ஸ். அதை நிரூபித்தார்.

8) இந்த உதாரணத்தில் முதலாளிக்கு ரூ 10 லட்சம்
லாபம் கிடைத்ததாக வைத்துக் கொள்வோம்.
இதை லாபம் என்று புரிந்து கொள்ளாமல்
"உபரி மதிப்பு" (surplus value) என்று புரிந்து கொள்வோம்.

9) இந்த உபரி மதிப்பான ரூ 10 லட்சமும் 100
தொழிலாளர்களின் உழைப்பால் விளைந்தது.
எனவே அந்த ரூ 10 லட்சத்தையும், 100 தொழிலாளருக்குப்
பிரித்துக் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம்.

10) ஆனால், அந்த ரூ 10 லட்சத்தையும்  முதலாளியே
அபகரித்துக் கொள்கிறார். இதற்குப் பெயர்தான்
சுரண்டல் என்பது.

11) ஆக, உபரி மதிப்பை உருவாக்கியது யார்?
100 தொழிலாளர்கள். எப்படி உருவாக்கினார்கள்?
இந்த 100 தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியே
(labour power) உபரி மதிப்பை உருவாக்கியது என்றார்
மார்க்ஸ்.

12) இதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறை.
இந்த முறை இருக்கிற வரைக்கும் உபரி மதிப்பு
என்பது உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.
அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

13) சரி, நவீன தொழில்நுட்பம் தொழிற்சாலையில்
புகுத்தப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த 100 தொழிலாளர்கள் செய்யும் வேலையை
ஒரே ஒரு எந்திரம் (sophisticated machine) செய்து விடுகிறது
என்று வைத்துக் கொள்வோம்.

14) அப்போது என்ன நடக்கும்? 100 தொழிலாளிகளையும்
வேலையை விட்டு நீக்கி விடுவார் முதலாளி.
(தொழிற்சங்கம் போராடினால் ஏதேனும் நஷ்ட ஈடு
கொடுப்பார் முதலாளி. அவ்வளவுதான்)

15) "இப்போது உபரி மதிப்பு ஏற்படுவதில்லை; ஏனெனில்
உபரி மதிப்பு என்பதே தொழிலாளியால்,
தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியால்
ஏற்படுகின்ற ஒன்று. இங்கு தொழிலார்களே
இல்லாத நிலையில், அவர்கள் எப்படி உபரி மதிப்பை
உருவாக்க முடியும்?" என்கின்றனர் மார்க்சின்
விமர்சகர்கள்.

16) "தற்போது ஆலையில் கிடைத்திருப்பது லாபம் ஆகும்.
இது முதலாளிக்கு மட்டுமே சொந்தம். இதில்
தொழிலாளிக்கு எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லை;
ஏனெனில்  இதை தொழிலாளியின் உழைப்புச் சக்தி உருவாக்கவில்லை" என்கின்றனர் மார்க்சின் விமர்சகர்கள்.

17) ஆக, நவீன தொழில்நுட்பமானது மார்க்ஸ்
கண்டு பிடித்துக் கூறிய உபரி மதிப்பு என்னும்
கோட்பாட்டை வீழ்த்தி விட்டது என்கின்றனர்
மார்க்சின் விமர்சகர்கள்.

18) இதற்கு மார்க்சியத்தின் விடை என்ன?
அடுத்துக் காண்போம். (தொடரும்)
*******************************************************
இக்கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையைப்
படித்து விட்டீர்களா? படியுங்கள்.





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக