வியாழன், 9 நவம்பர், 2017

கமல ஹாசனும் மைக்கேல் ஃபாரடேயும்!
ஃபாரடே கூண்டால் எதை மூடினார் கமல்?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
===========================================
நம் காலத்தின் தலைசிறந்த சினிமாக் கலைஞர்
கமலஹாசன். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு
உயர்த்தியவர் அவர். கமல் உண்மையிலேயே
உலக நாயகன்தான்!

மைக்கேல் ஃபாரடே (1791-1867) இங்கிலாந்து நாட்டு
விஞ்ஞானி; மிகச் சிறந்த பரிசோதனை இயற்பியலாளர்
(experimental physicist). இன்றும் நம் அன்றாட வாழ்வில்
பயன்படும் மின்காந்த தூண்டல் (electromagnetic induction)
பற்றிக் கண்டறிந்தவர்.

கமலஹாசனுக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கும் என்ன
தொடர்பு? பார்ப்போம்.

தம் படங்களில் அறிவியல் செய்திகளைச் சொல்கிறவர்
தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகில் கமல் மட்டுமே.
எனவே அவர் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அக்கறைக்கு உரியவர் ஆகிறார். தசாவதாரம் படத்தில்
எபோலா வைரஸ் குறித்துப் பேசப்படும். இப்படம்
வெளிவந்த 2008ஆம் ஆண்டில் எபோலா வைரஸ்
குறித்து தமிழ்ச் சமூகம் அறிந்திருக்கவில்லை.
காலத்தை மீறிச்  சிந்திப்பவர் கமல் (thinking ahead of times).

அவரின் விஸ்வரூபம் படத்தின் இறுதிக் காட்சியில்
ஃபாரடே கேஜ் (Faraday cage) என்பது பற்றி தீவிரமாகப்
பேசப்படும். உடனடியாக ஒரு  ஃபாரடே கேஜ் வேண்டும்
என்பார் படத்தின் நாயகி பூஜா. படத்தில் இவரின்
பாத்திரம் ஒரு மருத்துவர்; அணுக்கதிர் வீச்சால் ஏற்படும்  புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்.
(Dr நிருபமா Nuclear oncologist),

5 நிமிடத்தில் ஃபாரடே கேஜ் வரும் என்பார் FBI .அதிகாரி.
அந்த  நொடியே வேண்டும் என்பார் பூஜா.

ஃபாரடே கேஜ் படத்தில் வர வேண்டிய அவசியம் என்ன?
நியூயார்க் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் ஒரு
கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பார்கள். அமெரிக்க
காவல்துறை (FBI)  வெடிகுண்டைக் கண்டுபிடித்துக்
கைப்பற்றி விடும். அதை அங்குள்ள ஒரு அறையில்
ஒரு மேஜையின் மீது வைத்து .இருப்பார்கள்.
அந்த வெடிகுண்டுடன் ஒரு செல் போன்
இணைக்கப்பட்டு .இருக்கும்.

யாரேனும் ஒருவர் அந்த செல்போன் நம்பரை அழைத்து,
அந்த அழைப்பின் மணியோசை இந்த செல்போனில்
கேட்டாலே போதும் வெடிகுண்டு வெடித்து விடும்.
வெடிகுண்டு அப்படி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

இந்தச் சூழலில்தான் ஃபாரடே கேஜ் தேவைப்
படுகிறது. ஃபாரடே கேஜ் என்ன செய்யும்? வெடிகுண்டு
வெடிக்காமல் தடுக்கும். எப்படி? ஃபாரடே கேஜால்
வெடிகுண்டை மூடிவிட வேண்டும். வெளியில் இருந்து
வரும் எந்த ஒரு மின்காந்தத் துடிப்பையும்
(Electro Magnetic Pulse), வெடிகுண்டை அண்ட விடாமல்,
ஃபாரடே கேஜ் தடுத்து விடும்; அதாவது வெடிகுண்டுடன்
உள்ள செல்போனுக்கு எந்த  சிக்னலும் வராமல்
தடுத்து விடும். இப்படி குண்டு வெடிக்காமல் தடுத்து
விட முடியும்.

அங்கிருந்த பலரில் ஒருவருக்குக் கூட இந்த ஆபத்து
பற்றித் தெரியாது, டாக்டர் நிரூபமாவைத் தவிர.
எனவே அவர் உடனடியாக (instantaneously required)
ஃபாரடே கேஜ் வேண்டுமென்று கேட்கிறார்.
அது வரும் வரை காத்திருக்க முடியாது என்பதால்,
டாக்டர் நிருபமா அந்த அறையில் உள்ள ஏதாவது
ஒன்று ஃபாரடே கேஜ் போன்று பயன்படுமா என்று
சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

என்ன ஆச்சரியம்! அவருக்கு ஒரு ஃபாரடே கேஜ்
கிடைத்து விடுகிறது. அங்கு ஒரு மைக்ரோவேவ்
ஓவன் (microwave oven), அதாவது நவீன அடுப்பு எரிந்து
கொண்டு இருந்தது. அந்த ஓவனின் வெளிப்புற
மூடுபகுதியை (outer case) எடுத்து வெடிகுண்டை
மூடி விடுவார் நிருபமா. மைக்ரோவேவ் ஓவன்
என்பது உண்மையில் ஒரு ஃபாரடே கேஜ் ஆகும்.
(Every micro wave oven is a Faraday cage),

சரி, ஃபாரடே கேஜ் (Faraday cage) என்றால் என்ன? இதை
ஃ பாரடே கூண்டு  என்று தமிழில் சொல்லலாம்.
இந்தக் கூண்டால் ஒரு பொருளை மூடிவிட்டால்,
கூண்டுக்கு வெளியில் இருந்து வரும் எந்தவொரு
மின்காந்தத் துடிப்பும் கூண்டுக்குள் இருக்கும்
பொருளை அணுக இயலாது. இதை மைக்கேல்
ஃபாரடே 1836இல் கண்டு பிடித்தார்.

அந்த வெடிகுண்டு சீசியம் (Caesium) என்னும் தனிமத்தால்
செய்யப்பட்டது. சீசியத்தின் ஒரு குறிப்பிட்ட
ஐசோடோப் கதிரியக்கத் தன்மை உள்ளது. இந்தக்
குண்டு வெடித்தால், அணுகுண்டு வெடித்தது
போன்ற சேதாரத்தை ஏற்படுத்தும்.

ஆக, இரண்டு அல்லது மூன்று நிமிடக் காட்சியில்
எவ்வளவு ஆழமான அறிவியல் செய்திகளை
வைத்து விட்டார் கமல்!

1. ஃபாரடே கேஜ் 2. மைக்ரோவேவ் ஓவன் 3.சீசியம்
4. நியூக்ளியர் ஆன்காலஜி என்று எல்லா
அறிவியலையும் ஒன்றாகத் திரட்டி சில நிமிடக்
காட்சியில் வைத்த கமலஹாசனின் மேதைமைக்கு
நியூட்டன் அறிவியல் மன்றம் தலை வணங்குகிறது.

என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்
படத்துக்கு அறிவியல் விளக்கம் எழுதுகிறேன். இது
ஒரு ஆச்சரியம்! ஒரு தமிழ் நடிகர் ஒரு தமிழ்ப்
படத்தில் அணுக்கரு அறிவியலைச் சொல்கிறார்!
இது அடுத்த ஆச்சரியம்!

இருந்தும் கமலுக்கு இப்படம் காரணமாக ஏன் இவ்வளவு
எதிர்ப்பு? இதுவும் ஆச்சரியம்தான் என்றாலும்
அதற்கான விடை இதோ!

When a true a genius appears in the world all the dunces are in confederacy
against him.----Jonathan Swift.
**************************************************************
  
    
.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக