வெள்ளி, 3 நவம்பர், 2017

தலைமயிரும் அடையாறு ஆலமரமும்!
தண்ணீரைக் கண்ணாடியாக மாற்றியவருக்கு
நோபல் பரிசு!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
கண்ணால் பார்க்க முடியாத மிகவும் நுண்ணிய
பொருட்களை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம்
பார்க்கலாம். 20 லட்சம் மடங்கு முதல் ஒரு கோடி
மடங்கு வரை பெரிதாக்கிக் காட்டும் ஆற்றல் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்புக்கு உண்டு.

நமது தலைமயிரை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில்
பார்த்தால், அடையாறு ஆலமரம் அளவுக்கு பெரிதாகத்
தெரியும். என்றாலும், சாம்பிள் பெரிதாகத் தெரிவதற்கு,
மைக்ராஸ்கோப்பில் டைஃபிராக்சன் (diffraction) என்னும்
இயற்பியல் நிகழ்வு போதிய அளவு நடைபெற வேண்டும்.
அப்போதுதான் சாம்பிளின் உள்ளே ஒளி புகுந்து, அதன்
எல்லாப் பாகங்களையும் நன்கு புலப்படுத்தும்.

ஒளியின் பாதையின் ஒரு தடை குறுக்கிட்டால்,
அத்தடையின் ஓரங்களில் ஒளி வளைந்து செல்வதே
விளிம்பு விளைவு என்னும் டைஃபிராக்சன்.

நல்ல படிகத்தன்மை ( crystalline) உடைய சாம்பிளை
எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில் வைத்துப்
பார்த்தால், அதில் போதிய அளவு  டைஃபிராக்சன்
ஏற்படுவதில்லை. உதாரணமாக, தண்ணீர்
பனிக்கட்டியாக மாறிய பிறகு, அது  கறாரான
படிக அமைப்பைப் பெற்று விடுகிறது. இது எலக்ட்ரான்
கதிர்களை (electron beams) சீர்குலைத்து விடுகிறது.
இதனால்  டைஃபிராக்சன் போதிய அளவு
நடைபெறுவதில்லை.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க, தண்ணீரை
பனிக்கட்டியாக (ice) மாற்றுவதற்குப் பதில்,
அதை கண்ணாடியாக (glass) மாற்ற விஞ்ஞானி
ஜாகுவாஸ் டுபோசெட் (Jacques Dubochet) முடிவு
செய்தார்.

கண்ணாடி திடத்தன்மை (solid) கொண்டிருக்கும்.
என்றாலும் அது படிகம் அல்ல.  உண்மையில் அது
ஒரு பாய்மமே. (பாய்மம்= fluid). மூலக்கூறுகள்
ஒழுங்கற்ற வடிவில் இருப்பதால் அது படிகத்
தன்மை அடைவதில்லை. தண்ணீர் படிகமாக
மாறாமல், கண்ணாடியாக மாற வேண்டுமெனில்
அதை வேகமாகக் குளிர்விக்க வேண்டும்
(rapid cooling). இந்த முறைக்கு vitrification என்று பெயர்.

vitrification முறையின் மூலம் தண்ணீர்
பனிக்கட்டியாக மாறாமல் தடுத்து, அதைக்
கண்ணாடியாக மாற்றி, அந்த சாம்பிளை
எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில் வைத்துப்
பார்த்தபோது, அது ஒரு சீராக டைஃபிராக்சன்
அடைந்தது. இதன் மூலம் உயிரி  மூலக்கூறுகளை
எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில் வைத்து
தேவையான அளவில் at atomic level, அதாவது 10^minus 10
அளவுக்கு பார்க்க முடிந்தது.          

புரதம், கார்போ ஹைட்ரேட் போன்றவை
உயிரி மூலக்கூறுகள் (bio molecules).

தண்ணீர் இயல்பாகக் குளிர்ந்தால்
(normal cooling or slow cooling) அது ஐஸ்கட்டியாகி விடும்.
தண்ணீர் வேகமாகக் குளிர்விக்கப் பட்டால்
(rapid cooling) அது கண்ணாடி ஆகும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துடன் கூடிய
எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பை கண்டுபிடித்து
உயிரி வேதியியலில் (biochemistry) புரட்சி ஏற்படுத்திய
மூன்று வேதியியல் அறிஞர்களுக்கு இவ்வாண்டு
(2017) நோபல்  கிடைத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------
வேதியியல் நோபல் பரிசு குறித்து நியூட்டன்
அறிவியல் மன்றம் ஆற்றிய உரையில் இருந்து.
(இடம்: பெரியார் திடல், நாள்: 02.11.2017)
*********************************************************
அறிவியல் ஒளி (மாதாந்திர அறிவியல் இதழ்)
-----------------------------------------------------------------------------
ஆண்டுச் சந்தா  (ரூ 180) அல்லது ஆயுள் சந்தா
(ரூ 2500) செலுத்தவும். கன்னிமாரா உள்ளிட்ட சில
நூலகங்களில் படிக்கலாம். கடைகளில் கிடைக்காது.
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in mobile 94440 63497.
ஆசிரியர் திரு நா சு சிதம்பரம் அவர்கள்.
---------------------------------------------------------------------------------
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக