செவ்வாய், 14 நவம்பர், 2017

நடிகை நயன்தாராவின் ரகசியங்கள் அம்பலம்!
நயன்தாரா உடல் பருப்பாரா மெலிவாரா?
கூட்டம் கண்டு கையசைக்க நயனுக்கு அனுமதி மறுப்பு! 
நியூட்டனும்  ஐன்ஸ்டினும் நயன்தாராவும்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
மே மாதத்தின் அன்றையப் பொழுது பிரகாசமாக
விடிந்தது.சத்திஷ் தவான் விண்வெளி மையத்தின்
ஒவ்வொரு துகளிலும் தொற்றிக் கொண்டிருந்த
பரபரப்பு infinityஐ நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

கவுன்ட் டவுன் ஏற்கனவே தொடங்கி இருந்தது.
விண்கலம் விண்ணில் செலுத்தப் படுவதற்கு இன்னும்
சில மணி நேரங்களே எஞ்சி இருந்தன.

உலகம் முழுவதிலும் இருந்து செய்தியாளர்களும்
புகைப்படக் காரர்களும் அங்கு குழுமி இருந்தனர்.
நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் தலைமைச் செய்தி ஆசிரியர்
மார்ட்டினைச் சுற்றிப் பலர் நின்று கொண்டிருந்தார்கள்.
இந்திய, தமிழ் செய்தித் தலைகளும் ஆங்காங்கே
தென்பட்டன.

பர்கா தத், சகரிகா கோஷ், அர்னாப் கோஸ்வாமி போன்ற
ஆங்கில சானல்காரர்கள் செய்தியாளர் அறையின்
நடுவில் ஆர்ப்பாட்டமாக நின்று கொண்டிருக்க,
அவர்களை அண்டும் முயற்சியில் மும்முரமாக
இருந்தார் தந்தி டி.வி. ரங்கராஜ் பாண்டே.

யூ ஆர் ஃபிரம் என்ற கேள்விக்கு டமில் சானல் நியூஸ் 18
என்றவுடனே முகத்தைத் திருப்பிக் கொண்ட
சகரிகா கோஷ், பாண்டேவை எப்படி அவமானப்
படுத்தப் போகிறார் என்று பார்க்கும் ஆவலுடன்
தன் கண்களை அங்கு திருப்பி பார்வையைக்
கூர் தீட்டினார் ஜென்ராம்.

விஷயம் வரலாற்று முக்கியத்துவம் உடையது
என்பதால், ஒவ்வொரு சானலும் தங்களின் தலைமைச் 
செய்தியாளர்களை அனுப்பி இருந்தது. திடீரென்று
ஒரே பரபரப்பு. மயில்சாமி அண்ணாதுரையும்
கிரண்குமாரும் படியிறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.
மயில்சாமிதான் இதற்கும் ப்ராஜெக்ட் டைரக்டர்.
கிரண்குமார் இஸ்ரோ சேர்மன்.

இப்படி மொத்த உலகத்தையும் பரபரப்பில்
ஆழ்த்தி விட்ட அந்த நிகழ்வுதான் என்ன?
சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று
என்னதான் நடக்கப் போகிறது?

இதுவரை ஆளில்லா விண்கலன்களை மட்டுமே
விண்ணில் செலுத்திய இந்தியா முதன் முறையாக
ஆள் உள்ள விண்கலனைச் செலுத்தப் போகிறது.
கோடிக்கணக்கான வாலிப வயோதிக அன்பர்களின்
கனவுக்கன்னியான நடிகை நயன்தாரா விண்கலத்தில்
ஏறி விண்வெளியில் பறக்க இருக்கிறார்.

விண்கலத்தில் ஏறும் முன், அவரைப் பார்க்கத்
திரண்டிருக்கும் லட்சோப லட்சம் ரசிகர்களைப்
பார்த்துக் கையசைக்கிறார். இந்த அறிய நிகழ்வில்
பங்கேற்கவே  வளாகத்துக்கு வெளியே ரசிகர்களின்
கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

அகில உலக நயன்தாரா ரசிகர் மன்றத் தலைவர்
ஸ்டான்லி ராஜன், உடல் மண்ணுக்கு உயிர் நயனுக்கு
என்று தொண்டைப் புற்று வரும் அளவுக்கு கத்திக்
கொண்டிருக்கிறார்.

நிற்க. இப்படிப் போகிறது கதை! சயன்ஸ் ஃபிக்சன்
எழுதச் சொல்லி சில நண்பர்கள் வற்புறுத்த,
நான் மறுக்க, அவர்கள் மீண்டும் வற்புறுத்த,
போனால் போகிறது என்று நான் எழுத முயற்சி
செய்ததின் அடையாளம்தான் இது. ஒரு
சயன்ஸ் ஃபிக்சன் எழுதத் தேவையான
அக்கறையில் ஒரு பிக்கோ அளவுக்கான
(pico = 10^minus 12) அக்கறையுடன் எழுதப்பட்டது இது.

சரி, விஷயத்துக்கு வருவோம். 48 kg நிறையுள்ள (mass)
நயன்தாரா விண்கலத்தில் செள்கிறார். அப்போது
அவரின் வேகம் ஒளியின் வேகத்தில் முக்கால் பங்கு.
ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. இதில்
முக்கால் பங்கு என்றால், அந்த வேகம் நொடிக்கு
2,25,000 கி.மீ.  

இப்போது கேள்வி என்ன? ஒரு நொடிக்கு 2,25,000 கி.மீ
வேகத்தில் நயன்தாரா செல்லும்போது, அவரின்
நிறை என்னவாக இருக்கும்? நிறை கூடுமா?
குறையுமா? கூடும் அல்லது குறையும் என்றால்
பயணத்தின்போது அவரின் நிறை என்ன?

இந்த விஷயத்தில் நியூட்டனும் ஐன்ஸ்டினும்
முரண்படுகிறார்கள். ஒரு பொருளின் நிறை
என்பது நிலையானது; மாறாதது என்றார் நியூட்டன்.

ஐன்ஸ்டின் இதை மறுத்தார். அவரின் சிறப்புச்
சார்பியல் கோட்பாடு என்னும் ஸ்பெஷல்
ரிலேட்டிவிட்டி தியரியில் நிறை என்பது
மாறக்  கூடியது என்றார். பொருளின் நிறையானது
வேகத்தைப் பொறுத்து மாறும் என்றும், வேகம்
அதிகரிக்க அதிகரிக்க நிறையும் அதிகரிக்கும்
என்றும் ஐன்ஸ்டின் கூறினார்.

பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க
நெருங்க, அதன் நிறையும் வரம்பிலியை (infinity)
நெருங்கும் என்றும் ஐன்ஸ்டின் கூறினார்.

இவ்வாறு அதிகரிக்கும் வேகத்துக்கு ஏற்ப,
நிறை எவ்வளவு அதிகரிக்கும் என்பதைக் கணக்கிட
ஒரு ஃபார்முலாவையும் கூறினார் ஐன்ஸ்டின்.
அதுதான் பிரசித்தி பெற்ற ஒன் மைனஸ் வி ஸ்கொயர்
பை சி ஸ்கொயர் ஃபார்முலா. அதைப் படத்தில்
பார்க்கலாம்.

நியூட்டனின் கொள்கையை அறிவியல் உலகம்
ஏற்கவில்லை. ரிலேட்டிவிட்டி தியரிப்படி நிறையானது 
வேகத்தைப் பொறுத்து அதிகரிக்கும் என்பதையே
அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது
பல்வேறு பரிசோதனைகளில் நிரூபிக்கப் பட்டும்
உள்ளது.                       
 
இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம்.
48 kg நிறையுள்ள நயன்தாரா, நொடிக்கு 2,25,000 கி.மீ
வேகத்தில் செல்லும்போது அவரின் எடை என்ன?
இதற்கு வாசகர்கள் விடை கூற வேண்டும்.
நியூட்டன் அறிவியல் மன்றம் இந்தக் கணக்கிற்கு
விடை கூறாது. சொல்ல வேண்டியது அனைத்தையும்
தெளிவாகச் சொல்லியாயிற்று. உரிய
ஃபார்முலாவையும் கொடுத்தாயிற்று. எனவே
கணக்குப் போட்டுப் பார்த்து விடை சொல்லுங்கள்.
*************************************************************  

        

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக