சனி, 4 நவம்பர், 2017

பெயரில் என்ன இருக்கிறது?
இதுதான் தத்துவப் போராட்டம்!
==================================
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு
நூற்றாண்டை நெருங்கி கொண்டு இருக்கிறது.
முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்
பட்டபோது அதற்கு என்ன பெயர் வைப்பது
என்பதில் நீண்ட விவாதம் ஏற்பட்டது.

1) Indian Communist Party 
2) Communist Party of India
என்ற இரண்டு பெயரில் எதை வைப்பது என்பதில்தான்
நெடிய விவாதமே!

இரண்டும் ஒன்றுதானே என்று பலரும் கருதலாம்.
ஆனால், ஆங்கிலத்தில் அமைந்த இந்த இரண்டு
பெயர்களிலும் தீவிரமான வித்தியாசம் உள்ளது.
இரண்டையும் பின்வருமாறு தமிழில் மொழி
பெயர்க்கலாம்.
Indian Communist Party = இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
Communist Party of India = இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில்,
இந்தியாவுக்கென்று தனித்துவமான கட்சி என்ற
பொருள் தொனிக்கிறது. அதாவது இந்தியாவின்
குறிப்பான தன்மை முதன்மை பெறுகிறது; கம்யூனிசத்
தத்துவத்தின் பொதுத்தன்மையை விட, இந்திய
நாட்டின் குறிப்பான தன்மை முக்கியத்துவம்
பெறுகிறது.

இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில்
வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவின்
கம்யூனிஸ்ட் கட்சி என்பவை போல, கம்யூனிசத்தின்
சர்வதேசத் தன்மை முதன்மை பெறுகிறது.
அதாவது கம்யூனிசத்தின் பொதுத்தன்மை
முதன்மை பெறுகிறது; இந்திய நாட்டின்
தனித்தன்மையை விட, தத்துவத்தின் பொதுத்தன்மை
முக்கியத்துவம் பெறுகிறது.

கம்யூனிசம் என்பது உலகளாவிய தத்துவம்
என்பதாலும், பாட்டாளி வர்க்க சர்வதேசியம்
என்பது உலகளாவிய பாட்டாளி வர்க்கத்தின்
பண்பு என்பதாலும் "இந்தியாவின் கம்யூனிஸ்ட்
கட்சி" (Communist Party of India) என்ற பெயரையே 
அன்றைய தலைவர்கள் தேர்ந்தெடுத்துச் சூட்டினர்.

இதன் மூலம் தத்துவத்துக்கு முதலிடமும், அதைச்
செயல்படுத்தும் நிலமான நாட்டுக்கு அடுத்த
இடமும் என்று தலைவர்கள் தீர்மானித்தனர்.
.   
தத்துவமே தலைமை என்னும் சரியான
நிலைபாட்டில் இருந்து விலகி, தத்துவத்திற்கு
இரண்டாம் இடத்தையே தருகின்ற "இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி" என்ற பெயர் புறக்கணிக்கப்
பட்டது.   

கம்யூனிச தத்துவமே தலையாயது; அதை அந்தந்த
நாட்டின் குறிப்பான  நிலைமைகளுக்கு  ஏற்ப
பிரயோகிக்க வேண்டுமே தவிர, குறிப்பான
நிலைமைகளே தத்துவத்தைத் தீர்மானிக்கும்
என்று கூறுவது தலைகீழாக நின்று கொண்டு
காலால் நடப்பதற்குப் பதிலாக, தலையால்
நடப்பதற்குச் சமம்.

இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு
மார்க்சியம் பொருந்தாது; இங்கு பெரியாரியமே
பொருந்தும்; அல்லது அம்பேத்காரியமே ஏற்கப்
படும்; அல்லது பின்நவீனத்துவமே செல்லுபடியாகும்
என்று கூறுவதெல்லாம் மார்க்சியத்துக்கு
எதிரானது; மார்க்சியமற்றது (anti marxist and unmarxist).

தத்துவப் போராட்டம் என்பதற்கு நல்ல உதாரணம்
மேற்கூறிய பெயர் சூட்டல் ஆகும்.  இதிலிருந்து
உரிய படிப்பினையை மார்க்சியர்கள் கற்க
வேண்டும்.
*********************************************************    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக