மொழியும் குட்டி முதலாளித்துவத்தின்
பிசாசுத்தனமான அறியாமையும்!
அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை
தமிழில் ஏன் இன்று சாத்தியமாகவில்லை?
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஜேம்ஸ் வாட் நீராவி எந்திரத்தைக் கண்டு பிடித்தது
எப்போது? 1786ல். அறிவியல் வரலாற்றில் இந்த
ஆண்டை யாராலும் மறக்க இயலாது.
தொழிற்புரட்சி எப்போது தோன்றியது? எப்போது
நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப் பட்டதோ
அப்போது தொழிற்புரட்சி தோன்றி விட்டது.
அதாவது 1786ல் முதலாம் தொழிற்புரட்சி
தோன்றி விட்டது.
இன்று இந்த 2022ல் நான்காம் தொழிற்புரட்சி
(Industrial revolution 4.0) நடந்து கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பப் புரட்சி (technological revolution),
இணையப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு
என்று அசுரத் தனமாக குதிரைப் பாய்ச்சலில்
முன்னேறிக் கொண்டிருக்கிறது தொழிற்புரட்சி.
1786க்கும் 2022க்கும் இடையில் 236 ஆண்டுகள்
உருண்டோடி விட்டன. நிலவுடைமைச் சமூக
அமைப்பு மாறி, முதலாளியாகி சமூக அமைப்பு
தோன்றி, முதலாளியத்தின் உச்சகட்டமான
ஏகாதிபத்தியத்தையும் உலகம் கண்டு விட்டது.
ஆக இந்த 236 ஆண்டுகளின் வளர்ச்சி ராட்சஸத்
தனமானது.
இப்போது ஒரு கேள்வி! இந்த 236 ஆண்டுகளில்
பொருள் உற்பத்தியானது பிரம்மாண்டமாக
மாறி இருக்கிறதே, அந்த அளவுக்கு மொழியானது
மாறி இருக்கிறதா? குறிப்பாகப் பேசுவோம். இங்கு
இந்தியாவில் பேசப்படும் மொழிகளை எடுத்துக்
கொள்வோம்.
தமிழ், இந்தி, தெலுங்கு, வங்கம், அசாமி, சமஸ்கிருதம்
என்று உள்ள மொழிகள், அதாவது இந்தியாவின்
அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்
உள்ள 22 மொழிகளையும் எடுத்துக் கொள்ளுவோம்.
இந்த மொழிகள் இந்த 236 ஆண்டுகளில், உற்பத்தி
வளர்ந்த அளவுக்கு, அதற்கு இணையாக
வளர்ந்திருக்கின்றனவா? இல்லை என்பது பள்ளிச்
சிறுவனுக்குக் கூடத் தெரியும்!
நன்கு புரிந்து கொல்வதற்காக, இந்த 236 ஆண்டுகளின்
வளர்ச்சியை quantify செய்வோம். இக்காலப் பகுப்பில்
உற்பத்தியின் வளர்ச்சி 100 அலகுகள் என்று வைத்துக்
கொள்வோம். அப்படியானால் மொழியின் வளர்ச்சி,
உதாரணமாக தமிழின் வளர்ச்சி எத்தனை அலகு
இருக்கும்? 2 அலகு இருக்கும்.ஆம், இரண்டே இரண்டு
அலகுதான் இருக்கும். ஏனெனில் 1786ல் நிலவிய
நிலவுடைமைச் சமூக அமைப்பைத் தாண்டி
தமிழ் வளரவில்லை. முதலாளியச் சமூகத்திற்கு
ஏற்ப தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை.
தமிழ் மட்டுமல்ல; தெலுங்கு, சம்ஸ்கிருதம், இந்தி,
அசாமி, வங்கம் என்று எந்த ஒரு இந்திய மொழியும்
இந்த 236 ஆண்டுகளில் உற்பத்திக்கு இணையாக
வளரவில்லை. இதுதான் உண்மை!
சரி, ஏன் இந்த நிலை?
1786ல் ஜேம்ஸ்வாட் நீராவி எந்திரத்தைக்
கண்டுபிடிக்கிறார். அதற்கு 29 ஆண்டுகளுக்கு
முன்பே இந்தியா பிரிட்டிஷ்காரனிடம் அடிமைப்
பட்டு விட்டது. 1757ல் பிளாசிப்போர் நடைபெற்றது.
ராபர்ட் கிளைவுக்கும் வங்காள நவாப் சிராஜ்
உத்தௌலாவுக்கும் பிளாசியில் நடந்த போரில்
ராபர் கிளைவ் வெற்றி பெற்றார். அப்போர்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலியது.
தொடர்ந்து 1764ல் பக்சார் போர், அடுத்து 1765ல்
அலகாபாத் உடன்படிக்கை என்று பிரிட்டிஷ் ஆடசி
இந்தியாவில் ஸ்திரப்பட்டு விட்டது.
தொழிற்புரட்சியும் அதை அடுத்த முதலாளிய
உற்பத்தி முறையும் இயல்பாக இந்தியாவில்
ஏற்படுவதற்கு முன்னரே, இந்தியா காலனி
ஆதிக்கத்துக்கு உட்பட்டு விட்டது. பிரிட்டிஷாரின்
காலனியாக இந்தியா ஆனது. எனவே மொழி
வளர்ச்சி இங்கு இல்லை. இந்திய மொழிகள்
யாவும் நிலவுடைமைச் சமூக அமைப்பின்
வரம்புகளைத் தாண்டாமல், தாண்ட இயலாமல்
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் நமது மொழிகளை
முடக்கி விட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் முடக்கப்பட்ட இந்திய
மொழிகள் யாவும் உற்பத்தி மொழிகளாக மாறவில்லை;
மாற இயலவில்லை. மாறாக உற்பத்தியில் இருந்து
துண்டிக்கப்பட்ட மொழிகளாகவே இருந்து வந்தன.
இன்றும் அப்படித்தான் உள்ளன.
பிரிட்டிஷாரின் மொழியான ஆங்கிலமே இந்தியாவின்
உற்பத்தி மொழியாக ஆனது; ஆக்கப் பட்டது.
இன்று இந்த 2022இலும் ஆங்கிலமே இந்தியாவின்
பொருள் உற்பத்தியாக நீடிக்கிறது.
இந்திய மொழிகள் அனைத்தும் உற்பத்தி மொழிகளாக
இல்லை. உற்பத்தியில் இல்லாத மொழிகளில்
அறிவியலைச் சொல்ல இயலாது. அம்மொழிகள்
உயர்கல்வியில், தொழில்நுட்பக் கல்வியில்
பயிற்று மொழியாக இருக்க இயலாது.
இதுதானே உண்மை! இந்த உண்மையைக் கண்ணாரக்
கண்டு வருகிறோம், அல்லவா! BE, BTech படிப்புகள்
தமிழில் இருக்கின்றவா? மலையாளத்தில்
இருக்கின்றனவா? வங்க மொழியில், அசாமியில்
இருக்கின்றனவா? இல்லை! IITயில், AIIMSல்
பொறியியல் மருத்துவப் படிப்புகள் கன்னடத்தில்
அல்லது மராத்தியில் சொல்லித் தரப் படுகிறதா?
இல்லை!
மருத்துவரிடம் செல்கிறீர்கள். மருந்துச் சீட்டில்
மருந்துகளின் பெயரை தமிழில் எழுதித்
தருகிறாரா அல்லது ஆங்கிலத்தில் எழுதித்
தருகிறாரா?
எந்த மொழி உற்பத்தி மொழியாக இருக்கிறதோ,
அந்த மொழிதான் பயிற்று மொழியாக இருக்கும்.
அந்த மொழியில்தான் அறிவியல் சொல்லப்படும்.
உற்பத்தியில் உள்ள மொழியாக ஆங்கிலம்
இருக்கிறது. எனவே பயிற்று மொழியாக
அறிவியல் மொழியாக ஆங்கிலமே இருக்கிறது.
தமிழோ இந்தியா கன்னடமோ கல்லூரிகளில்
பயிற்றுமொழியாக இல்லை. இவை அதிக பட்சமாக
பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக
இருக்கின்றன. அவ்வளவுதான்.
உற்பத்தியில் இல்லாத மொழி பின்தங்கி நிற்கும்.
எனவே இந்தியாவின் 22 மொழிகளும் (அரசமைப்புச்
சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளவை)
பின்தங்கியே நிற்கின்றன.
உலக அளவில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி,
சீனம், ஜப்பான் ஆகிய மொழிகள் உற்பத்தி
மொழிகளாக இருக்கின்றன. இந்திய மொழிகள்
எவையும் உற்பத்தி மொழிகளாக இல்லை.
எனவேதான் தமிழ் உட்பட பல மொழிகள் இன்னும்
100, 200 ஆண்டுகளுக்கும் அழிந்து விடும் என்று
ஐநா சபையின் அறிக்கை சொல்கிறது. இந்த
அறிக்கையைப் படித்த குமரி அனந்தன் அவர்களும்
கவிஞர் வைரமுத்து அவர்களும் கூடவே நானும்
கண்ணீர் சிந்தி முடித்து விட்டோம். இனி தமிழ்
என்பது பொண்டாட்டியைக் கொஞ்சுவதற்கு
மட்டுமே பயன்படும் என்று துக்கம் தொண்டையை
அடைக்க வைரமுத்து சொல்லி விட்டார்.
இதுதான் இந்திய மொழிகளின் நிலை. இதில்
சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு
என்பதற்கெல்லாம் பொருள் இல்லை. தமிழோ
சமஸ்கிருதமோ இந்தியாவின் உற்பத்தி மொழியாக
இல்லை.
உற்பத்தி மொழி என்ற கருத்தாக்கத்தை மொத்த
இந்தியாவிலும் நான் மட்டுமே சொன்னேன்.
நான் ஒருவன் மட்டுமே சொல்லி இருக்கிறேன்.
இன்று நேற்றல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே
சொல்லி வருகிறேன். ஆரம்பத்தில் உற்பத்தி மொழி
என்ற கருத்தாக்கத்தையே ஏற்காதவர்கள் இன்று
ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.
மொழி பற்றி யார் பேசினாலும், உற்பத்தி மொழி என்ற
கருத்தாக்கம் பற்றிப் பேசாமல் மொழி பற்றிப் பேசுவதில்
பொருள் இல்லை. உற்பத்தி மொழி என்கிற
கருத்தாக்கம் என்னுடைய பதிப்புரிமைக்கு
உட்பட்டது (INTELECTUAL PROPERTY RIGHT) என்பதை
வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்.
மொழி பற்றிய மார்க்சிய மூல ஆசான் ஜோசப் ஸ்டாலின்
கூறிய கருத்துக்களை மார்க்சியர்கள் நன்கு
கற்றுப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரிச்சுவடி வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை
தமிழில் வேண்டும் என்று வறட்டுத் தனமாகவும்
முட்டாள்தனமாகவும் கூச்சல் போடுவதில்
பயனில்லை. எவ்வளவு காலம்தான் முட்டாள்களாக
இருப்பீர்கள் குட்டி முதலாளிய ஆசாமிகளே?
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்க நான் இடையறாது
பணியாற்றி வருகிறேன். இதுவரை குவாண்டம் தியரி
முதல் உயர் இயற்பியலை தமிழில் எழுதி வருகிறேன்.
அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகம்
ஆகிய மூன்றிலும் தமிழில் உயர் அறிவியலைச் சொல்லி
வருகிறேன்.
கணிதம் கற்றுக் கொடுத்து வருகிறேன்.
நூற்றுக் கணக்கில் வெண்பா இயற்றி உள்ளேன்.
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை
அல்லது மகாத்மா காந்தியின் சத்திய
சோதனையை முழுவதும் வெண்பாக்களால்
என்னால் சொல்ல இயலும். காவடிச் சிந்து
முதலான தமிழ் இசையை ஊக்குவித்து
வருகிறேன்.
சதுரங்கத்தை தமிழில் சொன்னவன் எழுதியவன்
நான் ஒருவன் மட்டுமே.
என்னுடைய முயற்சிகளை ஆதரிக்காதவர்கள்
தமிழின் துரோகிகள்!
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக