ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
வேண்டாம் என்று சொல்பவன் லும்பன்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
ஆங்கிலம் வேண்டாம், வேண்டவே வேண்டாம் 
என்கிறான் ஒரு ஜெர்மானியன். அவன் சொல்வது
சரியே. அவனின் தாய்மொழியான ஜெர்மானிய 
மொழி  பொருளுற்பத்தின் மொழியாக இருக்கிறது.

ஆங்கிலம் வேண்டாம் என்கிறான் ரஷ்யாக்காரன்.
அவன் சொல்வது சரி. ரஷ்யனுக்கு ஆங்கிலம் 
தேவையில்லை. அவனுடைய ரஷ்ய மொழி 
பொருளுற்பத்தியின் மொழியாக இருக்கிறது.

ஆனால் ஒரு தமிழன் ஆங்கிலம் வேண்டாம் என்று 
சொல்ல முடியுமா? ஒரு வங்காளி ஆங்கிலம் 
வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

முடியாது. சொன்னால் அவன் முட்டாள் என்று 
அர்த்தம். ஆங்கிலம் வேண்டாம் என்று எந்த 
ஒரு இந்தியனும் சொல்ல முடியாது. ஏனெனில் 
இந்தியாவின் பொருளுற்பத்தி மொழியாக 
ஆங்கிலம்தான் இருக்கிறது.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 
இந்தியாவில், 28 மாநிலங்களும் 9 யூனியன் 
பிரதேசங்களும் கொண்ட இந்தியாவில்,
எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 
22 மொழிகளையும் இடம் பெறாத நூற்றுக் கணக்கான 
மொழிகளையும் கொண்ட இந்தியாவில்,
ஆங்கிலம்தான் உற்பத்தி மொழியாக இருக்கிறது.

உற்பத்தி மொழியைப் புறக்கணிக்க முடியாது.
உற்பத்தி மொழியைப் புறக்கணித்து விட்டு 
உற்பத்தி பற்றிய அறிவை எப்படிப் பெற முடியும்?

உற்பத்தி மொழியைப் புறக்கணிக்கிறவன் 
உற்பத்தியையே புறக்கணிக்கும் லும்பன். 
எவன் ஒருவன் உற்பத்தியில் ஈடுபடுகிறானோ 
அவனே மார்க்ஸ் கூறிய ஆலைப் பாட்டாளி. 
பொருளுற்பத்தியில் ஈடுபடாமல் அதிலிருந்து 
துண்டித்துக் கொண்டு நிற்பவன் லும்பன் ஆவான். 

லும்பன் என்பவன் பொறுக்கிப்பயல். அவன் மானுட 
சமுதாயத்தின் புல்லுருவி என்கிறது மார்க்சியம்.

மார்க்சியம் சமூக மாற்றத்துக்காக நிற்கிறது.
சமூக மாற்றம் என்றால் என்ன? உற்பத்தி உறவுகளை 
மாற்றி அமைப்பது. உற்பத்தியைப் பற்றிய 
அறிவு இல்லாத ஒருவன் எங்ஙனம் உற்பத்தி 
உறவுகளை மாற்றி அமைக்க முடியும்? 
      
எனவே இந்தியாவின் உற்பத்தி மொழியான 
ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது வடிகட்டிய 
முட்டாள்தனம் ஆகும்.

ஆங்கிலம் வேண்டாம் என்று எப்போது சொல்லலாம்?
ஏதாவது ஒரு இந்திய மொழியை உற்பத்தி 
மொழியாக ஆக்கி விட்டோம் என்றால்,
அன்று ஆங்கிலத்தைக் குப்பைத் தொட்டியில் 
எறிய முடியும். அதுவரை ஆங்கிலத்தைப் 
புறக்கணிக்க இயலாது.
----------------------------------------------------------
பின்குறிப்பு;
உற்பத்தி மொழி என்கிற கருத்தக்காதை 
பல ஆண்டுகளுக்கு முன்பே, எவரும் சொல்லாத 
நிலையில் முதன் முதலில் சொன்னவன் நான்.
எனவே குட்டி முதலாளித்துவம் அறிவுத் திருட்டில்
ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உற்பத்தி மொழி என்னும் கருத்தாக்கம் முற்ற முழுக்க
என்னுடையது. 
****************************************************     

  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக