வியாழன், 28 ஏப்ரல், 2022

1952 முதல் 2019 தேர்தல் வரையிலான வரலாறு!
2024 தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற 
கட்டுரையின் முன்னுரை (3)
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
1951 இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் பற்றி
நாம் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.
முதல் பொதுத்தேர்தல் 1952 அல்லவா என்று
உங்களில் சிலர் நினைக்கலாம்!

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் ஐந்து மாத 
காலம் நடைபெற்றது. 1951 அக்டோபரில் தொடங்கி 
1962 பிப்ரவரியில் முடிவுற்றது. அப்போது இன்றுள்ளது 
போல, நாடாளுமன்ற மக்களவையில் 543 இடங்கள் 
கிடையாது; அதை விடக் குறைவு. 489 இடங்கள்தான்.

முதல் பொதுத்தேர்தலில், தேர்தல் நடைபெற்ற 
489 இடங்களில் காங்கிரஸ்  364ல் வெற்றி பெற்றது. 
இது ஏறத்தாழ 4ல் 3 பங்கு வெற்றியாகும். காங்கிரஸ் 
பெற்ற வாக்குகள் 4.76 கோடி (நாலே முக்கால் கோடி).

சதவீத அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் 45 சதவீத 
வாக்குகளையே பெற்றிருந்தது. இடங்களைப் பொறுத்த
மட்டில் 75 சதவீத இடங்களைப் பெற்ற காங்கிரஸ்,
வாக்கு சதவீதம் என்று பார்த்தால், 50 சதவீதத்தை 
எட்டவில்லை. 45 சதவீதத்திற்கு உள்ளேயே  அடங்கி 
விட்டது.    
   
இரண்டாவது பொதுத்தேர்தலில் (1957ல்) மொத்த 
இடங்கள் சிறிது அதிகரித்து 494 ஆக இருந்தன.
காங்கிரஸ்  முன்னை விட 7 இடங்களை அதிகமாகப் 
பெற்று 371 இடங்களை வென்றிருந்தது. ஆனாலும் வாக்கு 
சதவீதம் 50ஐத் தாண்டவில்லை. அப்போதைய 
வாக்கு சதவீதம் 47.78 ஆகும்.

மூன்றாவது பொதுத்தேர்தல் 1962ல் நடந்தபோது 
காங்கிரஸ் கட்சியானது மொத்த இடங்கள் 494ல் 
361 இடங்களையும் 44.72 சதவீத வாக்குகளையும் 
பெற்றிருந்தது.

1952, 57, 62 ஆகிய மூன்று தேர்தல்களிலும் ஜவகர்லால் 
நேரு காங்கிரசுக்குப் பெருவெற்றி தேடித் தந்தார்.
காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் ஏறத்தாழ 
நான்கில் மூன்று பங்கு ஆகும். இடங்களைப் பொறுத்து 
நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை நேரு 
ஈட்டித் தந்திருந்தாலும், வாக்கு சதவீதம் இம்மூன்று 
தேர்தல்களிலும் 50ஐ விடக் குறைவு என்பது 
குறிப்பிடத் தக்கது. நேருவாலேயே  50 சதவீத 
வாக்குகளைப் பெற முடியவில்லை  

1967 தேர்தல் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது.
காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இத்தேர்தலில்  தேர்தல் மூலம் நிரப்பப்படும் மக்களவை 
இடங்கள் 520 ஆக உயர்ந்தது. காங்கிரஸ் கட்சியானது 
283 இடங்களையும் 40.78 சதவீத வாக்குகளையும் 
பெற்றது.

1971ல் 352 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
இது மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை விடச் சிறிது 
அதிகமாகும். இப்போது மொத்த இடங்கள் 518ஆகக் 
குறைந்திருந்தது. காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 
43.68 சதவீதம் ஆகும். இத்தேர்தலில் காங்கிரசின் 
அதாவது இந்திரா காங்கிரசின்  தேர்தல் சின்னம் 
பசுவும் கன்றும் ஆகும். 1952,57,62,67 ஆகிய நான்கு 
தேர்தல்களிலும் காங்கிரஸ் இரட்டைக்காளையை 
தேர்தல் சின்னமாகக் கொண்டிருந்தது.     
 
1977ல் நெருக்கடி நிலை காரணமாக காங்கிரஸ் அதாவது 
இந்திரா காங்கிரஸ் தேர்தலில் தோற்றது. ஜனதா கட்சி
ஆட்சியைப் பிடித்தது. 81 வயதுப்பெரியவர் மொரார்ஜி 
தேசாய் பிரதமர் ஆனார்.

ஜனதா கட்சி என்பது உண்மையில் ஒரு தனித்த கட்சி 
அல்ல. அது குறைந்தது மூன்று கட்சிகளின் கூடாரம்.
இந்திராவை எதிர்க்கும் காங்கிரசார், சோஷலிஸ்டுகள்,
ஆர் எஸ் எஸ்சின் அரசியல் கட்சியான ஜனசங்கம்
ஆகிய மூன்று கட்சிகளின் சேர்க்கையான ஒரு 
தொளதொள அமைப்பே ஜனதா கட்சி. 
ஜனதா கட்சியை தனித்த ஒரு கட்சியாகக் 
கருதுவது பிழையாகும்.    

ஜனதா கட்சி மொத்த இடங்கள் 542ல். 
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 
295 இடங்களையும் 41.32 சதவீத வாக்குகளையும் 
பெற்றது ஜனதா கட்சி. தோல்வி அடைந்த இந்திரா 
காங்கிரஸ் 154 இடங்களையும்  34.52 சதவீத 
வாக்குகளையும் பெற்றது.

தேசாயின் ஆட்சி இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்து 
சரண்சிங் பிரதமர் ஆனார். நாடாளுமன்றத்தைச் 
சந்திக்காமலேயே பிரதமராக இருந்த சரண்சிங் 
பதவி விலகினார். 

1980ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட்டது இந்திரா 
காங்கிரஸ். இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.    
இப்போது 1980ல் நாடாளுமன்ற மக்களவையில் 
529 இடங்கள். இந்திரா காங்கிரஸ் 353 இடங்களைப் 
பெற்றது. இது இரண்டில் மூன்று பெரும்பான்மை ஆகும்.
வாக்குகள் 42.69 சதவீதம் ஆகும்.

1980 தேர்தலில் வென்று நாட்டை ஆண்டு கொண்டிருந்த 
இந்திராவை சீக்கியக் கயவர்கள் 31 அக்டோபர் 1984ல்
சுட்டுக் கொன்று விட்டார்கள். 1984 டிசம்பர் கடைசி
வாரத்தில் தேர்தல் நடைபெற்றது. சீக்கியர்களுக்கு 
எதிராக வட இந்தியாவில் கலவரம் நடந்து கொண்டு 
இருந்தது. பஞ்சாப்பில் தேர்தல் நடத்தப்படாமல் 
தள்ளி வைக்கப் பட்டது.

பிரதமர் ராஜிவ் காந்தி 1984 தேர்தலில் காங்கிரசை 
வழி நடத்தினார். இப்போது மக்களவையில் 541 இடங்கள்.
காங்கிரஸ் 404 இடங்களில் வென்றது. பஞ்சாப், அசாம் 
ஆகிய இடங்களில் பின்னர் தேர்தல் நடந்தபோது, 
காங்கிரசுக்கு அதில் 10 இடங்கள் கிடைத்தன. 
ஆக 414 இடங்களை காங்கிரசுக்குப் பெற்றுத் 
தந்தார் ராஜிவ் காந்தி. வாக்கு சதவீதம் 46.86 ஆகும். 
414 இடங்களை, அதாவது நான்கில் மூன்று பங்கு 
இடங்களைப் பெற்றிருந்தபோதும் வாக்கு சதவீதம் 
50ஐத் தொடவில்லை.

1989 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ராஜிவ் காந்தியால் 
காங்கிரசை வெற்றி பெறச் செய்ய இயலவில்லை.
197 இடங்களையும் 39.53 சதவீத வாக்குகளையும் பெற்ற 
காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அமெரிக்க சிஐஏயின் 
கைக்கூலியான வி பி சிங் பிரதமர் ஆனார். அவரின் 
கட்சியான ஜனதா தளம் 143 இடங்களையும் 17.79 சதவீத 
வாக்குகளையும் மட்டுமே பெற்று, ஒரு கூட்டணியை 
அமைத்து ஆட்சியைப் பிடித்தது. விபி சிங்கிற்கு பாஜக 
ஆதரவு அளித்தது. பாஜகவின் ஆதரவாலேயே வி பி சிங் 
பிரதமராக முடிந்தது.

ஆனால் வி பி சிங்கால் பிரதமராக  ஒரு முழு ஆண்டைக்கூட 
நிறைவு செய்ய இயலவில்லை. வெறும் 343 நாட்கள் மட்டுமே 
பிரதமராக அவர் இருந்தார். பின்னர் பாஜக தனது ஆதரவை 
வாபஸ் பெற்றதால், நவம்பர் 7 , 1990ல் மக்களவையில் நடந்த 
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று வி பி சிங் 
பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து காங்கிரசின் 
ஆதரவுடன் (support from outside) சந்திரசேகர் பிரதமர் 
ஆனார். 

எட்டு மாதங்களுக்குக் குறைவான காலமே 
(நவம்பர் 1990-ஜூன் 1991) ஒரு பொம்மைப் 
பிரதமராக இருந்த சந்திரசேகர் காங்கிரசின் ஆதரவை 
இழந்தவுடன் ராஜினாமா செய்தார்.

அடுத்து வந்த 1991 தேர்தலின்போது ராஜிவ் காந்தி 
தமிழ்நாட்டில் படுகொலை செய்யப் பட்டார். இத்தேர்தலின் 
இறுதியில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறவில்லை.
244 இடங்களையும் 36.40 சதவீதம் வாக்குகளையும் 
பெற்ற காங்கிரஸ் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி 
கண்டு ஆட்சியைப் பிடித்தது. நரசிம்மராவ் பிரதமர் 
ஆனார்.  120  இடங்களுடன் பாஜக அங்கீகரிக்கப்பட்ட 
எதிர்க்கட்சியாகச் செயலாற்றியது.    

1996 தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை 
கிடைக்கவில்லை. 161 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் 
கட்சியாகவும் (20.29 சதவீத வாக்குகள்), 140 இடங்களுடன் 
காங்கிரஸ் இரண்டாம் பெரிய கட்சியாகவும் வந்தன.
பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் 
ஆட்சி அமைக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் 
46 இடங்களைப்பெற்ற ஜனதா தளத்துக்கு வெளியில் 
இருந்து ஆதரவு தர காங்கிரஸ் இசைந்தது. இதனால் 
தேவகெளடா பிரதமர் ஆனார். 10 மாதங்கள் மட்டுமே 
(ஜூன் 1996- ஏப்ரல் 1997) பிரதமராக இருந்த தேவகெளடா 
ராஜினாமா செய்ததும் ஐ கே குஜ்ரால் பிரதமர் ஆனார். 
இவர் 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார் 
(ஏப்ரல் 1997-மார்ச் 1998).

இக்காலக்கட்டத்தில் தேவ கெளடா அமைச்சரவையிலும் 
ஐ கே குஜ்ரால் அமைச்சரவையிலும் கம்யூனிஸ்ட் 
கட்சி (CPI) பங்கேற்றது. அக்கட்சிக்கு மக்களவையில் 
12 இடங்கள் இருந்தன. இந்திரஜித் குப்தா உள்துறை 
அமைச்சராகவும் சதுரானந்த் மிஸ்ரா வேளாண்மைத்துறை 
அமைச்சராகவும் இருந்தனர். CPIயின் கூட்டாளி CPMக்கு 
32 இடங்கள் இருந்தன. CPM  அவ்விரு ஆட்சிகளையும்
வெளியில் இருந்து ஆதரித்தது. எனினும் 1998 மார்ச்சில்
குஜ்ரால் ஆட்சி முடிவுக்கு வந்து 1998ல் அடுத்த 
தேர்தலை நாடு சந்தித்தது.

1998 பெப்ரவரி 28ல் தேர்தல் முடிவடைந்தது. பாஜக 
182 இடங்களை 25.59 சதவீத வாக்குகளுடன் பெற்று 
தனிப்பெருங் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 141
இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சியாக
அமர்ந்தது. பாஜக அமைத்த கூட்டணியான 
NDA எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 
ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

வாஜ்பாய் ஆட்சிக்கு ஆதரவளித்த அதிமுக தனது 
ஆதரவை விலக்கிக் கொண்டதால், ஏப்ரல் 1999ல் 
ஒரு ஓட்டில் வாஜ்பாய் அரசு தோல்வி அடைந்தது.
வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

1999 தேர்தலில் பாஜக 182 இடங்களுடனும் 23.75 சதவீத 
வாக்குகளுடனும் இருந்தது. பாஜக தலைமையிலான 
NDA கூட்டணியானது ஆட்சி அமைத்தது. 2004 வரை 
நிலையான ஆட்சியை  வாஜ்பாய் வழங்கினார். 
காங்கிரஸ் 114 இடங்களுடன் எதிர்க் கட்சியாய் இருந்தது.

அடுத்து 2004 தேர்தல். இதில் பாஜக ஆட்சியை இழந்தது.
காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியைப் பிடித்தது.
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமர் ஆனார்.

காங்கிரஸ் 145 இடங்களும் 26.53 சதவீதம் வாக்குகளும் 
பெற்றிருந்தது. பாஜக 138 இடங்களும் 22.16 சதவீதம் 
வாக்குகளும் பெற்றிருந்தது.

மன்மோகன்சிங் ஆட்சிக்கு CPI, CPM கட்சிகள் ஆதரவு 
அளித்தன. CPMக்கு 43 இடங்களும் CPIக்கு 10 இடங்களும் 
சேர்ந்து மொத்தமாக 53 இடங்கள் இருந்தன. CPMன் 
சோம்நாத் சட்டர்ஜி மக்களவையின் சபாநாயகராக 
இருந்தார்.

அமெரிக்காவின் 123 அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்பது 
குறித்து காங்கிரசுக்கும் CPMக்கும் கருத்து வேறுபாடு 
தோன்றி, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை CPI, CPM
கட்சிகள் வாபஸ் பெற்றன. எனினும் வேறு கட்சிகள்
ஆதரவளித்தமையால் ஆட்சி கவிழவில்லை.

அடுத்து நடைபெற்ற 2009 தேர்தலில், மீண்டும் 
காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியைப் பிடித்தது. 
மன்மோகன்சிங் பிரதமராகத் தொடர்ந்தார்.

2009 தேர்தலில், காங்கிரஸ் 206 இடங்களையும் 28.55 
சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. பாஜக 
116 இடங்களையும் 18.80 சதவீத வாக்குகளையும் 
பெற்றிருந்தது.

அடுத்து 2014 ஏப்ரல்-மேயில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 
ஆட்சியை இழந்தது. பாஜக ஆட்சியைப் பிடித்தது.
நரேந்திர மோடி பிரதமர் ஆனார். பாஜக கட்சியானது
282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் 
திகழ்ந்தது.

பாஜகவின் வாக்குகள் = 31 சதவீதம்.
காங்கிரசின் வாக்குகள் = 19.31 சதவீதம்.
பாஜக பெற்ற இடங்கள் = 282
காங்கிரஸ் பெற்ற இடங்கள் = 44.
அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தை 
காங்கிரஸ் பெறவில்லை. இந்த இழிவை காங்கிரஸ் 
அடைவது இது முதல் முறை. 
அங்கீகாரம் பெற மக்களவையின் மொத்த இடங்களில் 
10 சதவீத இடங்களை (55 இடங்கள்) ஒரு கட்சி பெற்று 
இருக்க வேண்டும். காங்கிரசோ 44 இடங்களை 
மட்டுமே பெற்று அங்கீகாரத்தை இழந்துள்ளது.

அடுத்து 2019 தேர்தல். இதில் பாஜக ஆட்சியைத் தக்க
வைத்துக் கொண்டது. மோடி மீண்டும் பிரதமர் ஆனார்.
இத்தேர்தலில் பாஜக 303 இடங்களையும் 37.36 சதவீத 
வாக்குகளையும் பெற்றது.

காங்கிரஸ் இத்தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் 
பெறவில்லை. 52 இடங்களை மட்டுமே பெற்றிருந்ததால் 
எதிர்க்கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் 
காங்கிரஸ் தலைவரும் காங்கிரசின் பிரதமர் 
வேட்பாளராகக் கருதப் பட்டவருமான ராகுல் காந்தி 
தம் சொந்தத் தொகுதியான அமேதியில் தோல்வி 
அடைந்தார்.

1984ல் நடந்த தேர்தலில் ராஜிவ் காந்தி 414 இடங்களைப் 
பெற்றார். இது அனுதாப அலையால் கிடைத்த வெற்றி.
அதன் பிறகு 2019ல் பாஜக பெற்ற 303 இடங்களே 
அதிகமான இடங்களாக தேர்தல் வரலாற்றில் 
பதிவாகி உள்ளது.

அதே போல 1989 தேர்தலில் காங்கிரஸ் 39.53 சதவீத 
வாக்குகளைப் பெற்றிருந்தது. அதன் பிறகு 
2019 தேர்தலில் பாஜக பெற்ற 37.36 சதவீத 
வாக்குகள்தான் அதிகமானதாக தேர்தல் வரலாற்றில் 
பதிவாகி உள்ளது.
----------------------------தொடரும்--------------------------
***********************************************

    

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக