வியாழன், 7 ஏப்ரல், 2022

மாயாவதியின் படுதோல்வி ஏன்?
உபி தேர்தல் பகுப்பாய்வு!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
உபி 2022 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற 
இடங்களும், வாக்கு சதவீதமும், வாக்குகளும் வருமாறு:

பாஜக = 255 (41.29 சதவீதம், 3 கோடியே 80 லட்சம்) 
சமாஜ்வாதி = 111 (32.06 சதவீதம், 2 கோடியே 95 லட்சம்) 
பகுஜன் = 1 (12.88 சதவீதம், 1 கோடியே 18 லட்சம்) 
காங்கிரஸ் = 2  (2.33 சதவீதம், 21.5 லட்சம்)

உபி அரசியலில் கோடிக்கணக்கில் வாக்குகள் பெற்ற 
கட்சிகள் மூன்றே மூன்றுதான். 
அவை பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகள்தான்.
காங்கிரஸ் கட்சியானது வெறும் 21 லட்சத்தில்
முடங்கி விட்டது. எதிர்காலத்திலும் அக்கட்சியால்
ஒருபோதும் ஒரு கோடி என்ற அளவிலான வாக்குகளை 
எட்ட முடியாது. 

ஒவாய்சியின் மஜ்லிஸ் கட்சி 4,50,929 வாக்குகள் மட்டுமே 
பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் 0.49 சதவீத ஆகும். ஒரு 
இடத்திலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.

மாயாவதியின் அவமானகரமான படுதோல்விக்குக் 
காரணங்கள் யாவை? பல்வேறு காரணங்கள் உள்ளன.

அ) மாயாவதியின் கட்சியும் எல்லா மாநிலக் 
கட்சிகளையும் போல, வாரிசு அரசியல் கட்சியாகி
விட்டது.

ஆ) அனைத்து தலித்துகளுக்குமான கட்சி என்ற
நிலையில் இருந்து கீழே இறங்கி ஜாதவ்களுக்கான
கட்சியாக பகுஜன் கட்சி சுருங்கி விட்டது.

3) தன் மீதான ஊழல் வழக்குகள் முறையாக 
நடத்தி முடிக்கப்பட்டால், லாலு பிரசாத் போல 
தானும் ஆயுள் முழுவதும் கம்பி எண்ண நேரிடும் 
என்பதை மாயாவதி நன்கறிவார். லாலு பிரசாத்தைப் 
போல முட்டாள் அல்ல மாயாவதி. எனவே தீவிர 
அரசியலைத் தவிர்த்து விட்டு மிகப்பெரிதும் 
நீர்த்துப்போன அரசியலை, வெறும் மேம்போக்கு 
அரசியலை மேற்கொண்டார் மாயாவதி.

4) அரசியலில் அவரிடம் KILLER INSTINCT எதுவும் 
தற்போது கிடையாது. இனிமேலும் இருக்காது.
முன்பு இருந்தது, அவ்வளவுதான். இன்று அதெல்லாம்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே  என்று பாரதியார் 
கூறியதைப் போல காற்றில் கரைந்த கற்பூரமாய் 
ஆகிப்போனது.  

5) வழக்கு-தீர்ப்பு-சிறை என்ற விஷச் சுழலுக்குள்
சிக்காமல் எஞ்சிய வாழ்க்கையை அமைதியாகவும் 
நிம்மதியாகவும் கழிக்க முடிந்தால் அதுவே 
பெரும் மனநிறைவு என்ற மனநிலைக்கு வந்து 
விட்டார் மாயாவதி. ஜெயலலிதா போன்ற 
செல்வாக்கு நிறைந்த அரசியல்வாதிகளுக்கு 
நேர்ந்த கதியில் இருந்து மாயாவதி பாடம் 
கற்றுக் கொண்டிருக்கிறார்.

6) அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 
ஆதரவாகவே மாயாவதி இருக்கிறார். அதே நேரத்தில் 
பாஜகவுக்கு எதிராகக் காய் நகர்த்தியாக வேண்டும் 
என்ற நிலையில், "அயோத்தியில் ராமருக்கு யோகி  
கோவில் கட்டினால், நான் லக்னோவில் பலராமருக்குக் 
கோவில் கட்டுவேன்" என்றார் மாயாவதி.  இத்தகைய 
கோமாளித்தனங்கள் அவர் எதிர்பார்த்தபடி 
பிராமணர்கள் நடுவில் அவருக்கு செல்வாக்கை 
பெற்றுத் தரவில்லை. மாறாக ராமர் கோவிலுக்கு 
ஆதரவான உபி மக்களின் கூட்டு மனநிலைக்கு
எதிராக இருந்து அவரின் வாக்கு வங்கியில் சரிவை 
ஏற்படுத்தின. 

7) 2014ல் மத்தியில் மோடி ஆட்சி ஏற்பட்டது முதலாகவே,
பல்வேறு முக்கியமான பிரச்சினைகளில் மாயாவதி 
பாஜகவுடன் நின்றார். காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த 
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370ஆவது பிரிவு 
நீக்கத்துக்கு, ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாக 
பாஜகவை ஆதரித்து வாக்களித்தார் மாயாவதி.
           
8.. ஆதாயம் கருதியே பாஜகவுக்கு ஆதரவாக 
வாக்களித்தார் மாயாவதி என்று யாரும்  புரிந்து
கொள்ளக் கூடாது. உள்ளபடியே காஷ்மீருக்கு
சிறப்பு அந்தஸ்து தேவையற்றது என்று கருதினார் 
மாயாவதி. 

பிரதான காரணம் என்ன?
---------------------------------------
12.88 சதவீத வாக்குகளைப் பெற்றும் மாயவாதியால் 
ஏன் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது 
என்பதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.
பகுஜன் கட்சியின் வாக்கு வங்கியில் ஜாதவ்களும்
இஸ்லாமியர்களும் பிரதானமாக இடம் பெறுவர்.
ஆனால் இந்தத் தேர்தலில் இஸ்லாமியர்கள் 
மாயாவதிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து,
அவரின் அரசியல் எதிரியான அகிலேஷ் யாதவின் 
கட்சிக்கு வாக்களித்தனர்.       

மாயாவதிக்கோ, காங்கிரசுக்கோ, ஒவாய்சிக்கோ
வாக்களித்தால் இஸ்லாமிய வாக்குகள் சிதறிவிடும்.
அது பாஜகவுக்கு சாதகமாக ஆகிவிடும். எனவே 
இஸ்லாமியர்கள் தங்களின் வாக்குகளை சிந்தாமல் 
சிதறாமல் சமாஜ்வாதி கட்சிக்கு அளிக்க வேண்டும் 
என்று உபி முஸ்லிம்கள் முடிவெடுத்து அம்முடிவைக் 
கறாராகச் செயல்படுத்தினர்

இது முஸ்லிம்கள் மதரீதியாக எடுத்த முடிவு. 
மாயாவதியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 
உபி முஸ்லிம்கள் மாயாவதிக்கு வாக்களிப்பதைத் 
தவிர்க்கவில்லை. மாறாக வெற்றி பெற இயலாத 
மாயாவதிக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்கக் 
கூடாது என்பதால், வெற்றி பெறும் வாய்ப்புள்ள
(அல்லது அப்படி அவர்கள் கருதுகின்ற) சமாஜ்வாதி 
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவின்படியே 
உபி முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை polarise 
செய்தனர். இதை அவர்கள் பகிரங்கப் படுத்தாமல் 
ரகசியமாக வைத்திருந்து 7 கட்டத் தேர்தல்களிலும் 
செயல்படுத்தினார்.

மதரீதியான இந்த துருவச் சேர்க்கை (polarisation) 
இத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு 40 இடங்களைக் 
கூடுதலாகப் பெற்றுத் தந்தது. மதரீதியான இந்த 
polarisation இல்லாது இருந்தால், இன்று சமாஜ்வாதி 
கூடுதலாகப் பெற்ற 40 இடங்களில் கணிசமானவை 
மாயாவதியின் கட்சிக்குக் கிடைத்திருக்கும்.

ராமர் கோவில் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை 
மாயாவதி மெய்யாகவே அந்தரங்க சுத்தியோடு 
வரவேற்றார். அதை விரும்பாமல் உபியின் முஸ்லிம்கள் 
முகம் சுளித்தனர். காஷ்மீருக்கான சிறப்பு 
அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தபோது 
முதல் ஆளாக அதை வரவேற்றார் மாயாவதி.
அப்போதே உபியின் முஸ்லிம்கள் மாயாவதியைக் 
கைகழுவி விட்டனர். 

மாயாவதி கன்ஷிராமின் வழிகாட்டலில் பகுஜன் 
கட்சியை நடத்தி வருகிறார். மாயாவதிக்கு தம் 
சொந்த நிலைபாடுகளை அரசியலில் சமூகவியலில் 
மேற்கொள்ளுவதற்கு உரிமை உண்டு. இன்னொரு 
முஸ்லீம் லீக் கட்சியை மாயாவதி நடத்த வேண்டும்
என்று உபி முஸ்லிம்கள் விரும்பலாம். மூடத்தனமான 
அந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 
மாயாவதிக்கு எந்த அவசியமும் இல்லை.

உபி முஸ்லிம்களின் இந்த மதரீதியான துருவச் 
சேர்க்கையை சோனியா காந்தி விரும்வில்லை.
இது மிகவும் ஆபத்தானது என்று சோனியா  
கருதுகிறார். முதுகில் குத்தப்பட்ட மாயாவதியும் 
சூழலின் அபாயத்தைப் புரிந்து கொண்டு எதிர்காலத்
திட்டங்களை வகுத்து வருகிறார்.

சிறுபான்மையினரின் மதரீதியான துருவச் 
சேர்க்கையானது அதன் யாழ்ப்பாண எதிர்வினையை 
ஏற்படுத்தவே செய்யும். பெரும்பான்மை மதத்தினரின் 
துருவச் சேர்க்கைக்கு முழுவதுமாகவோ 
பகுதியளவுக்கோ இட்டுச் செல்லக் கூடிய 
ஆபத்து இதில் உண்டு. அப்படி ஒரு சூழல் 
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ 
அடுத்து வரும் 2027 தேர்தலிலோ ஏற்படுமேயானால்,
சமாஜ்வாதி கட்சி அதன் முதல் களப்பலி ஆகி விடும்.

இறுதியாக, 12.88 சதவீதம் வாக்குகள் மாயாவதிக்கு 
இருப்பதால், காங்கிரஸ் கட்சியைப் போல பகுஜன் 
கட்சிக்கு survival crisis  எதுவும் இல்லை. அதே நேரத்தில் 
எதிர்காலத்தில் பகுஜன் கட்சி பாஜக முகாமில் 
இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் மறுக்க இயலாது.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) உபியின் மெய்யான நிலவரத்தை அறிய வேண்டுமெனில் 
ஆங்கிலம், இந்தி பத்திரிகைகளைப் படிக்க வேண்டும்.
அவ்வாறே ஆங்கில இந்தி சானல்களைப் பார்க்க 
வேண்டும். வெறும் தமிழை மட்டும் வைத்துக் 
கொண்டு, கசடுகளான தமிழ்ப் பத்திரிகைகளை 
மட்டும் படித்துக் கொண்டிருந்தால், முட்டாளாகவே 
இருக்கலாம்.

2) நல்ல கல்வியறிவு உடையோர், நல்ல IQ உடையோரை 
மனதில் கொண்டு இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
பிறழ்புரிதலைத் தவிர்க்க மற்றவர்கள் இக்கட்டுரையைப் 
படிக்காமல் இருந்து ஒத்துழைப்புத் தருமாறு
வேண்டுகிறோம். தர்க்கபூர்வமற்ற, அறிவியலுக்கு 
எதிரான கருத்துக்களை பின்னூட்டம் என்ற 
பெயரில் எழுதுவது தடுக்கப் படுகிறது.
************************************************  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக