வியாழன், 21 செப்டம்பர், 2017

வடகொரிய அணுவெடிப்புச் சோதனையால்
நாஷ் சமநிலை பாதிக்குமா?
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
கடந்த மாதம் (2017 செப்டம்பர்) முதல் வாரத்தில் ஹைட்ரஜன் குண்டு
வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியதாக வட கொரியா
அறிவித்துள்ளது. நாட்டின் வடகிழக்கில் உள்ள  யங்யீரி
(Punggye ri) மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் இந்த
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியதாக
வடகொரியா மேலும் தெரிவிக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே, ஜனவரி 2016இல் ஹைட்ரஜன்
குண்டை வெடித்துச் சோதனை செய்ததாக வட கொரியா
அறிவித்தது. எனினும் வடகொரியாவின் இந்த  உரிமை கோரலை அமெரிக்கா உள்ளிட்ட அணுஆயுத நாடுகள் ஏற்கவில்லை.
பன்னாட்டு புவிஅதிர்வு கண்காணிப்புக் கருவியில்
(International Seismic Monitor) பதிவாகி இருந்த பூமி அதிர்வின்
அளவு மற்றும் செறிவு (magnitude and intensity) ஒரு ஹைட்ரஜன்
குண்டு வெடிப்புக்குப் போதுமானதாக இல்லை. எனவே வடகொரியா ஹைட்ரஜன் குண்டை வெடித்தது என்பதை
பிற நாடுகள் நம்பவில்லை.

ஒருநாடு எவ்வளவு ரகசியமாக பூமிக்கடியில் ஒரு
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தினாலும்,
அதன் விளைவாக ஏற்படும் பூமி அதிர்வைக் கொண்டு,
மற்ற நாடுகள் அதைக் கண்டு பிடித்துவிட முடியும்.
2017 செப்டம்பரில் பூமி அதிர்வைப் பதிவு செய்யும்
கருவிகளின் தரவுகள் வடகொரியா ஒரு ஹைட்ரஜன் குண்டு
வெடிப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பதை உறுதி
செய்கின்றன என்று அமெரிக்கா கூறுகிறது. எனவே
வடகொரியா ஹைட்ரஜன் குண்டுகளைத் தயாரித்துள்ளது
என்பது உறுதிப்படுகிறது.

அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும்!
--------------------------------------------------------------------
யுரேனியம் என்பது ஒரு கனமான தனிமம். இதன் அணுஎண்
92 ஆகும். இதன் ஐசோடோப்களில் U-235, U-238 ஆகியவை
முக்கியமானவை. இவற்றில் U-238 அதிக அளவில் பூமியில்
கிடைக்கும். எனினும் இது அணுகுண்டு தயாரிப்புக்கு
உகந்தது அல்ல. U-235 என்னும் ஐசோடோப் பிளவுறும்
தன்மை உடையது (fissile material). இதுவே அணுகுண்டு
தயாரிப்புக்கு உகந்தது. இந்த கனமான ஐசோடோப்பை
ஒரு நியூட்ரான் மூலமாக பிளவுறுத்தும்போது, பேரளவிலான
ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வகையில் தயாரிக்கப்படும்
அணுகுண்டுகள் பிளவுறு குண்டுகள் (nuclear fission bombs)
எனப்படும். புளூட்டோனியமும் அணுகுண்டு தயாரிக்கப்
பயன்படும்.

ஹைட்ரஜன் குண்டு என்பது சரியான பெயர் அல்ல.
ஊடகங்களும் மக்களும் ஹைட்ரஜன் குண்டு என்று
அழைத்தாலும், தொழில்நுட்ப ரீதியாக அதன் சரியான பெயர்
வெப்ப ஆற்றல் சேர்க்கை குண்டு (Thermo nuclear fusion bomb)
என்பதே. மிக மெல்லிய இரண்டு அணுக்களைச் சேர்ப்பதன்
வாயிலாக, பிரம்மாண்டமான ஆற்றல் வெளியிடப்படும்.
இவ்வகை குண்டுகள் சேர்க்கைக் குண்டுகள் (fusion bombs) ஆகும்.

உதாரணமாக, ஹைட்ரஜனின்
ஐசோடோப்களான டியட்ரியம் மற்றும் டிரிடியம்
(Deuterium and tritium) ஆகிய இரண்டையும் சேர்க்கும்போது 
ஹீலியம்-4 என்ற புதிய தனிமம் உருவாகும்.அதாவது
ஹைட்ரஜன் குண்டு உருவாகும். ஆனால் இவ்விரண்டு
ஐசோடோப்புகளும் அதியுயர்ந்த வெப்பநிலையில்
மட்டுமே சேரும். அதாவது குறைந்தது 200 மில்லியன்
கெல்வினில் தொடங்கி 800 மில்லியன் கெல்வின் வரையிலான வெப்பநிலை இதற்குத் தேவை.

ஒரு ஹைட்ரஜன் குண்டை (fusion bomb) வெடிக்கச் செய்வதற்கு
ஒரு அணுகுண்டு (fission bomb) கண்டிப்பாகத் தேவை.
சேர்க்கைக்குத் தேவையான வெப்பத்தை அணுகுண்டு
வெடிப்பதன் மூலமே வழங்க முடியும். எனவே ஒரு ஹைட்ரஜன்
குண்டு என்பது two in one வகையிலான இரட்டை குண்டாகும்.

அணுஆயுத நாடுகள் எவை?
--------------------------------------------------
இன்றைய உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன.
இவற்றில் 193 நாடுகள் ஐ.நா சபையில் உறுப்பினர்களாக
உள்ளன. (பாலஸ்தீனம், ஹோலி சீ  ஆகிய இரு நாடுகளைத்
தவிர). உலகின் இந்த 193 நாடுகளில் இன்றைய நிலையில்
எட்டு நாடுகள் மட்டுமே அணு ஆயுத நாடுகள் ஆகும்.
அவையாவன:

1) அமெரிக்கா
2) ரஷ்யா
3) இங்கிலாந்து
4) பிரான்சு
5) சீனா
6) இந்தியா
7) பாகிஸ்தான்
8) வட கொரியா

இந்த எட்டு நாடுகளும் தங்களிடம் அணுஆயுதங்கள்
இருப்பதையும் அணுவெடிப்புச் சோதனைகளை
நிகழ்த்தியதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டவை.
ஒன்பதாவது நாடாக இஸ்ரேலிடம் அணுஆயுதம்
இருப்பதாக உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. எனினும்
இஸ்ரேல் தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாகவோ
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியதாகவோ
ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. மற்ற
நாடுகளாலும் இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதாக
நிரூபிக்கவும் முடியவில்லை.

நேட்டோ நாடுகளான (North Atlantic Treaty Organisation) பெல்ஜியம்,
ஜெர்மனி, ,இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி ஆகிய ஐந்து
நாடுகளும் அணுஆயுதம் எதையும் சொந்தமாகத்
தயாரிக்கவில்லை. என்றாலும் நேட்டோ ராணுவ
ஒப்பந்தப்படி, இந்த ஐந்து நாடுகளுக்கும்
அணுகுண்டுகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.
எனவே அணுஆயுத நாடுகளாக இவை இல்லாவிட்டாலும்
அணுஆயுதங்களைக் .கொண்டிருக்கின்றன.

 கோர்ப்பச்சேவ் காலத்தில்  சோவியத் ஒன்றியம் (USSR)
 உடைந்து சிதறியது. சோவியத் குடியரசுகள் பல
ஒன்றியத்தை விட்டுப் பிரிந்து தனி நாடுகளாக ஆயின.
அப்போது தங்களிடம் இருந்த அணுஆயுதங்களை
அவை ரஷ்யாவிடம் திருப்ப ஒப்படைத்து விட்டன.
உக்ரைன், கஜகஸ்தான், பெலாராஸ் ஆகிய நாடுகளே அவை.

ஒரு காலத்தில் அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருந்த
தென் ஆப்பிரிக்கா பின்னர் அவற்றை அழித்து விட்டு,
அணுஆயுதமற்ற நாடாக மாறியது.

ஆக மொத்தத்தில், கூட்டிக் கழித்துப் பார்த்தால், தற்போதைய உலகில், எட்டு நாடுகள் மட்டுமே அணுஆயுத நாடுகள்
ஆகும். இவை மட்டுமே  சொந்தமாக அணுவெடிப்புச்
சோதனை நிகழ்த்தி அணுஆயுதங்களைத் தயாரித்து
வைத்திருப்பவை.

இந்தியாவின் அணுவெடிப்புச் சோதனைகள்:
-------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1974 மே மாதத்தில்  ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவனப் பகுதியில்
இந்தியா தன் முதல் அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது.
அணுகுண்டு தயாரிப்பு மற்றும் அணுவெடிப்புச் சோதனையை உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கு (Pokran I) விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமை ஏற்றார்.
இந்த அணுகுண்டு (fission bomb) 8 கிலோ டன் TNT (Tri Nitro Toulene)
அளவு கொண்ட வெடிப்பு என்று மதிப்பிடப்பட்டது.

பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது,
1998 மே மாதத்தில் அதே பொக்ரானில் இந்தியா தன் இரண்டாவது
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது. இத்திட்டத்திற்கு
(Pokhran II) டாக்டர் அப்துல் கலாம் தலைமை ஏற்றார். மே 11
மற்றும் மே 13 நாட்களில் மொத்தம் ஐந்து  குண்டு வெடிப்புச்
சோதனைகள் ( சக்தி-1,2,3,4,5) நிகழ்ந்தன. இவற்றில் முதல் சோதனையான சக்தி-1 என்பது ஹைட்ரஜன் குண்டு வெடிப்பாகும்.
இது 45 கிலோ டன் TNT அளவிலானது என்று ஒரு மதிப்பீடு
கூறுகிறது.

அணுஆயுத வல்லமை பெற்றிருந்தாலும் இந்தியாவின்
அணுஆயுதக் கொள்கை "நாங்கள் முதலில் அணுகுண்டைப்
போட மாட்டோம்" (No First use policy) என்பதாகும். 2003இல் 
இந்தக் கொள்கையை அறிவித்த இந்தியா இதை
இன்றளவும் உறுதியாகப் பற்றி நிற்கிறது.

அணுஆயுதங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகள்:
----------------------------------------------------------------------------------------
உலகின் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான
ஹிரோஷிமா மீது ஆகஸ்டு 6, 1945இல் போடப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் உத்தரவின் பேரில்,
லிட்டில் பாய் (Little Boy) எனப்படும் யுரேனியம் அணுகுண்டு
எனோலா கே (B-29 Enola Gay) என்னும் போர் விமானத்தில்
வைக்கப்பட்டு, கர்னல் பால் டிப்பெட்ஸ் (Col Paul Tibbets)
என்னும் விமானியால் ஹிரோஷிமா மீது போடப்பட்டது.

இதன் பின்னரும் ஜப்பான் சரண் அடையாததால்,
ஆகஸ்டு 9, 1945இல் ஃபேட் மேன் (Fat Man) என்னும்
அணுகுண்டு (புளுட்டோனியம் குண்டு) நாகசாகி
நகரத்தின் மீது வீசப்பட்டது. போக்ஸ்கார் (B-29 Bockscar)
என்னும் போர் விமானத்தில் இருந்து, மேஜர்
சார்லஸ் சுவீனி (Major Charles Sweeney) என்னும் விமானியால்
நாகசாகி மீது வீசப்பட்டது.

இன்றைய அறிவியலின் வளர்ச்சியில், விமானத்தில்
பறந்து விமானியின் மூலம் அணுகுண்டை வீச
வேண்டியதில்லை. ஆளில்லா ஏவுகணைகளில்
அணுகுண்டை வைத்து மிகத் துல்லியமாகவும்
அதிவிரைவாகவும் எதிரியின் நிலைகள் மீது
அணுகுண்டை வீச முடியும். அதே போல, ஹிரோஷிமா
மீது வீசப்பட்ட லிட்டில் பாய் அணுகுண்டை  விட
பல்லாயிரம் மடங்கு ஆற்றல் வாய்ந்த ஹைட்ரஜன்
குண்டுகளும் இன்று அணுஆயுத வல்லரசுகளிடம்
உள்ளன. நவம்பர் 1, 1952இல் உலகின் முதல் ஹைட்ரஜன்
குண்டை அமெரிக்கா வெடித்தது. இந்த வெடிப்பின்போது
10.4 மெகா டன் TNT அளவிலான ஆற்றல் வெளிப்பட்டது.
லிட்டில் பாய்  என்னும் முதல் அணுகுண்டின் ஆற்றல்
வெறும் சில கிலோ டன் அளவுதான்.

இந்தியாவின் அக்னி வரிசை ஏவுகணைகளில் அக்னி-1
முதல் அக்னி-5 வரை வெற்றிகரமாகச் சோதித்துப்
பார்க்கப்பட்டன. அக்னி-6 தயாரிப்பில் உள்ளது.
1989இல் சோதிக்கப்பட்ட அக்னி-1 700 கி.மீ வீச்சு (range)
கொண்டது. 2000 கி.மீ வீச்சு கொண்ட அக்னி-2, 3500கிமீ
முதல் 5000 கி.மீ வீச்சு கொண்ட அக்னி-3 என்ற வளர்ச்சியின்
அடுத்த கட்டமாக, அக்னி-6  8000கி.மீ முதல் 10000 கி.மீ
வரையிலான வீச்சைக் கொண்டிருக்கும் விதத்தில்
தயாரிக்கப்பட்டு வருகிறது.

 அணுஆயுத ராணுவப் போர்த்தந்திரத்தில் (nuclear military strategy)
ஒரு காலத்தில், அணுஆயுதங்களின் வெடிப்பாற்றலே
(yield) முக்கியமாகக் கருதப்பட்டது. இதன் விளைவாகவே
வெடிப்பாற்றல் அதிகமான ஹைட்ரஜன் குண்டுகள் தயாரிக்கப் பட்டன. பின்னர்  அணுஆயுதங்களைச் சுமந்து கொண்டு
எதிரி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளே
முக்கியமாகக் கருதப்பட்டன. உலகின் எட்டு அணுஆயுத
நாடுகளும் இந்த ஏவுகணைத் தொழில்நுட்பத்திலும்
வளர்ச்சி அடைந்து வருகின்றன.

நாஷ் சமநிலையும் MAD கோட்பாடும்!
--------------------------------------------------------------------
1945 ஆகஸ்டு 6, 9 தேதிகளில் ஹிரோஷிமா நாகசாகி
மீது வீசப்பட்ட அணுகுண்டே உலகின் முதல் அணுகுண்டுத்
தாக்குதல் ஆகும். அது மட்டுமல்ல, அதுவே கடைசி
அணுகுண்டுத் தாக்குதலும் ஆகும். 1945க்குப் பிறகு
இன்று 70 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 70 ஆண்டுகளில் எத்தனையோ போர்கள் நிகழ்ந்து இருக்கின்றன.என்றாலும்
எந்தப் போரிலும் எந்த நாடும் அணுகுண்டைப்
பயன்படுத்தவில்லை. ஆம், அணுகுண்டின் சகாப்தம்
முடிந்து விட்டது.

எப்படியெனில், எந்தப் போரிலாவது அணுகுண்டுகளை எந்த அணுஆயுத நாடு பயன்படுத்தினாலும், பாதிக்கப்பட்ட
நாடு திருப்பி அதே ஆணு ஆயுதங்களால் தாக்கும்.
இதன் விளைவு பரஸ்பரம் சர்வ நாசம் ஏற்படும்.
இதுவே நடைமுறை உண்மையாகும். இந்தக் கோட்பாடு அணுஆயுதப் போர்த்தந்திரத்தில் MAD doctrine எனப்படுகிறது.
(MAD =Mutually Assured Destruction).

பனிப்போர் நடந்த காலத்தில் இரு வல்லரசுகளான
அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இந்தக்
கோட்பாட்டைக் கடைப்பிடித்தன. இரு நாடுகளுமே
அணுஆயுதப் பந்தயத்தில் (nuclear arms race) ஒன்றையொன்று
விஞ்ச முற்பட்டன. என்றாலும் எந்த நாடும் அணுஆயுதத்தைப்
பிரயோகிக்கவில்லை. அணுஆயுதங்கள் அச்சுறுத்த
மட்டுமே (for the purpose of deterrence) என்று அவை
உணர்ந்து இருந்தன. சதுரங்க விளையாட்டில், "The threat
is more powerful than its execution" என்று ஒரு பழமொழி உண்டு.
அதைப் போன்றதுதான் இதுவும். நாஷ் சமநிலை
(Nash equilibrium) என்னும் தீர்வுக் கோட்பாட்டில் (solution concept)
இருந்து பெறப்பட்டதுதான் MAD கோட்பாடும்.

ஜான் நாஷ் (John Forbes Nash Jr, 1928-2015) என்பவர் ஓர்
அமெரிக்க கணித அறிஞர். நோபல் பரிசு மற்றும்
ஏபெல் பரிசு ஆகிய இரண்டையும் பெற்றவர்.
விளையாட்டுக் கோட்பாட்டில் (game theory)
அடிப்படையான பங்களிப்புகளைச்
செய்தவர். நாஷ் சமநிலை என்பது இவரின் பெயரால்
அமைந்த ஒரு தீர்வு.

ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காத விளையாட்டுகளில்
(non cooperative games) முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்டுவது
நாஷ் சமநிலை. ஒருவருக்கொருவர் பகைமையான A, B
என்னும் இருவர் பின்வரும் சூழ்நிலையில் நாஷ் சமநிலையில் இருப்பதாகக் கொள்ளலாம்:

1) ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பொறுத்து, B எடுக்கும் முடிவை
அறிந்த பிறகு, A தம்மாலான மிகச் சிறந்த முடிவை எடுக்கிறார்.
2) A எடுக்கும் முடிவை அறிந்த பிறகு, B தமது மிகச் சிறந்த
முடிவை எடுக்கிறார்.
3) A முடிவெடுத்த பின் Bயும், B முடிவெடுத்த பின்னர் Aயும்
தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
மேற்கூறிய சூழ்நிலையில் A, B இருவரும் நாஷ்
சமநிலையில் இருப்பதாகப் பொருள்.

அமெரிக்கா முதலில் அணுகுண்டை ரஷ்யா மீது
வீசாது. இது அமெரிக்கா எடுத்த முடிவு. இதை அறிந்த
பிறகு ரஷ்யாவும் அமெரிக்கா மீது அணுகுண்டை முதலில்
வீசுவதில்லை என்று முடிவு எடுக்கிறது. இப்போது
அமெரிக்காவும் ரஷ்யாவும் நாஷ் சமநிலையில்
இருக்கின்றன. இதன் விளைவு எந்த நாடும் மற்ற
நாட்டின் மீது அணுகுண்டை வீசப் போவதில்லை.

ஆக மொத்தத்தில், ஹைட்ரஜன் குண்டு வெடிப்புச்
சோதனை நடத்திய பின்னரும்கூட, வடகொரியா
எவர்மீதும் அதை பிரயோகிக்காது. ஏனெனில்
நாஷ் சமநிலையில் இருந்து விலக வடகொரியா விரும்பாது.
********************************************************************     









         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக