அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!
மார்க்சுஹு அக்பர்! மார்க்சுஹு அக்பர்!!
மார்க்சுக்கும் லெனினுக்குமான உறவு
நியூட்டனுக்கும் ஐன்ஸ்டினுக்குமான உறவு போன்றது!
ஊமைகள் மத்தியில் உளறுவாயன் பெரும் பேச்சாளன்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் 1848ல் "கம்யூனிஸ்ட் அறிக்கை"யை
எழுதினர். இதையே மார்க்சியத்தின்
அதிகாரபூர்வமான தொடக்கமாகக் கொள்ளலாம்.
எனினும் 1848க்கு முன்பே மார்க்ஸ் சில
முக்கியமான நூல்களை எழுதியுள்ளார் என்பதை
வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும்.
1847ல் தத்துவத்தின் வறுமை என்ற நூலை மார்க்சும்
1846ல் ஜெர்மன் சித்தாந்தம் (The German Ideology) என்ற
நூலை மார்க்ஸ் எங்கல்ஸ் இருவரும் எழுதி
இருந்தனர். 1848ஐ மார்க்சியத்தின் தொடக்கமாகக்
கொண்டால், ரஷ்யப் புரட்சி 1917ல் நடக்கும் வரை,
1848க்கும் 1917க்கும் இடைப்பட்ட இந்த 70 ஆண்டுகளில்
மார்க்சியமானது ஒரு வசீகரமான கனவாக
மட்டுமே இருந்தது.
1917ல்தான் மார்க்ஸ் கூறிய புரட்சி என்பது
கண்ணெதிரே நடந்த நிகழ்வாக மாறி
மார்க்சியத்தின் மெய்மை நிரூபிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின்
ஆகியோர் கூறும் மார்க்சியம் என்பது என்ன
என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் உலகம்
முழுவதும் ஏற்பட்டது. உலகையே தலைகீழாகப்
புரட்டிப் போடவல்ல ஆற்றல் கொண்டதாக
மார்க்சியம் இருப்பது எப்படி என்ற கேள்விக்கு
விடை காணும் நோக்கில் மார்க்சியக்
கோட்பாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப் பட்டன.
கல்விப்புலம், அறிவுப்புலம், ஆய்வுப்புலம் சார்ந்து
மார்க்சிய ஆய்வுகள் கணக்கின்றி மேற்கொள்ளப்
பட்டன. மார்க்சியத்தின் நுண்ணிய மற்றும் அதிகம்
அறியப்பட்டிராத பகுதிகளும் கூட வெளிச்சத்துக்கு
வந்தன. சுருங்கக்கூறின், மார்க்சியம் என்பது
மானுட வரலாற்றின் தவிர்க்க இயலாத நிகழ்வு
என்ற உண்மையை இத்தகைய ஆய்வுகள்
உலகுக்கு உணர்த்தின.
இருப்பினும் ஐரோப்பிய ரஷ்ய சீன நாடுகளில்
போன்று இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்சியம்
ஆய்வுக்கு உட்படுத்தப் படவில்லை. மார்க்சியம்
குறித்த ஆய்வுகளோ, ஆய்வு குறித்த பிரக்ஞையோ
தமிழகத்தில் இல்லை. மார்க்சிய மூல நூல்கள்கூட
முழுமையாக தமிழில் இன்னமும் மொழிபெயர்க்கப்
படவில்லை.
எனவே தமிழ் மார்க்சிய வாசகச் சூழல் என்பது
அறிவியல் நோக்கிலோ ஆய்வு நோக்கிலோ
மார்க்சியத்தை அறிந்துள்ள வாசகர்கள் மற்றும்
எழுத்தாளர்களைக் கொண்டதாக இல்லை.
(ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர).
மூல ஆசான்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் போன்றோரை
பூஜைக்கு உரியவர்களாக மட்டுமே கருதும்
மடமையே இங்கு கோலோச்சுகிறது.
தேமுதிகவின் தற்குறித் தொண்டர்கள் தங்கள்
தலைவர் கேப்டன் விஜயகாந்த் மீது என்ன விதமான
வழிபாட்டு உணர்வைக் கொண்டிருக்கிறார்களோ
அதே போன்ற வழிபாட்டு உணர்வை மட்டுமே
கொண்டுள்ள பலரும் இங்கு மார்க்சியவாதி
என்னும் வேடத்துடன் உலா வருகின்றனர்.
இவர்கள் மார்க்சியத்தைக் கற்றவர்களோ
அல்லது கற்றதைப் புரிந்து கொண்டவர்களா
அல்லர். ஒன்றிரண்டு மார்க்சிய மேற்கோள்களை
அறிந்து வைத்திருப்பவன் இந்தத் தற்குறிகளால்
விதந்து ஓதப்படுகிறான். ஊமைகள் மத்தியில்
உளறுவாயன் சண்டப் பிரசண்டன் என்பதையே
இது எடுத்துக் காட்டுகிறது. இதுதான் தமிழ் மார்க்சிய
வாசகச் சூழலின் பொதுவான சித்திரம். எனவே
இங்கு critical Marxian outlook என்பது நாடுகடத்தப்பட்ட
ஒன்று.
இந்த ஆட்டு மூளை அம்பிகள் அறிந்தே இராத
மார்க்சியத்தின் சில கூறுகளைப் பற்றி நாம்
எழுதும்போது, அதை முதல் முறையாகக்
கேள்வியுறும் இவர்களின் ஆட்டு மூளைகள்
குழம்புச் சட்டியில் விழுந்து கொதித்து வெந்து
போகின்றன.
கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற நூல் எல்கேஜி
பாடம். அதைக்கூடச் சரியாகப் படித்துப்
புரிந்து கொள்ளாதவர்கள் இங்கு மார்க்சிய
ஆசான்கள். எனவேதான் "கம்யூனிஸ்டுகள்
தங்களுக்கென்று ஒரு கட்சியை அமைத்துக்
கொள்ள மாட்டார்கள்" என்று மார்க்ஸ்
கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியிருப்பதை
நாம் சுட்டிக் காட்டியதும் இவர்கள் மூச்சடைத்துப்
போனார்கள்.
"Religion is the opium of the people" என்ற மார்க்சின்
புகழ்பெற்ற வாக்கியத்தில் opium என்ற சொல்லை
மார்க்ஸ் எந்தப் பொருளில் எழுதினார் என்பது
ஜெர்மன் ஆங்கில மொழியியல் அறிஞர்களால்
உணர்த்தப்பட்டு அதை மார்க்சிய அறிஞர்களும்
ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஐரோப்பிய
மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்
கொண்டுள்ள விஷயம். இதையே நாம் சுட்டிக்
காட்டியபோது, அதை ஏற்றுக் கொள்ள இயலாத
தற்குறிகள் அடிவயிற்றில் கத்திக்குத்து விழுந்தது
போல் அலறினார்கள். இவர்கள் வெளி உலகம்
அறியாத கிணற்றுத் தவளைகள். இவர்கள் குண்டுச்
சட்டியில் குதிரை ஓட்டும் சிந்தனைக் குள்ளர்கள்.
மார்க்சுக்கும் லெனினுக்குமான உறவு எத்தகையது?
இது நியூட்டனுக்கும் ஐன்ஸ்டினுக்குமான உறவு
போன்றது. மார்க்ஸ் எங்கல்சின் போதனைகளைப்
பொறுத்து லெனின் பின்வரும் மூன்று நிலைகளை
மேற்கொண்டார்.
1. சில விஷயங்களில் மார்க்ஸ் கூறியதை அப்படியே
ஏற்றுக் கொண்டார் லெனின். உதாரணம்: மார்க்சின்
உபரி மதிப்புக் கோட்பாடு; உபரி மதிப்புக்
கோட்பாட்டை ஏற்காமல், அதை ரோசா லக்சம்பெர்க்
மாற்றியமைத்தபோது லெனின் ரோசாவை ஏற்கவில்லை.
2. சில விஷயங்களில் மார்க்ஸ் கூறியதை ஏற்றுக்
கொண்டு அதை மேலும் விரிவு படுத்தினார். உதாரணம்:
ஏகாதிபத்தியம் பற்றிய லெனின் வரையறை.
3. சில விஷயங்களில் மார்க்ஸ் கூறியதை ஏற்காமல்
புதிய சிந்தனையை வழிமொழிந்தார். உதாரணம்:
கம்யூனிஸ்ட் கட்சி கட்ட வேண்டாம் என்ற மார்க்சின்
போதனையை லெனின் ஏற்கவில்லை. உருக்குப்
போன்ற போல்ஷ்விக் கட்சியை உருவாக்கினார்.
தனியொரு நாட்டில் சோஷலிசம் சாத்தியமில்லை
என்ற மார்க்சின் போதனையை லெனின் ஏற்கவில்லை.
இதை லெனின், மார்க்சுக்கு எதிராக இருந்தார் என்று
எந்திரத்தனமாகப் புரிந்து கொள்வது சிந்தனைக்
குள்ளர்களின் இயல்பு.
மீண்டும் கூறுகிறேன். மார்க்சியம் என்பது
பைனாமியல் தேற்றம் அல்ல. மார்க்சியம்
என்பது சகல பிரச்சினைகளுக்கும்
தயார்நிலையிலான தீர்வுகளை வைத்திருக்கும்
அட்டவணை (Ready Reckoner) அல்ல.
அப்படியானால் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது
எப்படி? இதற்கு லெனின் மிகத் தெளிவான,
கறாரான வரையறையைத் தந்துள்ளார்.
பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப,
பருண்மையான பகுப்பாய்வின் பின்னர்
மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும்
என்பதே லெனின் தந்த வரையறை. இது
கட்டளைத் தன்மை (canonical status) வாய்ந்த
லெனினிய வரையறை ஆகும்.
இதைப் புரிந்து கொள்ளாத ஆட்டு மூளைகள்
தேமுதிக உறுப்பினர்களாக இருக்க மட்டுமே
தகுதி உடையவர்களேயன்றி, மார்க்சியவாதிகளாக
ஒருபோதும் இருக்க இயலாது.
ஏகாதிபத்தியக் காலச் சூழலில், ஆளும் வர்க்கம்
பலவீனமாக இருக்கும் தனியொரு நாட்டில்
சோஷலிஸப் புரட்சி சாத்தியம் என்றும் அதைச்
சாத்தியப்படுத்த எஃகுறுதி மிக்க ஒரு கம்யூனிஸ்ட்
கட்சி தேவையென்றும் லெனின் கருதினார்.
அதை நடைமுறையில் நிரூபித்தும் காட்டினார்.
இது மார்க்ஸ் கூறாத ஒரு விஷயம். மார்க்சின்
போதனையில் இல்லாத ஒரு விஷயம். என்றாலும்
இதுவும் மார்க்சியமே. நியூட்டன் கூறியதும்
இயற்பியலே. நியூட்டனை மறுத்து ஐன்ஸ்டின்
கூறியதும் இயற்பியலே.
இயற்பியல் என்பது நியூட்டனோடு முடிந்து போன
விஷயம் அல்ல. அதே போல மார்க்சியம் என்பதும்
மார்க்சோடு முடிந்து போன விஷயம் அல்ல.
நியூட்டன் ஐன்ஸ்டினுக்கு அடுத்தும் அறிவியல்
தொடர்ந்து வளர்கிறது. அதே போல மார்க்ஸ்
லெனினுக்கு அடுத்தும் மார்க்சியம் வளர்கிறது.
சிறந்த உதாரணம்: மாவோ.
இதைப் புரிந்து கொள்ள அறிவியல் மனப்பான்மை
வேண்டும். அதைப்பெற அறிவியலைக் கற்க
வேண்டும். அறிவியல் மனப்பான்மை இல்லாவிடில்
பிற்போக்குச் சிந்தனைகள் மூளையை ஆக்கிரமிக்கும்.
12ஆம் வகுப்பில் படிக்கும் இயற்பியல் மாணவன்
ஈர்ப்பு (gravitation) குறித்த நியூட்டனின் கொள்கை,
ஐன்ஸ்டினின் கொள்கை இரண்டையும் படிக்கிறான்.
நியூட்டனும் ஐன்ஸ்டினும் ஈர்ப்பு குறித்த
கொள்கையில் எவ்வாறு மாறுபடுகின்றனர் என்பது
அவனுடைய பாடப்புத்தகத்தில் உள்ள கேள்வி.
(Explain: How does Einstein differ from Newton in gravitation).
அவனுடைய பாடப்புத்தகம் இதற்கு விடை
தருகிறது.
இதைப்போலவே, தனியொரு நாட்டில் சோசலிசம்
சாத்தியமா என்ற கேள்விக்கு மார்க்சின் பதிலும்
லெனினின் பதிலும் வேறுபடுகின்றன. இதையே
"மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒரு இளம் பருவக்
கோளாறு" என்ற என் கட்டுரை குறிப்பிடுகிறது.
மார்க்ஸ் 1848ல் சொன்ன கருத்துக்கும் லெனின்
1917ல் நடத்திய புரட்சிக்கும் இடையில் 70 ஆண்டுகள்
ஓடிவிட்டன. இந்த மாற்றங்களைக் கணக்கில்
கொள்கிறார் லெனின். 70 ஆண்டுக்கு முன்பு
சாத்தியமில்லாமல் இருந்த ஒரு நிகழ்வு,
70 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியம் ஆகிறது.
இதற்குப் பெயர்தான் பருண்மையான பிரயோகம்
(concrete application) என்பது.
"வறட்டுச் சூத்திரம்" என்பதற்குப் பதிலாக
"பருண்மையான பிரயோகம்" என்பதை லெனின்
முன்வைக்கிறார். அது வெற்றி பெறுகிறது.
மார்க்சியம் என்பது இதுதான்! அது வறட்டுச்
சூத்திரம் அல்ல. இதை மார்க்சியப்
பாராயணவாதிகள் உணர வேண்டும்.
தனியொரு நாட்டில் சோசலிசம் பற்றி மார்க்ஸ்
சொன்னதை லெனின் ஏற்கவில்லை என்று
கூறியவுடனேயே பாராயணவாதிகளின்
ஆட்டு மூளை "ஐயோ மார்க்சை அவதூறு
செய்கிறார்களே"என்று கோணலாகச் சிந்திக்கிறது.
மனித மூளையின் செயல்பாடுகள் ஆட்டு
மூளைகளுக்கு அப்படித்தான் தோன்றும்!
அண்ணா சாலையில் ஒரு மசூதி முன்பு கூடிநின்ற
சில விடலைப் பையன்கள் தலையில் பச்சை
நிறக் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு
"அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டுக்
கொண்டிருந்தார்கள். மார்க்சிய சிந்தனைக்
குள்ளர்களும் இந்த விடலைகளைப் போல்
"மார்க்சுஹு அக்பர்" என்று கோஷமிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். இரண்டுக்கும் எந்த
வேறுபாடும் இல்லை! இதற்கு அப்பால்
இருக்கிறது மார்க்சியம் ஒளிவீசிக் கொண்டு!
******************************************************
பின்குறிப்பு: அல்லாஹு அக்பர் என்ற அரபு
மொழித் தொடருக்கு "இறைவன் மிகப் பெரியவன்"
என்று பொருள்.
*************************************************************