தேவை ஒரு பல்செட்! ரூ 50,000 செலவாகும்!
பல் செட் இல்லையேல் உயிருக்கு ஆபத்து!
தோழர் இப்ராகிமும் ராகுல் காந்தியும்!
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE BSNL
சென்னை மாவட்டம்.
----------------------------------------------------------------------
ஒரு காலத்தில் அவருக்கு 32 பற்கள் இருந்தன. இன்று ஒரு
பல் கூட இல்லை. சுகர் எனப்படும் நீரழிவு நோய் அவரின்
பற்களைக் காவு வாங்கி விட்டது. இதனால் ஒரு முறுக்கைக்
கூட இன்று அவரால் தின்ன இயலாது.
அவருக்கு ஏதாவது நிவாரணம் கிட்டுமா? ஒன்றும் கிட்டாது.
ஏனெனில் அவர் ஒரு சிறைக் கைதி. அவர்தான் தோழர்
என் கே இப்ராகிம் (வயது 67).
அவர் கற்றறிந்த வழக்கறிஞரோ அல்லது கல்லூரிப்
பேராசிரியரோ அல்லர். அவர் ஒரு சாதாரணத்
தேயிலைத் தொழிலாளி. கேரளத்தில் வயநாடு
தெரியுமா? பாசிச இத்தாலி இளவரசர் ராகுல் காந்தியின்
தொகுதிதான் வயநாடு.
இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில்
தொழிலாளியாக வேலை பார்த்து வயதானதும்
ஒய்வு பெற்றவர் இப்ராகிம். இவரும் இவர் மனைவி
ஜமீலாவும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.
வயது முதிர்ந்ததால் ஒய்வு பெற்றவர்கள்.
கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கப் படும் தேயிலைத்
தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்
தலைவராகச் செயல்பட்டவர்தான் இப்ராகிம்.
இதனால் அவர் தேயிலைத் தோட்ட முதலாளிகளின்
கோபத்துக்கு இரையானார். .
எந்தச் சிறையில் இப்ராகிம் அடைக்கப் பட்டுள்ளார்
என்று தெரியுமா? விய்யூர் சிறையில் அவர் அடைக்கப்
பட்டுள்ளார். இதன் பொருள் விய்யூர் சிறையில்
சித்திரவதையை அனுபவித்துக் கொண்டு
இருக்கிறார் என்று பொருள்.
நான் சொல்வது உங்களுக்குப் புரிய வேண்டுமெனில்,
விய்யூர் சிறை எப்படிப்பட்ட கொடுமையான சிறை
என்று உங்களுக்குத் தெரிய வேண்டும்.
விய்யூர் சிறை கேரளத்தில் உள்ளது. திரிசூர் நகரத்துக்கு
அருகில் உள்ளது. இது புதிதாகக் கட்டப்பட்ட சிறைதான்.
இச்சிறையின் வயது அதிகம் போனால், 10 இருக்கும்.
இச்சிறையின் ஒரு பகுதி பாதாளச் சிறை ஆகும்.
மன்னர்கள் காலத்தில் பாதாளச் சிறைகள் இருந்தன
என்றும் அரசனை எதிர்த்தவர்கள் பாதாளச் சிறைகளில்
அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்
பட்டவர்கள் என்றும் படித்திருக்கிறோம். சாண்டில்யனின்
நாவல்கள் சிலவற்றில் இத்தகைய பாதாளச் சிறைகள்
பற்றி வர்ணிக்கப் பட்டு இருக்கும்.
ஆனால் மேதகு புரட்சியாளர் பினராயி விஜயன்
தான் ஆளும் மாநிலத்தில் கட்டுக்காவல் மிகுந்த,
கண்காணிப்பு மிகுந்த, கக்கூசில் கூட CCTV
இருக்கக் கூடிய ஒரு கொடிய சிறையைப் பேணி
வருகிறார். இதன் மூலம் அவர் கின்னசில் இடம்
பெறுகிறார்.
உலக வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சியின்போது,
கொடிய பாஸ்டைல் சிறை உடைத்துத் தகர்க்கப்
பட்டத்தை படித்திருக்கிறோம். பினராயி விஜயனின்
விய்யூர் சிறைக்கு முன் பாஸ்டைல் சிறை
உறைபோடக் காணாது.
உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத்தா அல்லது
கேரளா முதல்வர் பினராயி விஜய்னா?
இருவரில் யார் கூடுதலான பாசிஸ்டு என்றால்
தயக்கமே இல்லாமல் எவரும் சொல்லலாம்
பினராயி விஜயன்தான் கூடுதலான பாசிஸ்டு என்று.
கக்கூஸில் காமிரா உள்ள சிறையை உபியில்
யோகி ஆதித்யநாத் கட்டவில்லை.
கேரளத்தில் பினராயி விஜயனின் அடக்குமுறைக்குத்
தப்பியவர்கள் யாரும் இல்லை. கணிசமான
பாஜகவினர் UAPA சட்டத்தின் கீழும் பிற அடக்குமுறைச்
சட்டங்களின் கீழும் பல்வேறு பொய் வழக்குகளில்
சிறையில் வாடுகின்றனர் என்பதை மனித உரிமைச்
செயல்பாட்டாளர்கள் அறிவர்.
நிற்க. இப்போது ஓர் உதவி கேட்டு வாசகர்களிடம்
இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். என்னுடைய
கோரிக்கையின் நியாயத்தை மனிதாபிமானம் உள்ள
அனைவரும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இப்ராகிமின் மனைவி ஜமீலா செய்தியாளர்களிடம்
பேசும்போது தன்னுடைய கணவருக்கு ஒரு பல்செட்
வேண்டும் என்றும் பல்செட் இல்லாமல் அவரால்
உணவு உண்ண முடியவில்லை என்றும் சிறையில்
தரப்படும் சப்பாத்தியைக் கடித்துத் தின்ன, பல்
இல்லாததால் உணவு உட்கொள்ள முடியவில்லை
என்றும் தெரிவித்துள்ளார்.
திருமதி ஜமீலா மேலும் கூறுகையில், ஒரு பல்செட்
வாங்குவதற்கு தங்களிடம் காசு இல்லை என்றும்
கூறி உள்ளார்.
பல் மருத்துவர்களிடம் கேட்டதில் ஒரு முழுமையான
பல் செட் வாங்குவதற்கு ரூ 30,000 வரை ஆகக் கூடும்
என்றனர். மேலும் கூடுதலாகச் செலவாகும் என்று
வைத்துக் கொண்டால் கூட, ரூ 50,000 இருந்தால் போதும்,
தோழர் இப்ராகிமுக்கு பல்செட் கிடைத்து விடும். அவரால்
உணவை உண்ண முடியும்.
இந்த ரூ 50,000 இல்லாமல் இப்ராகிமின் குடும்பம்
வாடுகிறது. இப்ராகிம் ஒரு மாவோயிஸ்ட் அல்ல
என்பதால் அமைப்பு ரீதியாக மாவோயிஸ்டுகளின்
உதவி அவருக்குக் கிடைக்கவில்லை; கிடைக்கப்
போவதும் இல்லை.
சர்வ நிச்சயமாக தோழர் இப்ராகிம் ஒரு மாவோயிஸ்ட்
அல்ல. அவருக்கு மார்க்சியமோ லெனினியமோ
அல்லது மாவோயிசமோ ஒரு இழவும் தெரியாது.
இதுதான் உண்மை. அவர் தேயிலைத் தோட்டங்களில்
வேலை செய்யும் படிப்பறிவு இல்லாத ஏழைத்
தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர்.
அவ்வளவுதான். காரல் மார்க்ஸ் வர்ணிக்கும்
ஆலைப் பாட்டாளி (industrial proletariat) அல்ல அவர்.
அவரிடம் ஏது பணம்? அவருடைய மனைவி
ரூ 50,000க்கு எங்கே போவார்? நிர்க்கதியாக
நிற்கிறதே அவருடைய குடும்பம்!
இந்தச் சூழலில் தொழிலாளி வர்க்கத்தின்
கடமை என்ன? உண்டியல் ஏந்தியும், சக
தொழிலாளிகளிடம் நன்கொடை கேட்டும்,
உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுகத் தரும்
பணத்தைச் சேர்த்து பாதிக்கப்பட்ட
தொழிலாளியிடம் தருவது மட்டும்தான்
பாட்டாளி வர்க்க நடைமுறை.
என்னுடைய 35 ஆண்டு தொழிற்சங்க அனுபவம்
இந்தப் பாடத்தைத் தான் கற்றுத் தந்துள்ளது.
இனி நான் சொல்ல என்ன இருக்கிறது?
தோழர் இப்ராகிமுக்கு இன்னும் சில நாட்களில்
பல்செட் கிடைக்காவிட்டால், அவர் இறந்து போவார்.
இதுதானே உண்மை, எவ்வளவு கசப்பாக
இருந்தபோதிலும்!
****************************************************
பின்குறிப்பு:
(1) தோழர் இப்ராகிம் ஒரு மாவோயிஸ்ட் அல்ல.
தேயிலைத் தோட்ட முதலாளிகளும், போலீசும்,
உள்ளூர் மார்க்சிஸ்டு குண்டர்களும் கூட்டுச்
சேர்ந்து தங்களின் சுரண்டலுக்கு இடைஞ்சலாக
இருந்த இப்ராகிமை, களத்தில் இருந்து அப்புறப்
படுத்துவதற்காக பொய் வழக்கைப் புனைந்து
அதில் தோழர் இப்ராகிமை அநியாயமாகச்
சேர்த்தனர்.
(2) தோழர் இப்ராகிம் வயநாடு தொகுதியைச்
சேர்ந்தவர் என்ற உரிமையோடு அத்தொகுதியின்
எம்.பி இளவரசர் ராகுல் காந்தியிடம் இப்ராகிமின்
விடுதலைக்கோ அல்லது பிணைக்கோ (bail)
ஏதேனும் உதவி கேட்க முடியுமா? கேட்டால்
கிடைக்குமா? காங்கிரஸ் கட்சியை
பாசிச எதிர்ப்புக் கட்சியாக வரையறுத்துள்ள
கோமாளிகளே, பதில் என்ன?.
*****************************************************
தோழர் இப்ராகிமின் மனைவி திருமதி ஜமீலா
அல்லது அவர்களின் மகன் நௌஃபல் (Mr Noufal)
ஆகிய இருவரில் எவரிடமும் உதவி போய்ச் சேரட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக