ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் சிறையில் வாடும்
பேராசிரியர் ஜி என் சாய்பாபா!
பயங்கரவாத அமைப்பு என்று மன்மோகன் சிங்கால்
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
டெல்லி பல்கலையின் "ராம் லால் ஆனந்த் கல்லூரி"யில்
ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தார்
ஜி என் சாய்பாபா (Gokarakonda Naga Saibaba). தெலுங்கரான
இவருக்கு தற்போது வயது 50க்கும் 60க்கும் இடையில்
இருக்கக் கூடும். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. சக்கர
நாற்காலியில் அமர்ந்தபடியே வாழ்க்கையைக் கழித்து
வருபவர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்ச்சிரோலி
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் (Gadchiroli district and
sessions court) ஜி என் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனையை
வழங்கியது. மார்ச் 2017ல் இத்தீர்ப்பு வழங்கப் பட்டது.
UAPA திருத்தச் சட்டத்தின் 13, 18, 20, 38, 39 ஆகிய பிரிவுகளிலும்
(UAPA Amendment 2008), குற்றமுறு சதி (criminal conspiracy)
நிரூபிக்கப் பட்டதால், இந்தியன் பீனல் கோட் 120B IPC
பிரிவிலும் சாய்பாபா உள்ளிட்ட ஐந்து பேருக்கு
ஆயுள் தண்டனையும், விஜய் டிர்க்கே என்னும் ஆறாவது
நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து
2017ல் தீர்ப்பு வழங்கியது கட்ச்சிரோலி நீதிமன்றம்.
(UAPA = Unlawful Activities Prevention Act).
இந்த வழக்கில் சாய்பாபா மீது குற்றம் நிரூபிக்கப்
படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சாய்பாபாவின்
கூட்டாளியான மாணவர் ஹேம் கேசவ் மிஸ்ரா. இவர் டெல்லி
JNU பல்கலையின் மாணவர். போலீஸ் இவரைக் கைது
செய்ததுமே, போலீஸ் கஸ்டடியில் எல்லா உண்மைகளையும்
சொல்லி விட்டார். போலீசிடம் சொன்னதை அப்படியே
வார்த்தை மாறாமல் நீதிமன்றத்திலும் சொல்லி விட்டார்.
பேராசிரியர் சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும்
இடையில் தான் ஒரு முக்கியமான இணைப்புக்
கண்ணியாகச் செயல்பட்டதாகவும், இரு தரப்பினருக்கும்
இடையிலான தகவல் பரிமாற்றம் தன் மூலமாகவே
நடைபெற்றதாகவும், சட்டிஸ்கரின் அபுஜ்மத் காடுகளில்
(Abujmudh forests of Chattisgarh) தலைமறைவாக இருக்கும்
மாவோயிஸ்டுகளின் கட்டளைகளை பேராசிரியர்
சாய்பாபாவுக்குத் தெரிவிப்பதும் அவரின் மறுமொழியை மாவோயிஸ்டுகளிடம் கூறுவதுமே தன்னுடைய வேலையாக
இருந்ததாகவும் ஹேம் கேசவ் மிஸ்ரா நீதிமன்றத்தில்
கூறி இருந்தார்.
இது சாய்பாபாவுக்கு எதிரான வலுவான சாட்சியமாக
அமைந்து விட்டது. ஹேம் கேசவ் மிஸ்ராவின் சாட்சியம்
இல்லாமல், சாய்பாபாவைத் தண்டிக்க முடிந்திருக்காது.
கிட்டத்தட்ட அப்ரூவராகவே மாறிப்போனாலும், ஹேம் கேசவ்
மிஸ்ராவும் தண்டனையில் இருந்து தப்பவில்லை. ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஹேம் கேசவ் மிஸ்ராவும்
ஒருவர். இவர்கள் அனைவரும் நாக்பூர் மத்திய சிறையில்
சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதி
மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் பேராசிரியர்
சாய்பாபா. எனினும் ஹேம் கேசவ் மிஸ்ராவின் சாட்சியம்
மிக வலுவாகவும் முரணற்றும் இருப்பதால்,
மேல்முறையீட்டிலும் இதை முறியடிப்பது கடினம் என்பதே
வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கிறது..
மற்றப் பிரிவுகள் இருக்கட்டும், UAPA சட்டத்தின் 20ஆவது
பிரிவில் சாய்பாபா தண்டிக்கப் பட்டார் என்பதன் பொருள்
என்ன? இந்தப் பிரிவு ஆயுள் தண்டனை வழங்க வழி
செய்கிறது. அதன்படியே சாய்பாபா உள்ளிட்ட ஐந்து
பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.
சாய்பாபா மீதான நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
என்னென்ன? இந்தியாவில் தடை செய்யப்பட்ட
இயக்கமான மாவோயிஸ்ட் இயக்கத்தை ஆதரித்தது,
மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து செயல்பட்டது, போலீஸ்
மீதான பல வன்முறைத் தாக்குதல்களுக்கு மூளையாகச்
செயல்பட்டது, சுருங்கக் கூறின், இந்திய அரசுக்கு எதிராக
ஒரு யுத்தத்தை நடத்தியது (waged a war against India) ஆகிய
குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டன.
மாற்றுத் திறனாளி, சக்கர நாற்காலியுடன் நிரந்தரமாகப்
பிணைந்தவர், 90 சதவீதம் உடல் செயலிழந்தவர் என்றெல்லாம்
கூறப்பட்ட போதிலும், சாய்பாபா மிகவும் துடிப்புடன்
செயல்பட்டவராகவே இருந்தார். In fact he was the most
mobile person. உதாரணத்திற்குச் சில.
1) ஆந்திராவில் உள்ள RDF என்னும் அரசியல் இயக்கத்தில்
2005ல் சாய்பாபா சேர்ந்தார். (RDF = Revolutionary Democratic Forum).
இது ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பை
ஆந்திர காங்கிரஸ் அரசு தடை செய்திருந்தது. அன்றைய
ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி RDF அமைப்பை
வன்முறையான அமைப்பாகவும் தேச விரோத அமைப்பாகவும்
வரையறுத்து தடை செய்து இருந்தார்.
2) பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் மாவோயிஸ்ட்
சார்பான அமைப்புகளுக்குத் தொடர்பு ஏற்படுத்தியவர்
சாய்பாபா. இது குறித்து அடிக்கடி வெளிநாடுகளுக்குப்
பயணம் செய்துள்ளார் சாய்பாபா என்று "எக்கனாமிக்
டைம்ஸ்" (The Economic Times English edition e paper dtd July 14 2018)
ஏடு கூறுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,
பிரேசில், ஹாங்காங், ஹாலந்து ஆகிய நாடுகளுக்குச்
சென்று வந்தார் என்றும், ஜெர்மன் நாட்டின் மார்க்சிஸ்டுகள்
நடத்திய ஒரு நிகழ்வில் ஜெர்மனிக்குச் சென்றபோது
சாய்பாபா கலந்து கொண்டார் என்றும் எக்கனாமிக்
டைம்ஸ் ஏடு மேலும் கூறுகிறது.
இவ்வாறு சக்கர நாற்காலியோடு தன் வாழ்க்கை முடிந்து
விடாமல் பார்த்துக் கொண்டு, செயல் துடிப்பு மிகுந்த
ஒரு வாழ்க்கையை சாய்பாபா வாழ்ந்து வந்திருக்கிறார்.
90 சதவீதம் உடல் ஊனமுற்ற எவராலும், பேராசிரியர்
சாய்பாபா போல இத்தனை வெளிநாடுகளுக்குச்
சென்று வந்திருக்க முடியாது. அசராத தன்னம்பிக்கை,
தளராத முயற்சி, கடினமான உழைப்பு ஆகிய நற்பண்புகளும்
நற்செயல்களும் சாய்பாபாவின் அடையாளமாக
இருந்து வந்திருக்கிறன. இந்த வகையில் அவர் பெரிதும்
போற்றுதலுக்கு உரியவர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் மீதான தடை!
-----------------------------------------------------------------
மாவோயிஸ்ட் இயக்கம் என்று பொதுவாக அறியப்படுகிற
போதிலும், இவ்வமைப்பின் அதிகாரபூர்வமான பெயர்
CPI (Maoist) என்பதாகும். இது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
(மாவோயிஸ்ட்) என்று தமிழில் அழைக்கப் படுகிறது.
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த சில மார்க்சிய
லெனினியக் குழுக்கள் ஒன்றிணைந்து 2004 செப்டம்பரில்
மாவோயிஸ்ட் கட்சியை உருவாக்கின. மற்ற மார்க்சியக்
கட்சிகளுக்கும் மாவோயிஸ்ட் கட்சிக்கும் இடையில்
பாரதூரமான வேறுபாடு உண்டு. அது என்னவெனில்,
மாவோயிஸ்ட் கட்சி மட்டுமே ஆயுதப் படைப் பிரிவைக்
கொண்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும்
ஆயுதப் படைப்பிரிவு அதாவது ராணுவம் கிடையாது.
மாவோயிஸ்ட் கட்சியானது ஒரு பயங்கரவாத அமைப்பு
என்று 2009ல் மத்திய காங்கிரஸ் அரசு தடை செய்தது. UAPA
சட்டத்தின் கீழ் மாவோயிஸ்ட் கட்சியை பயங்கரவாத
அமைப்பாக அறிவித்தார் அன்றைய காங்கிரஸ் பிரதமர்
டாக்டர் மன்மோகன் சிங். (CPI Maoist is a terrorist organisation
under UAPA). மாவோயிஸ்ட் கட்சியானது வன்முறையைக்
கையாளும் ஒரு பயங்கரவாத அமைப்பே என்ற காங்கிரஸ்
அரசின் முடிவுக்கான நியாயங்களைப் பட்டியலிட்டார் இந்தியாவின் அன்றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்.
காங்கிரஸ் ஆட்சியின்போது 2009ல் விதிக்கப்பட்ட தடையும்
பயங்கரவாத அமைப்பு என்ற வரையறுப்பும் மாவோயிஸ்ட்
கட்சிக்கு இன்றும் நீடிக்கின்றன. எனவே மாவோயிஸ்ட்
கட்சியை ஆதரிப்பதோ, அதில் உறுப்பினராக இருப்பதோ,
அக்கட்சிக்கு நன்கொடை கொடுப்பதோ, அக்கட்சியின்
வேலைகளைச் செய்வதோ, மாவோயிஸ்டுகளோடு
தொடர்பு வைத்திருப்பதோ குற்றம் ஆகும். சாதாரணக்
குற்றம் அல்ல; பயங்கரவாதச் செயலாகும். இதுதான் UAPA
சட்டம்.
UAPA சட்டத்தின் கீழ் பேராசிரியர் சாய்பாபா கைது
செய்யப்பட்டது மே 9, 2014ல். இவரை மஹாராஷ்டிரா
போலீஸ் கைது செய்தது. அப்போது மஹாராஷ்டிராவில்
காங்கிரஸ் ஆட்சி.பிருதிவிராஜ் சவான் முதல்வராக இருந்தார்.
UAPA சட்டத்தின் கீழ் சாய்பாபாவைக் கைது செய்து
சிறையில் அடைக்கும் உத்தரவை இவர் பிறப்பித்தார்.
பின்னர் சிறிது காலம் ஒன்றிரண்டு ஸ்பெல்களில் (spell)
சாய்பாபாவுக்கு பிணை கிடைத்தது. மும்பை உயர்நீதி
மன்றத் தீர்ப்பின்படி, ஜூலை 2015 முதல் சில மாதங்கள்
பிணை கிடைத்தது. பின்னர் டிசம்பர் 2015ல் மீண்டும் சிறை
புகுந்தார். உச்சநீதிமன்றத்தில் பிணை கோரியபோது
அங்கு பிணை கிடைத்ததால், ஏப்ரல் 2016ல் சிறையில்
இருந்து வெளியே வந்தார். இவ்வாறு மொத்தத்தில் சில
மாதங்கள் பிணையில் இருந்தார் பேராசிரியர்.
இறுதியில் 2017 மார்ச்சில், UAPA வழக்கில், சாய்பாபாவுக்கு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வந்தது. இதை
அடுத்து நாக்பூர் மத்திய சிறையில் அண்டா செல் என்னும்
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் சாய்பாபா.
இன்று இந்தக் கட்டுரையை எழுதும் 12..07.2021 தேதி வரை
நாக்பூர் சிறையில்தான் சாய்பாபா இருந்து வருகிறார்.
ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவர் என்பதால்,
சிறை விடுப்பு (parole) கோரும் அவரின் விண்ணப்பங்கள்
இதுவரை நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
சாய்பாபா பிறர் உதவியின்றி இயங்க முடியாதவர்
என்பதால், நாக்பூர் சிறையில் அவருடைய அன்றாடத்
தேவைகளை நிறைவு செய்து அவரைக் கவனித்துக்
கொள்ள இரண்டு பேரை சிறை நிர்வாகம் நியமித்து
உள்ளது. இந்த உதவியாளர்கள் இருவரும் சக கைதிகளே.
எனினும் சிறைக்குள்ளும் கொரோனா தொற்று ஏற்பட்டு
விட்டதால், சாய்பாபாவைக் கவனித்துக் கொள்ளும்
உதவியாளர்கள் வெகுவாகத் தயக்கம் காட்டுகின்றனர்.
அவர்களின் உதவி கிடைக்காமல் சாய்பாபா சிரமப்
படுகிறார்.
மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் சிறையில் இருந்து, தமது
சொந்த மாநிலமான ஆந்திரா அல்லது தெலுங்கானாவில்
உள்ள ஒரு சிறைக்கு, குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள
செர்லப்பள்ளி (Cherlapally) மத்திய சிறைக்கு தன்னை மாற்ற
வேண்டும் என்ற சாய்பாபாவின் கோரிக்கை இன்னும் ஏற்கப்
படவில்லை. மகாராஷ்டிர சிவசேனை-காங்கிரஸ் கூட்டணி
அரசு, இந்தக் கோரிக்கையை ஏற்று, சாய்பாபாவுக்கு
நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். சாய்பாபாவின்
மனைவி வசந்தா, மகள் மஞ்சீரா உள்ளிட்ட அவரின்
மொத்தக் குடும்பமும் உறவுகளும் சாய்பாபாவுக்கு
எந்த விதத்திலும் தங்களால் உதவ முடியவில்லையே
என்று மனம் குமைந்து நிற்கின்றனர்.
பேராசிரியர் சாய்பாபாவின் சிறைவாசம் குறித்து,
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை, குட்டி
முதலாளித்துவக் கபோதிகள் சமூகத்தில் பரப்பி
வருகின்றனர். பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள
விசாரணைக் கைதியே சாய்.பாபா என்று இக்கபோதிகள்
பரப்பி வரும் அப்பட்டமான பொய்யானது சாய்பாபாவின்
சிறை விடுப்புக்கு (parole) எவ்விதத்திலும் உதவாது.
சாய்பாபாவின் ஆயுள் தண்டனை, சிறைவாசம் என
அனைத்தும் காங்கிரசின் பாசிசத்தின் விளைவு ஆகும்.
முதன் முதலில், ஆந்திர காங்கிரஸ் முதல்வராக இருந்த
மறைந்த ஒய் எஸ் ஆர் ரெட்டியின் பாசிசப் பார்வைக்கு
சாய்பாபா இலக்கானார். அடுத்து மகாராஷ்டிர காங்கிரஸ்
அரசின் முதல்வர் பிருதிவிராஜ் சவானின் பாசிசப்
பார்வை சாய்பாபா மீது படர்ந்தது.
மாநில முதல்வர்களின் பாசிசத்தைத் தொடர்ந்து,
பாசிசத்தில் என்றும் எப்போதும் முதலிடத்தில் வீற்றிருக்கும்
மத்திய காங்கிரஸ் அரசின் பாசிசத் தாக்குதலே சாய்பாபாவின்
வாழ்க்கை பறிபோவதற்குக் காரணம் ஆகும்.
மனிதகுல வரலாற்றின் வெறி பிடித்த பாசிஸ்டுகளான
பசுமை வேட்டை நாயகர்கள் (Operation Green Hunt)
ப சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் சாய்பாபாவை
தங்களின் வேட்டை இரையாகக் கொண்டு விட்டனர்.
என்றாலும் சாய்பாபாவை விடுதலை செய்யக் கோரும்
போலி இடதுகளும், போலி முற்போக்குகளும், போலியான
மனித உரிமைக் கோமாளிகளும் காங்கிரசின் பாசிசம்
குறித்து ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். அவர்களின்
பார்வையில், காங்கிரசின் பாசிசம் முற்போக்கு பாசிசம்
ஆகும்.
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
முற்போக்கு பாசிசம் ஜிந்தாபாத்!
காங்கிரசின் பாசிசம் ஜிந்தாபாத்!
இன்குலாம் முர்தாபாத்!
இன்குலாப் இன்குலாப் இன்குலாப் முர்தாபாத்!
-*******************************************
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக