மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படைவீரர்கள் வெற்றிகொண்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான். இவ்விடத்தில் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இங்கு 2017-ம் ஆண்டு எல்கார் பரிசத் (Elgar Parishad) என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவோயிஸ்ட் சார்புடையவர்களால் நடத்தப்பட்டுள்ளதாக கூறி, ஓராண்டு கழித்து 2018 ஜூன் மாதத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை UAPA சட்டப்பிரிவில் கைது செய்யத் தொடங்கினார்கள்.
சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் ஆகிய ஐந்து பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்தியாவின் மதிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள். இவர்களுடன் இணைத்து, அந்த எல்கர் பரிசத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘கபீர் கலா மஞ்ச்’ கலைக்குழுவைச் சேர்ந்த சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சார், ஜோதி ஜாக்டாப் ஆகிய மூவரும் UAPA-வில் கைது செய்யப்பட்டனர். மொத்தம் எட்டு பேர்.
பின்னர், இவர்களின் கைதை கண்டித்த, மனித உரிமை வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் இதே UAPA சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார். இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இவருடன் சேர்த்து, கவிஞர் வரவரராவ், வெர்னன் கல்சால்வெஸ், கௌதம் நவ்லக்கா, அருண் ஃபெரைரா போன்றோரும் கைது செய்யப்பட்டனர். இதில் கௌதம் நவ்லக்கா EPW-ன் ஆசிரியராக இருந்தவர். இந்த ஐந்து பேரும் 2018 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக இவர்களுக்கு ‘Urban Naxals’ என்ற புனைப்பெயரை வழங்கியது அரசு.
இத்தோடு முடியவில்லை. 2019 பிப்ரவரியில் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, பீமா கொரோகான் வழக்கில் 14-வது நபராக கைது செய்யப்பட்டார். ஓர் அதிகாலையில் வீடுபுகுந்து பயங்கரவாதியைப் போல சித்தரித்து அழைத்துச் சென்றது NIA.
இத்தோடும் நிற்கவில்லை. Urban Naxal வேட்டை தொடர்ந்தது. 2020 மே மாதத்தில் Fr. ஸ்டேன் சாமி அவரது 83 வயதில், ராஞ்சியில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது BK (Bhima Koregaon) வழக்கில் 15-வது கைது.
ஏற்கெனவே பலவித நோய்களுடன் இருந்த Fr ஸ்டேன் சாமி, இந்த கொரோனா கடுங்காலத்தில் 10 மாத காலம் சிறையில் இருந்தார். அவரையும் கொரோனா பாதித்தது. மீண்டு வந்த போதிலும், அதன் விளைவுகள் மிச்சம் இருந்தன. பார்க்கின்ஸன் நோய் காரணமாக தண்ணீரையோ, உணவையோ கையால் எடுத்து சாப்பிட முடியாத நிலைமை. ஒரு ஸ்ட்ரா வழங்க கூட மறுத்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவதற்கே பத்து நாட்கள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. இறுதியில் Fr. ஸ்டேன் சாமி மரணம் அடைந்துவிட்டார்..
திருச்சியில் பிறந்தவர். பிலிப்பைன்ஸில் இறையியலும், சமூகவியலும் படித்தவர். பிலிப்பைன்ஸில் பல மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். இந்தியா திரும்பி, ஒரு வழக்கமான கிறிஸ்தவ பாதிரியாராக தன்னை சுருக்கிக்கொள்ளாமல் உண்மையான மக்கள் பணியின்பால் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர். முக்கியமாக, ’மாவோயிஸ்ட்’ குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆதிவாசி மக்களுக்காக இடையறாது போராடினார்.
Urban Naxal கைது ஸ்டான் சாமியுடனும் நிற்கவில்லை. 2020 ஜூலை மாதத்தில் டெல்லி யுனிவர்ட்டி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹனி பாபு BK வழக்கில் 16-வது நபராக கைது செய்யப்பட்டார். தற்போதைய நிலையில் இதுவே இவ்வழக்கின் கடைசி கைது. சுருக்கமாக இதை ’BK-16 வழக்கு’ என்று அழைக்கின்றனர்.
மேலே சொல்லப்பட்ட இந்த 16 பேர் தவிர, இதற்கு முன்பே, மாவோயிஸ்ட் குற்றச்சாட்டில் UAPA-வில் அடைக்கப்பட்டிருக்கிறார் டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் சாய்பாபா. மிகச்சிறந்த அறிவுஜீவி. பல நூல்களை எழுதியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, துப்புரவு பணியாளர்கள் சூழ்ந்த குடியிருப்பில் வளர்ந்து, Elite bias in English writing in India என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.
மத்திய இந்தியாவில் ‘சல்வா ஜுடும்’ என்ற பெயரில் அரச கூலிப்படைகள் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளை அம்பலப்படுத்தி எழுதியவர் சாய்பாபா. இப்போது வரை இவருக்கு பிணை வழங்க கூட மறுத்து வருகிறது இந்த அரசு. போலியோவால் 90 சதவிகித உடல்திறன் பாதிக்கப்பட்ட இவருக்கு சிறையில் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்படுவதாகவும், மிகவும் மோசமான உடல்நிலையுடன் சாய்பாபா இருப்பதாகவும் பலமுறை தெரிவித்துவிட்டார் இவரது மனைவி.
இவர்கள் யாரும் அதிகாரத் தாழ்வாரங்களில் தங்கள் அறிவை அடகு வைக்கவில்லை. தங்கள் அறிவை, உழைப்பை மக்களின் நலன்களுக்காக செலவிட்டனர். அதனாலேயே கொடுஞ்சிறையில் வாடுகின்றனர். ஆனால், மக்களின் நலன்களுக்காக உழைத்த இந்த அறிவுத்துறையினரின் கைதோ, சிறைவாசமோ… பொது சமூகத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது அஞ்சத்தக்கதாக இருக்கிறது. இந்த அமைதி உடைக்கப்பட வேண்டும். மீதமிருப்போரையேனும் காப்பாற்ற வேண்டும். அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இதற்கு சர்வதேச அளவில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஐ.நா. வரையிலும் வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த நிமிடம் வரை மோடி அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. கோரிக்கை மனுக்களுக்கு அப்பால் வீதிகளில் போராட்டங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எங்கோ, வட இந்திய பிரச்னை என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனெனில், UAPA பிரிவில் அதிக கைதுகள் நிகழ்ந்த மாநிலம் மணிப்பூர் (306) என்றால், தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம். 270 வழக்குகள். ஜம்மு காஷ்மீரே நமக்கு பின்னால்தான். ஆகவே, இந்த அபாயம் நமக்கு வெகுதூரத்தில் இருப்பதாக கருத வேண்டாம்.
கார்ப்பரேட் பாசிஸசமும், இந்து பாசிஸமும் இணைந்த கலவையாக இன்று பாரதிய ஜனதா கட்சி எழுந்து நிற்கிறது. ரிசர்வ் வங்கி, உயர் கல்வி நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளிலும் தனக்கு இசைவான நபர்களை அமர வைத்துவிட்டு தன் ஆட்டத்தை தடையின்றி நடத்தி வருகிறது.
பெரும்பான்மை மக்களின் நலன் கருதாத; ஒரு சிறு கூட்டத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் தன்மையில் இந்து பாசிஸம் என்பது கார்ப்பரேட் பாசிஸத்தின் முன்னோடி. பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்து அக்ரஹார உப்பரிகைகளில் உயிர்வாழும் பார்ப்பன பாசிஸம், கார்ப்பரேட் பாசிஸத்தின் இந்திய நகல். சமத்துவ மறுப்பு, ஜனநாயக மறுப்பு, கருத்துரிமை மறுப்பு, உழைப்புச் சுரண்டல் என அனைத்து அம்சங்களிலும் இரண்டும் ஒத்த தன்மைகளை கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் பாசிஸம், ‘அனைத்தையும் சந்தை தீர்மானிக்கும்’ என்கிறது. இந்து பாசிஸம், அனைத்தும் பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக சொல்கிறது. இவ்வாறாக, எல்லா வகையிலும் ஒத்த தன்மை கொண்டிருக்கும் இவ்விரண்டு பாசிஸ நிகழ்ச்சிநிரல்களையும் தமது இரு கைகளில் ஏந்தி நிற்கிறது பாரதிய ஜனதா கட்சி.
ஆகவே, இந்த உண்மைகளை ஒரு பரந்த வரையறையில் புரிந்துகொள்வோம். சிறையிலிருக்கும் அறிவுத்துறையினரை விடுவிக்க இணைந்து குரல்கொடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக