அபிமன்யு மிஸ்ராவை வாழ்த்துவோம்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
என்ற வள்ளுவர் வாக்கினை மீறி, சிறுவனாக இருந்து கொண்டே
செயற்கரிய சாதனையைச் செய்த அபிமன்யு மிஸ்ராவை
வாழ்த்துவோம்..
மிக மிக இளம் வயதில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டம்
வென்று, உலகப்புகழ் பெற்றுள்ள அபிமன்யு மிஸ்ரா
இந்தியாவில் பிறந்தவர்; இந்தியர். எனினும் அமெரிக்காவில்
குடியேறி, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அபிமன்யு மிஸ்ரா
தற்போது நியூஜெர்சியில் வசித்து வருகிறார்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற
சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று, கடந்த ஜூன் 30, 2021ல்
தனது இளம் வயதில் (12 வயது 4 மாதம் 25 நாள்)
கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான தகுதி நிலையை
அடைந்தார் அபிமன்யு மிஸ்ரா.
2002ல் செர்ஜி கர்ஜகின் (Sergey Karjakin) என்ற ரஷ்யச் சிறுவன்
தனது 12 ஆண்டு 7 மாத வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
வென்றதே இதற்கு முன்பு வரை உலக சாதனையாக
இருந்தது. 19 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தச்
சாதனையைத்தான் அபிமன்யு மிஸ்ரா தற்போது
முறியடித்துள்ளார். அபிமன்யு கிராண்ட் மாஸ்டர்
ஆகும்போது, செர்ஜி கர்ஜகின்னை விட அவருக்கு
வயது இரண்டு மாதம் குறைவு.
அபிமன்யுவுக்கு நன்கு பயிற்சி அளித்து, அவரை கிராண்ட் மாஸ்டர்
பட்டம் பெற வைத்த அவரின் தலைமைப்பயிற்சியாளர்
கிராண்ட் மாஸ்டர் அருண் பிரசாத்தும், அபிமன்யுவுக்கு
இரண்டரை வயதிலேயே சதுரங்கம் கற்றுக் கொடுத்த அவரின் தந்தை ஹேமந்த் மிஸ்ராவும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
தமது 18 வயதில் 1988ல் விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர்
பட்டம் வென்றார். இன்றெல்லாம் 13 வயது ஆவதற்கு முன்னரே
கிராண்ட் மாஸ்டர் ஆகி விடுகிறார்கள். இந்தியாவுக்குப்
பெருமை சேர்த்த அபிமன்யு மிஸ்ராவை 130 கோடி
இந்தியர்கள் சார்பில் வாழ்த்துவோம்.
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!
****************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக