புதன், 27 மே, 2020

பாசிச எதிர்ப்பு முன்னணி! அதைக் கட்டுவது எப்படி?
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
முன்னறிவிப்பு:
2019 முதல் இந்தியாவில், மோடியின்
தலைமையில் நடைபெறும் பாஜகவின் ஆட்சி ஒரு
பாசிச ஆட்சியாகும் என்ற அனுமானத்தின் மீது
(assumption) இக்கட்டுரை எழுதப் படுகிறது. (ஏனெனில்
பாசிச ஆட்சி நிலவும்போது மட்டுமே பாசிச எதிர்ப்பு
முன்னணியைக் கட்டுவதற்கான தேவை எழும்).

பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்பது ஒரு போக்கு
(trend). ஜனநாயகத்தை மறுக்கின்ற ஒரு போக்கு.
சர்வாதிகாரத்தைச் செயல்படுத்தும் ஒரு போக்கு.
எனினும் பாசிசம் என்பது ஒரு போக்கு மட்டுமல்ல,
அது ஒரு ஆட்சிமுறை வடிவமும் (form of governance) ஆகும்.

மன்னராட்சி என்பது நிலப் பிரபுத்துவத்தின் ஆட்சிமுறை
வடிவம் ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது
முதலாளித்துவத்தின் ஆட்சிமுறை வடிவம் ஆகும்.
அது போல பாசிச சக்திகளின் ஆட்சிமுறை வடிவம்
பாசிசம் ஆகும். பாசிசம் என்பது ஜனநாயக மறுப்பும்,
சர்வாதிகாரச் செயல்பாடும் ஆகும்.

ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு
வெர்ஷன் ஆகும். அது போல பாசிசம் என்பதும்
முதலாளித்துவத்தின் (அல்லது ஏகாதிபத்தியத்தின்)
ஒரு வெர்ஷன் (version) ஆகும்.

எனினும் பாசிசம் என்பது நிலையானதல்ல. அது
தொடர்ந்து நீடிக்கும் தன்மை கொண்டதல்ல. பாசிசம்
தொடர்ந்து நீடிக்கும் என்றால், அது நிலைபேறு
உடையதாக மாறும் என்றால், மானுட இனத்தின்
சமூக அமைப்புகளுள் ஒன்றாக அது ஆகி விடும்.

ஆனால் மார்க்சிய மூல ஆசான்கள் 1) புராதன கம்யூனிசம்
2) அடிமைச் சமூகம் 3) நிலவுடைமைச் சமூகம்
4) முதலாளியம் 5) சோஷலிசம் 6) கம்யூனிசம் என்பதாக
ஆறு வகைச் சமூக அமைப்பையே வரையறுத்துள்ளனர்.
பாசிசம் என்பதை தனியொரு சமூக அமைப்பாக
மூல ஆசான்கள் வரையறுக்கவில்லை.

அப்படியானால் பாசிசம் என்பதுதான் என்ன?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல,
பாசிசம் என்பது ஒரு போக்கு (trend) ஆகும். அது
நிரந்தரமானது அல்ல.

முதலாளியமானது தன் வளர்ச்சியின் போக்கில் ஒரு
உச்ச கட்டத்தை அடைகிறது. அந்த உச்ச கட்டமே
(highest stage) ஏகாதிபத்தியம் என்றார் லெனின்.
முதலாளித்துவமானது ஏகாதிபத்தியமாக வளர்ச்சி
அடைவது ஒரு irreversible process மூலமாகவே சாத்தியப்
படும். irreversible process என்றால் மீண்டும் பழைய
நிலைக்குத் திரும்ப முடியாத மாற்றம் என்று பொருள்.
அதாவது பால் தயிராவது போன்றது. தயிர் மீண்டும்
பாலாக முடியாது; அது போல ஏகாதிபத்தியம் மீண்டும்
இளமை ததும்பும் முதலாளியம் ஆக முடியாது.

ஆனால் பாசிசம் அப்படியல்ல. முதலாளியம்தான்
பாசிசமாக மாற்றம் அடைகிறது. பாசிசமானது மீண்டும்
முதலாளியமாக மாறியதற்கு உலகெங்கிலும் வரலாறுகள்
உண்டு. ஜெர்மனியும் இத்தாலியும் இன்றும் பாசிச
நாடுகளாகவா இருக்கின்றன?

இந்தியாவில் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி
நிலை (Emergency June 1975-March 1977)  பாசிசமாக
வர்ணிக்கப் பட்டது. இது 21 மாதமே நீடித்தது.       

ஆக பாசிசம் என்பது நிலையானதல்ல. அது மிகவும்
தற்காலிகமானது. பாசிசமாக மாறுவது reversible process
ஆகும். Reversible process என்றால் மீண்டும் பழைய
நிலைக்குத் திரும்ப முடிகிற மாற்றம் என்று பொருள்.
தண்ணீரை 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலைக்குச்
சூடு படுத்துகிறோம். தண்ணீர் கொதிக்கிறது; சிறிது
நேரம் கழிந்ததும், சூடாக இருந்த தண்ணீர் ஆறி விடுகிறது.
மீண்டும் அறை வெப்பநிலைக்கு (room temperature) வந்து
விடுகிறது. இத்தன்மை உடைய மாற்றமே பாசிசம் ஆகும்.

நிலவுடைமைச் சமூக அமைப்பு கொடிய சர்வாதிகாரத்தை
உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. உலகம் முழுவதும்
அரசர்கள் கடவுளாகக் கருதப் பட்டனர். அவர்கள் தெய்வீக
உரிமை (Divine right) உடையவர்களாகக் கருதப் பட்டனர். 
சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்காம் என்று
கூறுகிறது தமிழ்ப் பாட்டு.

அரசனை எதிர்த்துப் பேசும் யார் எவரும் சிரச்சேதம்
செய்யப் படுதல் என்பது நிலவுடைமைச் சமூகத்தின்
இயல்பு. ஆக நிலவுடைமைச் சமூகம் என்பது
கொடிய சர்வாதிகார சமூகம் ஆகும்.

அடுத்து வந்த முதலாளிய சமூக அமைப்பு பூர்ஷ்வா
ஜனநாயகம் (Bourgeois democracy) என்று அழைக்கப்
படுகிறது. நிலவுடைமைச் சமூக அமைப்பின்
சர்வாதிகாரத்தை வைத்துக் கொண்டு
முதலாளிய உற்பத்தியை மேற்கொள்ள இயலாது.
எனவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத் தேவையான
அளவுக்கு ஜனநாயகத்தை முதலாளியம் வழங்குகிறது.

பாசிசம் என்பது முதலாளியத்தின் இன்னொரு வெர்ஷன்
என்று நாம் அறிவோம். முதலாளியம் என்பது ஜனநாயகம்
என்னும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது
என்பதையும் நாம் அறிவோம். 1917ல் ரஷ்யாவில்
நடந்த பெப்ரவரி புரட்சியை பூர்ஷ்வா ஜனநாயகப்
புரட்சி என்று சோவியத் (போல்ஷ்விக்)  வரலாற்று
ஆசிரியர்கள் வரையறுக்கின்றனர். இவ்வாறு
முதலாளியமும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்களாக இருக்கின்றன.

எனவே ஜனநாயகத்தை மறுக்கின்ற பாசிசம் என்பது
இயற்கையாகவே முதலாளித்துவத்துக்கு எதிரானது.
பாசிசம் ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்தது.
முதலாளியம் அப்படி அல்ல. முதலாளியம்
நிலைமறுப்பின்  நிலைமறுப்பாக விளைந்தது.
ஆனால் பாசிசம் அப்படி அல்ல. எதை நிலைமறுத்து
பாசிசம் உருவானது?

பாசிசக் காலக்கட்டத்தில் முதலாளிய உற்பத்திச்
சக்திகள் வளர்ச்சி அடைய முடியாது. உற்பத்திச்
சக்திகளின் வளர்ச்சிக்கு பாசிசம் தடங்கல்களை
ஏற்படுத்தும்.  

மேலும் பாசிசமானது சமூகத்தில் கலகத்திற்கு
வித்திடும். கொடிய ஒடுக்குமுறையின் மூலமாகவே
பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
ஒடுக்குமுறையை மக்கள் சமூகம் ஒருபோதும்
அமைதியாக ஏற்றுக் கொண்டு அடிபணியாது.
மக்கள் திரண்டெழும்போது பாசிசம் நொறுங்கும்.

ஆக, 1) பாசிசம் என்பது தற்காலிகமானது என்பதை
இங்கு நிரூபித்துள்ளேன்.
2) அது செயற்கையானது என்றும் அது தன் குடும்பமான
முதலாளியத்துக்கே எதிரி என்றும் நிரூபித்துள்ளேன்.
3) உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத் தடங்கலாக
இருக்கும் பாசிசம் மொத்த சமூகத்தாலும் வீழ்த்தப்
படும் என்றும் பாசிசத்துக்கு முந்திய status quo ante
மீட்கப்படும் என்றும் கூறியுள்ளேன்.

ஒரு சமூகத்தில், அனைத்தையும் தீர்மானிப்பது
அச்சமூகத்தின் பொருளுற்பத்தி முறைதான் என்கிறது
மார்க்சியம். எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில்
ஒரு சமூகத்தில் பாசிசம் தோன்றுகிறது என்றால்,
அது தோன்றுவதற்கான பொருளுற்பத்திக் கூறுகள்
என்ன? பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டுவதில்
பிஸியாக உள்ள போராளிகள் இக்கேள்விக்குப் பதில்
கூற வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் பாயாசத்தைக் கண்டு
அஞ்சுவது போல, பாசிசத்தைக் கண்டு அஞ்சுவதால்
பயன் விளையாது. மருண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்பது போல, கண்டதையும்
பாசிசம் என்று வரையறுப்பது பெருத்த அறியாமை
ஆகும்.

பாசிச எதிர்ப்பு முன்னணி என்பது தேர்தல் கூட்டணி
என்ற புரிதலில்தான் பலரும் இருக்கின்றனர். இத்தகைய
புரிதல்கள் மார்க்சியம் ஆகாது. பாசிச எதிர்ப்பு
முன்னணி கட்டுவது பற்றி அடுத்த கட்டுரையில்
பார்ப்போம்.
----------------------------------------------------------------------
தொடரும்
--------------------------------------------------------------------





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக