திங்கள், 11 மே, 2020

(1) வசுமித்ர அம்பேத்கரை அவமதித்தாரா?
--------------------------------------------------------------
வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரயோகம்!
---------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன்பு
மகத்தான கின்னஸ் சாதனை ஒன்றைப் புரிந்திருக்கிறது.
வேறொரு முகாமைச் சேர்ந்த சக மார்க்சியர் ஒருவர் மீது
அவர் எழுதிய ஒரு கருத்துக்காக, தமிழக வரலாற்றில்
முன்னுதாரணம் இல்லாத அளவில், SC-ST வங்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு
செய்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.

தேனி மாவட்டம் கோடங்கிப் பட்டியைச் சேர்ந்தவரும்
வடிவேல் முருகன் என்ற இயற்பெயர்கொண்டவரும்
சென்னையில் வசித்து வருபவருமான வசுமித்ர என்பவர்
மீதுதான் SC-ST வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. வசுமித்ர மீது வழக்குத்
தொடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் திரள்
அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப்
பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய திரு கே சாமுவேல் ராஜ்
அவர்கள்.

SC-ST வங்கொடுமைத் தடுப்புச் சட்டம் (திருத்தச் சட்டம் 2018)
உட்பிரிவுகள் 3(1) t, u, v (அதாவது 3 (1) (t), 3 (1) (u), 3 (1) (v)
ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு
மதிப்புக்குரிய திரு கே சாமுவேல் ராஜ் தமது புகார்
மனுவில் கூறியுள்ளார். எனினும் புகாரில் கூறப்பட்ட
குற்றச்சாட்டுகள் எந்தெந்த சட்டப் பிரிவுகளின்கீழ்
வரும் என்பதை காவல் துறையே முடிவு செய்யும் என்பதை
காவல்துறை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளை
நன்கு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

திரு கே சாமுவேல் ராஜ் அவர்கள் தமது சொந்த ஹோதாவில்,
அதாவது தான் ஒரு தனிநபர் என்ற முறையில்,
வடிவேல் முருகன் என்ற வசுமித்ர மீது வங்கொடுமைச்
சட்டத்தில் புகார் கொடுத்திருந்தால், அது பற்றி தமிழ்ச்
சமூகம் கவலை கொள்ளப் போவதில்லை.

1) வடிவேல் முருகன்
2) கே சாமுவேல் ராஜ்
என்ற இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான பூசல்
என்பதாக மட்டும் அது பார்க்கப்படும். ஆனால் திரு
கே சாமுவேல் ராஜ் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி
என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பு சார்பாக
வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுக்கிறார்.

இதன் மூலம் வசுமித்ர என்ற ஒற்றைத் தனிநபருக்கு
எதிராக நூறாண்டு வரலாறு கொண்ட கம்யூனிஸ்ட்
கட்சியை (CPM) எதிர்த் தரப்பில் நிறுத்துகின்றனர்
மார்க்சிஸ்டுகள். Shamelessly disproportionate என்று இதைத்தான்
ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
(Shamelessly disproportionate = வெட்கங்கெட்ட விதத்தில்
பொருத்தமின்மை)
இந்த நிலையில் தராசின் தட்டுக்களோ தராசின் முள்ளோ
ஒருபோதும் சரியாக இருக்கப் போவதில்லை.

வசுமித்ர என்ற ஒற்றைத் தனிநபருக்குத் தகுந்த பதில்
கொடுக்குமாறு கட்சி அணிகளில் எவரையேனும் மார்க்சிஸ்ட்
கட்சி பணிக்கலாம். ஒரு ஸ்டேட் கமிட்டி மெம்பரையோ
அல்லது சென்ட்ரல் கமிட்டி மெம்பரையோ அழைத்து
அவரிடம் இந்த வேலையை ஒப்படைக்கலாம்.  மாறாக,
கட்சி மொத்தத்தையும் வசுமித்ர என்ற தனிநபருக்கு
எதிராக நிறுத்துவதன் மூலம், கட்சியின் பிம்பம் சேதாரம்
அடைகிறது.

இடஞ்சுட்டிப் பொருள் விளக்கினால்,
"புத்தரது ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும்
அம்பேத்கரது அறிவு சார்ந்த பௌத்தத்தை நீங்கள்
பேசுவதில்லை"
என்ற வாக்கியம்தான் வங்கொடுமையை இழைத்துள்ளது
என்கிறார் மதிப்புக்குரிய திரு கே சாமுவேல் ராஜ் அவர்கள்.
தமது முகநூல் பதிவில் வசுமித்ர இந்த வாக்கியத்தை
எழுதி உள்ளார். (எந்தத் தேதியில் எந்த நேரத்தில் வசுமித்ர
இந்தப் பதிவை எழுதினார் என்ற விவரத்தை திரு
கே சாமுவேல் ராஜ் அவர்கள் தமது புகாரில்
தெரிவிக்கவில்லை).

இந்த ஒற்றை வாக்கியத்தை எழுதியதன் மூலம், வசுமித்ர
டாக்டர் அம்பேத்கருக்கு வன்கொடுமையை இழைத்து
விட்டார் என்கிறார் திரு கே சாமுவேல் ராஜ். இதை
அறிவுடைய எவரும் ஏற்கப் போவதில்லை. டாக்டர்
அம்பேத்கர் அவ்வளவு எளிதில் நொறுங்கிப் போகக்
கூடியவர் அல்லர். அவருக்கு யாரும் வங்கொடுமை
இழைத்து விட முடியாது. வசுமித்ரவும் பீமனோ
அனுமனோ அல்லர்.

ஒரு ஒற்றை வாக்கியத்தைக் கொண்டு வல்லமை வாய்ந்த
அம்பேத்கரை வசுமித்ர வீழ்த்தி விட்டார் என்று திரு
கே சாமுவேல் ராஜ் சொல்வதைக் கேட்பவர்கள் அனைவரும்
கைகொட்டிச் சிரிப்பார்கள். இன்னும் நூறாண்டு கழிந்தாலும்,
டாக்டர் அம்பேத்கரை ஒரே ஒரு ஒற்றை வாக்கியத்தில்
அடித்து வீழ்த்தக் கூடிய பலசாலி எவரும் பிறக்கப்
போவதில்லை. டாக்டர் அம்பேத்கரை மெலிந்தவராகவும்
பலவீனமானவராகவும் மதிப்பிடும் யார் எவரும்
அம்பேத்கரின் தரப்பில் நின்று வாதிடும் அருகதையை
இழக்கிறார்கள்.

வசுமித்ர கூறிய விஷயம் புத்த மதத்தைப் பற்றியது.
புத்த மதம் பற்றி, புத்தர் பற்றி டாக்டர் அம்பேத்கர்
சொன்ன விஷயத்தைப் பற்றியது. மதம் என்றாலே
கருத்துமுதல்வாதம் ஆகும். பொருள்முதல்வாதிகளாகிய மார்க்சிஸ்டுகளுக்கு கருத்துமுதல்வாத புத்த மதம் பற்றி
சிலாகித்துப் பேச வேண்டிய தேவை என்ன?

புத்தர் யார்? ஒரு மதத்தை நிறுவிய மதத் தலைவர்.
அதாவது புத்தர் ஒரு கருத்துமுதல்வாதத் தலைவர்.
அவரைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டிய அவசியம்
பௌத்தப்பேரினவாத ராஜபக்சேவுக்கு இருக்கலாம்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்க வேண்டிய
அவசியம் என்ன?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாக்டர் சென்னா
ரெட்டி ஆளுநராக இருந்தார். ஜெயலலிதா மீது
ஊழல் வழக்குத் தொடுப்பதற்கு இவர் அனுமதி வழங்கி
இருந்தார். இதனால் ஆத்திரமுற்ற ஜெயலலிதா
சென்னா ரெட்டி மீது பாலியல் புகார் கூறினார். சென்னா
ரெட்டி தம் கையைப் பிடித்து இழுத்ததாக ஜெயலலிதா
கூறினார்.

சென்னா ரெட்டி பக்கவாதம் வந்து, கை கால் விழுந்து
விட்டவர். அவரால் யாரையும் கையைப் பிடித்து
இழுக்க முடியாது. இது ஊரறிந்த விஷயம். என்றாலும்
ஜெயலலிதா அவர் மீது புகார் கொடுத்து வரலாறு
படைத்தார். இதன் மூலம், பாலியல் கொடுமை எதுவும்
நிகழாவிடினும், எந்த ஒரு பெண்ணும் எந்த
ஒரு ஆண் மீதும் பாலியல் புகார் கொடுக்கலாம்
என்று ஒரு தேற்றத்தை (theorem) உருவாக்கினார்
ஜெயலலிதா.

ஜெயலலிதா போலவே மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரு
தேற்றத்தை உருவாக்கி உள்ளது.வங்கொடுமை எதுவும் 
நிகழாவிடினும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த எவர் ஒருவரும்
அந்த இனத்தைச் சேராத எவர் ஒருவர் மீதும் வங்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்கலாம்.
இதுதான் அத்தேற்றம்.

நல்ல வேளையாக கோட்சே மகாத்மா காந்தியை
1948லேயே சுட்டுக் கொன்று விட்டான். மகாத்மா
இப்போது உயிருடன் இருக்க நேர்ந்தால், அவர் மீதும்
வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மார்க்சிஸ்ட்
கட்சியின் சாமுவேல் ராஜன்கள் புகார் கொடுத்திருப்பார்கள்.

திரு சாமுவேல் ராஜன், வசுமித்ர ஆகிய இருதரப்பு
ஆவணங்களையும் (available on record) மிகுந்த  கவனத்துடன்
பரிசீலித்த பிறகு,
"புத்தரது ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும்
அம்பேத்கரது அறிவு சார்ந்த பௌத்தம்"
என்ற ஒற்றை வாக்கியம் மாபெரும் வங்கொடுமையை
நிகழ்த்தி விட்டது என்று கருதுவது கோமாளித்தனம் என்ற
முடிவுக்குத்தான் வர வேண்டி உள்ளது. நீதிமன்றத்தில்
இத்தகைய குட்டி முதலாளித்துவ சிறுபிள்ளைத்தனங்கள்
நிற்காது.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய "புத்தரும் அவரது தம்மமும்"
என்ற நூலில் இருந்தே அம்பேத்கரின் கருத்துக்களை
எடுத்தாண்டுள்ளார் வசுமித்ர. மேற்கூறிய சர்ச்சைக்குரிய
வாக்கியம் வசுமித்ரவின் சொந்தக் கருத்தல்ல. இதற்கு
வலுவான ஆதாரம் வசுமித்ரவிடம் உள்ளது.
(பார்க்க: டாக்டர் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும்).
அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படிக்காத எவர்
ஒருவராலும் எனது கட்டுரைத் தொடரைப் புரிந்து கொள்ள
இயலாது.

தெருமுனைக் கூட்டத்தில் பேசுவது போல, நீதிமன்றத்தில்
வழக்கறிஞரால் வாதிட இயலாது. அது காலரிக்கு வாசிக்கும்
இடமல்ல. சட்ட ரீதியாகப் பரிசீலிக்கும் பொழுது, இந்த
வழக்கு மிகவும் பலவீனமாக இருப்பது எந்த ஒரு சாதாரண வழக்கறிஞருக்கும் தெரியும். அவர்களில் எவரேனும் ஒருவர்
மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சொல்லியிருக்கக் கூடும்.
எனவே வசுமித்ர போன்ற விடாக்கொண்டன்களுக்கு
இந்த வழக்கு வெறும் nuisance value மட்டுமே உடைய
விஷயமாக இழிந்து விடும்.
--------------------------------------------------------------------------------
தொடரும்
------------------------------------------------------------------------------
கட்டுரை ஆக்கம்:
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
******************************************** 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக