செவ்வாய், 19 மே, 2020

ரெஹானா பாத்திமா மீதான உள்ளக விசாரணை!
குற்றவாளிக்கு சட்ட விரோதமாக சலுகை காட்டிய
BSNL அதிகாரிகள் மீது நடவடிக்கை!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
-----------------------------------------------------------
கொச்சி சரகத்தில் உள்ள BSNL அலுவலகத்தில்
டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தார்
ரெஹானா பாத்திமா பியாரிஜான் சுலைமான்.
ஆலப்புழையைச் சேர்ந்த அனில்குமார் என்னும்
பைனான்சியரிடம் 2014ல் ரூ 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்
பாத்திமா.

பணத்தை முறையாக பாத்திமா திருப்பிக்
கொடுக்கவில்லை. பாத்திமா கொடுத்த காசோலை
திரும்பி விட்டது  (cheque bounced). கடன் கொடுத்து ஏமாந்த
அனில்குமார் ஆலப்புழை Chief Judicial Magistrate Courtல்
வழக்குத் தொடர்ந்தார்.

பாத்திமா குற்றவாளி என்று ஆலப்புழை நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. சிறைவாசமும் லட்சக் கணக்கில்
அபராதமும் பாத்திமாவுக்கு நீதிமன்றத்தால்
விதிக்கப் பட்டன.

ஆலப்புழை மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து
கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
பாத்திமா. 2019 பிப்ரவரியில் கேரள உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. தீர்ப்பு பாத்திமாவுக்கு எதிராக
இருந்தது. பாத்திமா குற்றவாளியே என்று கேரள
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நடந்தது
2019 பெப்ரவரி.

பெப்ரவரி 4, 2019 திங்கள் கிழமையன்று ஆலப்புழை
மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஜட்ஜ் மதுசூதனன் அவர்கள்
முன்னிலையில் ஆஜராகி, உயர்நீதிமன்றம் உறுதி
செய்த ஒருநாள் சிறைவாசத்தை அனுபவித்தார்
ரெஹானா பாத்திமா. கூடவே உயர்நீதிமன்றம் உறுதி
செய்த ரூ 2.1 லட்சம் அபராதத்தையும் செலுத்தினார்.

இங்கு ஒரு Timelineஐ பார்த்து விடுவோம்.
1) ரெஹானா கடன் வாங்கியது = 2014
2) ஆலப்புழை நீதிமன்றத் தீர்ப்பு = 2014.
3) உயர்நீதிமன்றத் தீர்ப்பு = பெப்ரவரி 2019
4) ரெஹானா பாத்திமா தண்டனையை
அனுபவித்தது = 4, பெப்ரவரி 2019.

2019ஆம் வருடம் பெப்ரவரி மாதம் என்பது ரெஹானா
பாத்திமாவின் அலுவலக வாழ்க்கையைப் பொறுத்து
மிக முக்கியமான மாதம். இதை மனதில் பதிக்கவும்.

முன்னதாக 2018 அக்டோபரில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை
ஒட்டி, சபரிமலை செல்ல முயன்றார் ரெஹானா
பாத்திமா. அதைத் தொடர்ந்து நவம்பர் 2018ல்
அவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்
பட்டார்.

ஒரு அரசு ஊழியர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு
48 மணி நேரத்துக்கு மேல் போலீஸ் கஸ்டடியிலோ
லாக்கப்பிலோ சிறையிலோ இருந்தால், அவரை
பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது
அரசு விதி. (Suspension is automatic). இங்கு சஸ்பென்ஷன்
என்பது ஆட்டமாடிக் என்பதுதான் அரசின் சட்டம்.
எனவே ரெஹானா பாத்திமா BSNL  நிறுவனத்தால்
சஸ்பெண்ட் செய்யப் படுகிறார்.

ஒரு ஊழியரை சஸ்பெண்ட்  செய்தால், ஆறு மாத
காலத்துக்குள் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்ய வேண்டும் என்பது சட்டம். அதன்படி, ரெஹானா
பாத்திமா மீது 2018 டிசம்பரில் BSNL நிறுவனம் குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்தது. விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்த இடத்தில் அடுத்த Timelineஐப் பார்த்து விடுவோம்.
1) ரெஹானாவின் சபரிமலைப் பயணம் = அக்டோபர் 2018
2) ரெஹானா கைதும் சிறையும்  = நவம்பர் 2018
3) ரெஹானா மீது BSNL  குற்றப் பத்திரிக்கை = டிசம்பர் 2018
4) BSNLன் உள்ளக விசாரணை = ஜனவரி 2019 முதல்
5) BSNL விசாரணை முடிவும் தீர்ப்பும் = மே 15, 2020.

ரெஹானா பாத்திமா மீதான BSNLன் குற்றப்
பத்திரிக்கையில் (Charge sheet) அவரின் சபரிமலைப்
பயணம் குறித்தும், அது தொடர்பான சமூகப் பதட்டத்தை
ஏற்படுத்துவதாகக் கருதப்படும் அவரின் முகநூல் பதிவுகள்
குறித்தும் அவரின் சிறைவாசம் குறித்தும் குற்றச்
சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றச் சாட்டுகள் அடங்கிய
குற்றப் பத்திரிகையின் மீதுதான் உள்ளக விசாரணை
நடைபெற்றது.

உள்ளக விசாரணைக்கு உத்தரவிடப் பட்ட நிலையில்
(A domestic inquiry, having been constituted) திடீரென்று
இடி விழுந்தது போல, கேரள உயர்நீதிமன்றத்  தீர்ப்பு
பெப்ரவரி 4, 2019ல் வருகிறது. காசோலை மோசடி வழக்கில்
ரெஹானா பாத்திமா குற்றவாளியே என்ற கீழமை
நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்
படுத்துகிறது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட யார் எவரும் அரசு
ஊழியராக (BSNL ஊழியராக) நீடிக்க முடியாது. இது
நிலைபேறுடைய சட்டம். இதை யாராலும் மீற முடியாது.
இரண்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ரெஹானா,
அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட
ரெஹானா BSNL ஊழியராக ஒரு நிமிடம் கூட
நீடிக்க முடியாது.

ரெஹானாவை விடுங்கள். ரெஹானாவை விட அனந்த
கோடி மடங்கு சக்தி வாய்ந்த ஜெயலலிதா ஏன் ஓ பன்னீர்
செல்வத்தை முதல்வராக்கினார்? நீதியரசர் குன்ஹாவின்
தீர்ப்பை அடுத்து பதவியில் நீடிக்க முடியாமல், உடனடியாகப்
முதல்வர் பதவியில் இருந்து விலகினாரா இல்லையா
ஜெயலலிதா?.

ஜெயலலிதாவை விட ரெஹானா பாத்திமா சக்தி
வாய்ந்தவரா? உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவரை
ஒன்றுமே செய்யாதா?

மத்திய அரசு ஊழியர் நடத்தை விதிகள், BSNLCDA Rules,
Disciplinary proceedings பற்றிய அறிவு உடைய எவருக்கும்
நீதிமன்றத்தின் எதிர்மறையான தீர்ப்பின் சக்தி வாய்ந்த
தாக்கம் நன்கு தெரியும்.

கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்றைக்கு வெளியானதோ
அன்றைக்கே ரெஹானாவுக்கு வேலை போய்விட்டது!
இதுதானே உண்மை! இதுதானே நிதர்சனம்!

இந்த இடத்தில் கேரளத்தின் மார்க்சிஸ்ட் அரசு
BSNLல் உள்ள தன் தொழிற்சங்க நிர்வாகிகளைக் கொண்டு,
தான் செய்த பித்தலாட்டங்களாலும், ரெஹானா
பாத்திமாவுக்கு, சட்ட விரோதமாக சலுகைகளை
அளித்ததாலும் அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது.
இது எப்படி என்று பார்ப்போம்.

எப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது?
பெப்ரவரி 4, 2019 அன்று. அந்தத் தீர்ப்பு வந்த உடனேயே,
அதுவரை நடந்து கொண்டிருந்த BSNLன் உள்ளக
விசாரணை (inquiry) அர்த்தமற்றுப் போய்விடுகிறது.
The inquiry becomes infructuous.

எனவே கொச்சி சரக BSNL என்ன செய்திருக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட SSA GM என்ன செய்திருக்க வேண்டும்?
உயர்நீதிமன்றத்தின் CONVICTION உத்தரவு வந்து
விட்டபடியால், நடந்து கொண்டிருந்த அல்லது constituted
inquiryஐ உடனடியாக terminate செய்திருக்க வேண்டும்.

தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் conviction உத்தரவைக்
குறிப்பிட்டு, ரெஹானா பாத்திமாவின் வேலைநீக்கத்துக்கு
(Removed from service or Dismissed from service) உத்தரவிட்டு
இருக்க வேண்டும்.
நீதிமன்றம் தண்டனை கொடுத்த வழக்கில் Removal or Dismissal
தவிர வேறு தண்டனை கொடுக்க இயலாது. ஆனால்
கேரள BSNLன் சம்பந்தப்பட்ட Disciplinary Authority
கட்டாய ஒய்வு என்ற தண்டனையை வழங்கி
உள்ளார். இது சட்டப்படி செல்லத் தக்கதல்ல.
ஒழுங்கு நடவடிக்கைகளின்போது வழங்கப்படும்
தண்டனைகள் சரியாகத்தான் உள்ளதா என்பதை
ஆய்வு செய்யு ஒரு மெக்கானிசம் அரசாங்கத்தில்
உண்டு. இது ஒரு Periodical review. இந்த reviewன்போது
இந்த வழக்கில் குற்றவாளிக்குக் காட்டப்பட்ட
சட்ட விரோத சலுகைகள் கேள்விக்கு உள்ளாகும்.
சம்பந்தப்பட்ட BSNL அதிகாரிகள் தண்டிக்கப்படப்
போவது உறுதி.
************************************************************

       

 




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக