அமெரிக்காவில் நடக்கும் தொடர் துப்பாக்கிச்சூடுகள் கவலையளிக்கக் கூடியவையே. இதனை நிறுத்த முடியாதா என்றால் "நிறுத்தவே முடியாது" என்பதே என் பதிலாக இருக்கும். இந்த மாதிரியான துப்பாக்கிச்சூடுகள், படுகொலைகள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் இதிலுள்ள விஷேஷம். அந்த இடத்தில் நீங்களோ அல்லது உங்களின் குடும்பமோ இல்லாமலிருப்பது உங்களின் நல்லதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. If you are at a wrong place at a wrong time, then you are gone! There nothing you can do about that!! என்பதே யான் ஈண்டு எடுத்தியம்ப விழைவது.
இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. துப்பாக்கிக் கலாச்சாரம், நிறவெறி, போதை மருந்துகள், அளவுகடந்த மன அழுத்தம், பொருளாதாரச் சங்கடங்கள் எனப் பலப்பல காரணங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் மேலோட்டமான, ஒரளவு ஒப்புக் கொள்ளக் கூடிய காரணங்கள் என்றாலும், உண்மையான அடிப்படைக் காரணங்கள் அதிகம் ஆராயப்படுவதில்லை. அதனை ஆராய அமெரிக்கர்கள் விரும்புவதே இல்லை. ஆராய்ந்தாலும் அதனை வெளியில் சொல்வதில்லை.
முதலாவது, அளவுக்கதிகமான கிறிஸ்தவ மூளைச்சலவையும், அதனால் உண்டாகும் மனச்சிதைவும்.
இரண்டாவது, தகப்பனில்லாமல் தாயிடம் மட்டுமே வளர்கின்ற குழந்தைகள்.
இந்த இரண்டு காரணங்களை எந்த அமெரிக்கனிடம் சொன்னாலும் அவன் உடனடியாக இதனை மறுதலிப்பான். உங்களுடன் சண்டைக்கு வருவான்.
அமெரிக்க சீரியல் கில்லர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்திருக்கிறேன். டெட் பண்டியிலிருந்து, ரிச்சர்ட் குக்லின்ஸி வரைக்கும் பலருடைய கொலைகார வரலாறுகள் அவை. படிக்கும்போதே முதுகெலும்பினைச் சில்லிட வைக்கும் கொடுமையான கொலைகார ரத்தக்காட்டேறிகள் அவர்கள். ஒரு மனிதன் சக மனிதனுக்குச் செய்ய நினைக்காத குரூரங்களை மிகச் சர்வசாதாரணமாக, குறிப்பாக பெண்களுக்கு எதிராகச் செய்தவர்கள்.
அந்தக் கொடூரர்கள் பெரும்பாலோர் வாழ்வில் இளவயது கிறிஸ்தவ போதனைகளால் உண்டான மனச்சிதைவு உடையவர்கள். அதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர்கள். குறிப்பாக அப்பாவி விலைமாதர்கள் பலர் இவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படை கிறிஸ்தவ மதபோதனையே. இன்றைக்கும் அமெரிக்காவில் பல சீரியல் கில்லர்கள் உலா வருகிறார்கள். அகப்படும்வரையில் அவர்களைக் குறித்து நாம் அறிந்து கொள்ளமுடியாது எனபதுதான் இதிலுள்ள சோகம்.
இரண்டாவது, அப்பனின் கண்டிப்பில்லாமல் தாயிடம் மட்டுமே வளர்கின்ற குழந்தைகள். பெரும்பாலான அமெரிக்க சிங்கிள் உமன்கள் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். அன்றாட வாழ்க்கைக்கே அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலையில் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. எனவே பிள்ளைகள் தறிகெட்டு வளர்கிறார்கள். போதை மருந்திற்கும் இன்னபிற கெட்டபழக்கங்களுக்கும் ஆளாகிறார்கள்.
நான் படித்த பெரும்பாலான சீரியல் கில்லர்களின் வரலாறுகள் இதனைத் தெளிவாக விளக்குகின்றன. ஆனால் அதனை அமெரிக்கர்கள் பொதுவில் வைக்கவே மாட்டார்கள். இன்றுவரையில் இந்தக் கொலைகாரர்களின் பின்னனியில் இருக்கிற மதரீதியான மனச்சிதைவுகள் பொதுவில் விவாதிக்கப்படவே இல்லை. இனியும் அது நடப்பது சந்தேகம்தான். ஏனென்றால் அமெரிக்கா ஒரு பழமைவாத கிறிஸ்தவ நாடு. இன்னமும் கிராமப்புறங்கள் பாதிரிகளின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. பாதிரிகளின் கண்ணசைவின்றி அங்கு எதுவும் நடக்காது. தேர்தல்களில் யாருக்கும் ஓட்டுப் போடவேண்டும் எனத் தீர்மானிப்பவர்கள் கூட இந்தப் பாதிரிகளே. சந்தேகமிருப்பவர்கள் ஒருமுறை அலபாமா, ஆர்கன்ஸாஸ், டென்னசி, இண்டியானா போன்ற மாநிலங்களின் கிராமப்பகுதிகளுக்குச் சென்று பார்க்க சிபாரிசிக்கிறேன்.
அந்த கிராமப்பகுதிகளுக்கு சென்று உதைவாங்காமல் அல்லது துப்பாக்கியால் சுடப்படாமல் நீங்கள் திரும்புவது அசாத்தியமான காரியம். எக்குத்தப்பான இடத்தில் மாட்டினால் உங்களைத் தயங்காமல் கொலை செய்துவிடுவார்கள் என எச்சரிக்கிறேன். எந்தப் போலிஸ்காரனும் உங்களின் உதவிக்கு வரமாட்டான். நிறவெறி உச்சத்திலிருக்கிற பகுதிகள் அவை. மயிரிழையில் உயிர்தப்பிய பல இந்தியர்களின் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இன்னொருபுறம், அமெரிக்கா ஒரு அசாதரணமான நாடு. சக அமெரிக்கன் தனக்கு அடுத்து நிற்பவனை சந்தேகத்தோடு பார்ப்பான். ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் தான் ஹீரோ ஆகவேண்டும் என்கிற ஆசையில் வாழ்கிறவன். அடுத்தவனைக் காட்டிக் கொடுத்தால் தனக்குப் பேரும், புகழும் கிடைக்கும் எனச் சப்புக் கொட்டி வாழ்பவன். அருகில் நிற்பவன் கறுப்பாகவோ அல்லது பழுப்பாகவோ இருந்தால் அந்தச் சந்தேகம் இன்னும் அதிகரிக்கும். கேலிப் புன்னகையும், குத்தலும், நக்கலும் இன்னும் அதிகமாகும்.
இந்தச் சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளுகிற வெள்ளையன் அல்லாதவனின் வாழ்வு நரகம்தான். குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், வேலை செய்யுமிடங்கள்.....பெரும்பாலோர் பொறுத்துக் கொண்டு போய்விடுவார்கள். பொறுக்கமுடியாதவன் துப்பாக்கியைத் தூக்கிவிடுவான். அப்படியான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
இன்றைக்கு அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசமான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எல்லா விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து சாதாரண அமெரிக்கன் மிகவும் சிக்கலில் இருக்கிறான். எனவே நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
இனிவரும் காலங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரிக்கும் என்றே நான் அஞ்சுகிறேன். facebook post by p s narendran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக