செவ்வாய், 28 ஜூன், 2022

சோதிடம் என்றால் என்ன?
----------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
வானத்தில் கோள்களும் நட்சத்திரங்களும் நிலவுகளும் 
இன்ன பிற வான்பொருட்களும் சஞ்சரிக்கின்றன.
இவற்றின் சஞ்சாரம் பூமியில் வாழும் மனிதர்களின் 
வாழ்க்கையில் பாரதூரமான பாதிப்புகளை 
ஏற்படுத்துகிறது. இப்படி நம்புவதுதான் சோதிடத்தின் 
அடித்தளம்; ஆதாரம்.

எனவே விண்ணில் சஞ்சரிக்கும் வான்பொருட்கள் 
என்னென்ன பாதிப்புகளை மனித வாழ்க்கையில் 
ஏற்படுத்தும் என்று கணிப்பதும், அந்தக் கணிப்புக்கு 
ஏற்ப, தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு 
பாதிப்புக்களில் இருந்து மனித இனத்தைக் காத்துக் 
கொள்வதற்கும் சோதிடம் தேவைப்படுகிறது.
இவ்வாறுதான் சோதிடத்தின் இருப்புக்கான நியாயத்தை 
அதன் ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர்.

கிரகங்களின் சஞ்சாரம் பூமியில் வாழும் மனிதர்களின்
சொந்த வாழ்க்கையில் எவ்விதமான பாதிப்பையும் 
ஏற்படுத்துவதில்லை: ஏற்படுத்தவும் இயலாது. 
இதுதான் உண்மை. ஒருவனுக்கு படிப்பு வருவதற்கும் 
வராமல் போவதற்கும், ஒரு பெண்ணுக்கு தகுந்த 
பருவத்தில் திருமணம் நடப்பதற்கும் நடக்காமல் 
தள்ளிப் போவதற்கும், ஒரு தம்பதிக்கு குழந்தை 
பிறப்பதற்கும் பிறக்காமல் போவதற்கும் கிரகங்களின் 
சஞ்சாரம் எவ்விதத்திலும் காரணம் அல்ல. இதுதான் 
உண்மை.

எனவே அஷ்டமத்தில் சனி இருப்பதால் முன்னேற 
இயலாது என்பதும் சுக்கிர திசை நடக்கும்போது 
செல்வம் பெருகும் என்பதும் மிகவும் இழிந்த 
முட்டாள்தனமான கூற்றுக்கள் ஆகும். 
இதிலெல்லாம் எள்முனையளவும் உண்மை இல்லை.

எனவே சோதிடம் என்பது என்ன? பொய், புரட்டு,
பித்தலாட்டம், மோசடி, ஏமாற்று, அறியாமை, 
பெருந்தற்குறித்தனம் ஆகியவற்றின் ஒட்டு 
மொத்தத் திரட்சியே சோதிடம் ஆகும்.

வானில் சுற்றும் கோள்கள் கெப்ளரின் விதிகளுக்கு 
உட்பட்டு (Kepler's laws of planetary motion) இயங்குகின்றன.
கடவுளுக்குக் கட்டுப்பட்டு கோள்கள் இயங்குவதில்லை.
இல்லாத கடவுள் எங்கிருந்து எந்தக் கோளின் 
இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்? 

எனவேதான் பாரதியார் தமது புதிய ஆத்திசூடியில்
சோதிடந்தனை இகழ் என்கிறார். வானநூல் பயிற்சி 
கொள் என்கிறார். Astronomyயைக் கற்றுக் கொள்ள 
வேண்டும் என்றும் Astrologyயை இகழ வேண்டும் 
என்றும் கூறுகிறார் பாரதியார்.

சோதிடத்தின் மீதான ஈர்ப்பு உலகெங்கும் இருக்கிறது.
மக்களிடையே அறிவியல் மனப்பான்மை 
வளர வளர சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகள் 
அறுந்து விடும். 

அறிவியல் தற்குறிகளின் தேசமான இந்தியாவில் 
சோதிடத்தின் மீதான ஈர்ப்பு சோதிடப் பித்தாக 
வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் சோதிடத்தை 
பெருமளவுக்குப் போற்றி வளர்ப்பவர்கள் 
அரசியல்வாதிகளும் சினிமாக் கூத்தாடிகளுமே.

தமிழ்நாட்டில் பொருள்முதல்வாதத்தோடு 
எள்முனையளவும் தொடர்பற்ற ஒரு போலிப் 
பகுத்தறிவுவாதம் ஈ வெ ராமசாமியால் அறிமுகப் 
படுத்தப் பட்டது. இந்தப் போலிப்பகுத்தறிவுவாதம்
சோதிடப் பித்துப் பிடித்த மு கருணாநிதியின் 
மஞ்சள் துண்டாக வெளிப்பட்டது. 

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்புமனு 
தாக்கல் செய்த எந்த ஒரு போலிப்பகுத்தறிவு திமுக 
வேட்பாளராவது கொழுத்த ராகுகாலத்தில் 
வேட்புமனு செய்தது உண்டா? மு கருணாநிதியின் 
குடும்பத்துப் பெண்களைப்போல வேறு எந்தக்
குடும்பத்திலும் இவ்வளவு மூடநம்பிக்கை உண்டா?

பகுத்தறிவு பேசுகிற எந்த ஒரு போலிப்பயலும் 
கருணாநிதியின் மஞ்சள் துண்டைக் கண்டித்தது 
கிடையாது. கருணாநிதி குடும்பப் பெண்களின் 
ஆன்மிக மூடநம்பிக்கைகளைக் கண்டிக்க
முன்வந்தது கிடையாது.

திமுக, அதிமுக, உள்ளிட்ட திராவிடக் கட்சிகள்தான்
தமிழ்நாட்டில் சோதிடத்துக்கு மொத்தக் குத்தகை 
எடுத்துள்ளன. தமிழ்நாட்டில் சோதிட மூட 
நம்பிக்கையை மக்களிடம் பரப்புவதில் 
முன்னணியில் இருப்பவை திராவிடக் கட்சிகளே.
ராமச்சந்திர மேனன், கருணாநிதி, ஜெயலலிதா,
வி கே சசிகலா ஆகிய திராவிடத் தலைவர்களின் 
சோதிடப் பித்துக்கு உலகில் ஈடு இணையே கிடையாது.

சோவியத் ஒன்றியத்தில் லெனின் தலைமையிலான 
போல்ஷ்விக்குகளின் ஆட்சியின்போது சோதிடம் 
முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு இருந்தது.
சீனாவில் மாவோவின் தலைமையிலான சோஷலிச 
ஆட்சியின்போது சோதிடம் நூறு சதவீதமும் 
தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் சோதிடத்தைத் தடை செய்ய முடியுமா?
அரசியல்வாதிகளும் கூத்தாடிப் பயல்களும் 
தடை செய்ய விடுவார்களா? மாட்டார்கள்.

இந்தியாவின் பல்கலைக் கழகங்களில் சோதிடம் ஒரு 
பாடமாகக் கொண்டு வரப்பட்டது எப்போது தெரியுமா?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (1999-2004).
அப்போது வாஜ்பாய் கருணாநிதி கூட்டணியில் 
இருந்தனர். வாஜ்பாயின் அமைச்சரவையில் முரசொலி 
மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர் 
அமைச்சர்களாக இருந்து பதவி சுகம் அனுபவித்துக் 
கொண்டிருந்த நேரம் அது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 
முரளி மனோகர் ஜோஷி கருணாநிதியின் 
ஒப்புதலைப் பெற்ற பின்பு, இந்தியாவின் பல்கலைக் 
கழகங்களில் சோதிடத்தை ஒரு பாடமாகக் 
கொண்டு வந்தார். சோதிடம் வந்ததும் 
கருணாநிதி அதை எதிர்த்தாரா? திமுக அதை 
எதிர்த்ததா? சோதிடம் பாடமாக வரக்கூடாது என்று 
தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தார்களா 
திமுக அமைச்சர்கள்? இல்லையே!
*********************************************
பின்குறிப்பு:
சோதிடத்துக்கு ஆதரவாகவும் சோதிடத்தை 
பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பாகக் 
கொண்டு வந்த திமுக ஆஷாடபூதிகளுக்கு 
ஆதரவாகவும் இங்கு எவரேனும் பின்னூட்டம் 
இட்டால், அவர்களின் முதுகுத்தொலி உரிக்கப்படும்.
------------------------------------------------------------- 
  

    
 

    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக