வியாழன், 2 ஜூன், 2022

மறைமலைநகரில் போர்டு மோட்டார் ஆலை 
மூடப்படுகிறது! பல்லாயிரக் கணக்கான
தொழிலாளர் வேலையிழப்பு!
---------------------------------------------------------------
போன வாரம் மறைமலை நகர் போய் இருந்தேன்.
அங்கே எங்களுடைய BSNL நிறுவனத்தின் 
பயிற்சி மையமான RTTC இருக்கிறது.
(RTTC = Regional Telecom Training Centre). அது எங்கே 
இருக்கிறது தெரியுமா? சிட்கோ தொழிற்பேட்டையில் 
இருக்கிறது. எங்கள் BSNL அலுவலகத்துக்கு நேர் 
எதிரே ஆங்கில இந்து ஏட்டின் (The Hindu) அச்சகம் 
(printing unit) இருக்கிறது. இரண்டுமே மெயின் ரோட்டில் 
எதிரும் புதிருமாக உள்ளன.

என்றைக்காவது மறைமலை நகர் சிட்கோ 
இண்டஸ்டிரியல் எஸ்டேட்டுக்குப் போய் 
இருக்கிறீர்களா போலி இடதுசாரி அன்பர்களே!
சதா சர்வ காலமும் சாதி மதம் என்று அடையாள 
அரசியலையே பேசிக்கொண்டிருக்கும் 
போலி இடதுசாரிகள் திருந்த வேண்டும். அடையாள 
அரசியலைக் கைவிட்டு வர்க்க அரசியலுக்கு 
வர வேண்டும்.

ஃபோர்டு கம்பெனி ஒரு அமெரிக்க கம்பெனி.
இது ஒரு கார் தயாரிக்கும் கம்பெனி. இந்தியாவில் 
குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் இது ஆலைகளை 
நிறுவி உள்ளது.

மறைமலை நகரில் உள்ள ஆலையில் காரின் எஞ்சின்  
தயாரிக்கப் படுகிறது. இங்கு நேரடியாகவே 
4000 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த 
ஆலை 2022 ஜூன் 30ல் மூடப் படுகிறது. இதனால் 
4000 தொழிலாளர்களுக்கு வேலை போய் விடுகிறது.
மற்றும் கார் விற்பனைப் பிரதிநிதிகள், ஷோ ரூம் 
ஊழியர்கள், துணை நிலை தொழிலாளர்கள் என்று 
இவ்வாறாக பல்லாயிரக் கணக்கான பேர் வேலை 
இழக்கின்றனர். பத்தாயிரம் பேர் தமிழ்நாட்டில் 
மட்டும் வேலையிழப்பு என்றால், பொருளாதாரத்தின் 
மீது விழுந்த கத்திக்குத்து போன்றதாகும் இது. இந்தியா 
முழுவதும் சேர்ந்து 40,000 பேர் வேலையிழக்கிறார்கள்.

சரி, போர்டு நிறுவனம் ஏன் மூடப்படுகிறது?
இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ள 
(குஜராத், தமிழ்நாடு) ஆலைகளை மூடிவிட்டு 
போர்டு கம்பெனி இந்தியாவை விட்டே 
வெளியேறுகிறது.

இரண்டு பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால்
(2 பில்லியன் டாலர் = ரூபாய் 14,000 கோடி).  
ஆலைகளை மூடிவிட்டு வெளியேறுகிறோம் என்று 
போர்டு நிறுவனம் கூறுகிறது. தயாரிக்கப்படும் 
கார்களுக்கு போதிய டிமாண்ட் இல்லை என்பது 
ஆலை மூடலுக்கு முக்கிய காரணம் ஆகும். 

2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளும் கொரோனா 
ஆண்டுகள். எனவே பொருளாதாரச் சரிவு, உற்பத்தி 
முடக்கம், வேலையிழப்பு, வாங்கும் சக்தி குறைதல் 
ஆகிய பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டன. போர்டு 
நிறுவனம் தயாரித்த கார்களுக்கு மக்களிடம் இருந்து 
டிமாண்டு இல்லை. கார்கள் ஷோ ரூம்களில் தூங்கின.
இதன் விளைவாக விற்பனை அடி வாங்கியது. இதன் 
இறுதி விளைவு  2 பில்லியன் டாலர் நஷ்டம் என்கிறது  
போர்டு கம்பெனி. இனி இந்தியச் சந்தையை நம்ப 
முடியாது என்ற நிலையில் போர்டு கம்பெனி 
நாட்டை விட்டே வெளியேறுகிறது. 
         
ஏற்கனவே கடந்த காலத்தில் இந்தியாவில் கடை
விரித்த சில கார் கம்பெனிகள் விற்பனையில் 
அடி வாங்கியதால், கடை விரித்தோம்,
கொள்வாரில்லை கட்டி விட்டோம் என்று கூறிவிட்டு 
ஓடி விட்டார்கள். அந்த வரிசையில் கடைசியாக 
இப்போது போர்டு.

திடீரென்று ஆலையை மூடிவிட்டு, தொழிலாளர்களை 
வேலையை விட்டு நிறுத்தி விட்டு வீட்டுக்கு அனுப்பினால் 
தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் 
வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பறி போய் விடும்.
எனவே உரிய நஷ்ட ஈடு தொழிலாளர்களுக்கு 
வழங்கப்பட வேண்டும். இதை போர்டு நிறுவனத்திடம் 
இருந்து மத்திய மாநில அரசுகள் பெற்றுத் தர
வேண்டும். நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ஒப்பந்த 
ஷரத்துக்கள் இல்லையென்றால் போர்டு நிறுவனம் 
நஷ்ட ஈடு தராது. அந்நிலையில் தொழிலாளருக்கான 
நஷ்ட ஈட்டை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

மறைமலை நகர் போர்டு தொழிலாளர்களுடன் 
ஐக்கியம் பேணுவோம்!
அவர்களின் கோரிக்கை வெல்வதற்குத் 
துணை நிற்போம்! மத்திய மாநில அரசுகளை 
வலியுறுத்துவோம்!

தோழமையுள்ள 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் மாவட்டச் செயலாளர் 
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
********************************************* 



 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக