வெள்ளி, 14 செப்டம்பர், 2018

தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்த முடியுமா?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
இயங்கியல் குறித்து இதுவரை ஐந்து வகுப்புகள் முடித்துள்ளோம்.
இந்த ஐந்து வகுப்புகளும் பொதுத்தள (random audience) வாசகர்களுக்கானவை. இவ்வகுப்புகளில் பங்கேற்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று,  பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

6ஆவது 7ஆவது வகுப்புகள் முழுவதுமாக அறிவியல் வகுப்புகள்.
அறிவியலின் வழியில் இயங்கியலை ஆய்வு செய்யும் வகுப்புகள்.
அவை பின்வருமாறு அமையும்.
Quantum Physics vis a vis Dialectics (6th class)
General Relativity, Big bang theory and String theory vs Dialectics (7th class).

இயங்கியல் என்பது கிமு ஐந்தாம் நூற்றாண்டின் அறிவியல்.
அக்கால அறிவியல் என்பது புலனறிவும் தர்க்கமுமே ஆகும்.  
கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் ஜீனோ (Zeno) உருவாக்கிய
இயங்கியலிற்கும் இன்றைய 21ஆம் நூற்றாண்டின் நவீன
இயற்பியலுக்கும் இடையிலான அறிவியலின் வளர்ச்சி பற்றியும்  இவ்வகுப்புகளில் விவரிக்கப் படும். ஷ்ராடிங்கரின் பூனை, குவான்டம்  கணினி, double slit experiment உள்ளிட்ட இயற்பியலை விளக்கும் வகுப்புகள் அவை. இத்தகைய வகுப்புகளை முழுவதும்
தமிழில் நடத்துவது இயலாது. எனவே ஆங்கிலம் தவிர்க்க
இயலாததாகி விடுகிறது.

இத்தகைய அறிவியல் வகுப்புகளில் விதிவிலக்கின்றி
அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள்
விடுப்பதற்கோ வற்புறுத்துவதற்கோ நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு உரிமை இல்லை என்பதை நாங்கள் அறிந்தே
இருக்கிறோம். அவ்வாறு வற்புறுத்தும் பட்சத்தில், அது
வன்முறையாகக் கருதப்பட்டு  கண்டனத்துக்கு இலக்காகும்
என்பதையும் நாங்கள் அறிவோம்.   

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
என்கிறார் வள்ளுவர். எனவே இயங்கியல் குறித்த 6,7 வகுப்புகள்
வலிமையான அறிவியல் பின்னணி உடைய வாசகர்களுக்கானவை.
அவை பொதுத்தள வாசகர்களுக்கானவை அல்ல.

ஹெக்கலின் இயங்கியலானது சிந்தனைக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. அந்த அளவுக்கு அது சரியானதே. ஹெக்கலின் இயங்கியலை இயற்கைக்குப் பொருத்தும்போது அது பொருந்தவில்லை. ஹெக்கல் மிகச் சிறந்த அறிஞர்தான்
என்றாலும், அவரின் இயங்கியல் இயற்கைக்குப் பொருந்துவதில்லை. தங்க ஊசி என்பதற்காக கண்ணில்
குத்திக் கொள்ள முடியாது.

இயங்கியல் குறித்த எமது அறிவியல்வழி மதிப்பீடு விரைவில்
நூலாக வெளிவரும். இந்த ஆண்டின் இறுதிக்குள் நூலைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறோம்.

நூல் வெளிவந்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்
படும். 1.CPI 2 CPM 3.SUCI ஆகிய கட்சிகளின் தலைமைக்கும்
ஜனசக்தி, தீக்கதிர் ஏடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
நக்சல்பாரி அமைப்புகளைப் பொறுத்தமட்டில், 1. மஜஇக
2. மகஇக 3. தநாமாலெ  4. மாவோயிஸ்ட் 5. லிபரேஷன் குழுவினர்
ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கீழை மார்க்சியம் என்ற சிந்தனைப் பள்ளியை நிறுவிய
எஸ் என் நாகராஜன், ஞானி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படும். மேலும் AITUC, CITU, AICCTU, NFTE, உள்ளிட்ட இடதுசாரித் தொழிற்சங்கத் தலைமைக்கும் இந்நூல் செல்லும்.

எமது நூல் பற்றிய அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளின்
விமர்சனம் பரிசீலனைக்கு ஏற்கப்படும். உரிய பதில்
அளிக்கப்படும். 

கல்விப்புலம் சார்ந்தும் அறிவுப்புலம் சார்ந்தும் விவாதிக்கப்
பட வேண்டிய பொருள் இயங்கியல் ஆகும். எனவே அகாடமிக்
துறை அறிஞர்களிடமும் இந்நூல் கொண்டு செல்லப்படும்.
அவர்களின் விமர்சனம் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டு உரிய
பதில் அளிக்கப்படும்.

மார்க்சிய நுனிப்புல்லர்கள், போலி மார்க்சிஸ்டுகள்,
மார்க்சியத்தைக் கற்காமலும் மார்க்சியத்தைப் பிரயோகிக்கும்
நடைமுறை ஏதுமற்ற வீணர்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள் 
இன்ன பிற மார்க்சிய வேடம் தரித்த கசடுகள் (pseudo marxian scum) இயங்கியல் குறித்த அறிவியல் வழிப்பட்ட எமது கருத்துக்களை ஏற்க மாட்டார்கள்.

மார்க்சியவாதிகள் போல் வேடமிட்டுத் திரியும் இந்த உதிரிகளின்
மோசடி அம்பலமாகி விடுவதால் இவர்கள் தங்களுக்குள்
கூட்டணி அமைத்துக் கொண்டு எங்களது கருத்துக்களை
எதிர்ப்பார்கள். எனினும் மனிதப் பெறுமானம் அற்ற இவர்களின் இழிந்த பிற்போக்குக் கருத்துக்கள் சமூகத்தின்  சாக்கடையில்
மக்களால் வீசப்படும்.
*****************************************************************
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை. நாள்: 17.09.2018.
------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக