திங்கள், 3 செப்டம்பர், 2018

CPI-CPM கட்சிகளுக்கும் ML கட்சிகளுக்குமான
முரண்பாடு பகை முரண்பாடா அல்லது
பகையற்ற முரண்பாடா?
முரண்பாடு பற்றிய மார்க்சிய லெனினியப் பார்வை!
தோழர் மருதுபாண்டியன் கேள்விக்குப் பதில்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------   
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவ அடையாளமாகத்
திகழ்வது அக்கட்சியின் வேலைத்திட்டம் ஆகும்.
CPI, CPM, ML ஆகிய மூன்று கட்சிகளுக்குமான
வேலைத்திட்டம் முறையை தேசிய ஜனநாயகப்
புரட்சி (CPI), மக்கள் ஜனநாயகப் புரட்சி (CPM), புதிய
ஜனநாயகப் புரட்சி (ML) என்பதாக உள்ளது.
மூன்று கட்சிகளுமே அகில இந்தியப் புரட்சி
என்பதை ஏற்றுக் கொள்கின்றன.மூன்று கட்சிகளுமே
புரட்சியின் கட்டம் ஜனநாயகக் கட்டம்தான் என்று
ஏற்றுக் கொள்கின்றன. எனவே இம்மூன்று
கட்சிகளுக்கு இடையே கட்சித் திட்டம் சார்ந்து
பாரதூரமான வேறுபாடு இல்லை.

அதே நேரத்தில் புரட்சியை நிறைவேற்றும் வழி என்ன
என்பதில் CPI, CPM ஆகிய இரு கட்சிகளும் நாடாளுமன்றத்
தேர்தல் பாதை என்று தீர்மானம் கொண்டு வந்து
விட்டன. ML கட்சிகளைப் பொறுத்து அவை அனைத்தும்
ஆயுதப் புரட்சிப் பாதையை வலியுறுத்துகின்றன.
 ஆக, இந்த அம்சம் மட்டுமே CPI-CPM கட்சிகளுக்கும்
ML கட்சிகளுக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு ஆகும்.
அதாவது மாவோவின் மொழியில் சொல்வதானால்,
முரண்பாடு ஆகும். இந்த முரண்பாடு பகையானதா
அல்லது பகையற்றதா என்பதுதான் கேள்வி.

தற்போதைய சூழலில் இந்த முரண்பாடு பகையற்ற
முரண்பாடாகவே உள்ளது. இது கண்கூடாகத்
தெரியும் உண்மையாகும். இதற்குக் காரணம்
தற்போதைய சூழல் என்பது புரட்சி நடைபெறும்
சூழல் அல்ல என்பதும் இந்தியாவில் எங்கும் எந்தக்
கட்சியும் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கவில்லை
என்பதும் ஆகும்.

மேலும் புரட்சிக்கான ஒரு கால அட்டவணையை
எந்தக் கட்சியும் தயாரித்து வைத்திருக்கவில்லை
என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பியபோது,
70ன் பத்தாண்டுகளை விடுதலையின்
பத்தாண்டுகளாக ஆக்குவோம் என்ற முழக்கத்தை
சாரு மஜும்தார் முன்வைத்திருந்தார். இன்று எந்தக்
கட்சியும் அத்தகையதொரு கால அட்டவணையைக்
கொண்டிருக்கவில்லை. எனவே தற்போதைய
காலம் சமாதானக் காலம் ஆகும். (சமாதானம்
என்பதை அதற்கு உரிய பொருளில் புரிந்து
கொள்ள வேண்டுமாய் வாசகர்களைக் கேட்டுக்
கொள்கிறோம்).  

மேற்கூறிய சமாதானக் காலத்தில் CPI-CPM
கட்சிகளுக்கும் ML கட்சிகளுக்கும் இடையிலான
முரண்பாடு பகையற்றதாகவே நீடிக்கும்.
ஆக அவ்வாறு பகையற்ற முரண்பாடாகவே
நீடித்து வருவதை இன்று நாம் கண்கூடாகப்
பார்த்து வருகிறோம். லெனின் காலத்தில்
மென்ஷ்விக்குகளுக்கும் போல்ஷ்விக்குகளுக்கும்
இடையில் தீவிரமான கருத்துப்போர் நடைபெற்றது
என்பதையும் லெனின் தமது எழுத்தில் கணிசமான
அளவு கருத்தியல் மோதல்களுக்கு (polemical writings)
ஒதுக்கினார் என்பதும் வரலாறு. நம் சமகாலத்தில்
CPI-CPM கட்சிகளுக்கும் ML கட்சிகளுக்கும் இடையே
அத்தகைய கருத்து மோதல் (polemics) எதுவும்
நடைபெறவில்லை என்பதும் நாம் அறிந்ததே. 

தற்போது பகையற்றதாக இருக்கும் இந்த முரண்பாடு
தொடர்ந்து அப்படியே இருக்குமா என்ற கேள்விக்கு
என்ன பதில்? புரட்சிக்கான புறச்சூழல் கனிந்த ஒரு
சூழலில், புரட்சியை நடத்தும் அளவுக்கு புரட்சிகரக்
கட்சிகளின் அகநிலை வலிமை பெருகி நிற்கும்
ஒரு சூழலில், அத்தகைய சூழல் வந்துவிட்டது என்று
வைத்துக் கொண்டால், அப்போது இந்தப் பகையற்ற
முரண்பாடு மாற்றமடையும்.

அது பகை முரண்பாடாக உக்கிரம் அடையலாம்.
அல்லது எல்லோருமே ஒத்த கருத்துக்கு வந்து,
அதாவது புரட்சிக்குச் சாதகமாக வந்து
முரண்பாடே இல்லாமல் போய் விடலாம்.
இவ்விரண்டில் எது நடக்கும் என்பதை எதிர்காலச்
சூழல்தான் தீர்மானிக்கும். அது குறித்து இப்போது
பேசுவதெல்லாம் ஆருடம்தானே தவிர அறிவியல்
அணுகுமுறை அல்ல.

ஆக, இதுவே, இது மட்டுமே கறாரான துல்லியமான
மார்க்சிய லெனினியப் பார்வை ஆகும்.
-------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஈழ விடுதலைக் குழுக்கள் பலவற்றிலும்
முதலில் பகையற்ற முரண்பாடு இருந்ததும்,
பின்னர், ஆயதப்போர் உக்கிரமடைந்த சூழலில்
அது பகை முரண்பாடாக மாறியதும் இதன்
விளைவாக, போட்டிக் குழுக்கள் அழித்தொழிக்கப்
பட்டதுமான வரலாற்றை இங்கு ஒப்பு நோக்கவும்.
*******************************************************     
   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக