செவ்வாய், 25 செப்டம்பர், 2018

என்னால் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியாது . ஏதோ அரைவேக்காடு ஆன்மீக பத்தி எழுத்தாளனோ அல்லது பட்டி மன்ற பேச்சாளனோ தொடங்கி வைத்தது திராவிட பேரொளி மெகா சீரியல் எழுதியதில் வந்து முடிந்தது .இப்போது எவன் என்ன சாஸ்த்ர விரோத செயலை செய்தாலும் அதனை ராமானுஜர் தலையில் கொண்டு போய் போடும் பழக்கம் இருக்கிறது . ஹிந்துத்துவ இயக்கங்கள் அவர்கள் அரசியல் செயல்பாடுகளையும் ராமானுஜ வழியில் கொண்டு சேர்க்கின்றனர் .இடதுசாரி வைணவ அறிவுஜீவகளில் சிலர் அரசியலையும் விட முடியாமல் ராமானுஜரையும் விட முடியாமல் இறுதியில் ராமானுஜரை இடது சாரி போராளியாக சித்தரித்து புத்தகம் எழுதுகின்றனர் .ராமானுஜர் எந்த ஒரு நடைமுறையையும் சாத்திர விரோதமாக செய்யவில்லை .அவர் சமயத்து நடைமுறைகள் எவ்வளவு முற்போக்காக தோன்றினாலும் பாஞ்சராத்ர அடிப்படை உடையவையே .ஒவ்வொன்றாக பார்ப்போம்
அ) ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் வேதாந்த அதிகாரியை நிர்ணயம் செய்யுமிடத்தில் எந்த முற்போக்கு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை . த்விஜர்கள் அல்லாதவர்கள் புராண ஸ்ரவணம், நாம ஜபம் போன்றவற்றின் வாயிலாக நற்கதியை அடையலாம் என்பது ராமானுஜர் காலத்திற்கு முன்பாக இருந்த நம்பிக்கை தான் .அவர் அவ்விஷயத்தில் எந்த விதிமுறை மீறலையும் செய்யவில்லை
ஆ) அனைவருக்கும் சமாச் சரணம் / முத்ரா தாரணம் என்பது பாஞ்சராத்ர நிலைப்பாடே .ராமானுஜர் இங்கும் அதைத்தான் பின்பற்றுகிறார் .பாஞ்சராத்ரம் மாத்வர்களுக்கும் பிரமாணம் . இங்கும் அனைவரும் வைணவ தீக்ஷை பெற தகுதியானவர்களே
இ) தீக்ஷை பெறாத இரு பிறப்பாளனை விட தீக்ஷை பெற்ற ஏனைய வர்ணத்தவர் போற்றத்தக்கவர் என்பதும் பாஞ்சராத்ர அடிப்படையே .மத்வரும் இதனை கூறுகி
றார்
ஈ) பாஞ்சராத்ரம் ஆலய பூஜைக்கு யார் தகுதியானவர்கள் என்று கூறுகிறதோ அவர்களை தான் ராமானுஜர் அர்ச்சகராக நியமித்தார் .இன்றைய ஹிந்துத்துவர்களை போல அனைவரும் அர்ச்சகர் திட்டத்தை கொண்டு வரவில்லை
உ) மோக்ஷ உபாயமான நாராயண அஷ்டாக்ஷரி , த்வயம் , சரம ஸ்லோகம் போன்றவைத்தான் அனைவருக்கும் அவரால் உபதேசிக்க பட்டன . இவை அனைத்து வைணவர்களுக்கும் வர்ண பேதம் இல்லாமல் உபதேசிக்க தக்கது என்று பாஞ்சராத்ரம் கூறுகிறது . பழைய சுவடிகளில் அந்தணர் அல்லாதவர்களுக்கு ப்ரணவம் இல்லாமல் உபதேசம் என்றே கூறப்பட்டுள்ளது . ப்ரம்ம சமாஜவத் தாரை போல அனைவருக்கும் பூணூலும் போட்டு காயத்ரி மந்திரமும் உபதேசித்து அதனை கேலிக்கூத்தாக்கவில்லை .
ஊ) ராமானுஜர் வர்ண கலப்பை ஆதரிக்கவில்லை .ஒரே வர்ணத்தவர் எனில் உள் பிரிவை பார்க்காமல் வைணவரா என்று மட்டும் பார்க்க சொன்னார் .
எ ) கையில் கிடைத்தவர்களை எல்லாம் ராமானுஜர் அந்தணராக மாற்றினார் என்பது அவர் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு .அவரது தத்துவ மரபு இத்தகைய மாற்றங்களை ஏற்கவில்லை .ஒரு பேச்சிற்கு அப்படி செய்தார் என்று வைத்துக் கொண்டால் இன்று ராமானுஜ வைணவர்கள் அனைவரும் அந்தணர்களாக மட்டுமே இருந்திருக்க வேண்டுமே .ஆனால் அனைத்து வர்ணத்தவர்களும் அங்கு உள்ளனரே . ஆதலால் அதுவும் கட்டுக்கதை என்பது தெளிவு .
உங்கள் புரட்சி வெறிக்கு ராமானுஜரை ஊறுகாயாக பயன்படுத்தாதீர் .புரட்சி செய்ய வேண்டிய அவசியம் ஏதும் அவருக்கு இருக்கவில்லை .அனைவருக்குமான சாதனா மார்க்கம் பாஞ்சராத்ரத்தில்ஆதி முதலே
இருந்து வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக