திங்கள், 25 பிப்ரவரி, 2019

பிழைப்புவாதத் தலைமை அறைகூவல் விடுக்கும்
ஒரு வேலைநிறுத்தத்தை கம்யூனிஸ்டுகள்
எப்படி அணுக வேண்டும்?
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------------
ஜூன் 6, 1985 அன்று அன்றைய NFTE சங்கத்தின்
இணைப்புச் சங்கமான T-3 சங்கம் ஒரு மணி நேர
வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது.
24 மணி நேரமும் இயங்கும் மையத் தந்தி அலுவலகங்களில்
(CTOs) ஒவ்வொரு ஷிப்ட்டிலும் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம்
செய்ய வேண்டும் என்பது அறைகூவல்.

இந்த வேலைநிறுத்தம் எவ்வகையிலும் ஊழியர் நலன்
சார்ந்தது அல்ல. வேலைநிறுத்தத்தில் பெயரளவுக்கு
முன்வைத்த எந்தவொரு கோரிக்கையும் தீர்க்கப்
படவில்லை என்பது மட்டுமல்ல, நிர்வாகத்துடன்
கோரிக்கைகள் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும்
நடைபெறவில்லை. ஊழியர்கள் மத்தியில் இந்த
வேலைநிறுத்தத்திற்கு ஆதரவும் இல்லை.

இருப்பினும் மத்திய சங்கம் அறைகூவல் விடுத்த பின்னர்,
அந்த அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தம் செய்வதுதான்
ஊழியர்களின் கடமை. வேலைநிறுத்தம் குறித்த
விமர்சனங்களைப் பின்னர் முன்வைக்கலாம் என்ற
அடிப்படையில் சென்னை தந்தி மாவட்டத்தில்
வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக ஆக்கினோம்.
குறிப்பாக சென்னை அடையாறு  கிளையில்
வேலைநிறுத்தம் 100 சதம் வெற்றி அடைந்தது.

இந்தியாவிலேயே எந்த ஒரு கிளையிலும் வேலைநிறுத்தம்
100 சதம் வெற்றிகரமாக நடைபெறவில்லை. பல்வேறு வட
இந்திய மாநிலங்களில் வேலைநிறுத்தம் நடைபெறவே இல்லை.
ஒட்டு மொத்தத்தில் ஊழியர்களில் 10 சதம் கூட இந்த
வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவோ பங்கேற்கவோ இல்லை.

வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்த
மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ராமன்குட்டி அவர்களுடன்
அரசியல் ரீதியாக கடுமையாக முரண்பட்டிருந்தோம் நாங்கள்.
எங்கள் அணியினருக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில்
மட்டுமே வேலைநிறுத்தம் வெற்றி அடைந்து இருந்தது.
தோழர் ராமன்குட்டியின் ஆதரவாளர்கள் கூட,
வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் டியூட்டி பார்த்தனர்.

இந்நிலையில் வேலைநிறுத்தம் முடிந்ததும் நாங்கள்
ஓர் அறிக்கையை வெளியிட்டோம். வேலைநிறுத்தத்தைக்
கடுமையாக விமர்சித்து வெளியிடப்பட்ட அறிக்கை அது.
முட்டாள் தனமாக சொந்த அரசியல் ஆதாயத்திற்காக
தேவையற்ற பயனற்ற வேலைநிறுத்தத்தை ஊழியர்கள்
மீது வலுக்கட்டாயமாகத் திணித்த மார்க்சிஸ்ட் அணியின்
தலைவர் தோழர் ராமன் குட்டியை முற்றிலுமாகத் தோலுரித்த
அறிக்கை அது.

தமிழநாடு முழுவதும் ஊழியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது அந்த அறிக்கை. இந்த அறிக்கையைப் பற்றிக்
கேள்விப்பட்ட்துமே, வெளிமாநிலத்தில் இருந்தும் மத்திய
சங்கத்தில் இருந்தும், அந்த அறிக்கையை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துத் தருமாறு பல தரப்புத் தோழர்களும்
கோரினர். எனவே அந்த அறிக்கையை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பினோம்.
மத்திய சங்கத்திற்கும் அனுப்பினோம்.

அன்றைய NFTE T-3 சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்
வி ஏ ஹர்சூல்கர் அவர்கள் T-3 சங்கத்தின் அகில இந்தியப்
பத்திரிகையில் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை
வெளியிட்டார். கூடவே ஒரு குறிப்பும் எழுதி இருந்தார்.
தமது கிளையில் வேலைநிறுத்தத்தை 100 சதம் வெற்றிகரமாக
நடத்திய அடையாறு கிளைச் செயலாளர் தோழர் இளங்கோ
இந்த வேலைநிறுத்தத்தை விமர்சனம் செய்துள்ளார். அவரின்
அறிக்கையை வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம்
என்றது அந்தக் குறிப்பு.

அந்த அறிக்கையில் பிரசித்தி பெற்ற ஒரு வாசகம் வரும்.
அது இதுதான்:
" We the participants of the strike do hereby criticise the strike"
"இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற நாங்கள்
இந்த வேலைநிறுத்தத்தை விமர்சனம் செய்கிறோம்"  
என்பது தமிழ்.

தோழர் ஜெகன் அவர்கள் எனது ஆங்கில அறிக்கையைப்
படித்துப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். என்னைத் 
தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். அப்போது
அவர் கூறியது இன்றும் என்றும் நினைவுகூரத் தக்கது.
" இளங்கோ, உங்கள் அறிக்கையிலேயே எனக்கு பிடித்த
வரி இதுதான்! " We the participants of the strike do hereby criticise the strike"
என்கிறார்.

இது வெறும் பாராட்டு மட்டுமல்ல. வேலைநிறுத்தம் பற்றிய
ஒரு கோட்பாட்டை, வேலைநிறுத்தம் குறித்து கம்யூனிஸ்டுகள்
கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கோட்பாட்டை என்னிடம்
வலியுறுத்தி உள்ளார் தோழர் ஜெகன். இந்தப் பாராட்டு
சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. என்றாலும்
காலத்தால் மறக்கடிக்கப்பட முடியாத ஒரு மகத்தான
கோட்பாட்டைச் சுமந்து நிற்கிறது அந்தப் பாராட்டு.

அதன் பிறகு எந்த வேலைநிறுத்தம் எங்கு நடந்தாலும்
எனக்கு தோழர் ஜெகனின் இந்தப் பாராட்டும் அதன் மூலம்
அவர் உணர்த்திய கோட்பாடுமே நினைவுக்கு வரும்.
ஒரு வேலைநிறுத்தத்தை விமர்சிக்கும் உரிமையும்
அருகதையும் அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களுக்கு
மட்டுமே உண்டு என்பதுதான் அந்தக் கோட்பாடு.

ஏற்கனவே, தோழர் ஜெகன் கூறுவதற்கு முன்னமே, அந்தக்
கோட்பாட்டைத்தான் நான் பற்றி ஒழுகினேன். தோழர்
ஜெகனின் பாராட்டு நான் மேற்கொண்ட நிலைபாடு
சரியானதே என்ற அங்கீகாரத்தை எனக்கு வழங்கியது.

தோழர் ஜெகன் அவர்கள் இன்று உயிருடன் இல்லை.
அவரின் பாராட்டும் 33 ஆண்டுகளைக் கடந்து விட்டது.
என்றாலும் இன்னும் உயிர்ப்புடன் நின்று நிலவுகிறது.
இந்த வரிகளை எழுதும்போது என் கண்களைக்
கண்ணீர் மறைக்கிறது. காலத்தை வென்று நிற்கும்
ஒரு கருத்தைச் சொன்ன அந்தத் தலைவனை எண்ணிப்
பூரிப்படைகிறேன்; புளகாங்கிதம் கொள்கிறேன்.

ஆம், தோழர்களே, ஒரு வேலைநிறுத்தத்தை, அது தவறானதாக
இருப்பினும் எப்படி அணுகுவது என்ற கேள்விக்கு விடை
கொடுக்கிறது தோழர் ஜெகனின் பாராட்டு.
********************************************************      

 

             
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக