வியாழன், 21 பிப்ரவரி, 2019

மனித குல வரலாற்றில் நிலவுடைமைச் சமூகம்
நிலவிய காலக்கட்டத்தில் தேசிய இனம் என்ற
கருத்தாக்கமே உருவாகவில்லை. அனைத்து
தேசிய இன மக்களையும் ஒரு குடையின் கீழ்
நிலப்பிரபுத்துவம் ஆண்டு வந்தது.

முதலாளியம் தோன்றி வளர்ந்து நிலைபெற்றதுமே
தேசிய இனம் (nationality) என்ற கருத்தாக்கம் மனித
வரலாற்றில் முதன் முதலாக உருவாக்கப் பட்டது.
முதலாளியத்தின் வளர்ச்சிக்கு இது தேவையாக
இருந்தது.

முதலாளிய சமூக அமைப்பில் பல்வேறு தேசிய
இனங்கள் உருவாயின. தேசிய இனங்களுக்கான
அரசுகளும் தனித்தனியே உருவாயின. இத்தகைய
அரசு உருவாக்கத்தை முதலாளியம் அனுமதித்தது.
எனினும் பல்வேறு தேசிய இனங்கள் ஒடுக்குமுறைக்கு
உள்ளாவது நிற்கவில்லை; நீடித்துக் கொண்டே
வந்தது.

சோஷலிச சமூக அமைப்பில் தேசிய இனங்களின்
முழு முற்றான சுயநிர்ணய உரிமை உறுதி
செய்யப்பட்டது. 1917ல் சோவியத்தில் புரட்சி
வெற்றி பெற்றதும், பல்வேறு தேசிய இனங்கள்
கூடி 1922ல் சோவியத் ஒன்றியத்தை அமைத்துக்
கொண்டன. பிரிந்து போகும் உரிமை உட்பட
அனைத்து நியாயமான உரிமைகளையும் தேசிய
இனங்களுக்கு லெனின் வழங்கினார்.

மார்க்சியம் மதத்தை அங்கீகரிப்பதில்லை. எனவே
மார்க்சியத்தின் தேசிய இன வரையறையில்
மதத்துக்கு இடமில்லை. மதத்தின் அடிப்படையிலான
அரசியல் என்பது நிலவுடைமைச் சமூகத்தின்
இலக்கணம். சோசலிசத்தில் மதத்தின்
தலைமைக்கோ, மதம் ஒரு தீர்மானிக்கும் காரணி
என்பதற்கோ இடமில்லை. அறவே இடமில்லை.

மதத்தை ஒரு தீர்மானிக்கும் காரணியாக அங்கீகரிப்பது
என்பது நிலவுடைமைச் சமூகத்தின் பழமைவாத
இலக்கணம். நவீன தத்துவமான மார்க்சியத்தில்
மதத்துக்கு இடமில்லை. எனவே மதத்தின்
அடிப்படையிலான தேசிய இனம் என்பதை
மார்க்சியம் ஏற்பதில்லை.(No nationality based on religion).

இந்த அடிப்படையான புரிதலுடனேயே இந்தியாவின்
காஷ்மீர்ப் பிரச்சினையை ஆராய்தல் வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்துவரும்
அனைவரும், அவர்கள் இந்துக்கள் ஆயினும்
அல்லது முஸ்லிம்கள் ஆயினும், அவர்கள்
காஷ்மீரிகளே! அவர்கள் காஷ்மீரி தேசிய
இனத்தைச் சேர்ந்தவர்கள்.

காஷ்மீரிகள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது
நியாயமானது. இது காஷ்மீரி தேசிய இனத்தின்
உரிமைப் போராட்டம். இதைத் தயக்கமின்றி
ஆதரிக்க வேண்டியது மார்க்சியர்களின் கடமை.
காஷ்மீரி தேசிய இனத்தின் சுயநிர்ணய
உரிமைக்கான போராட்டத்தை மார்க்சியம்
அங்கீகரிக்கிறது.
 

 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக