திங்கள், 25 பிப்ரவரி, 2019

தோழர் முகிலனைக் காணவில்லை!
Mistrust the obvious என்னும் கோட்பாடு!
ராஜேஸ்வரி அம்மையாரின் அறிக்கை கூறுவது என்ன?
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
தோழர் முகிலனுடன் நான் பழகி இருக்கிறேன். அவர் எனக்கு
நண்பர்தான். அவரைப் பற்றி வரும் செய்திகள் மிகவும்
கவலை அளிக்கின்றன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முகிலன் நடத்திய
செய்தியாளர் சந்திப்பும் அதில் அவர் வெளியிட்ட
வீடியோவும்தான் அவர் காணாமல் போக அல்லது
கடத்தப்படக் காரணம் என்ற மேலெழுந்தவாரியான
அனுமானம் பெரும்பாலான முகிலன் அனுதாபிகளுக்கு
இருக்கிறது. தமிழக அரசுதான் முகிலனை கடத்திக்
கொன்று விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இதை அப்படியே ஏற்றுக்கொள்வது நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு ஏற்புடையதாக இல்லை. முகிலனின் மறைவு
குறித்த, மிகவும் நுனிப்புல் தன்மை வாய்ந்த, அவரின்
அனுதாபிகள் என்று உரிமை கோருவோரின் அனுமானம்
அறிவியல் வழிப்பட்ட ஆய்வில் எடுபடவில்லை.

ஒரு நபர் திடீரென்று காணாமல் போவது குற்றவியல்
சார்ந்த ஒரு விஷயம். இதில் அர்த்தமற்ற அனுமானங்களுக்கு
இடம் தருவது காணாமல் போன முகிலனுக்கோ அவரின்
குடும்பத்தார்க்கோ எவ்விதத்திலும் பயன் தராது.

Mistrust the obvious என்று கிரிமினாலஜியில் ஒரு கோட்பாடு
உண்டு. வெளிப்படையாகத் தெரிவதை நம்பாதே என்று
இதற்குப் பொருள். முகிலனின் விஷயத்தில் இந்தக்
கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் கருதுகிறது.

முகிலன் ஒரு ஒற்றைத் தனிநபர்.ஏதேனும்  ஒரு கட்சி
சார்ந்தோ அமைப்பு சார்ந்தோ இயங்கியவர் அல்லர்.
ஏனைய குட்டி முதலாளித்துவ ஆசாமிகளைப்  போல.
ஒரு லெட்டர் பேடு அமைப்பைக்கூட அவர் உருவாக்கிக்
கொள்ளவில்லை.

பின்நவீனத்துவத்துக்கும் அது முன்வைத்த அதீதத்
தனிமனித வாதத்திற்கும் இரையாகி ஒற்றைத்
தனிநபராகவே சமூகத்தில் இயங்கி வந்தார் முகிலன்.
அமைப்புக் கட்டுவது, அமைப்பு சார்ந்து இயங்குவது
என்பனவற்றைக் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை
சார்ந்தும் திட்டவட்டமாக நிராகரித்தவர் முகிலன்.
அவரின் ஆளுமையின் சாரமும் அவரின் சமூக உள்ளடக்கமும்
என்னவெனில், அது பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
இரையான, அதீதத் தனிமனிதவாதத்திலும், தனிமனிதச்
சுயமோகத்திலும் நம்பிக்கை உடைய ஒரு குட்டி முதாளித்துவர்
என்பதே. மேலும் அவரைப் பின்பற்றுவோர் என்று எவரும் இல்லை.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின்போது,
உதயகுமாருடன் இணைந்து செயல்பட்டவர் முகிலன்.
பின்னாளில் உதயகுமாருக்கும் அவருக்கும் முரண்பாடு
முற்றியபோது, பெரும் ஏகாதிபத்தியப் பின்புலம்
உடைய உதயகுமார், முகிலனை வெகு சுலபமாகத்
தூக்கி எறிந்தார். அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தை
விட்டு வெளியேற்றப்பட்ட முகிலனால், குறைந்தபட்சமாக
உதயகுமாரின் தவறுகளைக் கூட அம்பலப் படுத்த
இயலவில்லை. இவ்வளவுதான் முகிலனின் ஆளுமை!

இப்படிப்பட்ட ஒரு ஒற்றைத் தனிநபரைக் கண்டு எடப்பாடி
அரசு அஞ்சி நடுங்குகிறது என்று கருதுவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும். எடப்பாடியும் ஓபிஎஸ்சும்
ராமச்சந்திர மேனன் போன்று 24 மணி நேரமும் போலீஸ்
ராஜ்ஜியம் நடத்துபவர்கள் அல்லர். இதன் பொருள் அவர்கள்
மாற்றுக் கருத்துக்களையும் அனுமதிக்கும் முதிர்ந்த
ஜனநாயகவாதிகள் என்று பொருள் அல்ல. அவர்கள்
மேனனனைப் போன்றோ ஜெயலலிதாவைப் போன்றோ
நினைத்ததைச் செய்யும் அதிகார மமதை படைத்தவர்கள்
அல்லர். முகிலனைக் கண்டு அஞ்சும் அளவுக்கு
அவர்கள் sensitive peopleம் அல்லர். முகிலனும் அரசை அச்சுறுத்தும்
அளவுக்கோ ஆளுவோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்
அளவுக்கோ மக்களைத் திரட்டியவரும் அல்லர்.

மணல் மாபியாக்கள் சந்தேக வளையத்துக்குள் இருப்பவர்கள்.
எனினும் மணல் மபியாக்கள் குறித்து குட்டி முதலாளித்துவம்
வாய் திறப்பதே இல்லை. தூத்துக்குடியில் பெருந்தொழில்
அதிபராகவும் பெரும் அடியாள் கும்பலுடன் ராஜாங்கம்
நடத்துபவராகவும் வைகுண்டராஜன் இருக்கிறார்.
வைகுண்டராஜனின் பெயரை உச்சரிக்கக் கூட இயலாமல்
தொடை நடுங்கும் குட்டி முதலாளித்துவமா முகிலனைப்
பாதுகாக்கப் போகிறது?

சமகால இந்தியாவில் சூழலியல் என்னும் சித்தாந்தம்
குட்டி முதலாளித்துவர்கள் நடுவில் பெரும் செல்வாக்குப்
பெற்றுள்ளது. தமிழகமோ சூழலியல் அரைவேக்காட்டுத்
தனத்தில் மிதமிஞ்சி நிற்கிறது. இங்கு தடுக்கி விழுந்தால்
எவரேனும் ஒரு சூழலியல் போராளி (?!) மீதுதான் தடுக்கி
விழ இயலும். ஒவ்வொரு நாள் சூரியன் உதிக்கும்போதும்
கூடவே உதிக்கும் சூழலியல் போராளிகளின் எண்ணிக்கை
தமிழக மக்கள் தொகையையும் விஞ்சிக் கொண்டு நிற்கிறது.

இந்திய நிலைமைகளில் சூழலியல் என்பது முற்ற முழுக்க
ஏகாதிபத்திய என்ஜிஓக்களின் இரும்புக் கட்டுப்பாட்டில்
இருந்து வருகிறது. என்ஜிஓக்களின் சூழலியல்
ஆர்ப்பரிப்புகளுக்கான தத்துவ நியாயத்தைப் பின்நவீனத்துவம்
வழங்குகிறது. தோழர் முகிலனின் சூழலியலில்
செயல்பாடுகளில் என்ஜிஓக்களின் பங்கு இல்லவே இல்லை
என்று எவரும் கருத இயலாது.

மேற்கூறிய தர்க்கங்கள் எல்லாம் குட்டி முதலாளித்துவத்தின்
மண்டைக்குள் இறங்கவே இறங்காது. முகிலனின் மறைவு
எடப்பாடியின் சதி என்ற உரத்த கூச்சலுக்குள் உண்மையைப்
புதைக்க குட்டி முதலாளித்துவம் முயல்கிறது. முகிலனின்
மறைவை தேர்தல் ஆதாயத்திற்குப் பயன்படுத்த முயல்கிறது.

இந்நிலையில் முகிலனின் மறைவு குறித்து இசை என்கிற
ராஜேஸ்வரி என்பவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை
கவனத்துக்கு உரியதாகிறது. அது முகநூல் பதிவொன்றில்
காணப் படுகிறது. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும்
அது முகிலனின் மறைவுக்கான நம்பத் தகுந்த உண்மையான
ஒரு காரணத்தை மறைபொருளாகச் சுட்டுகிறது.

முகிலனின் மறைவுக்கான உண்மையான காரணத்தை
வெளியில் சொல்லி விடக் கூடாது என்று ராஜேஸ்வரி அவர்கள்
மிரட்டப் படுகிறார் என்ற தகவலையும்
ராஜேஸ்வரி அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டு
உள்ளார். மேற்குறிப்பிட்டப்பட்ட ராஜேஸ்வரி அவர்கள்
காவிரியாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தில் செயல்பட்டவர்.
அவர் கூறுவதில் உள்ள ஒளிவீசும் உண்மையை எவராலும்
புறந்தள்ள முடியாது.

அ மார்க்சின் தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்றை
அமைக்க இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அ மார்க்ஸ்
என்ன பெர்ரி மேசனா? அவர் துப்பறிந்து உண்மையைக்
கண்டு பிடித்து விடுவாரா? எவ்வளவு கேவலமான அபத்தம்!
அ மார்க்ஸ் ஒரு ஏகாதிபத்தியக் கைக்கூலி. அவர் மீதான
நம்பகத் தன்மை பூஜ்யம் ஆகும். Integrity என்பதற்கும்
அ மார்க்சுக்கும் என்றுமே ஸ்நானப் பிராப்தி இருந்ததில்லை.

முகிலனோடு இணைந்து செயல்பட்டவர்களில் சிலருக்கும்
முகிலனுக்கும் கடும் முரண்பாடுகள் இருந்துள்ளன என்று
தெரிய வந்துள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் காவல்துறையில்
புகார் கொடுக்க முடிவு செய்துள்ள நிலையில், அதைத்
தவிர்க்கும் பொருட்டு முகிலன் மேற்கொண்டு வரும்
பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றே அவரின் மறைவு என்றும்
சிலர் கருதுகின்றனர்.

முகிலன் மறைவு குறித்து ஏதெனும் ஒரு வகையில் விஷயம்
அறிந்த ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்த உண்மையைப்
பொதுவெளியில் கூற முன்வர வேண்டும். அதற்கு மாறாக,
அவற்றை மூடி மறைப்பது எவருக்கும் பயன் தராது.
முகிலன் மறைவு குறித்த உண்மையை வெளியிட முயலும்
பலரையும் மிரட்டிக் கொண்டு திரியும் குட்டி முதலாளித்துவ
ஆசாமிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். உரிய
தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இதை விடுத்து முகிலன் பஜனை பாடுவதால் முகிலனின்
குடும்பத்தாருக்கோ  சமூகத்துக்கோ எப்பயனும் விளையப்
போவதில்லை. முகிலன் மறைவுக்கான காரணகர்த்தாக்கள்
முகிலை பஜனை கோஷ்டிக்குள் புகுந்து கொண்டு
பாதுகாப்புடன் இருந்து வருகிறார்கள் என்ற அனுமானம்
உண்மையாக இருப்பதற்கான நிகழ்தகவு (probability)
மிகவும் அதிகம் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கருதுகிறது. (The said probability is certainly > 0.8).
**************************************************   



   
 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக