புதன், 28 ஆகஸ்ட், 2019

சிதம்பரமும் இந்திரஜித் குப்தாவும்
நீதியரசர் ரத்தினவேல்பாண்டியனும்!
---------------------------------------------------------
1970ல் திமுகவின் நெல்லை மாவட்டச் செயலாளராக
இருந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இவர் பின்னாளில்
உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்தார். பணி ஒய்வு
பெற்ற இவரை மத்திய அரசு ஊழியர்களின் ஐந்தாவது
ஊதியக் குழுவின் தலைவராக (Chairman V CPC))
நியமித்தது இந்திய அரசு.

தமது அறிக்கையில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு
40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று
பரிந்து உரைத்தார் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்.

அப்போது தேவ கெளடா இந்தியப் பிரதமர். ப சிதம்பரம்
நிதி அமைச்சர். ஊதிய உயர்வு பற்றி முடிவெடுக்கும்
அமைச்சர்கள் குழுவில் நிதி அமைச்சர் என்ற முறையில்
இடம் பெற்று இருந்தார் சிதம்பரம்.

40 சதமாவது மயிராவது? ஐந்து சதத்திற்கு மேல் கொடுக்க
முடியாது என்று கொக்கரித்தார் ப சிதம்பரம். ஹார்வர்டு
பல்கலையில் உயர்கல்வி கற்ற சிதம்பரம்.

நாடு முழவதும் இருந்த 35 லட்சம் மத்திய அரசு
ஊழியர்களும் பெரும் கோபம் அடைந்தனர். சொன்னவர்
நிதி அமைச்சர் என்பதால் தொழிற்சங்கங்களும் 
அதிர்ச்சி அடைந்தன.       

அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சரான 
இந்திரஜித் குப்தாவிடம் தொழிற்சங்கங்கள் முறையிட்டன.
 யார் இந்த இந்திரஜித் குப்தா? கம்யூனிஸ்ட் தலைவர்!
ஏஐடியூசி தலைவர்! CPI கட்சியின் சார்பாக மத்திய
அரசில் இடம் பெற்று உள்துறை அமைச்சராக இருந்தவர்.

அது மட்டுமல்ல நண்பர்களே, தோழர் இந்திரஜித் குப்தா
கேம்பிரிட்ஜ் பல்கலையில் உயர்கல்வி கற்றவர். நீதியரசர்
ரத்தினவேல் பாண்டியனின் பரிந்துரையில் கூறப்பட்ட
40 சதத்தைப் பெற்றுத் தருவதாக தொழிற்சங்கத்
தலைவர்களிடம் இந்திரஜித் குப்தா உறுதியளித்தார்.
இந்தச் செய்தி அத்தனை ஏடுகளிலும் வந்தது.

சிதம்பரம் கடுமையாக ஆட்சேபித்தார். ஆனாலும்
ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்திரஜித் குப்தாவின்
வலுவான வாதத்தை சிதம்பரத்தால் எதிர்கொள்ள
முடியவில்லை. இறுதியில் 40 சதம் ஊதிய உயர்வு
எங்களுக்கு கிடைத்தது. இதைப்பெற்றுத் தந்தவர்
எங்களின் மாபெரும் தோழர் இந்திரஜித் குப்தா.
ஹார்வர்ட் பல்கலையில் படித்த சிதம்பரத்தை
கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்த கம்யூனிஸ்ட்
தோற்கடித்தார்.

அக்காலத்தில் சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதற்கு தோழர்
இந்திரஜித் குப்தா வந்திருந்தார். அனைத்து மத்திய
அரசு தொழிற்சங்கத் தலைவர்களும் தோழர்
குப்தா அவர்களை சந்தித்து எங்களின் மரியாதையையும்
அன்பையும் தெரிவித்தோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை
ஒட்டி, மாநாட்டு வளாகத்தினுள் ஒரு தொலைதொடர்பு
அலுவலகம் (communication outlet cum camp office) அமைக்கப்
பட்டது. அதில் பணியாற்றும் அத்தனை ஊழியர்களையும்
நியமிக்கும் வாய்ப்பு மாவட்டச் செயலாளர் என்ற
முறையில்  எனக்குக் கிடைத்தது. எங்கள் தொழிற்சங்கத்தில்
உள்ள என் நண்பர்களாகப் பார்த்து  ஒரு பட்டியல்
தயாரித்து எங்கள் DGMஇடம் வழங்கி அந்தப் பட்டியலில்
உள்ளவர்களை நியமிக்கச் செய்தேன்.  இவ்வாறு
அரசு அலுவலகத்தை கம்யூனிஸ்ட் அலுவலகமாக
மாற்றினேன். 

இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராக இருந்த  அந்தக்
காலம் முழுவதும் கியூ பிராஞ்சு ஆசாமிகள் என்னைக்
கண்டு பயப்படுவார்கள். வாயில் கூட்டங்களில் மைக்
போட்டு sedition விஷயங்களாகவே பேசுவேன். பாவம், கியூ!  
அவன் என்ன செய்வான்? நான் விரும்பும் போதெல்லாம்
எண்களின் DGM அறையில் இருந்தபடியே இந்திரஜித்
குப்தாவிடம் பேசுவேன். ஒரு சாதாரண கியூபிராஞ்சு
இன்ஸ்பெக்டரால் இது சாத்தியப்படுமா?

ஆகவே நண்பர்களே,
சிதம்பரத்தையும் இந்திரஜித் குப்தாவையும்
ஒப்பிட்டுப் பாருங்கள். யார் மக்களின் பக்கம்
நின்றவர், யார் முதலாளிகளின் பக்கம் நின்றவர்
என்று சிந்தித்துப் பாருங்கள்.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள்
வீரவநல்லூருக்கு அருகில் உள்ள திருப்புடைமருதூரில்
பிறந்தவர்.
******************************************************   
 ,   
   
.     மருதுபாண்டியன் 
    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக